பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் அண்மையில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நாடு ஈரானில் ஒரு தலைமைத்துவ மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் கூறியிருந்தார். ‘இந்த நாட்டில் முன்னரும் பல தடவைகள் தலைமைத்துவ மாற்றம் இடம்பெற்றிருந்தது. அதனால் பலனேற்படவில்லை” என்று ட்ரம்ப் கூறினார்.
பல மாதகால பதற்ற அதிகரிப்பிற்குப் பிறகு வாஷிங்டனுக்கும், தெஹ்ரானுக்கும் இடையே உத்தேச பேச்சுவார்த்தை ஒன்றுக்கான நம்பிக்கையான சமிக்ஞையாக அவரின் இந்தக் கூற்று அமைந்திருக்கிறது. ஈரானின் ஏற்றுமதிகளை முற்றுமுழுதாகத் துண்டிக்க முன்னர் நாட்டம் கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி, புதிய அணு உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான ஊக்குவிப்பாக அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் ஈரானுக்கு கடன் உதவிகளை அல்லது சில தவணை அடிப்படையிலான கடன்களை வழங்கலாம் என்ற யோசனைகளையும் கூடத் தெரிவித்திருந்தார்.
நேசக்கரம் நீட்டுதல்
ட்ரம்பிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் இந்த நல்லெண்ண சமிக்ஞைகள் கடந்த காலத்தில் ஈரான் தொடர்பில் அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து குறிப்பிடத்தக்க ஒரு விலகலாக அமைந்திருக்கிறது. ஈரானுக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கும் இடையே 2015 இல் கைச்சாத்திடப்பட்ட அணு உடன்படிக்கையிலிருந்து 2018 மே மாதத்தில் அமெரிக்கா விலகிக்கொண்டது. அந்த உடன்படிக்கையை ட்ரம்ப், ‘முன்னொருபோதும் இல்லாத படுமோசமான உடன்படிக்கை” என்று ஏளனம் செய்திருந்தார். உடன்படிக்கை பயனுடையதாக இருக்கிறது என்று சர்வதேச அணுசக்தி நிறுவனமும், தனது சொந்த உயர்மட்ட ஆலோசகர்களும் கூறிய அபிப்பிராயங்கள் அனைத்தையும் அலட்சியம் செய்தே ட்ரம்ப் அதிலிருந்து வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதால் அமெரிக்க தடைவிதிப்புகளிலிருந்து ஈரானுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும், யுரேனியத்தை வளப்படுத்தும் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்காதிருக்க தெஹ்ரானை வழிக்குக் கொண்டுவருவதற்கும் கைக்கொள்ளும் முயற்சிகள் பலம் பெற்றிருக்கின்றன.
ட்ரம்பின் கருத்துக்கள் ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரூஹானி மனதில் படியவில்லை. உடன்படிக்கையை மீளக்கட்டியெழுப்புவதிலும் உள்நாட்டில் தனது நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்துவதிலும் பெருமளவு நலன்கள் அவருக்கு இருக்கின்ற போதிலும், சகல தடைகளும் நீக்கப்படும்வரை பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாது என நிராகரித்துவிட்டார். மேலும் புகைப்படத்திற்குப் பாவனைகாட்டும் வாய்ப்புக்களில் தனக்கு அக்கறையில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்தக் கூற்று உருப்படியான எந்த விளைவுகளையும் தராத உச்சிமாநாடுகளை ட்ரம்பும், வடகொரிய ஜனாதிபதி கிம்-ஜொங்-உன்னும் நடத்தியதையே குத்தலாகச் சுட்டிக்காட்டியது.
எவ்வாறெனினும், பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் ஜனாதிபதி விதிக்கின்ற நிபந்தனைகள் விளங்கிக்கொள்ளக் கூடியவை. ஈரானைத் தண்டிக்கும் நோக்கிலான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, சீனா ஆகியவை எதிர்த்த போதிலும்கூட தடைகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஈரானுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. அமெரிக்கத் தடைகளைத் தவிர்ப்பதற்கு மறைமுகமான வழிமுறைகளை ஐரோப்பிய கொடுப்பனவுகள் ஏற்பாட்டு நிறுவனம் இன்ஸ்டெக்ஸ் (The European Payments Channel) மிகவும் காலந்தாமதித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்ட பயன்களையே தந்தன.
