எம்மிடம் 50 முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல் இருக்கிறது
மீண்டும் தாக்குதல் நடக்கலாம் என்கிறார் ஞானசார
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பாக நாட்டின் பழைய அடிப்படைவாத இயக்கங்களைச் சேர்ந்த எவரும் கைது செய்யப்படவில்லை. இதனால் முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் மீண்டும் தாக்குதல்கள் இடம் பெறலாம். 50 முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளின் பெயர்பட்டியல் எம்மிடம் இருக்கிறது என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டி பிரதேசத்தில் நேற்று முன்தினம் வர்த்தகர்கள் மத்தியில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, ‘பெருந்தொகையான பணம் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்கள் எமது நாட்டையும், இனத்தையும், கலாசாரத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அடிப்படைவாத அமைப்புகளுக்கு எதிராக இதுவரை சட்டம் அமுல் நடத்தப்படவில்லை. எமது அரசியல்வாதிகளின் அனுசரணை இருப்பதனாலே சட்டம் அமுல்படுத்தப்படுவதில்லை.
பெரும் தொகையான பணம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப்பணம் எமது நாட்டை மாத்திரமல்ல எமது கலாசாரத்தையும் அழிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
நாட்டின் வங்கிக் கட்டமைப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. ஷரீஆ சட்டம் நாட்டில் அமுலில் உள்ளது. இது நாட்டின் சட்டமல்ல. இது இஸ்லாமியரின் இறைவனின் சட்டம். இச்சட்டத்தின் படியே முஸ்லிம்களுக்கான வங்கி, காதி நீதிமன்றம், ஷரீஆ பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. இவை எங்களது அரசியலமைப்புக்குட்பட்டவை அல்ல. எமது அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகும்.
18 மற்றும் 19 ஆவது திருத்தங்கள் இவ்வாறே கொண்டு வரப்பட்டன. ஆனால் ஷரீஆ சட்டம் இவ்வாறு இயற்றப்பட்ட சட்டம் அல்ல. இறைவனின் சட்டம் இது என்கிறார்கள். அச்சட்டத்தை மாற்றமில்லாது அமுல்படுத்த வேண்டும் என்கிறார்கள். எமது நாட்டின் சில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் அடிப்படைவாதிகளின் பணத்துக்கு அடிமைப்பட்டு விட்டார்கள். இலஞ்சம் பெறுகிறார்கள்.
நாம் இந்த நிலைமையை தொடர்ந்து மக்களுக்குத் தெளிவுபடுத்தி வருகிறோம்’ என்றார்.
vidivelli