சட்டவிரோதமாக கைது செய்து பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்

தடுத்து வைக்கப்பட்டுள்ள உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் புதல்வர் அஃப்fபான் செவ்வி

0 3,232

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்­பரின் கைது தொடர்பில் அவ­ரது மூத்த மகன் அஷ்ஷெய்க் அஃப்fபான் ஹஜ்ஜுல் அக்பர் (நளீமி)
‘விடி­வெள்­ளி’க்கு வழங்­கிய விஷேட செவ்வி.

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கைது செய்­யப்­பட்­டதை ஒரு திடீர் நிகழ்­வாக நீங்கள் கரு­து­கி­றீர்­களா? அல்­லது நீண்ட நாட்­க­ளாக மேற்­கொள்­ளப்­பட்டு வந்த விசா­ர­ணை­களின் அடிப்­ப­டை­யில்தான் கைது செய்­யப்­பட்­டாரா?

நிச்­ச­ய­மாக இரண்­டு­மில்லை என்­றுதான் நாம் கரு­து­கிறோம். மாவ­னல்லை சிலை­யு­டைப்பு விவ­கா­ரத்தில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களில் சிலர் உஸ்தாத் அவர்­களின் நெருங்­கிய உற­வி­னர்கள் என்ற வகையில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் அவ­ரி­டமும் பல்­வேறு வாக்­கு­மூ­லங்கள் பெறப்­பட்­டி­ருந்­தமை உண்­மை­யா­கும். ஆயினும் அவ­ரது விட­யத்தில் வந்த அதி­கா­ரி­களும் சரி, உத்­தி­யோ­கத்­தர்­களும் சரி மிகுந்த கண்­ணி­யத்­து­ட­னேயே நடந்து கொண்­டனர். சிலபோது அத்­த­கைய அமர்­வுகள் மணித்­தி­யா­லங்­க­ளாக நீண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. குறித்த வாக்­கு­மூ­லங்­களின் போது அவர் மிகுந்த வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­டனும் சுய விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு அப்பால் நின்றும் ஒத்­து­ழைத்தே வந்தார். ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்­டி­ருந்த சந்­தேக நபர்­க­ளிடம் தொடர்ந்தும் நடாத்­தப்­பட்டு வந்த விசா­ர­ணைகள் எந்த அடிப்­ப­டையில் நடை­பெற்­றது என்­பது பற்­றியோ அல்­லது அவ்­வி­சா­ர­ணை­களை அடிப்­ப­டை­யாக வைத்­துத்தான் எனது தந்தை கைது செய்­யப்­பட்­டாரா என்­பது பற்­றியோ எமக்குத் தெரி­யாது.

ஆயினும் ஜன­ரஞ்­ச­க­மான ஒரு சமூகத் தலைவர் என்ற வகை­யிலும், இரண்­டரை தசாப்த கால­ம­ளவு இலங்­கையின் பழை­மை­யான இஸ்­லா­மிய இயக்­க­மொன்­றுக்கு தலை­வ­ராக இருந்­தவர் என்ற வகை­யிலும் அவ­ரது கைதா­னது வெறு­மனே ஒரு திடீர் நிகழ்­வா­கவோ அல்­லது விசா­ர­ணை­களில் ஏதும் தெரிய வந்­ததன் கார­ண­மாக இடம்­பெற்ற கைதா­கவோ இருக்க முடி­யாது என்றே நான் கரு­து­கிறேன்.

நாட்டின் தற்­போ­தைய அர­சியல் கொந்­த­ளிப்பு நிறைந்த சூழலில், முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் விளிம்பு நிலைக்கு தள்­ளப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற ஒரு பின்­ன­ணியில் இத்­த­கைய கைது­களின் பின்­ன­ணியில் பல­ரது அர­சியல் நலன்கள் இருக்­கின்­றதா என்ற சந்­தேகம் இயல்­பாக எழு­வதைத் தவிர்க்க முடி­யாது. வைத்­தியர் ஷாஃபி விவ­கா­ரத்தில் இரண்டு மாத கால­ம­ளவு இழுத்­த­டித்த அர­சியல் கைது நாட­கத்தை யாரும் அவ்­வ­ளது எளிதில் மறந்­தி­ருக்க முடி­யாது. அவ்­வா­றான ஒரு பின்­ன­ணியில் அரங்­கேற்­றப்­பட்ட ஓர் அர­சியல் கைதாக இது இருப்­ப­தற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் நிச்­ச­ய­மாக இல்­லா­ம­லில்லை. அவ்­வாறே, முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களின் செயற்­பா­டு­களை முடக்­கு­வ­தனை நோக்­காகக் கொண்டு அதற்­காக நாடி­பி­டித்துப் பார்க்கும் ஒரு செயற்­பா­டாக இது இருக்­கலாம் என்ற சந்­தேகம் எழு­வ­தற்­கான முகாந்­தி­ரங்­களும் இல்­லா­ம­லில்லை. வேறொரு வகையில் இலங்கை ஜமா­அதே இஸ்­லாமி பற்றி தொடர்ந்தும் பொது வெளியில் அபாண்­டங்­க­ளையும் நகைப்­புக்­கி­ட­மான குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் சுமத்தி வந்­த­வர்கள் தமது தனிப்­பட்ட நலன்­க­ளுக்­காக முன்­னெ­டுத்த வேலைத் திட்­டங்­களின் விளை­வாக அரங்­கே­றிய ஒரு கைதாக இருப்­ப­தற்­கான வாய்ப்­பு­களும் இல்­லா­ம­லில்லை. அல்­லது ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­வர்­களில் சிலர் அவர் தலைமை வகித்த அமைப்­பி­லி­ருந்து பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக வெளி­யேற்­றப்­பட்­ட­வர்கள் என்ற வகையில், தமது கோபத்தைத் தீர்த்துக் கொள்­வ­தற்­காக அவரைப் பற்றி பொய்­யான தக­வல்­களை வழங்­கி­யி­ருந்­தி­ருக்­கலாம். எது எப்­ப­டியோ திடீர் கைதொன்­றுக்கோ அல்­லது விசா­ர­ணையின் பின்­ன­ரான கைதொன்­றுக்கோ கார­ண­மாக அமையும் வகை­யி­லான எந்த வகை­யான ஒரு செய­லிலும் அவர் ஈடு­பட்­டி­ருக்­க­வில்லை என்­பதை அவரை அறிந்த அனை­வரும் நன்­க­றிந்­தி­ருக்­கின்­றனர். அதன் விளை­வான ஒன்­றா­கத்தான் அவ­ரது கைதைத் தொடர்ந்து சமூக வலைத்­த­ளங்­களில் கடந்த பத்து நாட்­க­ளுக்கும் அதி­க­மாக தொடர்ந்தும் குர­லெ­ழுப்­பப்­பட்டு வரு­வதை நோக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

நள்­ளி­ரவில் வீடு தேடி வந்து ‘வாக்­கு­மூ­ல­மொன்­றுக்­காக அழைத்துச் செல்­கிறோம்’ என்று கூறி அழைத்துச் செல்­லப்­பட்­டவர் கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக நாம் அறிந்து கொண்­டது அடுத்த நாள் மாலையில் ஊட­கங்­க­ளுக்­கூ­டா­கத்தான். அந்த செய்தி ஒரு திடீர் செய்­தி­யாக இருந்­தாலும் கூட மேற்­கூ­றிய பின்­ன­ணியில் அது திடீர் கைதா­கவோ அல்­லது தொடர் விசா­ர­ணையின் பின்­ன­ரான கைதா­கவோ அமைந்­தி­ருக்­க­வில்லை என்­பதே எனது அவ­தா­ன­மாகும்.

சிறையில் சந்­தித்த போது அவ­ரது மனோ­நிலை எவ்­வா­றி­ருந்­தது?

உண்­மையில் இந்தக் கேள்­வியை ஆயிரக்கணக்­கா­ன­வர்­க­ளது மனோ­நி­லையின் எதி­ரொ­லி­யா­கவே நான் பார்க்­கிறேன். இக்­கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் முன்­ப­தாக ஒரு விட­யத்தைக் குறிப்­பிட்­டாக வேண்டும். உஸ்தாத் அவர்கள் சிறைச்­சா­லையில் வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவே பலரும் கரு­து­கின்­றனர். ஆனால் உண்­மையில் அவர் விசா­ர­ணைக்­காக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார் என்­பதே உண்­மை­யாகும். எவ்­வித அடிப்­ப­டை­களும் இல்­லாத நகைப்­புக்­கி­ட­மான குற்­றச்­சாட்­டுக்கள் பல­வற்றை அவர் மீது சுமத்தி அவற்­றோடு அவ­ருக்கு சம்­பந்­தங்கள் இருக்­கின்­றதா என்­பதை கண்­ட­றியும் முயற்­சியில் சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் தொடர்ந்தும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கின்­றனர். அதா­வது, வேறொரு வார்த்­தையில் சொன்னால் ஒரு தொகுதி குற்­றச்­சாட்­டுக்­களை ஒரு பக்­கத்­திலும் உஸ்­தாதை மறு பக்­கத்­திலும் வைத்துக் கொண்டு அவ­ருக்கு அவற்­றோடு ஏதும் சம்­பந்­தங்­க­ளி­ருக்­கின்­றதா என்று தேடிப் பார்க்கும் முயற்­சியே இந்த விசா­ரணை என்று கூறலாம். வைத்­தியர் ஷாஃபி மீது சுமத்­தப்­பட்ட அடிப்­ப­டைகள் எது­வு­மற்ற குற்­றச்­சாட்­டுக்­களை ஞாப­கப்­ப­டுத்திக் கொண்டால் இதுபற்றி உங்­களால் ஓர­ள­வுக்கு ஊகித்துக் கொள்­ளலாம் என்று நினைக்­கிறேன்.

