ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக்கரையிலுள்ள ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைப்பதென்ற தேர்தல் வக்குறுதியினை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு கடந்த ஞாயிற்றுக்கிழமை மீள வலியுறுத்தியுள்ளார்.
1967 ஆம் ஆண்டு மேற்குக்கரையினை இஸ்ரேல் ஆக்கிரமித்ததன் பின்னர் முதன்முறையாக ஜோர்தான் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இக் கருத்தினை வெளியிட்டார்.
அடுத்த அரசாங்கம் உருவாக்கப்பட்டவுடன் மிகவிரைவாக ஜோர்தான் பள்ளத்தாக்கு மற்றும் சாக்கடல் பிரதேசங்களில் இஸ்ரேலின் இறைமை பிரயோகிக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்தார்.
இறைமையைப் பிரயோகிப்பது தொடர்பில் ஒரு முறையினை வடிவமைப்பதற்காக பிரதமர் அலுவலகப் பணிப்பாளர் தலைமையில் ஒரு பணிக்குழுவொன்றினை தான் நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரையிலுள்ள அனைத்துக் குடியேற்றங்களிலும் இஸ்ரேலின் இறைமை பிரயோகிக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தேர்தல் முடிவடைந்ததும் வெளியிடப்படவுள்ள நூற்றாண்டின் இணக்கப்பாட்டில் இவ்வாறான விடயங்கள் வெளிப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கூட்டத்தினைத் தொடர்ந்து குறித்த பகுதியில் புதிய குடியேற்றமொன்றினை அமைப்பதற்கான நெட்டன்யாஹுவின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
1967 ஆம் ஆண்டு மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலம் ஆகியவற்றை இஸ்ரேல் ஆக்கிரமித்ததில் இருந்து கட்டப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட குடியிருப்புக்களில் தற்போது சுமார் 650,000 இஸ்ரேலிய யூதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
காஸா பள்ளத்தாக்குடன் இந்த ஆள்புலப் பிரதேசங்களையும் இணைத்து எதிர்கால பலஸ்தீன தேசத்தை உருவாக்குவதற்கு பலஸ்தீனர்கள் விரும்புகின்றனர். மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலம் ஆகிய இரண்டினையும் ஆக்கிரமிக்கப்பட்ட ஆள்புலப் பிரதேசங்களாகப் பார்க்கும் சர்வதேச சட்டம் அங்கு யூதக் குடியயேற்றங்களை அமைப்பதற்கு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டவிரோதமானதாகக் கருதுகின்றது.
vidivelli