ஒரு சமூகத்தின் எழுச்சி நோக்கிய பயணத்திற்கும், வீழ்ச்சி நோக்கிய நகர்வுக்கும் காரணமாக அமைவது ஆன்மீக, அரசியல் ரீதியில் அச்சமூகத்திற்கு தலைமை வகிக்கும் தலைவர்களின் வழிகாட்டல்கள்தான்.
தலைவர்களின் முறையான, செயற்றிறன்மிக்க வழிகாட்டல்களே சமூகத்தின் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தும் சமூகக் கட்டமைப்புக் கூறுகளின் விருத்திக்கு காரணமாக அமைகிறது. சமூக மட்டத்திலுள்ள துறைகளுக்கு துறைசார்ந்த தலைவர்கள் தலைமைத்துவம் வழங்கினாலும், அச்சமூகத்தின் சார்பில் அரசியல் துறையில் தலைமைத்துவம் வழங்கும் தலைவர்களின் செயற்பாடுகளும், தீர்மானங்களும் அச்சமூகத்திற்கு நன்மையளிக்கக் கூடியதாகவும், சமூகத்தின் வாழ்வுரிமையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கூடியதாக அமைவது அவசியம்.
ஆனால், முஸ்லிம் அரசியல் வரலாற்றில் வடக்கு கிழக்கு முஸ்லிம் அரசியலை நோக்குகின்றபோது, மர்ஹூம் அஷ்ரபின் அரசியல் யுகத்திற்கு முன்னர் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கு தனித்துவத்துடன் தலைமை வகிக்கும் தலைமை உருவாகவில்லை என்பது நிதர்சனமாகும்.
இருப்பினும், சுதந்திரத்திற்கு முற்பட்ட மற்றும் பிற்பட்ட காலங்களில் உருவான சில சூழ்நிலைத் தாக்கங்கங்களின் விளைவுகளால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலிருந்து அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உதயமாகியிருக்கின்றன.
அந்தவகையில், 1944ஆம் ஆண்டு அகில இலங்கை மலாய் அரசியல் யூனியன் உருவாக்கப்பட்டது. 1960ஆம் ஆண்டு அகில இலங்கை இஸ்லாமிய முற்போக்கு முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி 1964இல் தோற்றம் பெற்றது. அவ்வாறு அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய முஸ்லிம் மக்கள் முன்னணி போன்ற கட்சிகளும் உருவாகின. இக்கட்சிகளுக்கான தலைமைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
ஆனால், இக்கட்சிகளினாலும். தலைமைகளினாலும் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக கூட்டாக இணைந்து செயற்படவும் முடியவில்லை. இதனால், முஸ்லிம் அரசியல் பலவீனமடைந்தது. முஸ்லிம்களின் வாக்குப்பலம் சிதறடிக்கப்பட்டது. அதுமாத்திரமின்றி, காலவோட்டத்தில் இக்கட்சிகள் மக்கள் செல்வாக்கை இழந்தன. 1948ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு காலம் வரை முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் பலமிக்கதொரு அரசியல் கட்சி உருவாக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் ஆரோக்கியமாக, இதயசுத்தியோடு முன்னெடுக்கப்படவில்லை என்பதை இக்கட்சிகளின் செல்வாக்கிழப்பையும் அதனால் ஏற்பட்ட அரசியல் பலவீனத்தையும் முஸ்லிம் அரசியல் வரலாற்றில் அவதானிக்க முடிகிறது.
இந்நிலையில்தான், 1982ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் உதயமானது. முஸ்லிம் காங்கிரஸின் உதயம் வடக்கு, கிழக்கு முஸ்லிம் அரசியல் வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது. வடக்கு, கிழக்கு முஸ்லிம் அரசியல் வரலாற்றுத் திருப்பத்திற்கும், 17 வருட ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி மாற்றப் புரட்சிக்கும் வித்திட்ட ஆளுமை, மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் என்பதை மறக்க முடியாது. அதனால்தான் இன்றுவரை இந்நாட்டிலுள்ள முஸ்லிம்கள் அதிலும் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் அதிகம் அவரை நினைவு கூருபவர்களாக உள்ளனர்.