இப்­ப­டி­யான அடிப்­ப­டை­யற்ற குற்­றச்­சாட்­டுக்கள் தன் மீது சுமத்­தப்­பட்டு தான் விசா­ரிக்­கப்­ப­டு­வதை சாத­க­மான ஒன்­றாக கருதும் மனோ­நி­லை­யி­லேயே அவர் இருக்­கிறார். இடைப்­பட்ட இந்த பத்து நாட்­களில் அவரை சந்­திப்­ப­தற்­கான அனு­மதி சுமார் பத்து நிமி­டங்கள் அளவே எமக்கு வழங்­கப்­பட்­டது. அந்த மிகக் குறு­கிய அவ­கா­சத்தில் எம்­மோடு பேசிய போது, நள்­ளி­ரவில் அழைத்துச் செல்­லப்­பட்­டதன் கார­ண­மாக அடுத்த நாள் அவர் திட்­ட­மிட்டு வைத்­தி­ருந்த சில வீட்டு வேலை­களைச் செய்ய முடி­யா­தி­ருந்­ததைக் குறிப்­பிட்டு அதனை செய்து விடு­மாறு கூறினார். வீட்டார் என்ன மனோ­நி­லையில் இருக்­கி­றார்கள் என்­பதைக் கேட்­ட­றிந்தார். அவர் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் பற்றி நாம் சிரித்துக் கொண்டே வின­விய போது அவரும் கடைவாய்ப் பற்கள் தெரி­யு­ம­ளவு சிரித்துக் கொண்டே நகைச்­சு­வை­யாக அவற்றை மறுத்­து­ரைத்தார். ‘இவர்கள் விசா­ரித்து முடிக்­கட்டும், அது எனக்கும் நல்­லது இஸ்­லா­மிய இயக்­கத்­துக்கும் நல்­லது’ என்று தமா­ஷாகக் கூறினார். இவர்கள் போட்­டி­ருக்கும் ஒழுங்­கு­களை மீற முயற்­சிக்க வேண்டாம், எனக்­கென்று விஷே­ட­மாக உண­வுகள் எத­னையும் கொண்டு வந்து தர வேண்­டி­ய­தில்லை, என்னை விசா­ரிப்­ப­வர்­க­ளுக்­கென்று இங்கே தயா­ரிக்­கப்­பட்டு வழங்கும் உண­வைத்தான் எனக்கும் தரு­கி­றார்கள். அதற்கு நான் இப்­போது பழகி விட்டேன்’ என்று கூறினார். பொது­வா­கவே வார­மொரு தடவை அல்­லது பத்து நாட்­க­ளுக்­கொரு தட­வைதான் எமக்கும் தந்­தையை சந்­திக்­கின்ற அவ­காசம் கிடைப்­பதால் இந்த சந்­திப்பும் அத்­த­கைய ஒரு சந்­திப்­பா­கத்தான் அமைந்­தி­ருந்­தது. நாங்கள் விஷே­ட­மாக ஒரு முஆ­னகா கூட செய்து கொள்­ள­வில்லை. ‘உங்­க­ளுக்­கான நேரம் முடிந்து விட்­டது நீங்கள் வெளி­யே­றலாம்’ என்று கூறப்­பட்ட போது உடனே எழுந்து வெளி­யே­றிய எம்மை ஆச்­ச­ரி­ய­மாக நோக்கி, தந்­தையை தொடர்ந்தும் அவ­தா­னிப்­ப­தற்­கென நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த உளவுத் துறை உத்­தி­யோ­கத்தர் ‘Hug கரண்­னெத்த?!’ (முஆ­னகா செய்­ய­வில்­லையா?!) என்று கேட்டார். நாம் சிரித்துக் கொண்டே ‘அவ­சி­ய­மொன்­று­மில்லை’ என்று பதில் கூறினோம். ‘இவ­ரி­டமும் உங்­க­ளுக்கு என்ன வேண்டும்? விஷேட ஏற்­பா­டுகள் எதுவும் செய்து தரப்­பட வேண்­டுமா? என்­றெல்லாம் கேட்டோம். ஆனால் எனக்கு ஒன்றும் அவ­சி­ய­மில்லை என்று கூறி­விட்டு இருக்­கிறார்’ என அந்த உத்­தி­யோ­கத்தர் தந்­தையைப் பற்றி எம்­மி­டமும் முறைப்­பட்டுக் கொண்டார். மன­துக்­குள்ளால் சிரித்துக் கொள்­வதைத் தவிர நமக்கும் வேறெ­துவும் தோன்­ற­வில்லை.
தந்தை வீட்­டி­லி­ருக்கும் போது எப்­ப­டி­யி­ருப்­பாரோ அதற்கு எந்த வகை­யிலும் மாற்­ற­மில்­லாத மிகவும் நிதா­ன­மான நகைச்­சு­வை­யான மனோ­நி­லை­யு­ட­னேயே அங்கும் இருந்தார். இதற்கு அன்­றைய தினம் அவரை சந்­தித்த மூன்று சட்­டத்­த­ர­ணி­களும் கூட சாட்­சி­யாக இருந்­தனர்.

குற்­றச்­சாட்­டுக்­களின் உண்­மைத்­தன்மை பற்றி ஏதும் கூறி­னாரா?

குற்­றச்­சாட்­டுக்­களின் உண்­மைத்­தன்மை பற்றி அவ­ரிடம் விசா­ரித்துக் களைத்துப் போயி­ருந்த குறித்த உத்­தி­யோ­கத்தர் கையில் பேனை மற்றும் குறிப்புப் புத்­தகம் சகிதம் நமது கலந்­து­ரை­யா­ட­லி­லா­வது ஏதும் துப்­புகள் கிடைக்­குமா என்று ஆவ­லோடு எதிர்­பார்த்துக் காத்­தி­ருந்தார். பாவம் அவ­ருக்கு தந்­தையின் மோட்டார் சைக்கிள் பற்­றிய தக­வல்கள் தான் கிடைத்­தன.
வெள்­ளையைப் பார்த்து இது கறுப்­புத்­தானே என்ற ரீதியில் நடை­பெற்று வந்த விசா­ர­ணைகள் விட­யத்தில் தன்னை நிர­ப­ராதி என்று நிரூ­பிக்க வேண்­டிய கல­வரம் அவரில் இருக்­க­வில்லை. ஆனால் தமது கைது நட­வ­டிக்­கையும் அதனைத் தொடர்ந்து மீடி­யாக்­க­ளுக்கு கசிய விடப்­பட்ட அபாண்­டங்­களும் பொய்­யா­ன­தா­கவும் நகைப்­புக்­கு­ரி­ய­தா­கவும் மாறி­விடக் கூடாதே என்ற கல­வரம் அங்­கி­ருந்த உத்­தி­யோ­கத்­தர்கள் முகத்தில் தெளி­வாகத் தெரிந்­தது. அவர் ஒத்­துக்­கொள்­ள­வில்லை என்று அந்த உத்­தி­யோ­கத்தர் எம்­மிடம் குறை­பட்டுக் கொண்டார். தந்­தையின் பதிலோ ‘ஒத்துக் கொள்­வ­தற்கு இதில் ஏதா­வது இருந்­தால்­தானே!’ என்­ப­தா­கத்தான் இருந்­தது.

மாவ­னல்லை சிலை உடைப்பு விவ­கார சூத்­தி­ர­தா­ரிகள் உங்கள் குடும்ப உறுப்­பி­னர்­க­ளாக இருக்­கின்ற நிலையில், அது­பற்­றிய உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரின் நிலைப்­பாடு அன்று முதல் எவ்­வா­றி­ருந்­தது?

உண்­மையில் இக்­கேள்­விக்­கான பதிலை அவ­ரது எழுத்­துக்­களை தொடர்ந்தும் வாசித்தும், அவ­ரது உரை­களை தொடர்ந்தும் கேட்டும் வந்த எவரும் நன்­க­றிவர். இஸ்­லாத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் அறிவின் முக்­கி­யத்­து­வத்­தையும் நடு­நி­லை­யான போக்­கையும் அவர் நீண்ட கால­மாக வலி­யு­றுத்தி வரு­பவர். குறித்த சம்­ப­வத்தைத் தொடர்ந்தும் கூட அவ­ரது எழுத்­திலும் பேச்­சிலும் அது எந்­த­ளவு தூரம் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­க­ளுக்கு முர­ணான அம்சம் என்­பதை தொடர்ந்தும் வலி­யு­றுத்­தியே வந்தார். அவை­ய­னைத்தும் பகி­ரங்க ஆவ­ணங்­க­ளா­கவே இருக்­கின்­றன.

