சவூதி அரேபிய அரசாங்கம் இஸ்லாமிய புதுவருடம் ஹிஜ்ரி 1441 ஆம் ஆண்டிலிருந்து உம்ராவுக்கு புதிய சட்ட விதிகளை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதாக நாம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
உம்ரா யாத்திரிகர்களின் நலன் கருதியே சவூதி அரசாங்கம் இப்புதிய சட்ட விதிகளை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் சவூதி அரேபிய அரசு உம்ராவுக்கு புதிய சட்ட விதிகளை அமுல்படுத்தியுள்ள அதேவேளை எமது நாட்டின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் அரச ஹஜ் குழுவும் உம்ரா யாத்திரிகர்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. இங்கு போலி உம்ரா உப முகவர்கள் மக்களிடமிருந்து உம்ரா யாத்திரைக்கென முற்பணம் அறவிட்டு ஏமாற்றி வருவதாக திணைக்களத்துக்கு முறைப்பாடுகள் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உம்ரா யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டு அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள முகவர் நிலையங்கள் ஊடாகவே பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி அரச ஹஜ் குழு மக்களை வேண்டியுள்ளது.
ணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள முகவர் நிலையங்களின் விபரங்களை திணைக்களத்திடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். போலி முகவர்களை நம்பி ஏமாறும் யாத்திரிகர்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொறுப்புக் கூறமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித பயணங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறி மக்களை ஏமாற்றி வருபவர்கள் தொடர்பில் சமூகம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உம்ரா யாத்திரை ஏற்பாடுகளில் மாத்திரமல்ல புனித ஹஜ் கடமைக்கான ஏற்பாடுகளிலும் தொடர்ந்து மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். ஹஜ் முகவரிடம் இலட்சக்கணக்கான ரூபாய்களை வழங்கி இறுதி நேரத்தில் ஏமாற்றப்பட்ட பலர் புனித கடமையை நிறைவேற்ற முடியாமற் போன வரலாறுகள் இருக்கின்றன. இந்த வருடமும் 8 ஹஜ் விண்ணப்பதாரிகள் இவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள். அவர்களில் அறுவர் செலுத்திய கட்டணம் மில்லியன் கணக்காக ரூபாய்கள் இதுவரை ஹஜ் முகவரால் அவர்களுக்கு திருப்பி வழங்கப்படவில்லை.
பெரும்பாலான ஹஜ், உம்ரா முகவர்கள் பல்வேறு உறுதி மொழிகளை வழங்கி சவூதி அரேபியாவில் அவர்களால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் கவர்ச்சிகரமான பெக்கேஜ்களை முன்வைத்து யாத்திரிகர்களை ஏமாற்றி வருகிறார்கள். உறுதியளித்தபடி அவர்களுக்கு சேவைகள் வழங்கப்படுவதில்லை. இதனால் யாத்திரிகர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகிறார்கள். நட்சத்திர ஹோட்டல்களில் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்தவதாகக் கூறி அடிப்படை வசதிகள் குறைவான, தரமற்ற விடுதிகளில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
ஹஜ் யாத்திரிகர்கள் இவ்வாறான அசௌகரியங்களுக்குள்ளாவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்தே இளவரசர் முஹம்மத் பின் சல்மான் இவ்வருடம் இஸ்லாமிய புத்தாண்டிலிருந்து உம்ராவுக்கு பல புதிய சட்ட விதிகளை அமுல்படுத்தியுள்ளார். இது வரவேற்கத்தக்கதாகும்.
புதிய சட்ட விதிகளின்படி உம்ரா பயணிகள் சவூதி அரசினால் அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள நட்சத்திர ஹோட்டல்களிலே தங்க வைக்கப்பட வேண்டும். ஹரம் ஷரீபுக்கு அருகில் இயங்கி வந்த அரசினால் அங்கீகரிக்கப்படாத சிறிய ஹோட்டல்கள், தங்கு விடுதிகள் அரசினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால் உம்ரா யாத்திரிகர்கள் வசதிகளுடன் கூடிய தங்குமிடங்களில் தங்குவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உம்ரா விசாவுக்கான கட்டணம் 200 ரியாலிலிருந்து 300 ரியாலாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் யாத்திரிகர்கள் சிறந்த போக்குவரத்து சேவையை பெற்றுக் கொள்வதற்காக முகவர் நிலையங்கள் யாத்திரிகர் ஒருவருக்கு 120 ரியால்களும் வரலாற்று இடங்களை தரிசிப்பதற்கு ஒருவருக்கு 20 ரியால்களும் முன்கூட்டியே செலுத்தப்பட வேண்டியுள்ளது.
பெரும்பாலான அரச அனுமதி வழங்கப்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள் ஹரம் ஷரீபிலிருந்து சிறிது தொலைவில் இருந்தாலும் யாத்திரிகர்கள் அங்கேயே தங்கவைக்கப்பட வேண்டியுள்ளது. உம்ரா யாத்திரிகர்களின் நலன்கருதி சவூதி அரேபிய அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்றாலும் உம்ரா கட்டணங்களின் உயர்வும் தவிர்க்க முடியாததாகவுள்ளது.
இந்நிலையில் போலி உம்ரா முகவர்கள் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெக்க வேண்டும், மக்களும் இதுவிடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும்.
vidivelli
Why u r not publishing the name of the travel agent. Then only people will come to know the agent and they can avoid them.