அஷ்ரபும் நினைவுகளும்
உலகில் ஆயிரமாயிரம் மனிதர்கள் பிறக்கின்றனர். அவ்வாறு பிறக்கின்ற எல்லோரையும் மக்கள் ஞாபகமூட்டிக் கொண்டிருப்பதில்லை. மக்களோடு ஜனரஞ்சகமாக வாழ்ந்து, வாழ் நாட்களை மக்களுக்காக அர்ப்பணித்து, அம்மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஒருசிலரே மக்களால் மறக்கப்படாது தொடர்ந்தும் ஞாபகமூட்டப்படுகிறார்கள். அவர்கள் வாழ்ந்து மறைந்தாலும், அவர்கள் சார்ந்த சமூகமும் தேசமும் ஏதோவொரு வகையில் காலாகாலம் அவர்களை ஞாபகப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன.
அவர்கள் சாதித்த சாதனைகளை, மக்களுக்காக அவர்கள் செய்த தியாகங்களை, மக்களின் உரிமைகளுக்காக புரிந்த போராட்டங்களை, அவர்களின் பன்முக ஆளுமைகளின் அடையாளங்களை என அவர்கள் சார்ந்த பல நினைவுகளை மக்கள் காலத்திற்குக் காலம் சந்தர்ப்பத்திற்கு சந்தர்ப்பம் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வரிசையில் கிழக்கின் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை மண்ணில் 1948ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி பிறந்த அஷ்ரப், கல்முனை மண்ணில் வளர்ந்து, கம்பஹா மண்ணில் வாழ்க்கைத் துணையோடு இணைந்து, 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி சமூகத்தின் பல கனவுகளோடு விண்ணில் பறக்கையில் அரநாயக்க வான் பரப்பில் அகால மரணத்தை தனது 51 ஆவது அகவையில் தழுவிக் கொண்டார்.
முஸ்லிம் அரசியலில் மாத்திரமன்றி தேசிய அரசியலிலும் ஆளுமையின் அடையாளமாக விளங்கிய மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் மறைந்து எதிர்வரும் 16ஆம் திகதியுடன் 19 வருடங்களாகி விட்டன. மரணத்தை எதிர்பார்த்தே தனது அரசியல் நகர்வுகளை நகர்த்திச் சென்ற அஷ்ரப், அதைத் தனது ‘போராளிகளே புறப்படுங்கள்’ என்ற கவிதை வரிகளால் உறுதிப்படுத்தியவர். அவர் மண்ணைவிட்டு மறைந்து 19 வருடங்களாகியும், அஷ்ரபின் தலைமைத்துவ ஆளுமையையும், பண்புகளையும், அவரால் இச்சமூகம் அடைந்த பயன்களையும் இன்னுமே அவரை நேசிக்கின்ற மக்களால் மறக்க முடியாதுள்ளது.
தூரநோக்கோடு ஒன்றை உருவாக்கி அதை அடைவதற்கான செயல் நுணுக்கத்தை விருத்தி செய்து, ஏனையவர்களின் ஆதரவைத் திரட்டி, தூரநோக்கை அடைந்து கொள்வதற்கான செயற்பாட்டை ஊக்கப்படுத்தி. அதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் என்ற அரசியல் கட்சியை 1982 ஆம் ஆண்டு உருவாக்கி அதனை 1986ஆம் ஆண்டு அரசியல் கட்சியாகப் பதிவு செய்தார் அஷ்ரப்.