புத்தர் சிலை­களை சேதப்­ப­டுத்­திய நிகழ்­வா­னது இஸ்­லாத்­துக்கு முர­ணா­னது மட்­டு­மல்ல, சுத்த முட்­டாள்­த­ன­மா­னது என்ற கருத்­திலும், அறி­வீ­னத்தின் விளை­வா­கவும் உணர்ச்­சி­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வதன் கார­ண­மா­க­வுமே இத்­த­கைய முட்­டாள்­த­ன­மான அதே நேரம் சட்­ட­வி­ரோ­த­மான செயற்­பா­டு­களில் ஒருவன் ஈடு­ப­டலாம் என்ற கருத்­தி­லுமே அவர் தொடர்ந்தும் இருந்தார், இன்றும் இருக்­கிறார். சிலை­யு­டைப்பின் மூல­மாக அந்த அறி­வீ­ன­மான வேலையில் ஈடு­பட்­ட­வர்கள் இந்த நாட்­டையும் முஸ்லிம் சமூ­கத்­தையும் ஒரு பெரும் சிக்­க­லுக்குள் தள்ளி விட்­டார்கள் என்ற நிலைப்­பாட்­டி­லேயே அவர் தொடர்ந்தும் இருக்­கிறார்.

இந்த நிலைப்­பாட்டை அவ­ரிடம் இது வரை­யான காலங்­களில் பெறப்­பட்ட சகல வாக்கு மூலங்­க­ளிலும் மிகத் தெளி­வா­கவே வழங்­கி­யு­மி­ருக்­கிறார். மட்­டு­மல்ல இலங்கை வாழ் முஸ்­லிம்­களின் முன்­னு­ரிமை எது­வாக இருக்க வேண்டும் என்­ப­திலும், இலங்­கைக்­கான இஸ்­லா­மிய வாழ்க்கை முறை எவ்­வாறு அமைந்­தி­ருக்க வேண்டும் என்­ப­திலும் அவ­ருக்கு மிகவும் தெளி­வான ஒரு பார்வை இருந்­தது, இப்­போதும் இருக்­கி­றது. வன்­மு­றை­களை விட்டும் தூர­மான, இயல்­பான, தெளி­வான இஸ்­லா­மிய வாழ்க்கை முறை­யொன்­றுக்­கான அழைப்­பையே அவர் தொடர்ந்தும் விடுத்து வரு­கிறார்.

சிலை உடைப்பு விவ­கா­ரத்­துடன் சம்­பந்­தப்­பட்ட பிர­தான நபர்­களுள் ஒருவர், அதா­வது உங்­க­ளது தந்­தையின் சகோ­த­ரரின் மகன் வெளி­நாட்டு பயிற்சி நெறி ஒன்­றுக்கு செல்­வ­தற்கு உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அனு­ச­ரனை வழங்­கி­ய­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டு பற்றி?

எனது தந்­தையின் மீது முன்­வைக்­கப்­பட்­டி­ருக்கும் அத்­தனை குற்­றச்­சாட்­டுக்­களும் பொது­வா­கவே நகைப்­புக்­கி­ட­மா­ன­தாக இருந்த போதிலும் மிகவும் குறிப்­பாக என்னை வாய்­விட்டுச் சிரிக்க வைத்த குற்­றச்­சாட்­டென்றால் அது இந்தக் குற்­றச்­சாட்­டுத்தான்.

90களின் இறுதிப் பகு­தியில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் சம்­ப­ளத்­துக்­கான வெளி­நாட்டு வேலை வாய்ப்­பொன்று அவரைத் தேடி வந்த போதிலும் கூட அதனைத் தட்டிக் கழித்து விட்டு இலங்கை ஜமா­அதே இஸ்­லா­மி­யினால் வழங்­கப்­படும் சாதா­ரண மாத சம்­ப­ளத்­துடன் தனது வாழ்க்­கையைத் தொடர்ந்­த­வர்தான் (இன்று வரை அவ்­வாறே தொடர்­கின்­றவர்) எனது தந்தை. நான் நளீ­மிய்­யாவில் கற்கும் போது நளீ­மிய்­யாவின் மாதாந்த கட்­ட­ணத்தை செலுத்­து­வ­தற்கே புல­மைப்­ப­ரிசில் ஒன்றில் தங்­கி­யி­ருக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் எனக்­கி­ருந்­தது. எனது தம்­பி­களில் ஒருவர் வெளி­நாட்டில் தனது பட்­டப்­ப­டிப்­புக்­காக செல்­வ­தற்கு வாய்ப்பு கிடைத்த போது சுமார் ஒரு வருட காலத்­துக்கு ஒரு தொழில் புரிந்து அதனால் வந்த வரு­மா­னத்தை சேமித்தே அதற்­கான பயண செல­வி­னங்­களை அவர் ஏற்­பாடு செய்து கொண்டார். நான் திரு­மணம் முடித்து கிட்­டத்­தட்ட ஒன்­பது வரு­டங்­க­ளா­கின்­றன. இது­வ­ரையும் வரு­டாந்தம் கூலி வீடு­க­ளில்தான் இருந்து வரு­கிறேன். எனது தந்­தைக்­கென்று சொந்­த­மாக இருப்­பது மாவ­னல்­லையில் இருக்கும் அவ­ரது சாதா­ரண வீடும் அத­னோடு இணைந்­த­தாக இருக்கும் சுமார் 10 -–12 பேர்ச்சஸ் காணியும் ஒரு மோட்டார் சைக்­கி­ளும்தான். இத­னை­யெல்லாம் ஏன் சொல்­கி­றே­னென்றால், இத்­த­கைய பொரு­ளா­தார நிலையில் இருக்கும் ஒருவர் தனது சகோ­த­ரரின் மகன் வெளி­நாட்டுப் பயிற்­சி­யொன்­றுக்­காக செல்­வ­தற்கு அனு­ச­ரணை வழங்­கினார் என்ற குற்­றச்­சாட்டு எந்­த­ளவு தூரம் நகைப்­புக்­கி­ட­மான ஒன்று என்­பதை சுட்டிக் காட்­டத்தான்.

மற்­றப்­படி அவர் யாருக்கும் எவ்­வி­த­மான பொரு­ளா­தார ரீதி­யான உத­வி­களும் செய்யக் கூடிய ஒரு பொரு­ளா­தார நிலையைக் கொண்­ட­வ­ராக எச்­சந்­தர்ப்­பத்­திலும் இருக்­க­வில்லை என்­பது அனை­வரும் அறிந்த உண்­மை­யாகும். அதுபோக அவ­ரது சகோ­த­ரரோ அல்­லது சகோ­த­ரரின் குடும்­பத்­தி­னரோ எச்­சந்­தர்ப்­பத்­திலும் எந்தத் தேவைக்­கா­கவும் அவ­ரி­டமோ அல்­லது எம்­மி­டமோ எந்த உத­வி­யையும் கேட்டு வந்­த­தில்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

சிலை உடைப்பு சம்­பவம் இடம்­பெ­று­வ­தற்கு சில வரு­டங்­க­ளுக்கு முன்­னரே உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தனது சகோ­தரர் இப்­றாஹிம் மௌல­வி­யையும் அவ­ரது இரு புதல்­வர்­க­ளையும் ஜமா­அதே இஸ்­லாமி அமைப்­பி­லி­ருந்து நீக்க நட­வ­டிக்கை எடுத்­துள்ளார். என்ன கார­ணங்­க­ளுக்­காக அவர்கள் நீக்­கப்­பட்­டனர்? தீவி­ர­வாத சிந்­தனை, செயற்­பா­டு­கள்தான் இதற்குக் கார­ணமா?

உண்­மையில் பலரும் கேட்கும் கேள்­வி­யாக இது இருப்­ப­த­னாலும், இக்­கேள்­வியில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள தக­வல்­களில் சில மயக்­கங்கள் இருப்­ப­தாலும் முதலில் கேள்­வியை தெளி­வு­ப­டுத்தி விட்டு அதற்­கான பதி­லுக்கு வர­லா­மென்று நினைக்­கிறேன்.

உஸ்­தாதின் சகோ­தரர் மற்றும் அவ­ரது புதல்­வர்கள் இரு­வரும் ஜமா­அதே இஸ்­லா­மி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­தாக உள்ள தகவல் உண்­மையில் சரி­யான தக­வ­லல்ல. அவ­ரது சகோ­த­ர­ரது மகன்கள் இரு­வரும் ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் அமைப்­பி­லி­ருந்தே நீக்­கப்­பட்­டனர். இக்­கேள்­வியில் குறிப்­பி­டப்­பட்ட மூவரில் இலங்கை ஜமா­அதே இஸ்­லா­மி­யி­லி­ருந்து விலக்­கப்­பட்­டவர் அவ­ரது சகோ­தரர் மாத்­தி­ரமே. அவ­ரது மகன்­மா­ரல்ல.

ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் அமைப்­பா­னது தனி­யான யாப்பு மற்றும் ஒழுங்கு விதி­க­ளுடன் கூடிய தனி­யான சுதந்­தி­ர­மான அமைப்­பாகும். ஜமா­அதே இஸ்­லா­மிக்கும் மாணவர் அமைப்­புக்­கு­மி­டை­யி­லான உறவு ஓர் ஆத்­மார்த்­த­மான உற­வே­யன்றி வேறு எது­வு­மில்லை. ஆலோ­ச­னைகள் தேவைப்­படின் கேட்டுக் கொள்ளல், மனித வளங்­க­ளையும் சில பௌதீக வளங்­க­ளையும் அனு­ம­தி­யுடன் பயன்­ப­டுத்­துதல் என்­ப­வற்றைத் தாண்­டி­ய­தாக அந்த உறவு இல்லை என்­பதை இங்கே குறிப்­பிட்­டாக வேண்டும். தாயும் சேயு­மா­னாலும் வாயும் வயிறும் வேறு என்று சொல்­வார்­களே! அது போன்­ற­தொரு உற­வுதான் இரு அமைப்­புக்­க­ளுக்­கு­மி­டை­யி­லான உற­வாகும். மாணவர் அமைப்­பா­னது அதன் அங்­கத்­து­வத்­துக்­காக குறிப்­பிட்ட வய­தெல்­லை­யொன்றை நிர்­ணயம் செய்து வைத்­தி­ருக்கும் அமைப்­பாகும். அந்த வய­தெல்­லையை ஒருவர் எட்டும் போது அதன் அங்­கத்­து­வத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­ய­வ­ராக கரு­தப்­ப­டுவார். அவ்­வாறு வெளி­யேறும் அனை­வரும் ஜமா­அதே இஸ்­லா­மியின் அங்­கத்­த­வர்­க­ளாக ஆகி­வி­டு­வ­தில்லை. அவ்­வா­றான ஒரு முறை­மை­யு­மில்லை. மாணவர் அமைப்பின் அங்­கத்­து­வத்­தி­லி­ருந்து குறிப்­பிட்ட வயதைக் கடந்து வெளி­யே­றிய பெரும்­பா­லா­ன­வர்கள் ஜமா­அதே இஸ்­லா­மியில் அங்­கத்­துவம் பெற விண்­ணப்­பிக்­காமல் தத்­த­மக்­கென்று வெவ்­வேறு பாதை­களைத் தெரிவு செய்து கொண்­ட­வர்­க­ளா­கவே இருக்­கின்­றனர்.

2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உஸ்­தாதின் சகோ­த­ர­ரது மூத்த மகனும் 2016ம் வரு­டத்தின் ஆரம்பப் பகு­தியில் அவ­ரது சகோ­த­ர­ரது இரண்­டா­வது மகனும் மாணவர் அமைப்­பி­லி­ருந்து நீக்­கப்­பட்­டனர். இதில் மூத்­தவர் நீக்­கப்­ப­டு­வ­தற்­கான ஆலோ­ச­னையைப் பெறு­வ­திலும் அவரை விசா­ரிப்­ப­தற்­கான ஒத்­தா­சையைப் பெறு­வ­திலும் மாணவர் அமைப்­பா­னது தனது முன்னாள் அங்­கத்­த­வர்­க­ளான ஜமா­அதே இஸ்­லா­மியின் தற்­போ­தைய அங்­கத்­த­வர்கள் சில­ரது உத­வியை நாடி­யி­ருந்­தது.

ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் அமைப்­பா­னது கடந்த நான்கு தசாப்­தங்­க­ளுக்கு அண்­மித்த கால­ம­ளவு இலங்­கையில் இயங்கி வரும் அமைப்­பாகும். இக்­காலப் பகு­தியில் இவ்­வ­மைப்­பா­னது யாப்பு ரீதி­யிலும் சரி நடை­முறை ரீதி­யிலும் சரி சில ஒழுங்­கு­க­ளையும் உள்­ளகக் கலா­சா­ரத்­தையும் பேணி வரும் அமைப்­பாகும்.

அந்த வகையில் அமைப்­புக்குள் தலைவர் மற்றும் ஏனைய பொறுப்­பு­க­ளுக்­கான தெரி­வுகள் ஒரு போதும் போட்­டியின் அடிப்­ப­டையில் நடை­பெ­று­வ­தில்லை. நான் தலை­வ­ராக வரவேண்டும் என்ற ரீதி­யி­லான பிர­சா­ரங்­களோ, அல்­லது இருக்கும் தலை­வ­ருக்­கெ­தி­ரான உள்­ளக பிர­சா­ரங்­களோ, தனக்­கான ஆத­ரவு வட்­ட­மொன்றை உரு­வாக்கும் வகை­யி­லான செயற்­பா­டு­களோ அல்­லாஹ்வின் அருளால் இவ்­வ­மைப்­புக்குள் நடை­பெற்­றி­ராத விட­யங்­க­ளாகும்.
உஸ்­தாதின் சகோ­த­ர­ரது மூத்த மக­னது செயற்­பா­டுகள் இந்தப் பாரம்­ப­ரி­யத்­துக்கு மாற்­ற­மாக அமைந்­தி­ருப்­பதை அதன் சிரேஷ்ட அங்­கத்­த­வர்கள் சிலர் அவ­தா­னித்த போது மேற்­கொண்ட உள்­ளக விசா­ர­ணை­களில் குறித்த நபர் தனக்­கான ஆத­ரவு வட்­ட­மொன்றைத் திரட்டும் செயற்­பா­டு­க­ளிலும், தலை­மையின் மீதான நம்­பிக்­கையை சிதைக்கும் வகையில் அதற்கு எதி­ரான கருத்­துக்­களை அங்­கத்­த­வர்கள் மத்­தியில் இர­க­சி­ய­மாக பரப்பும் செயற்­பா­டு­க­ளிலும் ஈடு­பட்டு வந்­தி­ருப்­பது தெரிய வந்­தது. இந்தப் பின்­ன­ணியில் இவர் இர­க­சியக் கூட்­டங்­களைக் கூட்­டி­யி­ருக்­கிறார் என்­பதும் தான் அமைப்பின் தலை­வ­ராக வரு­வ­தற்­கான மறை­மு­க­மான முயற்­சி­களை எடுத்­தி­ருக்­கிறார் என்­பதும் சாட்­சிகள் மூல­மா­கவும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­வுடன், ஏற்­க­னவே குறிப்­பிட்­டது போன்று இவர் தொடர்­பாக முடி­வொன்றை எடுப்­ப­தற்கு ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் அமைப்பு ஜமா­அதே இஸ்­லா­மியின் அங்­கத்­த­வர்கள் சில­ரது உத­வியை நாடி­யது. தான் தலை­வ­ராக வர வேண்டும் என்று ஒருவர் நினைப்­ப­திலும் அதற்­கான முயற்­சி­களை ஒருவர் மேற்­கொள்­வ­திலும் என்ன தவ­றி­ருக்­கலாம்? என்று ஒருவர் கேள்­வி­யெ­ழுப்­பலாம்.

உண்­மையில் இது ஓர் அர­சியல் கட்­சி­யாக அல்­லது இஸ்­லா­மிய விழு­மி­யங்­களை விட்டும் தூர­மான ஓர் அமைப்­பாக இருந்­தி­ருப்பின் இத்­த­கைய ஒரு கேள்­வியை நியா­ய­மான கேள்­வி­யாக கரு­தலாம். ஆனால் தசாப்­தங்­க­ளாக தலை­மைத்­து­வத்தை ஒரு பத­வி­யாக கரு­தாமல் ஒரு பொறுப்­பாகக் கருதி சுமக்க வேண்டும் என்ற மனப்­பாங்கை அங்­கத்­த­வர்­க­ளுக்கு மத்­தியில் விதைத்­தி­ருந்த ஓர் இஸ்­லா­மிய இயக்­கத்­துக்கு இந்த முயற்­சி­யா­னது அதிர்ச்­சி­ய­ளிக்கும் ஆபத்­தா­கவே தென்­பட்­டது என்ற உண்­மையை இங்கு கட்­டாயம் சொல்­லி­யாக வேண்டும். இந்தப் பின்­ன­ணி­யில்தான் குறித்த விவ­காரம் பார­தூ­ர­மா­ன­தாகக் கரு­தப்­பட்டு மிகவும் சீரி­ய­ஸாக அணு­கப்­பட்­டது. அதே நேரம் அவர் சக­வாழ்வு, மற்றும் சமூக வாழ்வின் இன்­னோ­ரன்ன அம்­சங்கள் போன்­ற­வற்றில் தீவி­ர­மான கருத்­துக்­களைக் கொண்­ட­வ­ரா­கவும் இருந்தார்.

அந்த அடிப்­ப­டையில் குறித்த நபர் இங்­கிதம் கருதி அவ­ரது தந்­தையின் முன்­னி­லையில் மாணவர் அமைப்­பினால் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்ட அடிப்­ப­டையில் உரு­வாக்­கப்­பட்ட மூவர் கொண்ட குழுவின் மூல­மாக விசா­ரிக்­கப்­பட்டார். குறித்த விசா­ர­ணையின் முடி­வாக ‘இவரை நீங்கள் நீக்கி விடு­வதே பொருத்­த­மாகும்’ என்ற ஆலோ­ச­னையை குறித்த குழு­வினர் மாணவர் அமைப்­புக்கு வழங்­கினர். இந்த ஆலோ­ச­னையை கருத்­தி­லெ­டுத்த மாணவர் அமைப்பின் மத்­திய செயற்­குழு அது தொடர்­பான மேல­திக கலந்­து­ரை­யா­ட­லுக்குப் பின்னர் அவ­ரது அங்­கத்­து­வத்தை இரத்துச் செய்­வ­தாக முடி­வெ­டுத்­தது. இது சம்­பந்­தப்­பட்ட ஆவ­ணங்கள் யாவும் உளவுத் துறை­யி­ன­ருக்கு வழங்­கப்­பட்­டு­மி­ருக்­கின்­றன.

