முகுது மகா விகாரையை மையப்படுத்தி பொத்துவிலை நோக்கி நகரும் இனவாதத் தீ

0 1,558

நாட்டில் சுற்­று­லாத்­து­றைக்கு பிர­பல்­ய­மான நக­ரங்­களில் பொத்­து­விலும் ஒன்­றாகும். உல­கி­லேயே நீர்ச்­ச­றுக்கல் விளை­யாட்­டுக்குப் பிர­சித்­த­மான ஆங்­கி­லத்தில் அரு­கம்பே என்­ற­ழைக்­கப்­படும் அருகம் குடா இந்தப் பிர­தே­சத்­தி­ல் உள்­ள­மையே இதற்­கான பிர­தான கார­ண­மாகும்.

இது, கிழக்கு மாகா­ணத்தின் அம்­பாறை மாவட்­டத்தின் தெற்கு எல்­லைப்­பு­றத்தில் அமைந்­துள்ள நக­ராகும். முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பொத்­து­விலின் நகரின் வடக்கே திருக்­கோவில் பிர­தேச செய­லகப் பிரிவும், கிழக்கே வங்­காள விரி­கு­டாவும், தெற்­கேயும் மேற்­கேயும் லாகு­கல பிர­தேச செய­லகப் பிரிவும் அமைந்­துள்­ளன.

கோமாரி, மணற்­சேனை, விக்டர் தோட்டம், ஹிதாயாபுரம், ஊறணி, உல்லை ஆகிய முக்­கிய கிரா­மங்­களைக் கொண்ட இப்­பி­ர­தேச மக்­களின் பிர­தான பொரு­ளா­தார மார்க்­க­மாக காணப்­ப­டு­வது, விவ­சா­ய­மாகும். இதற்கு மேல­தி­க­மாக விலங்கு வேளாண்மை, கரை­யோர மற்றும் உள்­ளக மீன்­பிடி, சிறிய மற்றும் நடுத்­தர வியா­பாரம் மற்றும் சுற்­று­லாத்­துறை ஆகி­ய­னவும் பொரு­ளா­தார மார்க்­க­மாக காணப்­ப­டு­கின்­றன. சுற்­றுலாத்துறைக்கு பிர­பல்யம் பெற்ற மண் மலையும் இப்­பி­ர­தே­சத்­தி­லேயே அமைந்­துள்­ளமை குறிப்­பி­டக்­கத்­தது.
இவ்­வாறு பல்­வேறு சிறப்­பம்­சங்­களைக் கொண்ட இந்த நக­ரத்­தினை சிங்­கள மய­மாக்கும் முயற்சிகள் கடந்த பல தசாப்­தங்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும் இந்தப் பிர­தே­சத்தில் வாழும் முஸ்லிம், சிங்­கள மற்றும் தமிழ் ஆகிய மூவி­னத்­த­வர்­களும் ஒற்­று­மை­யா­கவே வாழ்ந்து வரு­கின்­றனர்.

இந்த சூழ்­நி­லையில் அங்கு வாழும் சிங்­கள மற்றும் முஸ்லிம் மக்­க­ளி­டையே மோத­லொன்றை தூண்­டு­வ­தற்­கான முயற்சி அண்மைக் கால­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்­பெற்ற ஈஸ்டர் தற்­கொலைத் தாக்­கு­த­லினை அடுத்து இந்த செயற்­பாடு சற்று வீரி­ய­ம­டைந்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இதற்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது பொத்­துவில் மண் மலையின் உச்­சி­யி­லுள்ள முகுது மகா விகா­ரை­யாகும்.

முஸ்லிம் இருப்­பியல் அடை­யா­ள­மாகத் திகழும் பொத்­துவில் கொடி­ம­ரத்து பள்­ளி­வா­சலில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்­தி­லேயே இந்த விகாரை அமையப் பெற்­றுள்­ளது.