இந்தக் கட்சியை 14 வருடங்கள் வழிநடத்தியதன் மூலம் அவரது 14 வருட அரசியல் பயணத்தில் அவரின் செயற்றிறன்மிக்க தலைமைத்துவ ஆளுமையினால் சாதித்தவை ஏராளம். அவர் முன்னெடுத்த செயற்பாடுகளை வெற்றிபெறச் செய்தது, அவரிடம் காணப்பட்ட செயற்றிறன்மிக்க பன்முக ஆளுமை கொண்ட தலைமைத்துவ பண்புகளாகும்.
ஒரு செயற்றிறன்மிக்க தலைவர் எதிர்காலம் பற்றிய தூர இலக்கை உருவாக்குவார். அத்தூர இலக்கை நோக்கி இயங்குவதற்கான அறிவுபூர்வமான செயல் உபாயங்களை விருத்தி செய்வார். அவ்வாறு இயங்குவதற்கு அவசியமாகின்ற ஆதரவையும் இணக்கத்தையும் குழு முயற்சியை வழங்கக்கூடிய மிக முக்கியமான அங்கத்தினர்களின் ஒத்துழைப்பையும் திரட்டுவார். அவற்றுடன் செயல் உபாயங்களை அமுல்படுத்தும் விடயத்தில் பங்குகொண்டு தொழிற்படக்கூடிய நபர்களை நல்ல முறையில் ஊக்கப்படுத்துவார்.
இவ்வாறான பண்புகள் பலவற்றை மறைந்த அஷ்ரப் கொண்டிருந்ததனால் அவரையும், கட்சியையும் ஏற்று நாளுக்கு நாள் அபிமானிகள் அவர் பக்கம் திரண்டனர். ஆனால், இத்தகைய தலைமைத்துவப் பண்புகள் தற்போதைய முஸ்லிம் தலைமைகளிடையே காணப்படுகிறதா? என்ற கேள்வியும் உள்ளது.
அன்னாரின் தலைமைத்துவ ஆளுமைக்கான வரலாற்று சான்றுகளாக நிழற்படங்களும் காணொலிகளும் இப்போதும் சாட்சிகளாகவும் காட்சிகளாகவும் இருந்தும், அவற்றை கட்சிகளை வழிநடத்துவதற்குப் பயன்படுத்தாமல் அவை முஸ்லிம் அரசியல் கட்சிகளினால் காலத்திற்குக் காலம் நடைபெறும் தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான மூலதனமாகப் பாவிக்கப்பட்டு அரசியல் வியாபாரம் மேற்கொள்ளப்படுகிறது என மக்கள் கூறுவதையும் ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ள வேண்டிய விடயங்களை நிர்ணயித்து, ஒழுங்குபடுத்தி, அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றத் தேவையான திட்டங்களை வகுத்து, இத்திட்டங்களை செயலுருப்படுத்த தம்மோடு இணைந்திருக்கும் பலரையும் ஆர்வத்தோடு பங்குகொள்ளச் செய்வதற்கும், குறித்த திட்டங்களைச் செயற்படுத்தும்போது ஏற்படக்கூடிய முரண்பாடுகள், பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெறக் கூடியவராகவும் தலைவர் அல்லது தலைமைத்துவம் இருக்க வேண்டும். இத்தகைய தலைமைத்துவத்துக்கான அடிப்படைத் தகைமையை மறைந்த தலைவர் அஷ்ரப் கொண்டிருந்தார். அதனால்தான் இன்றுவரை அவரின் தலைமைத்துவ வழிகாட்டல்களையும் அவரால் சமூகம் அடைந்த நன்மைகளையும் அவரை நேசிக்கும் மக்களினால் மறக்க முடியாமல் இருக்கிறது.
