சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் 75 ஆவது ஆண்டு பவளவிழா அண்மையில் நிகழ்ந்தபோது கேட்டது என்ன? முன்பு பெரும்பான்மை –சிறுபான்மை சதுரங்க விளையாட்டில் முஸ்லிம்கள் போடு காய்களாகப் பாவிக்கப்பட்டதாகவும் நாட்டின் தூரப்பிரதேசங்களில் தனியாகவும் ஓரமாகவும் கஷ்டத்தோடு துருவப்படுத்தப்பட்டு வாழ்ந்ததாகவும் அந்நிலையில்தான் சேர் ராசிக் பரீத் குரல் கொடுத்ததாகவும் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியிருக்கிறார். முன்னாள் கொழும்பு நகராதிபதி உமர் காமில் தலைமை வகித்த இந்நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. அப்போது சேர். ராசிக் பரீதின் பாராளுமன்ற உரைகள் என்னும் ஒரு நூலும் வெளியிடப்பட்டது. இக்கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய அதிதியாகவும் த.தே.கூ. தலைவர் சம்பந்தன், மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், ம.ஐ.மு. தலைவர் தினேஷ் குணவர்தன ஆகியோர் பிரமுகர்களாகவும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகையில்;
சேர். ராசிக் பரீத் காலனித்துவத்தின் போது மட்டுமல்ல, சுதந்திரம் கிடைத்ததன் பின்பும் கூட முஸ்லிம்களின் அபிலாசைகளைப் பிரதிபலிப்பவராகவே விளங்கினார். இவர் எம்.பி. யாகவும் செனட்டராகவும் நீண்ட சேவை செய்திருக்கிறார் எனவும் கூறினார். பின்வரும் இவரது தரவுகள் பயனுள்ளவையாக இருந்தன.
· 1893 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி செல்வம் மிக்க குடும்பத்தில் பிறந்த ராசிக் பரீத் சமூக அந்தஸ்தும் செல்வமும் பெற்றிருந்தார்.
· 1915 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனக் கலவரத்தின் போதும் முதலாம் உலகப் போரின்போதும் சேர். ராசிக் பரீத் கொழும்பு காவற்படையில் லெப்டினன்ட் ஆக இருந்தார்.
· அவர், கொழும்பு ரோயல் கல்லூரியின் மாணவர்.
· சேர். ராசிக் பரீத் பின்நாட்களில் முன்னாள் பிரதமர்களான டி.எஸ். சேனாநாயக்க, டட்லி சேனநாயக்க, சேர் .ஜோன். கொத்தலாவல, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆகியோருடன் நல்லுறவு கொண்டிருந்தார்.
· அவர் தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற பின் இலங்கைக்கான தூதராகப் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டார்.
· அவரது தந்தையான ஹொனரபல் அப்துர் ரஹ்மான் பாராளுமன்ற முறை உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்த சட்ட நிர்ணய சபையின் அங்கத்தவராக இருந்திருக்கிறார்.
· சேர். ராசிக் பரீதின் பாட்டனாரான அரசி மரைக்கார் வாப்பிச்சி மரைக்கார் பின்வரும் சேவைகளைச் செய்திருக்கிறார்.
· அவர் தலைசிறந்த கட்டடக் கலைஞராகத் திகழ்ந்து ஆங்கிலேயே அரசுக்கே கொழும்பில் பல அரச கட்டடங்களைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். அவற்றில் தேசிய நூதனசாலை இன்றளவும் போற்றப்படுகிறது. அவை காலனித்துவக் காலத்தின் நினைவுச் சின்னங்களாகவும் கருதப்படுகின்றன. இவரே கொழும்பு ஸாஹிராக கல்லூரியையும் ஸ்தாபித்திருந்தார்.
· சேர். ராசிக் பரீத் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியை ஆரம்பித்து பெண் கல்வி மேம்பாட்டுக்காக நிலத்தையும் அன்பளித்தார்.
· சேர். ராசிக் பரீத் கொழும்புவாழ் வறிய மக்களுக்கென மகப்பேற்று நிலையங்களையும் மருத்துவமனைகளையும் நிறுவினார்.
· காலனித்துவத்தின் போதும் சுதந்திரத்தின் பின்பும் தேசிய நல்லிணக்கத்துக்கும் சேர். ராசிக் பரீத் பாடுபட்டதோடு தனது சமூக தனித்துவ அடையாளத்தையும் கலாசார விழுமியங்களையும் பேணிக்காப்பதிலும் அதிக கவனம் செலுத்தினார்.
