உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களின் பின்னர் தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் இணைந்து செயற்பட்ட ஜமாஅத்தே மில்லதே இப்ராஹிம் அமைப்பின் உறுப்பினர்கள் 11 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலே அம்பாறை பகுதியில் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் 11 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் இடம்பெற்று வருகின்ற விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள் 90 நாட்கள் தடுப்பு காவலில் விசாணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
மொஹமட் மன்சூர் சைபுல்லாஹ், மொஹமட் ரியால் மொஹமட் சாஜித், முஸ்தாக் அலி அம்ஹர், மொஹமட் தாஹிர் ஹிதாயதுல்லா, மொஹமட் ரம்சின் ருப்தி அஹமட், மொஹிதீன் பாவா மொஹமட் ரூமி, அப்துல் ஹலீம் மொஹமட் ஹிமாஸ், மொஹமட் காசிம் மொஹமட் அகீல், ஹிஸ்புல்லாஹ பாஸ் ஹுஸ்னி அஹமட், மொஹமட் சாஹிர் மொஹமட் அஹ்சன் மற்றும் மொஹமட் அவுனாக் அனீஸ் மொஹமட் ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமின் பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டுள்ளதாகவும், அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் கைது செய்யப்பட்ட இவர்கள் நீதிவானின் அனுமதியுடன் பொலிஸாரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
vidivelli