வற்புறுத்தல், வலுக்கட்டாயமில்லாத வழிகளினூடக மக்களை செயற்பட ஊக்குவிப்பதன் மூலம் ஒரு திட்டமிட்ட திசையில் நகர்த்திச் செல்லும் செயல்முறை கொண்ட தலைமைத்துவத்தினால் நீண்டகால, குறுகியகால நோக்கங்களை அடைய முடியும். அதன் அடிப்படையில் பல குறுகிய கால செயற்றிட்டங்களில் வெற்றி கண்ட அஷ்ரப் நீண்டகால செயற்றிட்டங்கள் பலவற்றையும் வகுத்து செயற்பட்டார். அதில் ஒன்றுதான் 2012ஆம் ஆண்டை நோக்கி என்ற அடிப்படையில் தேசிய ஐக்கிய முன்னணி என்ற அரசியல் கட்சியை புறாச் சின்னத்தில் ஸ்தாபித்து அதில் அனைத்து இனங்களையும் இணையச் செய்ததாகும்.
தலைவர்கள், உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை, தூரநோக்கு சிந்தனை, தொடர்பாடல் திறன், ஏனையவர்களுடன் சுமுகமான உறவு, செல்வாக்கு செலுத்தும் தன்மை, நெகிழ்வுத்தன்மை, தீர்மானிக்கும் ஆற்றல், திட்டமிடல். கலந்துரையாடல் போன்ற பண்புடையவர்களாக இருத்தல் அவசியம். அவ்வாறான தலைமைத்துவ குணாதிசயங்கள் பல அஷ்ரபிடம் காணப்பட்டதனாலும் அவற்றினால் அவர் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தலைவராகத் திகழ்ந்ததனாலும் அவர் மறைந்து 19 வருடங்களாகியும்கூட அவரை அபிமானிகளால் மறக்க முடியாதுள்ளது.
தலைவர்களும் மக்களும்
தலைவர்கள் உருவாகுவதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்று ஒரு சாராரும் தலைவர்கள் காலத்திற்குக் காலம் பிறக்கிறார்கள் என்று மற்றுமொரு சாராரும் கருத்தியல் முரண்பாட்டில் அன்று முதல் இன்று வரை உள்ள நிலையில், தலைவர்கள் உருவானாலோ அல்லது உருவாக்கப்பட்டாலோ அவர்கள் மக்கள் விரும்பும் மக்களுக்காக செயற்படும் தலைவர்களாக மிளிர்வது காலத்தின் தேவையாகும். மக்களின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கிறது.
“ஒரு கட்சியின் உருவாக்கம் ஒரு தனி மனிதனாலேயே முதன் முதலில் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் அவ்வாறான ஒரு கட்சி ஒரு தனி மனிதனல்ல.
ஒரே நோக்குள்ள பல மனிதர்கள் ஒரே சிந்தனையுடையவர்களாக ஒருமித்து ஊக்கத்தோடும், விடாமுயற்சியோடும், தியாகத்தோடும் உழைக்கும்போதுதான் அந்தக் கட்சி பல கிளைவிட்டு படர்ந்து செல்கிறது. நல்லெண்ணமும், தீர்க்கதரிசனமும், சரியான செயற்பாடும் இடையறாத இயக்கமும், காலதேச வர்த்தமானங்களை அனுசரித்த போக்கும், இலட்சியங்களை அடைவதற்கான உறுதியும், இன்னல்களையும் இடையூறுகளையும் தோல்விகளையும் கண்டு சலிப்புறாத மனமும், அங்கத்தவர்களிடையே பொது நோக்கங்களின் பேரில் ஒற்றுமையும். கூட்டு முயற்சியும், எதிரிகளினதும் சதிகாரர்களினதும் தந்திரோபாயங்களை, அடையாளம் காணும் சாமர்த்தியமும், சூழ்ச்சிகளை சுமுகமாக முறியடித்து முன்னேறும் சாணக்கியமும். எடுத்த கருத்தை முடித்து வைக்கும் ஆத்ம பலமும், இறை நம்பிக்கையும், முன்னோடிகளான நல்லடியார்களின் மீது நேசமும் பற்றும் இருக்குமானால் நமது கட்சி (முஸ்லிம் காங்கிரஸ்) நிச்சயமாகத் தனது பாதையிலும் பயணத்திலும் பரிபூரண வெற்றியை அடையும் என்பதை நான் உங்களுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்” என இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் 6ஆவது மகாநாட்டில் உரையாற்றும்போது மறைந்த தலைவர் அஷ்ரப் குறிப்பிட்டதாக அவரின் நினைவுப் பகிர்வுகளின் மூலம் அறிய முடிகிறது.
