பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷ பொதுபலசேனா அமைப்பின் ஆதரவாளர் என்ற கருத்து முஸ்லிம்கள் மத்தியில் பரப்பப்பட்டுவருகிறது. இது தவறான கருத்தாகும். கோத்தாபய ராஜபக் ஷ முஸ்லிம்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளார். அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்குவதே அவரது கொள்கையாகும் என பொதுஜன முஸ்லிம் முன்னணியின் கொழும்பு மத்திய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.உவைஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் ஒரு பிரிவான பொதுஜன முஸ்லிம் முன்னணி ஜனாதிபதி அபேட்சகர் கோத்தாபய ராஜபக் ஷ வை ஆதரிக்குமாறு கோரிக்கை விடுப்பதற்கான காரணம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘‘கோத்தாபய ராஜபக் ஷ முஸ்லிம்களுக்கு எதிரானவர். பொதுபல சேனாவின் ஆதர வாளர் என்று தவறான கருத்து பரப்பப் பட்டு வருகிறது. முஸ்லிம்களைப் பாது காப்போம். பள்ளிவாசல்களைப் பாதுகாப்போம் என்று கோஷமிடும் இந்த அரசாங்கத்தின் ஆட்சியிலே அதிக எண்ணிக்கையிலான பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன; எரிக்கப்பட்டன; தொழுகைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டன.
பொதுஜன பெரமுன அமைக்கவுள்ள ஆட்சியில் இவ்வாறான வன்செயல்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது. கோத்தாபய ராஜபக் ஷ அன்று காலியில் நூல் நிலைய மொன்றையே திறந்துவைத்தார். அது பின்னர் பொதுபலசேனாவின் காரியாலயமாகப் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தைக் கொண்டு கோத்தாபய ராஜபக் ஷ பொதுபலசேனாவின் ஆதரவாளர் எனக் குறிப்பிட்டு முஸ்லிம்களை அவரிலிருந்தும் தூரமாக்க சிலர் முயற்சிக்கிறார்கள்.
கோத்தாபய ராஜபக் ஷ முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உறுதியளித்துள்ளார். நாட்டில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டி ஊழல்களை இல்லாமற் செய்வதற்கு கோத்தாபய ராஜபக் ஷவினாலே முடியும். கடந்தகால தேர்தல்களில் முஸ்லிம்கள் தாம் விட்ட தவறுகளை இப்போது உணர்ந்துகொண்டுள்ளார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ காலத்திலே முஸ்லிம்களின் வர்த்தகம் அபிவிருத்தியடைந்தது. இன்று முஸ்லிம்கள் வர்த்தகத்தில் பின்தள்ளப்பட்டுள்ளனர். கோத்தாபயவின் எதிர்கால ஆட்சியில் முஸ்லிம்களின் வர்த்தகத்துக்கு உத்தரவாதம் வழங்கப்படும்’’ என்றார்.
vidivelli