ஏனென்றால், ஈரானின் வெளிநாட்டு அந்திய செலாவணி வருவாயில் பிரதானமானதொரு மூலாதாரமாக இருக்கும் எண்ணெய் விற்பனைகளை இன்ஸ்டெக்ஸ் முறைமை உள்ளடக்கவில்லை. அண்மைய மதிப்பீடுகளின்படி 2-18 ஏப்ரல் அளவில் தினமொன்றுக்கு 25 இலட்சத்திற்கும் அதிகமான பீப்பாய்களாக இருந்த தெஹ்ரானின் மசகு ஏற்றுமதிகள், இப்போது தினமொன்றுக்கு 3 இலட்சம் பீப்பாய்களாக வீழ்ச்சியடைந்திருக்கின்றன. ஈரானுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்து செய்யும் கோப்பரேட் நிறுவனங்கள் டொலர் முறைமையிலிருந்து துண்டித்து விடப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது.
ஈரான் மீது ‘உச்சபட்ச நெருக்குதலை” பிரயோகிக்கும் அமெரிக்கத் தந்திரோபாயத்தில் இதுவரையில் எந்தவொரு ஓய்வையும் காணக்கூடியதாக இருக்கவில்லை. இம்மாத ஆரம்பத்தில் ட்ரம்ப் நிர்வாகம் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜவாத் சரீஃபுக்கு எதிராகத் தடைகளை விதித்தது. ஜூன் மாதத்தில் ஈரானிய அதியுயர் தலைவர் ஆயதுல்லா அலி கொமைனிக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளை ஈரான் ‘கொடுமையானதும், முட்டாள்தனமானதும்” என்று ஆத்திரத்துடன் வர்ணித்திருந்தது. ஏப்ரல் மாதம் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையை பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்கா பட்டியலிட்டது.
இந்த நடவடிக்கைகளுக்கான பதிலடியாக ஜேர்மன் நீரிணையில் எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களைக் கைப்பற்றியதன் மூலமாக மேற்கு நாடுகளின் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளை முடங்கச்செய்வதில் தனக்கிருக்கும் ஆற்றலை ஈரான் வெளிக்காட்டியது. அமெரிக்க ஆளில்லா வேவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து பதிலடி கொடுப்பதிலிருந்து ட்ரம்ப் பின்வாங்கிய அதேவேளை அந்த ஏவுகணைத் தாக்குதல் எந்த நேரத்திலும் மோதல் மூளக்கூடிய ஆபத்தைப் பிரகாசமாக வெளிப்படுத்தியது.
முன்நோக்கி நகர்தல்
ஈரானில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இல்லை என்று ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதை வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவோ அல்லது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் வோல்ற்றனோ எளிதில் விளங்கிக்கொள்ளப் போவதில்லை. ஆனால் தனது நிர்வாகத்தில் இருக்கக்கூடிய கடும்போக்காளர்களுக்கு எதிராக நகர்வுகளைச் செய்யும் சில நடவடிக்கைகளை எடுக்க முனைவது இது முதற்தடவையும் அல்ல. அமெரிக்க ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட யோசனைகளைத் தொடர்ந்து வாஷிங்டன் அங்கீகாரத்திற்கு உட்பட்ட வகையில் 1500 கோடி டொலர்கள் கடனுதவியைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை பிரான்ஸ் உறுதி செய்திருக்கிறது. மேற்கு நாடுகளின் நோக்கங்களில் ஈரானின் நம்பிக்கையை மேம்படுத்தக் கூடியவையாக இந்த முன்முயற்சிகள் அமைந்திருக்கின்ற அதேவேளை, இறுதி இலக்கு 2015 அணு உடன்படிக்கைக்குப் புத்துயிர் அளிப்பதாகவே இருக்க வேண்டும்.
ஈரானில் கடும்போக்காளர்கள் தங்களைப் பெருமளவிற்கு முன்நிலைப்படுத்திக்கொண்டு செயற்பட ஆரம்பித்திருப்பதிலிருந்து ஜனாதிபதி ரூஹானியின் நிலை பலவீனமடைந்திருக்கிறது. அவரால் கடும்போக்காளர்களைத் தனிமைப்படுத்த இயலாத பட்சத்தில் அணு உடன்படிக்கையில் முன்நோக்கி நகர்வதென்பது சாத்தியமில்லாமல் போகும்.
( ‘த இந்து” பத்திரிகையின் பிரதி ஆசிரியர்களுள் ஒருவரான கரமெல்லா சுப்ரமணியம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)
vidivelli