ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர், கோத்தாபய ராஜபக் ஷ வித்திசமான ஒருவர் என்று வேறு எவருமல்ல, பஷில் ராஜபக் ஷவே கூறியுள்ளார். அதேவேளை, கோத்தா ஊழல், மோசடிகளை ஒழித்துக் கட்டுவார் என்று சொன்னவரும் பஷில்தான். ‘ஒழித்துக் கட்டுவார்’ என்ற வார்த்தையின் பின்னாலும் பயங்கரம் ஒன்றே ஒளிந்திருக்கிறது.
கோத்தாபய ராஜபக் ஷவின் பதவிக்காலத்திலேயே வெள்ளை வேன் மூலம் பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தேறப்பட்டதாக சொன்னவரும் வேறுயாருமல்ல; ராஜபக் ஷ அரசியல் அடிவருடிகளில் ஒருவரான வாசுதேவ நாணயக்கார தான்.
கோத்தாபய ராஜபக் ஷ அதிகாரத்திற்கு வந்தால் தனக்கும் பிரகீத் எக்னெலிகொடவுக்கு நடந்த கதியே நடக்கும் என்று சொல்பவரும் இன்னும் மகிந்த ராஜபக் ஷ அணியில் இருக்கும் குமார வெல்கம தான்.
கோத்தாபய ராஜபக் ஷ பதவிக்கு வந்தால் நிலைமை என்னவாகும் என்பது குறித்து அரசியல் விமர்சகரான அகிலன் கதிர்காமர் கருத்துத்தெரிவிக்கையில்,
“கடந்த இரு வருடங்களாக ராஜபக் ஷ கம்பனி, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதிலேயே காய்களை நகர்த்தி வந்தது. ஓய்வுபெற்ற படை அதிகாரிகள், வர்த்தக அதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் போன்றோரைத் தந்திரமாக அரவணைத்துக்கொண்டும் வந்தனர். நுணுக்கமாக உருவாக்கிய சிங்கள பெளத்த இனவாதமும் வளர்க்கப்பட்டது. புதிய எதிரியாக முஸ்லிம்களை இனம்காண வைத்து சமூகம் கட்டியெழுப்பப்பட்டது. அரச பலத்துடன் இணைந்து செயற்பட்டதால் இத்தீய சக்தி உத்வேகத்துடன் இயங்கவே செய்தது. இதன் மூலம் தமது அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. தமது திட்டங்களுக் கு விரோதமானவர்களை மடக்குவதற்கும் சந்தர்ப்பம் உருவாக்கிக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் எதிர்காலம் இதனை விடவும் பயங்கரமான தோற்றம் பெறவும் முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மற்றோர் அரசியல் விமர்சகரான ஜயதேவ உயன்கொட இதுவிடயமாகக் குறிப்பிடுகையில், “கோத்தாபயவின் கருத்திட்டங்கள் இப்போதிருந்தே முடுக்கி விடப்பட்டுள்ளன. மனித உரிமைகள், சிறுபான்மையினரின் உரிமைகள், அரசியல் சுதந்திரம், லிபரல்வாதம் போன்ற வசனங்களை இந்நாட்டின் அரசியலில் இருந்து இல்லாமலாக்குவதற்கு சபதமெடுக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் நீண்டகாலமாக மிகவும் மோசமாக நலிவுற்றும் பின்னடைவு கண்டும் வரும் ஜனநாயகத்தை மட்டம் தட்டுவதில் இவர் அகங்காரத்துடன் காரியமாற்றி வருகிறார். முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் கோடீஸ்வர வர்த்தகர்கள் போன்றோருடன் இவர் கைகோர்த்துக் கொண்டு ஜனநாயகம், அரசியல் சுதந்திரம், மனித உரிமை போன்றவற்றை இலங்கையிலிருந்து துடைத்தெறிவதை தனது அடுத்த கட்ட நடவடிக்கையாகக் கொண்டுள்ளார்” என்று அந்த விமர்சகர் எதிர்வு கூறியுள்ளார்.