கிழக்­கி­லங்­கையில் பௌத்­தர்­களின் பிர­சித்­தி­பெற்ற பௌத்த விகா­ரை­களில் இந்த முகுது மஹா விகா­ரையும் ஒன்­றாகும். அரு­கம்பே பிர­தே­சத்­திற்கு விஜயம் மேற்­கொள்ளும் பௌத்­தர்கள் இந்த விகா­ரை­யி­னையும் தரி­சிப்பர்.
1950ஆம் ஆண்­டு­களில் சிறிய ஒரு விகா­ரை­யாக தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் கீழி­ருந்த இந்த பிர­தேசம், அக்­காலப் பகு­தியில் முஸ்­லிம்­க­ளி­னா­லேயே பரா­ம­ரிக்­கப்­பட்டு வந்­த­தென பொத்­துவில் பிர­தேச சபையின் தவி­சா­ள­ராக நீண்ட கால­மாக செயற்­பட்டு வரும் எம்.எஸ். அப்துல் வாசீத் தெரி­வித்தார்.
எனினும், பிற்­பட்ட காலங்­களில் இந்த விகா­ரையில் கட­மை­யாற்ற வெளிப் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து வந்த சில பௌத்த தேரர்­க­ளினால் இந்தப் பிர­தேச முஸ்லிம் மற்றும் சிங்­கள மக்கள் மத்­தியில் பிளவு ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அவர் குற்­றஞ்­சாட்­டினார்.

இந்த விகா­ரை­யினை சுற்­றி­யுள்ள 72 ஏக்கர் நிலப்­ப­ரப்பு விகா­ரைக்கு சொந்­த­மா­னது என முகுது மகா விகா­ரையின் விகா­ரா­தி­பதி உட­ம­லத்தே ரத­ன­பி­ரிய ஹிமி தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்றார். அண்­மையில் கொழும்பில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்­றிலும் மேற்­கண்­ட­வாறு அவர் குறிப்­பிட்டார். குறித்த தேரர் கூறு­வது உண்மை என்றால் பொத்­துவில் நக­ரமும் இந்த விகா­ரைக்கு சொந்­த­மா­ன­தா­கவே அமையும் என தவி­சாளர் அப்துல் வாசீத் கூறினார்.

இந்தப் பிர­தே­சமும், அங்­குள்ள முஸ்லிம் வாழ்­வி­டங்­களும் குறிப்­பாக கடற்­கரைப் பகு­தியும் அடிக்­கடி பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­கின்ற விடயம் யாவரும் அறிந்த உண்­மை­யாகும். முகுது மஹா விகா­ரையின் எல்­லைக்­கான காணி வரை­பட ரீதி­யாக இது­வரை உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் அது தேவைக்­கேற்ப அடிக்­கடி விஸ்­த­ரிக்­கப்­ப­டு­வ­தாக அப்­பி­ர­தேச மக்கள் குற்­றஞ்­சாட்­டி­ய­துடன், முஸ்­லிம்­களின் புரா­தன அடை­யா­ளங்கள் இல்­லாமல் ஆக்­கப்­பட்­டதன் விளை­வாக இந்தப் பிர­தேசம் பல்­வேறு பிரச்­சி­னை­களை தற்­போது எதிர்­நோக்­கு­வ­தா­கவும் தெரி­வித்­தனர்.

இதே­வேளை, இந்தப் பிர­தே­சத்தின் மூன்று ஏக்கர் காணி குறித்த விகா­ரைக்கும், 30 ஏக்கர் காணி தொல்­பொருள் திணைக்­க­ளத்­திற்கும் மண் மலை­யினைச் சுற்­றி­யுள்ள ஒன்­பது ஏக்கர் காணி கரை­யோர பாது­காப்பு திணைக்­க­ளத்­திற்கு கீழும் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­றான நிலையில் தற்­போது மன்னார் முதல் புத்­தளம் மற்றும் காலி ஊடாக பொத்­துவில் வரை­யான கடற் பிர­தே­சத்தில் வீசப்­படும் கடும் காற்றின் கார­ண­மாக பொத்­துவில் கடற்­க­ரை­யி­லுள்ள மண், மக்கள் குடி­யி­ருப்­புக்­களை நோக்கி வீசப்­ப­டு­கின்­றது.