ஒரு கட்சியின் வெற்றிக்கு எத்தகைய செயற்பாடுகள், பண்புகள் அவசியம் என்பதை மறைந்த தலைவர் 30 வருடங்களுக்கு முன்னரே கூறிச் சென்றுள்ளார். ஆனால், அவர் கூறிய விடயங்களில் எவை முஸ்லிம் காங்கிரஸினாலும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற கட்சிகளினாலும் கடைப்பிடிக்கப்படுகின்றன? என்று அவரது அபிமானிகள் எழுப்பும் கேள்விகளில் நியாயமில்லாமலில்லை.
ஒரு தூரநோக்கை இலக்காகக் கொண்டுதான் மறைந்த அஷ்ரபினால் முஸ்லிம்களுக்கான கட்சி உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த இலக்கு நோக்கிய பயணம் அவரது மரணத்துடன் திசைமாற்றப்பட்டுள்ளது. அவரின் யுகம் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறது. போலி வாக்குறுதிகளினாலும், ஏகாதிபத்திய தலைமைத்துவப் பண்புகளினாலும் அவர் வித்திட்ட அரசியல் புரட்சி மீண்டும் ‘பழைய குருடி கதவைத்திறடி’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறதென இக்கட்சியை உருவாக்கிய கிழக்கு மக்கள் இந்நாட்களில் வெளிப்படுத்தும் ஆதங்கத்தினை நிராகரிக்க முடியாது.
அஷ்ரபின் தேசிய மற்றும் சமூக ரீதியிலான இலக்கை அடையாது அல்லது அடைய மறந்த முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் அந்தப் பெரும் தலைவர் மறைந்த இந்த செப்டம்பர் 16லிருந்தாவது அவர் சிந்தனையில் மலர்ந்திருந்த தேசிய சமாதானத்தை அடைவதற்கும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளையும், எதிர்பார்ப்புக்களையும் பெற்றுக்கொடுப்பதற்கும், வாழ்வுரிமையையும், வாழ்வாதாரத்தையும், கேள்விக்குறியாக்கப்படும் எதிர்கால முஸ்லிம்களின் தனித்துவ அடையாளங்களையும் பாதுகாப்பதற்கும், இனவாத மற்றும் மதவாத நெருக்கடிகளிலிருந்து நிம்மதியாக வாழ்வதற்கான பொறிமுறைகளை உருவாக்கவும் அதற்காக முஸ்லிம்களின் வாக்குப்பலத்தைத் திரட்டவும் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும்.
அத்துடன், எதிர்காலத் தேர்தல்களில் முஸ்லிகளின் வாக்குகளை சிதறடித்து பலவீனப்படுத்தாமல் இருமுறை இந்நாட்டின் அரசியல் தலைவர்களைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம்களின் வாக்குப்பலத்தை பலமாக பயன்படுத்திய முஸ்லிம்களின் அரசியல் பலமிக்க ஆளுமையாக அடையாளப்படுத்தப்பட்ட அஷ்ரப், முஸ்லிம்கள் தொடர்பிலும் இந்நாடு தொடர்பிலும் கொண்டிருந்த கனவுகளை நிஜமாக்கவும், அபிலாஷைகளை அடைந்து கொள்ளவும் அக்கறைகொண்டு செயற்படுவது அப்பெரும் தலைவருக்குச் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும் என்பதுடன் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் அச்சமின்றி வாழவும் வழிவகுக்கும் என்பது திண்ணம்.
vidivelli