இவ்­வாறு இவர் அங்­கத்­துவ நீக்கம் செய்­யப்­பட்­டதும் அது தொடர்­பான அறி­வித்தல் மாணவர் அமைப்பின் சகல கிளை­க­ளுக்கும் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. குறித்த நபர் தற்­போது முதல் அமைப்பின் அங்­கத்­த­வ­ரல்ல என்றும் அவர் அமைப்பில் எந்தப் பொறுப்­பையும் வகிப்­ப­வ­ரல்ல என்றும் எனவே அவ­ரோடு அமைப்பு சார்ந்த உறவைப் பேணு­வதோ அல்­லது அவர் ஏதேனும் நிகழ்ச்­சி­களை ஏற்­பாடு செய்தால் அதில் கலந்து கொள்­வதோ கூடாது என்றும் அந்த அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

எனினும், சுமார் ஆறு மாத கால­ம­ளவில் அவ­ரது சகோ­தரர் அவ­ரோ­டி­ணைந்து சில நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்து நடாத்­து­கிறார் என்ற செய்தி மத்­திய செயற்­கு­ழு­வுக்கு கிடைத்­ததும், அந்த விட­யமும் விசா­ரிக்­கப்­பட்டு அது உண்மை என்று கண்­ட­றி­யப்­பட்­ட­வுடன் அவரும் அறி­வு­றுத்­தல்­களை மீறி­யதன் பேரில் அங்­கத்­துவ நீக்கம் செய்­யப்­பட்டார்.

இவர்­க­ளது தந்தை ஜமா­அதே இஸ்­லா­மி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டது தொடர்­பி­லான விளக்­கத்தை வழங்­கு­வ­தற்கு உண்­மையில் நான் பொருத்­த­மா­ன­வ­னல்ல. ஏனெனில் நான் ஜமா­அதே இஸ்­லா­மியின் செயற்­கு­ழு­விலோ அல்­லது குறித்த விவ­கா­ரத்தைக் கையாண்ட குழு­விலோ அங்­கத்­துவம் வகித்­த­வ­னல்ல. எனினும் குறித்த விடயம் தொடர்பில் நான­றிந்த விட­யங்­களை இங்கு பகிர்ந்து கொள்­வதில் தவ­றே­து­மில்லை என்று கரு­து­கிறேன்.

அந்த வகையில், ஆரம்­பத்தில் தனது மூத்த புதல்வர் மாணவர் அமைப்­பி­லி­ருந்து விலக்­கப்­பட்­டதை அவர் ஓர் அநீ­தி­யான விட­ய­மா­கவும் குறித்த விட­யத்தை விசா­ரித்த ஜமா­அத்தின் அங்­கத்­த­வர்­களைக் கொண்ட குழு­வினர் அநீ­தி­யாக நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றனர் என்றும் அவர்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும் என்றும் இது தொடர்பில் மாணவர் அமைப்­புக்கு இலங்கை ஜமா­அதே இஸ்­லாமி உப­தேசம் வழங்க வேண்டும் என்றும் அவர் ஜமா­அதே இஸ்­லா­மி­யிடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருக்­கிறார். இவ­ரது வேண்­டு­கோளை பரீட்­சித்த ஜமா­அதே இஸ்­லா­மியின் மத்­திய செயற்­குழு அவ­ரையும் அவ­ரது மக­னையும் அழைத்து அவர்­க­ளது தரப்பு வாதங்­களைக் கேட்­ட­றிந்­தி­ருக்­கி­றது. பின்னர் அதே சந்­தர்ப்­பத்தில் அவரை விசா­ரித்­த­வர்­க­ளது வாக்­கு­மூ­லத்­தையும் பெற்­றி­ருக்­கின்­றது. அதனைத் தொடர்ந்து இவ்­வி­வ­காரம் தொடர்பில் தீர்­மா­ன­மெ­டுக்கும் விட­யத்தை அதன் மத்­திய செயற்­கு­ழுவை தெரிவு செய்யும் அதி­கா­ர­மிக்க பிர­தி­நி­திகள் சபைக்கு கைய­ளித்­தி­ருக்­கி­றது. அங்கே குறித்த விசா­ரணை மிகவும் நீதி­யா­கவும் பக்­கச்­சார்­பற்­ற­தா­க­வுமே நடை­பெற்­ற­தாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் இது தொடர்பில் குறித்த விசா­ரணைக் குழு­வி­ன­ரது விசா­ரணை நட­வ­டிக்­கைகள் நடு­நி­லை­யா­ன­தா­கவே நடை­பெற்­றி­ருக்­கின்­றன என்ற விட­யமும், மாணவர் அமைப்பு குறித்த குழு­வி­ன­ரது ஆலோ­ச­னையின் பிர­காரம் மேற்­கொண்ட தீர்­மானம் சரி­யா­னது என்­ப­துவும் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது.

இவ்­வாறு தீர்­மானம் தனக்கு சார்­பா­ன­தாக வரா­ம­லி­ருந்­ததன் கார­ண­மாக உஸ்­தாதின் சகோ­தரர் மெல்ல மெல்ல ஜமா­அதே இஸ்­லா­மியின் அதி­ருப்­தி­யா­ள­ராக மாற ஆரம்­பித்தார். ஆரம்­பத்தில் ஜமா­அதே இஸ்­லா­மியின் தீர்­மானம் சரி­யா­னது, தனது மகன்­மாரின் மீதே தவறு இருக்­கின்­றது என்ற நிலைப்­பாட்டில் அவர் இருந்­த­தா­கவும் எமக்கு சில தக­வல்கள் கிடைத்­தி­ருந்­தன. எனினும், போகப் போக அவர் படிப்­ப­டி­யாகத் தனது மகன்­மாரின் பக்கம் சாயத் துவங்­கி­யி­ருக்­கிறார். இடைப்­பட்ட காலத்தில் அவ­ருக்கு உரிய தெளிவை வழங்­கு­வ­தற்­காக ஜமா­அதே இஸ்­லாமி பல்­வேறு முயற்­சி­களை தொடர்ந்தும் செய்து வந்­தி­ருக்­கின்­றது. உஸ்தாத் தனிப்­பட்ட ரீதி­யிலும் ஜமா­அதே இஸ்­லா­மி­யினால் நிய­மிக்­கப்­பட்ட குழு­வொன்றும் தனிப்­பட்­ட­வர்­களும் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் அவ­ரோடு கலந்­து­ரை­யா­டல்­களை நடாத்­தி­யி­ருக்­கின்­றனர். எனினும் அவை­ய­னைத்தும் ஆற்றில் கரைத்த சீனியின் கதை­யா­கவே முடி­வ­டைந்­தி­ருக்­கின்­றன.

ஒரு கட்­டத்தில் அவர் ஜமா­அதே இஸ்­லாமி வழி­கேட்­டி­லி­ருப்­ப­தா­கவும், இஸ்­லாத்­துக்கு முர­ணான அம்­சங்­களை தனது யாப்பில் கொண்­டி­ருப்­ப­தா­கவும் பகி­ரங்­கமாக பேசத் தொடங்­கி­யி­ருந்தார். இது தொடர்­பாக ஜமா­அதே இஸ்­லாமி அவ­ரிடம் விளக்கம் கோரிய போது தனது நிலைப்­பாடு தொடர்பில் அவர் ஜமா­அதே இஸ்­லா­மிக்கு ஒரு கடி­தமும் அனுப்­பி­யி­ருக்­கிறார். இவை­ய­னைத்­தையும் அடிப்­டை­யாக வைத்து கடந்த 2018 ஜூன் மாத­ம­ளவில் இவரை அங்­கத்­துவ நீக்கம் செய்­வதே பொருத்­த­மா­னது என்ற தீர்­மா­னத்தை ஜமா­அதே இஸ்­லா­மியின் மத்­திய செயற்­குழு ஏக­ம­ன­தாக நிறை­வேற்றி அத­னது பிர­தி­நி­திகள் சபையின் அங்­கீ­கா­ரத்­தையும் பெற்­றி­ருக்­கின்­றது.

இத்­த­கைய பின்­ன­ணி­க­ளில்தான் உஸ்­தாதின் சகோ­தரர் ஜமா­அதே இஸ்­லா­மி­யி­லி­ருந்தும் அவ­ரது சகோ­த­ர­ரது மகன்கள் மாணவர் அமைப்­பி­லி­ருந்தும் நீக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இவர்கள் தீவி­ர­வாத சிந்­த­னையின் பால் செல்­கின்­றனர் என்­பது பற்றி அறிந்­ததும் அது­பற்றி ஜமா­அதே இஸ்­லாமி மூல­மா­கவோ அல்­லது தனிப்­பட்ட வகை­யிலோ பொலிஸ், புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு தக­வல்கள் வழங்­கப்­பட்­ட­னவா?

உண்­மையில் இக்­கேள்­வி­யா­னது ஈஸ்டர் ஞாயிறு பயங்­க­ர­வாத தாக்­கு­தலின் கார­ண­மாக ஏற்­பட்ட மனோ­நி­லையின் விளை­வாக பிறக்கும் கேள்­வி­யாகும். நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்­ப­தாக மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு தீர்­மா­னத்­தையும் அத­ன­டி­யான செயற்­பா­டு­க­ளையும் தற்­போ­தைய அர­சியல் சூழலின் விளை­வாக ஏற்­பட்­டி­ருக்கும் பொது உள­வியல் சார்ந்து நின்று புரிந்துகொள்ள முயற்­சிப்­பது பொருத்­த­மா­ன­தாக இருக்­காது என்­பது மட்­டு­மல்ல பிழை­யான முடி­வு­க­ளுக்கும் அது கார­ண­மாக அமையக் கூடும்.