· சேர். ராசிக் பரீத் 1930 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபை உறுப்பினராகி நகர அபிவிருத்திக்குப் பெரிதும் பங்களித்தார்.
· சேர். ராசிக் பரீத் வாழ்வில் தனக்கெனவும் குறிக்கோள்களைக் கொண்டிருந்ததால் காலனித்துவ விடுதலையாளர்களோடு சேர்ந்து தேசப்பற்றாளர்களோடு இருந்தபோதும் முஸ்லிம் சமூக அரசியல் செல் நெறியை வகுப்பதில் ஓரளவு முன்னேறியும் இருந்தார்.
· சேர். ராசிக் பரீத், கிழக்கு மாகாண அரசியலில் கரிசனை கொண்டிருந்ததால் தான் கல்குடாவில் 40 வீத முஸ்லிம்களும் இரட்டைத் தொகுதியான மட்டக்களப்பில் 25 வீத முஸ்லிம்களும் இருப்பார்களாயின் தமிழர்களும் முஸ்லிம்களும் மகிழ்வோடு இருப்பார்கள் எனவும் அவர் ஒரு நூலில் எழுதியிருந்தார்.
· அக்காலத்தில் சோனகர் சங்கத்துக்கும் முஸ்லிம் லீக்குக்கும் அரசியல் போட்டியிருக்கையில் சேர். ராசிக் பரீத் சிங்கள மொழி அரச கரும மொழியாக ஆக்கப்படும் சட்டத்தை ஆதரிக்கக் காரணம் பற்றி ஓர் இந்திய சமூகவியலாளர் இவ்வாறு கூறுகிறார். அதாவது சிங்கள தேசியவாத நிகழ்ச்சி நிரல் அப்போது இருந்தது. வசதிகளோடு அரசியலில் தீவிர ஈடுபாடும் கொண்டிருந்த முஸ்லிம்கள் சிங்கள மொழி பேசப்படும் பிரதேசங்களில் வாழ்ந்து வந்தததாலேயே சேர். ராசிக் பரீத் அரச கரும மொழியாக சிங்களத்தை ஆதரித்திருந்தார் என்கிறார் என்றெல்லாம் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
மீலாத் தினத்தை விடுமுறை நாளாக்க சேர். ராசிக் பரீத் இவ்வாறு அரசிடம் கோரிக்கை விடுத்தார். மன்னிக்கவும் நான் அன்று இங்கு இருக்கவில்லை. பௌத்தர் 12 நாட்களை மேலதிக விடுமுறை நாட்களாகப் பெறுகையில் மீலாத் விடுமுறை மறுக்கப்பட்டி ருக்கிறது. பௌத்தரின் உரிமைகளுக்கு நான் எதிராவன் அல்ல. நீங்கள் முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்காதீர்கள். இந்நாட்டின் 6 இலட்ச முஸ்லிம்களுக்கும் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இது சுதந்திர நாடு. நாம் சுதந்திரம் பெற்றவர்களாகவே எமது வாக்குகளை வழங்கியிருந்தோம் என்றார்.
· சேர். ராசிக் பரீத் வார்த்தையில் மாறுபாடு செய்தவரல்ல. இந்திய வம்சாவளி முஸ்லிம் என்பதை விடுத்து சோனகர் என்னும் அடையாளத்தையே முன்னிலைப்படுத்தினார். இதைக் கரையோர முஸ்லிம்கள் என்றே குறிப்பிட்டிருந்தார்.
· சோனகர் என்னும் சொற்பதத்தில் சேர். ராசிக் பரீத் பிடிவாதமாக இருந்தார்.
· குறுகிய பழங்குடிவாத சிந்தனைக்கு எதிரான கருத்துகளே சேர். ராசிக் பரீதின் பாராளுமன்ற உரைகளில் இருந்தன.
· ஒரு முறை சேர் ராசிக் பரீத் பிரதமர் டட்லிக்கும் கூட சவால் விட்டிருந்தார். இங்கு எவரேனும் உறுப்பினர்கள் தமது தந்தையரின் பிறப்புச் சான்றிதழ்களைத் தர முடியுமா என அவர் கேட்டதும், பிரதமர் டட்லி முடியாது எனக் கூறிவிட்டார். உடனே அவர் பிரதமர் டட்லியிடம் காலஞ்சென்ற பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கவிடம் அவரது பிறப்புச் சான்றிதழ் இருந்ததா எனவும் கேட்டார்.