“இதனால் சுமார் 8 – 10 அடி வரை மண், மலை போன்று காணப்­ப­டு­வ­தாக” குறித்த பிர­தே­சத்­தினைச் சேர்ந்த 61 வய­தான முஹைதீன் பிச்சை சுல்தான் தெரி­வித்தார். இதனால் தனது சிற்­றுண்­டிச்­சாலை முற்­றாக அழிந்­துள்­ள­தா­கவும் தற்­போது தான் ஜீவ­னோ­பா­யத்­திற்­காக போராடி வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

இந்த மண்ணை அகற்­ற­ுவ­தற்­கான நட­வ­டிக்­கை­யினை அதி­கா­ரிகள் உட­ன­டி­யாக முன்­னெ­டுக்க வேண்­டு­மென அவர் வேண்­டுகோள் விடுத்தார்.
இவ்­வாறு மக்­களின் கோரிக்­கை­யினை அடுத்து கரை­யோர பாது­காப்பு திணைக்­க­ளத்தின் அனு­ம­தி­யுடன் குறித்த மண்ணை அகற்றும் நட­வ­டிக்­கை­யினை கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி பிர­தேச சபை முன்­னெ­டுத்­தி­ருந்­தது.
எனினும் இந்த விட­யத்­திற்கு பொத்­துவில் முகுது மகா விகா­ரையின் விகா­ரா­தி­பதி உட­ம­லத்தே ரத­ன­பி­ரிய ஹிமி­யினால் மேற்­கொள்­ளப்­பட்ட பலத்த எதி­ர்ப்­பினை அடுத்து அது கைவி­டப்­பட்­டது.

இது தொடர்பில் பாது­காப்பு தரப்­பினர் மற்றும் அரச அதி­கா­ரிகள் உள்­ளிட்டோர் தேர­ருடன் கலந்­து­ரை­யா­டி­ய­போது அது பய­ன­ளிக்­க­வில்லை என தெரி­ய­வ­ரு­கி­றது. அத்­துடன் குறித்த மண்ணை பொத்­துவில் பிர­தேச சபை தவி­சாளர் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் விற்­பனை செய்­வ­தாக விகா­ரா­தி­பதி குற்­றஞ்­சாட்­டினார்.

இந்த சர்ச்சை ஏற்­பட்ட அதே காலப்­ப­கு­தியில் குறித்த விகா­ரை­யி­லுள்ள புத்தர் சிலைகள் இஸ்­லா­மிய அடிப்­படை வாதி­களால் நாச­மாக்­கப்­பட்­டுள்­ளன என சமூக ஊட­கங்­களில் செய்­தி­யொன்று பரப்­பட்­டது.

இது தொடர்பில் பிர­பல சிங்­கள பாட­க­ரான இராஜும் குறித்த விகா­ரைக்கு நேர­டி­யாக விஜயம் மேற்­கொண்டு வீடியோ ஒன்­றினை சமூக ஊட­களில் வெளி­யிட்டார்.

முஸ்­லிம்­களை இலக்கு வைத்து தயா­ரிக்­கப்­பட்ட இந்த வீடி­யோவில் குறித்த விகா­ரா­தி­ப­தியின் கருத்­துக்­க­ளுக்கே முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.
ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மையிலான இந்த அர­சாங்­கத்­திற்கு எதி­ராக பல்­வேறு சோடிக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து வீடி­யோக்­க­ளினை வெளி­யிட்­டுள்ள பாடகர் இராஜின் இந்த விஜ­யத்தின் போது விமல் வீர­வ­சன்ச தலை­மை­யி­லான தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் மொன­ரா­கலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத்மா உத­ய­சாந்­தவும் இணைந்­தி­ருந்தார்.

