சவூதி அரசாங்கம் இஸ்லாமிய புதுவருடம் 1441 ஆம் ஆண்டிலிருந்து உம்ராவுக்கு பல புதிய சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதால் எதிர்வரும் உம்ரா பயணங்களுக்கான கட்டணங்களை அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளதாக உம்ரா முகவர் நிலையங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை காலம் உம்ரா பயணி ஒருவருக்கு அறவிடப்பட்டு வந்த விசா, கட்டணம் 200 ரியால்களிலிருந்து 300 ரியால்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து கட்டணமாக 120 ரியால்களும் சவூதியில் வரலாற்று புகழ்மிக்க இடங்களை தரிசிப்பதற்கான கட்டணமாக 20 ரியால்களும் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக கரீம் லங்கா முகவர் நிலையத்தின் உரிமையாளர் ஏ.சி.பி.எம். கரீம் தெரிவித்தார்.
சவூதி அரேபியா அரசாங்கத்தின் புதிய சட்ட விதிகளின்படி உம்ரா பயணிகள் சவூதி அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட நட்சத்திரஹோட்டல்களிலேயே தங்க வைக்கப்பட வேண்டும்.
இதனால் அனுமதி பெற்றுக் கொள்ளாது ஹரம் ஷரீபுக்கு அருகில் இயங்கிவரும் சிறிய ஹோட்டல்கள், தங்குமிடங்கள் உம்ரா பயணிகளுக்கு தங்குமிடமளிக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. சவூதி அரசினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள சாதாரண நட்சத்திர ஹோட்டல்கள் ஹரத்திலிருந்தும் ஒரு கிலோ மீற்றர் மற்றும 850 மீற்றர் தொலைவிலே அமைந்துள்ளன. இந்த ஹோட்டல்களிலே உம்ரா பணிகள் தங்க வைக்கப்பட வேண்டியுள்ளதால் ஹோட்டல் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. ஹரத்துக்கு அருகாமையிலுள்ள ஹோட்டல்களில் பெரும்பாலான ஹோட்டல்கள் அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்ளாத ஹோட்டல்கள் என்பதால் சற்று தூரத்திலுள்ள ஹோட்டல்களிலே உம்ரா யாத்திரிகர்களை தங்க வைக்க வேண்டியுள்ளது.
போக்குவரத்து வசதிகளும் சவூதி அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்தே பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்பதும் புதிய விதியாகும். இதனாலேயே உம்ரா விசாவுக்கான கட்டணம் 300 ரியால்களுடன் போக்குவரத்து கட்டணமாக 120 ரியால்கள் அறவிடப்படுகின்றன.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக்கைத் தொடர்பு கொண்டு இது தொடர்பாக வினவியபோது அவர் இதனை உறுதி செய்ததுடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சவூதி அரேபியாவினால் இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.உம்ரா பயணிகள் சவூதி அரேபியாவில் பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்படுவதைத் தவிர்ப்பதற்காகவே சவூதி அரேபிய இளவரசர் முஹம்மத் சல்மான் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, சவூதி அரேபியாவின் புதிய சட்ட விதிகள் வரவேற்கத்தக்கதாகும். இதனால் உம்ரா யாத்திரிகர்கள் நன்மையடைவார்கள். ஆனால் கடந்த காலங்களில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக இருந்த உம்ரா கட்டணம் இதன் பிற்பாடு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் என்று கரீம் லங்கா முகவர் நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
ஏ.ஆர்.ஏ. பரீல்
vidivelli