கோத்தாபய ராஜபக் ஷ கடந்த காலங்களில் லங்காதீப பத்திரிகையில் வழங்கிய நேர்காணல்களில் தனிநபர் சுதந்திரத்திற்குப் பதிலாக பொருளாதார அபிவிருத்திக்கே முன்னுரிமை கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் தனது கொள்கை கோட்பாட்டுக் கருத்தாகவே இதனை வெளியிட்டுள்ளார்.
கோத்தாபய, பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோதே அவர் ஒரு முன்கோபக்காரர் என்பதைக் காட்டி வந்துள்ளார். தான் சொல்வதே சரி என்ற பிடிவாதம் கொண்டவர். தன்னை விமர்சிப்போரைத் தன்முன் கொண்டுவந்து அச்சுறுத்தல் விடுக்கவும் செய்வார். சண்டே லீடர் பதிப்பாசிரியர் லசந்த என்பவர் யார்? அவரது பத்திரிகை எது என்று பகிரங்கமாக வினவியவர் அவர். அதே போன்று கடத்திச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சுடர் ஒளி பதிப்பாசிரியர் வித்தியாதரன் ‘ஒரு புலி’ என்று எடுத்துரைத்தவர். வஞ்சம் தீர்க்கும் சுடுமுகத்துடனே தான் இவ்வார்த்தையைப் பகர்ந்தார். அக்கோர முகம் இப்போதும் பீதியூட்டுகிறது. கோத்தாபய ராஜபக் ஷவினால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர் போத்தல பின்னர் கோத்தாவின் கையாட்களால் கடத்திச் செல்லப்பட்டு கால் உடைக்கப்பட்ட நிலையில் சாகும் வகையில் கான் ஒன்றுக்குள் தூக்கி எறியப்பட்டுக்கிடந்தார்.
மேற்படி நடவடிக்கைகள் தவறு என்பதை ஏற்றுக்கொள்ளவோ, அல்லது தன்னை இந்நிலையிலிருந்து மாற்றிக்கொள்ளவோ கோத்தாபய ராஜபக் ஷ தயாரா?
நான் அரசியல் சட்டவிதிகளை மதிக்கும் ஒரு ஜனாதிபதி என்று கோத்தாபய தன்னைக் குறிப்பிட்டுக் கொள்கிறார். அப்படியென்றால், பாதுகாப்புச் செயலாளராகவிருந்த அவர், கொலைக்குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட துமிந்த சில்வாவின் அரசியல் கூட்டத்தில் எந்தச் சட்டத்தையும் மதிக்காமலேயே கலந்து கொண்டுள்ளார். 2011 ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற மாகாண சபை தேர்தலின் போதே இவ்வாறு கலந்து கொண்டுள்ளார். அத்துடன் அரச சேவையாளரான கோத்தாபய ராஜபக் ஷவுக்கு அப்போது அரசியலில் ஈடுபடுவதற்கு உரிமையில்லை. அந்த வகையில் தன் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
தற்போது அவருக்கெதிராக வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதன்போது அவர் சத்தியச் சான்று ஒன்று வழங்கியுள்ளார்.
அதில் “2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தனது மூத்த சகோதரனான மகிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்காகவே இந்நாட்டுக்கு வந்தேன்” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரஜாவுரிமை பெற்ற அவர், அப்போது உல்லாசப்பயண விசா பெற்றே இந்நாட்டுக்குள் பிரவேசித்துள்ளார்.
வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் எவருக்கும் இந்நாட்டின் எந்தவொரு தேர்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு எந்த வகையிலும் உரிமையில்லை.