ஏற்­க­னவே அம்­பாறை மாவட்­டத்தி இரண்டு பெரும்­பான்­மை­யின பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருக்­கின்ற நிலையில் வெளி­மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரொ­ருவர் இரா­ஜுடன் இந்த விகா­ரைக்கு விஜயம் செய்­துள்­ளமை குறித்த பிர­தேச மக்கள் மத்­தியில் பாரிய சந்­தே­கத்தை தோற்­று­வித்­துள்­ளது.
இதனைத் தொடர்ந்து பாரா­ளு­மன்றில் சுயா­தீ­ன­மாக செயற்­படும் அது­ர­லிய ரதன தேரரும் பொத்­து­வி­லுக்கு விஜயம் செய்து குறித்த விகா­ரா­தி­ப­தி­யுடன் சந்­திப்­பொன்றை மேற்­கொண்­ட­துடன் கள விஜ­ய­மொன்றை மேற்­கொண்டார். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத்மா உத­ய­சாந்த, பாடகர் இராஜ் மற்றும் முகுது மலை விகா­ரா­தி­பதி ஆகி­யோரின் பங்­கு­பற்­ற­லுடன் இந்த விவ­காரம் தொடர்பில் ராஜ­கி­ரி­யவில் ஊடக சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது.

இந்த விகாரை தொடர்­பான விட­யத்­தினை இன­வாத அப்­ப­டையில் பார்க்க வேண்டாம் எனத் தெரி­வித்த ஏற்­பட்­டா­ளர்கள், இந்த மாநாட்டில் குறித்த பிர­தேச முஸ்­லிம்­களை கடு­மை­யாக விமர்­சித்­தனர்.

இவ்­வா­றான நிலையில் மண் அகழ்­விற்­காக கரை­யோர பாது­காப்பு திணைக்­க­ளத்­தினால் வழங்­கப்­பட்­டி­ருந்த உத்­த­ரவு தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது என அதன் அம்­பாறை மாவட்ட பொறுப்­ப­தி­காரி எம்.எஸ்.எம்.ஜெஸார் தெரி­வித்தார்.

“குறித்த அனு­மதி ஐந்து நாட்­க­ளுக்கு மாத்­தி­ரமே வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இதன்­போது ஏற்­பட்ட சர்ச்­சை­க­ளினால் குறித்த மண் அகழ்வு பணிகள் இடம்­பெ­ற­வில்லை. இந்த நிலை­யி­லேயே மண் அகழ்­விற்­கான தற்­கா­லிக தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது” எனவும் அவர் குறிப்­பிட்டார்.

எவ்­வா­றா­யினும், குறித்த பிர­தேச மக்­களின் நலன் கருதி பேச்­சு­வார்த்­தையின் ஊடாக இதற்கு தீர்­வு­காண முயற்­சிப்­ப­தாக தெரி­வித்த அவர், எதிர்­கா­லத்தில் காற்­றினால் குடி­யி­ருப்பு பிர­தே­சங்­க­ளிற்கு மண் கொண்­டு­வ­ரப்­ப­டு­வதை தடுப்­ப­தற்­காக குறித்த பிர­தே­சத்தில் அடம்பன் கொடி நடு­வ­தற்கு எமது திணைக்­க­ளத்­தினால் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.

இந்த பிரச்­சி­னைக்கு விரைவில் தீர்­வொன்­றினை பெற்றுத் தரு­மாறு அப்­பி­ர­தேச வாசி­யான 39 வய­தான அப்துல் மஜீத் தெரி­வித்தார். இந்த பிரச்­சி­னை­யினால் பல வீடுகள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், வீதி­யொன்று முற்­றாக மூடப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

இதனால் ஜனா­ஸா­க்களை கூட மிக நீண்ட தூரம் சுற்றி தூக்கிச் செல்ல வேண்­டி­யுள்­ளது. மீனவத் தொழி­லாளி ஒருவர், மலை­போன்­றுள்ள இந்த மண் கும்­ப­லிற்கு மேலால் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் துவிச்­சக்­கர வண்­டி­யினை ஏற்­றிக்­கொண்டு தொழி­லுக்கு செல்­வ­தா­கவும் கூறினார்.