· பின்னர் இல்லை. அது எக்குத் தெரியும் இங்குள்ளோரை விட சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவையும் எனக்குத் தெரியும். இவர்கள் எவரிடமும் பிறப்புச் சான்றிதழ்கள் இருக்கவில்லை. பிரஜாவுரிமை மசோதா கொண்டு வருகிறீர்களே உங்கள் நிலை என்ன? எனவே சோனகரின் பிரஜாவுரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கான வாக்குறுதியை டி.எஸ். சேனநாயக்க அந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் முன் வைக்கையில் நிறைவேற்றுவதாக என்னிடம் கூறினார் எனவும் சேர். ராசிக் பரீத் குறிப்பிட்டிருந்தார்.
· முக்கியமாக சேர். ராசிக் பரீதின் பாராளுமன்ற உரைகள் மரண தண்டனை ஒத்திவைப்பு, வாடகை வீட்டாளர்கள் யாப்பு திருத்தம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.
· இவர் தூரப் பிரதேசங்களில் தனிமையாக ஓரங்கட்டப்பட்டு துருவப்பட்டு வாழ்ந்த முஸ்லிம்களின் கஷ்டங்களைப் பற்றியும் பேசியிருக்கிறார்.
· நேர்த்தியான தூய ஆடையை அணிந்து அலங்காரத்துக்காகக் கோட்டில் ஒக்கிட் மலரைச் செருகியிருப்பார்.
· கல்குடா, காத்தான்குடி, கண்டி, கிரிந்த போன்ற பல பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் துயரக் கதைகளையும் முன்னிலைப்படுத்திப் பேசினார். இவ்வாறுதான் அவர் குரலெழுப்ப சக்தியற்றோருக்காகக் குரலெழுப்பினார்.
· 1958 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனக்கலவரத்தைப் பற்றி சேர். ராசிக் பரீத் பாராளுமன்றத்தில் பேசுகையில்;
இதுவும் 1915 ஆம் ஆண்டைப் போல் இருண்டதாகும். இதை நான் கூறாவிட்டால் கடமை தவறியவனாக ஆகிவிடுவேன் என்றார்.
· முஸ்லிம்கள் இலங்கையர் என்னும் தேசிய உணர்வோடு வாழவேண்டிய அவசியத்தை சேர். ராசிக் பரீத் எப்போதும் வலியுறுத்தி வந்திருந்தார்.
· விடாப்பிடி, சுயவிருப்பு ஆகியவற்றில் முரண்டு காட்டிய சில முஸ்லிம்களை சேர். ராசிக் பரீத் நெறிப்படுத்தவும் பாடுபட்டிருந்தார்.
· இவர் மு.கா. வின் ஸ்தாபகத் தலைவரான அஷ்ரபிடமும் பிரதிபலித்திருந்தார். பயனுள்ள அதிகாரப் பரவல் பற்றிய அஷ்ரபின் பார்வை சேர். ராசிக் பரீதின் நோக்கிலிருந்து அதிகம் வேறுபடவில்லை.
என்றெல்லாம் ரவூப் ஹக்கீம் பல அரிய தகவல்களை அங்கு தெரிவித்திருந்தமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். என்றாலும் கூட சில விடயங்களை இங்கு தெரிவிக்காமலும் இருக்க என்னால் முடியவில்லை.
இவர் நீண்ட காலம் பிரதிநிதித்துவப்படுத்திய கொழும்பு முஸ்லிம்களின் இன்றைய நிலை என்ன? அரசியலிலும் அபிவிருத்தியிலும் இவர்கள் அனாதரவாகியிருக்கிறார்கள். சேர். ராசிக் பரீதின் தனித்துவம் ஒருமுறை பிரதேசவாதத்தால் பொத்துவில் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருந்தபோதும் மறுமுறை கொழும்பு மத்திய தொகுதியில் பெருந்தேசியக் கட்சிகளை எதிர்த்து இவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு மூன்றில் ஓர் ஆசனத்தைப் பெற்றிருந்ததன் மூலம் இலங்கைவாழ் முஸ்லிம்களின் தனித்துவத்துக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார் என்பதையும் நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். சேர். பொன் இராமநாதனின் தமிழ் பேரினவாதத்தின் மீது சிறுவயது முதல் இவர் கொண்டிருந்த எதிர்ப்பே இதற்குக் காரணமாக அமைந்தது.