குறித்த தீர்­மா­னத்தை மாணவர் அமைப்பு மேற்­கொண்ட காலப்­ப­கு­தியும் சரி, அல்­லது ஜமா­அதே இஸ்­லாமி மேற்­கொண்ட காலமும் சரி நாட்டில் ஒப்­பீட்­ட­ளவில் அமைதி நில­விய கால­மாகும். ஒரு பக்­கத்தில் வெறுப்புப் பேச்­சுக்­களும் அவ்­வப்­போ­தான அரா­ஜ­கங்­களும் அரங்­கேறிக் கொண்­டி­ருந்­தாலும் கூட அவை பெரும்­பாலும் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரா­ன­தா­கவே அமைந்­தி­ருந்­தன. ஸஹ்ரான் போன்ற இன்று பயங்­க­ர­வா­தி­யாக முத்­திரை குத்­தப்­பட்ட ஒரு­வனும் கூட அப்­போ­தைய காலப்­பி­ரிவில் சுதந்­தி­ர­மாக சமூக வலைத்­த­ளங்­களில் வெறுப்புப் பேச்­சுக்­களை பரப்பி வந்த விட­யத்தில் இந்த சமூ­கமும், முழு நாடும் ஏன் உளவுத் துறையும் கூட பரா­மு­க­மா­கவே இருந்து வந்­ததை அனை­வரும் நன்­க­றிவர். இப்­ப­டி­யான ஒரு சூழலில் ஒப்­பீட்­ட­ளவில் யாரும் பார­தூ­ர­மாக எடுத்துக் கொள்ள முடி­யாத சில விட­யங்கள் கார­ண­மாக, அதா­வது அமைப்பின் உள்­ளக ஜன­நா­ய­கத்­துக்கு வேட்டு வைக்கும் வகை­யி­லான செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டார்கள் என்ற குற்­றச்­சாட்டு நிரூ­ப­ண­மா­னதன் கார­ண­மா­கவும், அமைப்பில் அங்­கத்­த­வ­ராக இருக்கும் நிலையில் அதன் யாப்பு இஸ்­லாத்­துக்கு முர­ணான ஷரத்­துக்­களை கொண்­டி­ருக்­கின்­றது என்று திடீர் குற்­றச்­சாட்டை முன்­வைத்து அதனை அடிப்­ப­டை­யாக வைத்து ஜமா­அதே இஸ்­லா­மிக்கு வழி­கேட்டுப் பட்டம் சுமத்­தி­யவர் ஒரு­வரை அங்­கத்­த­வ­ராக வைத்துக் கொள்ள முடி­யாது என்ற பின்­ன­ணியின் கார­ண­மா­கவும் அங்­கத்­துவ நீக்கம் செய்­யப்­பட்­ட­வர்­களைப் பற்றி உளவுப் பிரி­வுக்கு விஷேட தக­வல்கள் வழங்­கு­வ­தற்கு எதுவும் இருக்­க­வில்லை.

எனினும், நாட்டில் நடக்கும் சக­ல­வற்­றையும் உள­வுத்­து­றை­யினர் அவ­தா­னித்து வரு­கின்­றனர் என்ற பரம இர­க­சி­யத்தின் அடிப்­ப­டையில் ஜமா­அதே இஸ்­லாமி மற்றும் மாணவர் அமைப்பு ஆகி­ய­வற்றின் அலு­வ­ல­கங்­க­ளுக்கும் நிகழ்­வு­க­ளுக்கும் தொடர்ந்தும் உளவுத் துறை­யினர் வருகை தரு­வதும் அவ்­வப்­போது அவர்­க­ளது நிகழ்­வுகள் தொடர்­பாக கேட்­ட­றி­வதும் வழ­மை­யாக இருந்­தது. அப்­ப­டி­யான சந்­தர்ப்­பங்­களில் இவர்­க­ளது அங்­கத்­துவ நீக்கம் தொடர்­பிலும் அதற்­கான காரணம் தொடர்­பிலும் அந்­தந்த சந்­தர்ப்­பங்­களில் பொறுப்­பி­லி­ருந்­த­வர்­க­ளி­ட­மி­ருந்து அவர்கள் தக­வல்­களைப் பெற்றே வந்­தி­ருந்­தனர். மற்­றப்­படி இது தொடர்பில் உளவுத் துறை­யி­ட­மி­ருந்து மறைப்­ப­தற்கு குறித்த இரு அமைப்­புக்­க­ளி­டமும் எதுவும் இருக்­க­வில்லை என்­பதும், மேற்­படி இரு அமைப்­புக்­களும் தொடர்ந்தும் எதுவித ஒளி­வு­ம­றைவும் இன்றி வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­ட­னேயே செயற்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன என்­பதும் உளவுத் துறை­யி­னரும் கூட அறிந்த உண்­மை­யாகும்.

உங்­க­ளது தந்தை கைது செய்­யப்­பட்­டுள்­ளதன் பின்­ன­ணியில், “அவரைத் தொந்­த­ரவு செய்யும் முக­மாக அவ­ருக்கு எதி­ரான நிகழ்ச்­சி­நி­ரல்­களைக் கொண்ட தரப்­பினர் சில தவ­றான தக­வல்­களை வழங்­கி­யி­ருப்­ப­தற்­கான உறு­தி­யான சாத்­தி­யப்­பா­டுகள் இருக்­கின்­றன” என பிரதிப் பொலிஸ்மா அதி­ப­ருக்கு நீங்கள் அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்­ளீர்கள். இதன் மூலம் நீங்கள் கூற வரு­வது என்ன?

இது மிகவும் தெளி­வான விடயம். சமூகப் பணி­யொன்றில் ஈடு­படும் போது மாற்றுக் கருத்­துக்­களில் உள்ள பலர் இருப்­பது இயல்­பா­னது. அவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் சகிப்­புத்­தன்­மை­யோடு இருந்­தாலும் அனை­வரும் சகிப்­புத்­தன்­மை­யோடு இருப்­ப­தில்லை என்­ப­துவும் யதார்த்­த­பூர்­வ­மா­னது. அவ்­வா­றான பரஸ்­பர சகிப்­புத்­தன்­மை­யற்ற பலர் இன்னும் பலரை அநி­யா­ய­மாக எவ்­வித ஆதா­ரங்­க­ளு­மின்றி காட்டிக் கொடுக்கும் அவ­லங்­களும் தாரா­ள­மாக நடை­பெற்­றி­ருப்­பதை அனை­வரும் நன்­க­றிவர். அவ்­வா­றான ஒரு செயற்­பா­டாக இது இருக்­கலாம். அல்­லது அவ்­வப்­போது ஆங்­காங்கே மீடி­யாக்­களில் தோன்றி பர­ஷூட்டில் வந்­தி­றங்­கி­ய­வர்கள் போல் மொட்டைத் தலைக்கும் முழங்­கா­லுக்கும் முடிச்சுப் போட்டுக் கொண்­டி­ருந்­த­வர்கள் தமது தனிப்­பட்ட சுய­லா­பங்­க­ளுக்­காக வழங்­கிய பொய்­யான தக­வல்­க­ளாக இருக்­கலாம். அல்­லது பலரும் கூறு­வது போன்று, அமைப்­புக்குள் எடுக்­கப்­பட்­டி­ருந்த மேற்­படி தீர்­மா­னங்­களில் இருந்த அதி­ருப்­தியின் விளை­வாக, கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­வர்­களால் ஏதோ கார­ணங்­க­ளுக்­காக வழங்­கப்­பட்ட திரி­பு­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­களின் கார­ண­மாக இருக்­கலாம், அல்­லது ஜமா­அதே இஸ்­லா­மியை ஒரு சவா­லாகப் பார்க்­கின்ற அர­சியல் பின்­னணி கொண்ட யாரு­டை­ய­தா­வது அழுத்­தங்­க­ளாக இருக்­கலாம்.

யார் அவர்கள் என்று தேடு­வதோ அவர்­களைப் பழி­வாங்­கு­வதோ எமது நோக்­க­மு­மல்ல, அத்­த­கைய எண்­ணமும் எமக்­கில்லை. ஆயினும் கூட பிழை­யான தக­வல்­களும் அர­சியல் சூழலும் அல்­லது வெறுப்­பு­களும் இக்­கைதின் பின்­ன­ணியில் தொழிற்­பட்­டி­ருக்­கலாம் என்று சந்­தே­கிப்­ப­தற்­கான உறு­தி­யான சாத்­தி­யப்­பா­டுகள் இருப்­பதை நிச்­சயம் மறுப்­ப­தற்­கில்லை. அந்தப் பின்­ன­ணி­யில்தான் குறித்த கடி­தத்தில் அவ்­வி­டயம் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தது. ஓர் உத்­தி­யோ­க­பூர்வ கடி­தத்தில் இந்த அத்­தனை விளக்­கங்­களும் விலா­வா­ரி­யாக உள்­ள­டக்­கப்­பட முடி­யாது என்ற அடிப்­ப­டை­யிலும், விசா­ர­ணை­களில் மேற்­படி விட­யங்கள் யாவும் உரிய அதி­கா­ரி­க­ளுக்கே தெளி­வாக தெரிய வந்­தி­ருக்கும் என்ற நம்­பிக்­கையின் அடிப்­ப­டை­யி­லுமே குறித்த விடயம் மிகவும் சுருக்­க­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

சில சிங்­கள ஊட­கங்­களில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் மீது ஏரா­ள­மான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. 2027இல் இலங்­கையைக் கைப்­பற்ற திட்­ட­மிட்டார், ஆப்­கா­னிஸ்­தானில் நடந்த யுத்­தத்தில் கலந்து கொண்டார், 70 நாடு­க­ளுடன் இவ­ருக்கு தொடர்­புகள் உள்­ளன என்­றெல்லாம் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. இவை பற்றி…?