இதே­வேளை, குறித்த மண் அகழ்­விற்கு எதி­ராக செயற்­படும் பொத்­துவில் முகுது மகா விகா­ரையின் விகா­ரா­தி­பதி உட­ம­லத்தே ரத­ன­பி­ரிய தேர­ருக்கு எதி­ராக பொத்­துவில் நீதி­மன்றில் மனுத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக தவி­சாளர் எம்.எஸ். அப்துல் வாசீத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற சபையின் மாதாந்த அமர்வின் போது ஏக­ம­ன­தாக தீர்­மா­ன­மொன்று நிறை­வேற்­றப்­பட்­ட­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

“குறித்த பிர­தே­சத்தில் இதற்கு முன்­னரும் பிர­தேச சபை­யினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட பல செயற்­றிட்­டங்­க­ளுக்கு குறித்த விகா­ரா­தி­ப­தி­யினால் பல தட­வைகள் இடை­யூ­றுகள் விளை­விக்­கப்­பட்­டன. அப்­போதும் நீதி­மன்­றத்­தினை நாடியே நாம் தீர்வு பெற்­றுள்ளோம் அது போன்று இதற்­கான தீர்­வினை பெறுவோம்” என்றார் அவர் பிர­தேச சபைக்கு எதி­ராக பொலி­ஸாரின் ஊடாக குறித்த தேர­ரினால் ஏற்­க­னவே பல தட­வைகள் நீதி­மன்­றத்தில் மனுத் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தன. எனினும் குறிப்­பிட்ட அனைத்து மனுக்­களும் நீத­வா­னினால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­துடன் உள்­ளூ­ராட்சி மன்ற சட்­டத்தின் ஊடாக பிர­தேச சபைக்­குள்ள அதி­கா­ரங்­க­ளினை நீதி­மன்­றித்தின் ஊடாக தடை செய்ய முடி­யாது என இதன்­போது நீதவான் அறி­வித்­த­தா­கவும் தவி­சாளர் குறிப்­பிட்டார்.

முகுது மலை புத்தர் சிலை இஸ்­லா­மிய அடிப்­படை வாதி­களால் நாச­மாக்­கப்­பட்­டுள்­ள­தென வெளி­யான செய்­தி­களில் எந்­த­வொரு உண்­மை­யு­மில்லை என தெரி­வித்து கடந்த புதன்­கி­ழமை வீடி­யோ ஒன்று சமூக ஊட­கங்­களில் வெளி­யா­கி­யது.

இந்த விகா­ரையில் கட­மை­யாற்றும் தேரர் எனக் அறி­மு­கப்­ப­டுத்தும் ஒரு தேரர் குறித்த வீடி­யோவில் தோன்றி முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக கருத்து வெளி­யிட்டார். இந்த நிலையில் எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை (08) பொத்­துவில் பிர­தே­சத்தில் ஆர்ப்­பாட்­ட­மொன்றை மேற்கொள்வதற்கான ஏற்படுகள் இடம்பெறுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த செயற்பாடு குறித்த பிரதேசத்தில் அசாதாரண நிலையொன்றினை தோற்றுவிப்பதற்கான முயற்சியாக கருதப்படுகின்றது. இது தொடர்பில் அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் கூட்டாக இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாவட்டத்தில் உள்ள போதும் இதுவரை அவர்களில் ஒருவராவது இந்த விடயம் தொடர்பில் வாய் திறந்ததாக எந்தவொரு ஊடகத்திலும் அவதானிக்க முடியவில்லை.

பௌத்த மக்கள் மத்தியில் பரப்பப்படும் இந்தப் பொய் பிரசாரத்திற்கு எதிராக மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தார்மிகப் பொறுப்பு இந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது.

தேர்தல் காலத்தில் மாத்திரம் பொத்துவில் மக்களின் வாக்குகளை நாடிச் செல்லாது ஏனைய காலங்களிலும் அப்பிரதேச மக்களுக்காக குரல்கொடுக்க வேண்டியது அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகளின் தார்மிக பொறுப்பாகும்.
அதுபோன்று அதிக முஸ்லிம் பிராந்திய ஊடவியலாளர்களைக் கொண்டுள்ள மாவட்டமாக அம்பாறை உள்ளது. இந்த மாவட்ட ஊடகவியலாளர்கள் தங்கள் மாவட்டத்தின் எல்லைப் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு குரல்கொடுத்து பொய்ப் பிரசாரத்தினை முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.