கோத்தாபய அதிகாரத்துக்கு வந்தால் இராணுவ ஆட்சியே
தோற்கடிக்க ஒன்றிணைய வேண்டும் என்கிறார் அஜித் பி. பெரேரா
கோத்தாபய ராஜபக் ஷ அதிகாரத்துக்கு வந்தால் ஜனநாயகம் மற்றும் அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்தி இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் அபாயமிருக்கின்றது. இதனை தோற்கடிக்க ஜனநாயத்தை விரும்பும் அனைவரும் ஓர் அணியாகத் திரளவேண்டுமென அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன கட்சியில் தகுதியான வேட்பாளர் இருந்தும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கும் கோத்தாபய ராஜபக் ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளமை தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரச நிநியை துஷ்பிரயோகம் செய்தாரெனத் தெரிவித்து கோத்தாபய ராஜபக் ஷவுக்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இருக்கும்போது கோத்தா நிரபராதி என தெரிவித்து சில ஊடகங்கள் தெளிவற்ற முறையில் செய்திகளை பிரசுரித்து வருகின்றன.
அத்துடன் மேல் நீதிமன்றில் பல மோசடிக் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நபரே இம்முறை பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டிருக்கின்றார். இவ்வாறான நபருக்கு முழு நாட்டையும் பாரம் கொடுப்பது எந்தளவுக்குப் பொருத்தம் என்பது குறித்து அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பொதுஜன பெரமுன கட்சியில் திறமையான ஆளுமை மிக்கவர்கள் இருக்கின்றனர். அவ்வாறு இருந்தும் மிகவும் மோசமான குற்றச்சாட்டுக்கள் மற்றும் வரலாறு இருக்கும் நபரையே இவர்கள் தெரிவு செய்திருக்கின்றனர். இது குறித்து நாட்டு மக்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.
மேலும் கோத்தாபய ராஜபக் ஷ அமெரிக்க குடியுரிமையை ரத்துச்செய்ய கோரி இருக்கின்றார். என்றாலும் அவரின் மனைவி, பிள்ளை அமெரிக்க பிரஜா உரிமையை ரத்துச்செய்ய கோரவில்லை. அவரின் சொத்துக்கள் இருப்பதும் அமெரிக்காவிலாகும். அத்துடன் கோத்தா அமெரிக்க பிரஜா உரிமையை ரத்துச்செய்துகொண்டுள்ளார் என நாங்கள் நினைத்தாலும், அமெரிக்க சட்டத்தின் பிரகாரம், அமெரிக்க பிரஜா உரிமையை நீக்கிக்கொண்ட ஒருவர் குறிப்பிட்ட வருடங்கள்வரை அமெரிக்காவுக்கு பொறுப்பானவராவார்.
அமெரிக்க மற்றும் இலங்கைக்கிடையில் இடம்பெறும் தொடர்புகள் குறித்து பாரிய பிரச்சினை தற்போது எழுந்திருக்கின்றது. கோத்தாபய ராஜபக் ஷ அமெரிக்கப் பிரஜையாக இருக்கும்போதே அவர் சோபா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். எதிர்காலத்தில் அவர் அதிகாரத்துக்கு வந்தால், அவருக்கு அமெரிக்காவுடன் இருக்கும் தொடர்புகள் மற்றும் நெருக்கம் ஊடாக நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படலாம். இது மிகவும் மோசமான நிலைமையாகும். மஹிந்த ராஜபக் ஷவும் இந்த விடயங்கள் தொடர்பில் தெரிந்திருந்தால் அவர் இந்த தீர்மானத்தை எடுத்திருக்க மாட்டார் என்றே நினைக்கின்றேன்.
அத்துடன் கோத்தாபய ராஜபக் ஷவை சுற்றி ஓய்வுபெற்ற இராணுவத்தினரே தற்போது இருக்கின்றனர். அவர் அதிகாரத்துக்கு வந்தால் பிரதான துறைகளுக்கு ஓய்வுபெற்ற இராணுவத்தினரையே நியமிப்பார். இதன்மூலம் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியல் கட்சிகளை முற்றாக அடக்கி இராணுவ முறையில் நாட்டை நிர்வகிக்கவே நடவடிக்கை எடுப்பார். அதனால் அந்த நிலை ஏற்படுவதை தடுப்பதற்கு ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் ஒரு அணியாக செற்படவேண்டும் என்றார்.
எம்.ஆர்.எம்.வஸீம்
vidivelli