சேர். ராசிக் பரீதின் தனித்துவ விதைப்பே அஷ்ரபுக்கு பிற்காலத்தில் அறுவடையாகிறது. நாடு முழுக்க 144 முஸ்லிம் பாடசாலைகளை உருவாக்க உழைத்த சேர். ராசிக் பரீத் தனித்துவத்தை சிறு வயதிலேயே உருவாக்க முஸ்லிம் பாலர் வாசகம் என்னும் பாட நூலையும் வெளியிட்டிருந்தார்.
ஜே.ஆர். 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த திம்புப் பேச்சுவார்த்தையில் தமிழ் ஆயுதப் போராளிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து வடக்கு, கிழக்கு முஸ்லிம்களைக் கைவிட்டபோது அஷ்ரப் சேர். ராசிக் பரீத்தையே நாடியிருந்தார். அதன்படி 1985 ஆம் ஆண்டு சேர். ராசிக் பரீத் தமிழ் ஆயுதப் போராளிகளோடு பேச்சுவார்த்தை நடத்த கலாநிதி பதியுதீன் மஹ்மூத் ஏ.டபிள்யூ.எம். அமீர் ஆகியோரோடு அஷ்ரபையும் பெங்களூருக்கு அழைத்துச் சென்றிருந்தார். அப்போது ஹக்கீமுக்கு தொடர்பு இருக்கவில்லை. 1986 ஆம் ஆண்டுக்குப் பின் தமிழ் ஆயுதப் போராளிகள் முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்குத் தடை விதித்து உயிர் அச்சுறுத்தலுக்கு உட்படுத்திய பின் அஷ்ரபும் அவரது சகாக்களும் கொழும்பில் புகலிடம் பெற்றார்கள். பின்னர் கொழும்பிலிருந்தே பாஷா விலாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரகடனப்படுத்தியதோடு பதிவும் செய்து கொண்டார்கள். 1987 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் தவிர்க்கப்பட்டிருந்ததாலேயே இத்தகைய தனித்துவ முஸ்லிம் அரசியல் கட்சி உருவாகியிருந்தது. எனினும், முதலில் 1988 ஆம் ஆண்டு நிகழ்ந்த மேல் மாகாண சபைத் தேர்தலிலேயே அக்கட்சி தனது மரச் சின்னத்தில் போட்டியிட்டு 06 ஆசனங்களைப் பெற்றிருந்தது. கொழும்பில் மூன்றும் களுத்துறை மாவட்டத்தில் இரண்டும் கம்பஹாவில் ஒன்றுமாக ஆசனங்கள் கிடைத்தன.
இத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடாததால் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே முஸ்லிம் காங்கிரஸ் நேரடியாகப் போட்டியிட்டிருந்தது. கொழும்பு முஸ்லிம்கள் அஷ்ரபை தோளில் தூக்கிக்கொண்டு சென்றார்கள். செல்வந்தர்கள் நிரம்பிய ஐக்கிய தேசியக் கட்சி வலிமையோடு இருக்கையிலேயே எளிய முஸ்லிம்கள் அத்தனை வசதி வாய்ப்புகளுக்கும் அன்றாட வாழ்வுத் தேவைகளுக்கும் உள்ளங்களில் இடமளிக்காது முஸ்லிம்களின் தனித்துவத்துக்கே இங்கு முக்கியத்துவம் அளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மத்திய கொழும்பில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் 7 பகுதிகள் இருக்கின்றன. இவர்கள் முழுமையாகவே அஷ்ரபை ஆதரித்திருந்தார்கள். தெருக்கள், ஒழுங்கைகள், முடுக்குகள் தோறும் அஷ்ரப் 1988 ஆம் ஆண்டு அத் தேர்தலில் சென்று அங்கெல்லாம் வாழ்ந்த முஸ்லிம்களின் பின்தங்கிய வாழ்வைக் கண்டு பரிதாபப்பட்டார். கூடிய விரைவில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதாகவும் வாக்களித்தார்.