அந்த வகையில் நிலைமை இருக்கையில், வழக்கு விசாரணையின் போது கோத்தாபய ராஜபக் ஷ தன் சுயவிருப்பத்தின் பேரில் அளித்துள்ள சத்தியக் கடதாசியில் தான் உல்லாசப்பயணியாக இந்நாட்டில் பிரவேசித்தது ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கே என்று அழுத்தம் திருத்தமாக உறுதியளித்துள்ளார்.
கோத்தாபயவின் அதிகாரத்தின் போது வெளிநாட்டிலிருந்து உல்லாசப்பயண விசாவில் வந்த இருவர் அரசியல் ஈடுபாட்டுக்கல்ல. ஊடகவியல் தொடர்பான பயிற்சியொன்றுக்காகவே வந்திருந்தனர். இந்நிலையில் ஊடகவியல் பாடநெறி யொன்றை நடத்திக்கொண்டிருந்த சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஆசிய–பசுபிக் பிராந்திய முக்கியஸ்தர்களான அவ்விருவரையும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலே தடுத்து வைத்து அவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டமையும் கோத்தாவின் அதிகாரத்தின் கீழே இடம்பெற்ற நிகழ்வாகும்.
அதேபோன்றே கனேடிய பாராளுமன்ற குழுவொன்றும் நாட்டிலிருந்து திருப்பியனுப்பப்பட்டதும், கோத்தாவின் அதே அதிகாரத்தில் அதே சட்டத்தின் அடிப்படையிலே தான்.
கோத்தாபய ராஜபக் ஷ சட்டத்தை தனக்கு வேண்டியவாறு மாற்றியமைத்துக் கொண்டமைக்கு 2005 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது அவர் நடந்து கொண்ட முறைமை நல்லதோர் உதாரணமாகக் குறிப்பிடலாம். இது நீதிமன்றத்தால் தான் தீர்மானிக்க வேண்டியதொரு குற்றச் செயலல்ல; சாதாரணமாகவே கண்டு கொள்ளக்கூடியதொரு சட்ட துஷ்பிரயோகமாகும். இது ஒரு புறமிருக்க, கோத்தாபய இதுவரையில் சட்டத்தை அனுசரித்து நடந்த ஒருவரல்லர். அவர் வெளிநாட்டவராக இருந்தபோதே அவர் மெதமுலானையில் ராஜபக் ஷ குடும்பத்தில் தேர்தல் வாக்காளராகத் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார்.
இவர் விடயத்தில் அண்மையில் இடம்பெற்ற மற்றுமோர் உதாரணத்தையும் முன்வைக்கலாம். சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக அவரது மகளான அஹிம்சா விக்ரமதுங்க கோத்தாவுக்கெதிராக அமெரிக்க நீதி மன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கைக் குறிப்பிடலாம்.
மேற்படி வழக்கிற்கு கோத்தாபய ராஜபக் ஷவுக்காக பதிலளிக்கஅமர்த்தப்படுபவர் நாட்டின் முன்னாள் நீதியரசரான அசோக்க சில்வாவே. உயர் நீதிமன்றத்தில் நியமனம் பெறும் எந்தவொரு சட்ட நிபுணரும் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சட்டத்துறை தொழிலில் கடமையாற்ற முடியாது. அவ்வாறு ஈடுபடாதிருப்பது சட்டமுறைமையை விடவும் நீதிமன்றத்தை பதிக்கும் சம்பிரதாயமாகும்.
மேலும் இந்த சட்டதிட்டங்களையெல்லாம் பொருட்படுத்தாது இந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷ பிரதம நீதியரசர் ஒருவரை விலை கொடுத்து வாங்கியதன் மூலம் உணர்ந்துகொள்ள முடிவது என்ன? நீதிமன்ற சுயாதீனத்துக்கு அளிக்கும் மதிப்பா? அவமதிப்பா?
