ஏப்ரல் 21 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் பல சவால்களை எதிர்நோக்கி வருகிறது. பாதுகாப்புத் தரப்பினர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் பலரைக் கைதுசெய்து வருகின்றனர்.
ஏலவே கைது செய்யப்படட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் கடுமையாக விசாரிக்கப்பட்டு அவர்கள் வழங்கும் தகவல்களுக்கு அமையவே இவ்வாறு கைதுகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு விசாரணைகளைத தொடர்ந்து 293 பயங்கரவாத சந்தேக நபர்கள் கடந்த மாதம்வரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் –பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகள், அந்நடவடிக்கைகளுக்கு உதவியவர்கள், தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளின் உறுப்பினர்களாக இருந்து ஆயுதப்பயிற்சி பெற்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டுள்ள 293 சந்தேக நபர்களில் 115 பேர் மீதான விசாரணைகள் நிறைவடைந்து அவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய 178 பேரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 178 பேரில் 62 பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் 47 பேர் சி.ரி.ஐ.டி எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிலும், 41 பேர் சி.சி.டி எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மேலும் அம்பாறை பொலிஸ் பிரிவில் 16 பேரும், கல்கிசை பொலிஸ் பிரிவில் 4 பேரும், கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவில் 4 பேரும், நுகேகொடை பொலிஸ் பிரிவில் 3 பேரும், கண்டி பொலிஸ் பிரிவில் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
விசாரணைகளில் வெளிவந்த தகவல்களையடுத்து 41 சந்தேக நபர்களுக்கு சொந்தமான 100 வங்கிக் கணக்குள் முடக்கப்பட்டுள்ளதுடன் அந்தக் கணக்குகள் 134 மில்லின் ரூபாவைக் கொண்டுள்ளன. அத்தோடு பயங்கரவாத சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட 20 மில்லியன் ரூபா சி.ஐ.டி யின் பொறுப்பில் உள்ளது. மேலும் பயங்கரவாதிகளுக்குச் சொந்தமான 6 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துகள் தடை செய்யப்படவுள்ளன. அதற்கான இறுதிக்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் காணிகள், கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் சில அசையும் சொத்துகளும் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இத்தகைய பாரிய கைதுகளுக்கும் பொருளாதார முடக்கங்களுக்கும் வழிவகுத்துள்ளன. சமூகத்தின் ஓர் அங்கமாகவிருந்த இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு தவறான வழிக்கு இட்டுச் செல்லப்பட்டமையே இதற்குக் காரணமாகும்.
எனினும் தீவிரவாத சிந்தனைகளுடனோ செயற்பாடுகளுடனோ எந்தவகையிலும் தொடர்புபடாத பலரும் இன்னமும் சிறைகளிலுள்ளமை கவலைக்குரியதாகும். அவர்களது குடும்பங்கள் கடுமையான பாதிப்புகளையும் மன உளைச்சல்களையும் சந்தித்துள்ளன. பல குடும்பங்களின் தலைவர்கள் சிறையிலுள்ளதால் அக்குடும்பங்களின் வருமான வழிகள் முடக்கப்பட்டு பலரும் வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கப்பெற வேண்டும் என சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில் தீவிரவாத செயல்களுடன் நேரடியாக தொடர்புபடாது ஆனால் ஏதோ ஒரு வகையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அங்கத்தவர்களாக இருந்தோரும் கைதாகி கடந்த நான்கு மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக எவ்வாறான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது? இவர்களை புனர்வாழ்வளித்து விடுவிக்கலாமா? என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
மறுபுறம் நேரடியாக தீவிரவாத செயல்களுடன் சம்பந்தப்பட்டோருக்கு உச்சபட்ச தண்டனைகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமிருக்க முடியாது.
எது எப்படியிருப்பினும் இந்த சம்பவம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் கறுப்பு அத்தியாயம் ஒன்றை திறந்துவிட்டுள்ள போதிலும் அதிலிருந்து நாம் படிப்பினை பெற வேண்டும். குறைகளை திருத்தி நாட்டில் ஐக்கியமாக வாழ வழிசெய்ய வேண்டும். சமூகத் தலைமைகள், சமயத் தலைமைகள் இதன் பிறகும் மௌனித்து இருக்காது இளைஞர்களை நேர்வழியில் இட்டுச் செல்லும் திட்டங்களை வகுத்து செயற்படுத்த முன்வர வேண்டும்.
vidivelli