எனினும் அவர் இறக்கும்வரை 12 ஆண்டுகளாக அங்கெல்லாம் சிறு அபிவிருத்திகளேனும் இடம்பெறவில்லை. அதற்கும் பின் இற்றை வரைக்கும் 19 ஆண்டுகள் கழிந்தும் கூட அதே நிலைதான் இங்கெல்லாம் தொடர்கிறது. எதையும் எதிர்பார்த்து கொழும்பு முஸ்லிம்கள் தனித்துவ அரசியலுக்கு ஆதரவளிக்கவில்லை. என்றாலும் கூட அக்கட்சி, அரசியலிலும் வசதி வாய்ப்பிலும் உச்ச நிலைக்கு வந்து 40 ஆண்டுகள் கழிந்தும்கூட கொழும்பு முஸ்லிம்களின் வாழ்வு அப்படியே இருக்கிறது. ஹக்கீம் தற்போது வெள்ளி விழா எம்.பி, 20 ஆண்டு தலைவர் எனினும் அன்று அஷ்ரப் முன்னெடுத்திருந்த முஸ்லிம் அரசியல் தனித்துவம்தான் தற்போது ஓங்கி வளர்ந்து ஆலவிருட்சமாயிருக்கிறது. அது பலகூறுகளாகப் பிரிந்தும் கூட வலிமை குன்றவில்லை. அவற்றிலும் இரட்டைக் கூறுகள் பிரதானமானவையாக இருக்கின்றன. ரவூப் ஹக்கீம் ஒரு கூறுக்கும் ரிஷாத் பதியுதீன் மற்றொரு கூறுக்கும் தலைமை வகிக்கிறார்கள். ரவூப் ஹக்கீமுக்கு 7 எம்.பி. க்களும் ரிஷாத் பதியுதீனுக்கு 5 எம்.பி. க்களும் இருக்கிறார்கள். ஆக 12 எம்.பி. க்கள்.
கிழக்கில் முஸ்லிம் தனித்துவ அரசியல் தலைதூக்கியதும் கொழும்பிலிருந்த முஸ்லிம் அரசியல் ஆளுமை சிறிது சிறிதாக ஒடுங்கிப்போனது. தனித்துவ முஸ்லிம் அமைச்சர் கிழக்கிலிருந்து பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தபோதும் முழு நாட்டின் முஸ்லிம்களுக்காகவே அவர் செயற்பட வேண்டும்.
எனினும், தனித்துவ அரசியல் பேசி அமைச்சராகும் எமது முஸ்லிம்கள் வடக்கு கிழக்கை மட்டுமே முன்னிலைப்படுத்தி அபிவிருத்தி செய்கிறார்கள். முழு நாட்டுக்குமாக ஒதுக்கப்படும் வளத்தை ஒரு பகுதிக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ளலாமா? தனித்துவ அரசியலால் இலங்கை முஸ்லிம்களுக்கு இப்படியும் ஓர் அனுபவம் கிடைத்திருக்கிறது.
அதிகமான முஸ்லிம் அமைச்சர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் என்றானால் அவர்களும் அவற்றுக்கே என்றானால் நாடு முழுக்க வாழும் முஸ்லிம்கள் சம அபிவிருத்தி பெறுவது எப்படி? அந்த வகையில் முஸ்லிம் தனித்துவ அரசியல் கட்சிகள் இனிமேலாவது தமது அபிவிருத்தி செயற்பாடுகளில் இலங்கை முழுக்க வாழும் முஸ்லிம்களுக்கும் பரவலாக்க வேண்டும்.
கிழக்குக்கு வெளியே தனித்துவ முஸ்லிம் கட்சிகள் அஷ்ரபின் இறப்புக்குப் பின் படிப்படியாக வலிமை குன்றிப்போகக் காரணம் பெருந்தேசியக் கட்சிகளைப் பேரினக் கட்சிகள் என அடையாளப்படுத்திய முஸ்லிம் தனித்துவக் கட்சிகள் அவற்றின் முகவர் கட்சிகளாக மாறி முழு இலங்கை முஸ்லிம்களினதும் வளங்களுக்கான பங்களிப்பை ஒரு பகுதிக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொண்டதாகும்.
· 40 ஆண்டுகளுக்கு முன் அஷ்ரப் முன்வைத்த கரையோர மாவட்டமும் அதிகார அலகும் கிடப்பில் இருக்கின்றனவே.
· ஆட்சிகளை மாற்றியமைக்க அமைச்சுக்களுக்கும்
ரப்பிரசாதங்களுக்குமாகப் பேரம் பேசல் கொள்கைகளுக்கு இல்லையா? தனித்துவத்தின் பெயரால் பல பிரிவுகளாகியுள்ள முரண்பாட்டு அரசியல்.
· எந்த கட்சி மூலமும் போட்டியிட்டு ஒரு முஸ்லிமால் தெரிவாக முடியாத மாவட்டங்களுக்கு இடைக்கிடையே தெரிவுப் பட்டியல் மூலம் எம்.பி. பதவியை ஒதுக்கினால் என்ன? அதுவும் கிழக்குக்கே என்றால் என்ன நியாயம்? சேர். ராசிக் பரீதின் பெயரால் இவை பற்றியும் சிந்திப்போமாக!
ஏ.ஜே.எம். நிழாம்
vidivelli