இவ்வாறு இவர் குறித்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அவை எவ்வாறு இருந்தபோதிலும் எமது சிந்தையைக் குடையும் கேள்வி என்னவென்றால், அதிகாரத்தில் இல்லாதபோது முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகளை விலை கொடுத்து வாங்கும் அரசியல்வாதியொருவர் அதிகாரத்திற்கு வந்தால் எவ்வாறெல்லாம் நடந்து கொள்வார் என்ற ஐயமே எழுகிறது.
மேலும் கோத்தாபய ராஜபக் ஷவின் பாதுகாப்புக் கருதி ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் முன்னாள் படை வீரர்கள் தொகுதிக்கு 40 பேர் வீதம் உள்ளடக்கப்பட்ட பெரிய படையணியொன்றும் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கோத்தா பதவிக்கு வந்ததும், அவரது ‘வியத்மக’ அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவராகவுள்ள இனவாதியான முன்னாள் ஜெனரல் ஒருவரே பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்றும் அறிய முடிகிறது.
இவ்வளவு தூரம் தனது பெயர் போயுள்ள நிலையிலும் கோத்தாபய ராஜபக் ஷ தன்னை ஜனநாயக ஆட்சியாளர் என்று காட்டிக்கொள்ள முன்வரவில்லை. இவ்வாறு தன்னை ஜனநாயகவாதியாக மாற்றிக்கொள்ள தான் தயாராக உள்ளதாக அவரால் காட்டிக் கொள்வதற்குரிய ஒரே வழி முன்னைய உண்மைகளையயெல்லாம் ஏற்றுக்கொள்வ தொன்றேயாகும்.
இவை எல்லாவற்றையும் விட, தான் மாற்றம் ஒன்றுக்குத் தயார் என்பதை கோத்தாபய ராஜபக் ஷ இதுவரை எந்தவகையிலும் தெரிவிக்கவில்லை. அவருக்காக பெஷிலும் வாசுதேவவும் பேசுகிறார்கள். எனவே வாசுதேவ குறிப்பிடும் வெள்ளைவேன் கடத்தல் சம்பவங்களை ஏற்றுக்கொள்வதற்கு கோத்தாபய தயாரா? வெல்கம சுட்டிக்காட்டும் அநீதி நடந்துள்ளதை ஏற்றுக்கொள்ளவும் கோத்தா தயாரா? குறைந்த பட்சம் தனது அரசியல் முன்னெடுப்பில் மாற்றம் மற்றும் ஜனநாயக மாற்றம் அவசியம் என்பதையாவது ஏற்றுக்கொள்வதற்கு கோத்தாபய தயாரா?
யார் ஜனாதிபதி வேட்பாளராக வருவாரோ அவரிடம் உள்ள பணிவு, பரந்த பார்வை, சட்டத்தை மதிக்கும் பண்பு போன்ற அருங்குணங்கள் குறித்து ஊடகங்களில் பகிரங்கப்படுத்த வேண்டும்.
அவர் முகம் கொடுக்க வேண்டிய தீர்க்கமான பரிசோதனை அதுவாகும். அரசியல்வாதிகளிடம் விசேடமாக தேர்தல் ஒன்றுக்கு களம் இறங்குவோரிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பும் எந்தச் சந்தர்ப்பங்களிலும் இவர்கள் தம் நிலைப்பாட்டை வெளியிட முன்வர வேண்டும். அதுவே ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பாகும்.
கோத்தாபய ராஜபக் ஷ இந்த வாய்ப்பை இதுவரையிலும் ஊடகங்களுக்கு வழங்கவில்லை. அவரிடம் வினா எழுப்புவது அவர் விடயத்தில் தடையாகவே உள்ளது. தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர் தயார் இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.
மேற்கண்ட அடிப்படைப் பிரச்சினை கோத்தாபய ராஜபக் ஷவுக்கு மாத்திரமல்ல; இதர வேட்பாளருக்கும் பொருந்தும் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
சிங்களத்தில் : சுனந்த
தேசப்பிரிய தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்.
நன்றி: ராவய வார இதழ்.
vidivelli