சட்டம் என்று வரும் போது தொழிற்­படும் அடிப்­ப­டை­யான விதி­யொன்று பற்றி பலரும் அறி­யா­தி­ருப்­பதும், இலங்­கையில் தொடர்ந்தும் அந்த விதி படு­ப­யங்­க­ர­மாக மீறப்­பட்டு வரு­வ­தும்தான் இந்தக் கேள்­விக்­கான கார­ண­மாகும் என்று நினைக்­கிறேன்.

‘அடிப்­ப­டையில் அனை­வரும் நிர­ப­ரா­திகள், ஆதா­ரங்­களின் அடிப்­ப­டையில் அவர் குற்­ற­வா­ளி­யென்று நிரூ­பிக்­கப்­ப­டாத வரையில்’ என்­பதே அந்த சட்ட விதி­யாகும். இது மதங்கள், சித்­தாந்­தங்கள் கடந்து உல­க­ளா­விய அளவில் அனை­வ­ராலும் ஏகோ­பித்து ஏற்றுக் கொள்­ளப்­பட்ட விதி­யாகும். இந்த விதியின் அடிப்­ப­டை­யில்தான் உலகின் சகல சட்­டங்­களும் இயற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன.
ஆனால் இலங்­கையின் அர­சியல் கொந்­த­ளிப்­பு­களால் சூழப்­பட்ட சட்­ட­மா­னது ஒரு­வனை கைது செய்து வைத்துக் கொண்டு அவன் மீதான குற்­றத்தை சோடிக்­கின்ற வேலைக்கு இடம் கொடுக்கக் கூடிய வகை­யிலும், குற்றம் சாட்­டு­ப­வர்­களின் கைவசம் எவ்­வித ஆதா­ரமும் இல்­லா­தி­ருக்­கின்ற நிலையில் அநி­யா­ய­மாக குற்றம் சாட்­டப்­பட்­ட­வ­னிடம் ‘முடி­யு­மானால் நீ நிர­ப­ராதி என்று நிரூ­பித்துக் கொள்!’ என்று நிர்ப்­பந்­திக்­கின்ற வங்­கு­ரோத்து நிலை­யிலும் இருப்­பதை மிகவும் கவ­லை­யு­ட­னேயே நோக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. ஆங்­கி­லத்தில் அதனை burden of proof என்று சொல்­வார்கள். அதா­வது ஆதா­ரங்­களை சமர்ப்­பிக்க வேண்­டிய நெருக்­கடி நிலை எப்­போது குற்றம் சாட்டும் தரப்­பி­னரின் மீதே இருக்கும். ஆனால் இங்கு எல்­லாமே மாறித்தான் போயி­ருக்­கி­றது.
இதனை கருத்தில் கொண்ட நிலையில் இக்­குற்­றச்­சாட்­டுக்­களின் போலித்­தன்­மை­யையும் அதற்குள் புதைந்­தி­ருக்கும் அர­சி­ய­லையும் தோலு­ரிப்­பது கட்­டா­ய­மா­னது.

1957ஆம் ஆண்டு முதல் அமுலில் இருந்து வரும் இலங்கை ஜமா­அதே இஸ்­லா­மியின் யாப்பும், அதில் அவ்­வப்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தி­ருக்கும் திருத்­தங்­களும் இலங்கை ஜமா­அதே இஸ்­லா­மியின் வர­லாற்றில் மிக நீண்ட காலம் தலை­வ­ராக இருந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரின் மீது முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் எந்­த­ளவு தூரம் அடிப்­ப­டை­யற்­றவை என்­பதை விளங்கிக் கொள்ள போது­மான ஆதா­ரங்­க­ளாகும்.

வெளி­நாட்­டிலோ அல்­லது உள்­நாட்­டிலோ தமது அமைப்பின் அதே பெய­ரிலோ அல்­லது வேறு பெயர்­க­ளிலோ இயங்கும் எந்­த­வொரு அமைப்­பு­டனும் எவ்­வி­த­மான உடன்­ப­டிக்­கை­களோ அல்­லது தொடர்­பு­களோ அற்ற, இலங்­கையில் உரு­வாக்­கப்­பட்டு இலங்­கைக்­காக இலங்­கையில் இயங்கி வரும் சட்­ட­ரீ­தி­யாக பதிவு செய்­யப்­பட்ட ஒரு சிவில் அமைப்பே இலங்கை ஜமா­அதே இஸ்­லாமி என்­பதை அதன் யாப்பை பார்க்­கின்ற எவரும் இல­கு­வாக அறிந்து கொள்ள முடியும். இந்த அடிப்­ப­டை­க­ளுக்கு முர­ணாக ஜமா­அதே இஸ்­லா­மியோ அதன் அங்­கத்­த­வர்­களோ என்றும் நடந்து கொண்­ட­தில்லை.

ஒரு பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபையைக் கைப்­பற்­று­வதைக் கூட நோக்­காகக் கொண்டு செயற்­ப­டாத, அவ்­வா­றான முயற்­சி­களை மேற்­கொள்­ளவா என்று கேட்டு வரு­கின்ற அங்­கத்­த­வர்­க­ளுக்கு அதற்கு மாற்­ற­மான ஆலோ­ச­னையை வழங்­கு­கின்ற, ஊர் மக்­களின் ஆத­ர­வுடன் பள்­ளி­வாசல் நிர்­வாக சபைக்குத் தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற ஜமா­அதே இஸ்­லாமி அங்­கத்­த­வர்­களைக் கூட விஷேட பயிற்­சிகள் கொண்டு வழி­ந­டத்­தாத, அவ­ரவர் அவ­ர­வ­ரது ஊர் நிலைக்கும் அறிவுத் தரத்­துக்கும் சூழ்­நி­லைக்கும் ஏற்ப பொருத்­த­மான தீர்­மா­னங்­களை அந்­தந்த ஊர்­களில் கலந்­தா­லோ­சனை செய்து மேற்­கொள்­வதே பொருத்­த­மா­னது என்று அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு அறி­வு­றுத்தி வந்த இலங்கை ஜமா­அதே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் 2027 இல் நாட்டைக் கைப்­பற்றத் திட்டம் வைத்­தி­ருந்தார் என்­ப­தெல்லாம் உலக மகா நகைச்­சுவை.

எனது தந்தை முதன் முத­லாக எப்­போது தனது கட­வுச்­சீட்டைப் பெற்றுக் கொண்டார் என்ற அடிப்­படைத் தக­வலை அறிய முயற்­சித்­தி­ருந்தால் கூட ‘அவர் ஆப்­கா­னிஸ்தான் யுத்­தத்தில் பங்­கெ­டுத்தார்’ என்ற படு­முட்­டாள்­த­ன­மான குற்­றச்­சாட்டை முன்­வைக்கும் கேவ­ல­மான அறி­வீ­னத்­தி­லி­ருந்து அத்­த­கை­ய­வர்கள் தம்மைப் பாது­காத்துக் கொள்ள முடி­யு­மாக இருந்­தி­ருக்கும். அவர் முதன்­மு­த­லாக கட­வுச்­சீட்டைப் பெற்றுக் கொண்­டது முதல் தற்­போது வரையில் மொத்தம் அவ­ரிடம் மூன்று கட­வுச்­சீட்­டுக்கள் இருக்­கின்­றன. அவற்றின் பிர­திகள் யாவும் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் வசம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டு­மி­ருக்­கின்­றன. அவர் எந்­தெந்த நாடு­க­ளுக்கு பய­ணங்கள் மேற்­கொண்­டி­ருக்­கிறார் என்­பதும் அங்கு எத்­தனை நாட்கள் என்ன கார­ணத்­துக்­காக தங்­கி­யி­ருந்தார் என்­பதும் அவற்றின் மூல­மாக பெற்­றுக்­கொள்ள முடி­யு­மான தக­வல்­க­ளாகும்.

அவ­ரது வெளி­நாட்டுப் பய­ணங்கள் யாவும் ஒன்றில் வேறு நாடு­களில் தொழி­லுக்­காக சென்று வசிக்கும் ஜமா­அதே இஸ்­லாமி ஆத­ர­வா­ளர்­களால் ஒழுங்கு செய்­யப்­படும் நிகழ்ச்­சி­க­ளுக்­காக அவர்­க­ளது அனு­ச­ர­ணையில் சென்ற பய­ணங்­க­ளா­கவோ அல்­லது ஜமா­அதே இஸ்­லா­மிக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அழைப்பு விடுக்­கப்­பட்ட சர்­வ­தேச மாநா­டு­க­ளுக்கு அமைப்பின் பிர­தி­நி­தி­யாக ஏற்­பாட்­டா­ளர்­களின் அனு­ச­ர­ணையில் சென்ற பய­ணங்­க­ளா­கவோ அல்­லது ஹஜ் மற்றும் உம்­ரா­வுக்கு சென்ற பய­ணங்­க­ளா­க­வோதான் அமைந்­தி­ருக்­கின்­றன. இதற்குள் 70 நாடு­க­ளுடன் தொடர்பு என்ற கதை­க­ளெல்லாம் பெரும்­பாலும் எதிர்­கால நகைச்­சுவை அமர்­வு­க­ளுக்­கான தலைப்­பு­க­ளே­யன்றி வேறில்லை.

தந்­தையை விடு­தலை செய்­வது தொடர்பில் எவ்­வா­றான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன?

சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கைது செய்­யப்­பட்டு சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தடுத்து வைக்­கப்­பட்டு பொய்­யான குற்­றச்­சாட்­டுக்கள் பல சுமத்­தப்­பட்­டி­ருப்­பினும் கூட ஜமா­அதே இஸ்­லா­மியோ அல்­லது குடும்­பமோ இது வரையில் அவரை விடு­தலை செய்­வ­தற்கு எவ்­வித சட்­ட­பூர்­வ­மற்ற நட­வ­டிக்­கை­யிலும் இறங்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இந்த நாட்டின் சட்­டத்­துக்­குட்­பட்டு ஜன­நா­யக வழி­மு­றையில் என்­னென்ன முயற்­சி­க­ளெல்லாம் மேற்­கொள்­ளப்­பட முடி­யுமோ அந்த அத்­தனை முயற்­சி­க­ளையும் மேற்­கொண்டு வரு­கிறோம். இதனை அநீ­திக்­கெ­தி­ரான நீதிக்­கான ஒரு போராட்­ட­மா­கவே முன்­னெ­டுக்­கிறோம். குறிப்­பாக கடந்த 10 நாட்­க­ளுக்கு அதி­க­மாக அந்தப் போராட்­டத்தைத் தவிர வேறு ஒன்றை செய்­வ­தற்கு எனக்கு நேரம் இருக்­க­வில்லை. இந்த சந்­தர்ப்­பத்தில் அந்தப் போராட்­டத்தில் ஏதோ ஒரு வகையில் ஒத்­து­ழைத்த இன்னும் ஒத்­து­ழைத்துக் கொண்­டி­ருக்­கின்ற அத்­தனை பேருக்கும் அவ­ருக்­காக பிரார்த்­திக்கின்ற அனை­வ­ருக்கும் உளப்­பூர்­வ­மான நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கிறேன். அவர்கள் அனை­வ­ருக்கும் அல்­லாஹுத் தஆலா அவ­னது அருளை அதி­க­ம­திகம் சொரிய வேண்­டு­மென்றும் பிரார்த்­திக்­கிறேன்.

ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்னர் ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் கைது செய்­யப்­பட்­டனர். இவர்­களில் கணி­ச­மானோர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். எனினும் இவர்­களில் பலர் தீவி­ர­வா­தத்­துடன் எந்த வகை­யிலும் சம்­பந்­தப்­பட்­டி­ராத நிலையில் அநி­யா­ய­மான முறை­யி­லேயே கைது செய்­யப்­பட்­டனர். உங்கள் தந்­தையும் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில் உங்­க­ளதும் ஜமா­அதே இஸ்­லாமி அங்­கத்­த­வர்­க­ளி­னதும் மனோ­நிலை எவ்­வா­றுள்­ளது?

உண்மை. கைது செய்யப்பட்டவர்களில் ஏதோ ஒரு வகையில் தீவிரவாதத்துடனும் பயங்கரவாதத்துடனும் சம்பந்தப்பட்டவர்கள் பற்றி நீதியான விசாரணைகளில் தெரிய வந்தால் அவர்கள் விடயத்தில் சட்டம் எடுக்கும் தீர்மானத்துக்கு முஸ்லிம் சமூகம் தனது மனப்பூர்வமான ஆதரவை வழங்கியே ஆக வேண்டும். முஸ்லிம் சமூகம் அவ்வாறு வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதே நேரம் நீங்கள் குறிப்பிட்டது போன்று கைதானவர்களில் பலர் எவ்வித குற்றமுமற்ற அப்பாவிகள் என்பதும் உள்ளக காட்டிக் கொடுப்புகள் மற்றும் பிழையான தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களே அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய அநீதியான கைதுகள் மேற்கொண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை சமூகத் தலைமைகள் மேற்கொள்வது கடமையாகும். அத்துடன் அவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் விடுதலைக்காக பிரார்த்திக்க வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் இருப்பதோடு அவர்களின் விடுதலைக்காக முயற்சிக்க வேண்டிய பொறுப்பும் சமூகத்தின் சம்பந்தப்பட்ட பொறுப்புதாரிகளுக்கு இருக்கின்றது.

காத்தான்குடி அலியார் மௌலவி, திஹாரியைச் சேர்ந்த ஷேய்க் ரஈஸுல் இஸ்லாம், பரகஹதெனிய அன்ஸார் மௌலவி, சகோதரர் டில்ஷான் முஹம்மத், வைத்தியர் ஷாஃபி, மற்றும் இன்னும் பல்வேறு தௌஹீத் அமைப்புக்களைச் சேர்ந்த பல சகோதரர்கள் அநியாயமான முறையில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் பலர் தற்போது விடுதலையாகியிருந்தாலும் கூட இன்னும் பலர் அநியாயமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமை உண்மையில் கவலைக்குரிய விடயமாகும். இந்த அநீதிக்கெதிராக குரலெழுப்ப வேண்டிய, சாத்வீகமாகப் போராட வேண்டிய தார்மீகக் கடமை முழு முஸ்லிம் சமூகத்துக்கும் இருக்கின்றது. இல்லாத போது ஒற்றுமையின்மை என்ற எமது பலவீனத்தின் காரணமாக இந்த அநீதி எமது வீட்டுக் கதவுகளையும் தட்டும் அபாயம் வரலாம்.

தந்தையின் கைது விடயத்தைக் கையாளும் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் ஜமாஅதே இஸ்லாமியின் தலைமைப் பீடம் மிகவும் சீரியஸான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. அதன் அங்கத்தவர்கள் பலரும் அவரால் அறிவு ரீதியாக பிரயோசனமடைந்தவர்கள் என்ற வகையில் தமது உணர்வுகளை பொதுத் தளத்தில் வெளிப்படுத்தியும் இதற்கெதிராக குரல்கொடுத்தும் வருகின்றனர். மனதளவில் பலருக்கு இக்கைது அதிர்ச்சியானதாக இருப்பினும் கூட யதார்த்தத்தைப் புரிந்த நிலையிலேயே அனைவரும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருவதானது உண்மையில் பாராட்டத்தக்கது. இதனை தனது பணிகளுக்கான ஒரு தடைக்கல்லாக எடுத்துக் கொள்ளாமல் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு படிக்கல்லாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஜமாஅதே இஸ்லாமி மிகவும் உறுதியோடிருக்கின்றது.

குடும்ப அங்கத்தவர்களைப் பொறுத்தவரையில் அல்லாஹ்வின் அருளால் இதனை ஒரு சோதனையாக எடுத்துக் கொண்டு, இதற்கு காரணமானவர்கள் யாரும் இருப்பின் அவர்கள் மீதோ, அல்லது இந்த அநீதியை இழைத்த இந்த அரச இயந்திரத்தின் மீதோ வெறுப்புக் கொள்ளாமல் இந்த நாட்டு மக்களது சுபீட்சத்துக்கும் அதனது வளர்ச்சிக்கும் தம்மாலான அனைத்துப் பங்களிப்புகளையும் வழங்கி நீதியான ஒரு சூழலை உருவாக்குவதில் தம்மாலான அத்தனை பங்களிப்புகளையும் இன்னும் வீரியமாக வழங்க வேண்டும் என்ற ஒரு மனோநிலையிலேயே அனைவரும் இருக்கின்றனர். யாரையும் பழிவாங்குகின்ற எண்ணத்திலோ அல்லது ஆத்திரத்தையும் எரிச்சலையும் கொட்டித் தீர்க்கும் மனோநிலையிலோ ஒருவர் கூட இல்லை அல்ஹம்துலில்லாஹ்.

இந்தக் கைது விடயத்தில் நடைபெற்றிருக்கும் அநீதி என்ற அம்சத்தையும் அந்த அநீதியின் விளைவாக ஏற்பட்டிருக்கும் சோதனை என்ற விடயத்தையும் நாம் வெவ்வேறாகவே அணுகுகிறோம். அநீதிக்கெதிராகப் போராடுகிறோம், அதே நேரம் சோதனையை உளமாற ஏற்று அதனை தாங்கிக் கொள்கிறோம். அல்லாஹ்வின் அருளால் அதன் விளைவாக குடும்பத்தினர் அனைவரும் முகம் சுளிக்காமல் அவரவரது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட முடியுமாக இருக்கின்றது. நானும் எனது மூத்த தம்பியும் மாத்திரமே இதனை சட்டரீதியாக எதிர்கொள்கின்ற பணிகளில் ஜமாஅதே இஸ்லாமியுடன் இணைந்து செயற்படுகிறோம். தந்தையை சந்திப்பதற்கான வாய்ப்பின் போது கூட எனது தாயாரோ அல்லது எனது ஏனைய சகோதர சகோதரிகளோ தாமும் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோளைக் கூட முன்வைக்கவில்லை. வீடு அழுகைச் சத்தங்கள் இல்லாமல் சோபையிழந்து போகாமல் அல்லாஹ்வின் அருளால் எப்போதும் போல் சாதாரணமாகவே தொடர்ந்தும் இருக்கிறது. தந்தை கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்ற கவலையுடன் வீட்டுக்கு வரும் அன்பர்கள் யாவரும் ஆறுதல் பெற்றுச் செல்லும் இடமாகவே அவரது வீடு அமைந்திருக்கின்றது. எமது கவலைகள் யாவற்றையும் துஆக்களாகவும் எமது முயற்சிகளின் விளைவுகள் யாவற்றையும் தவக்குலாகவும் மாற்றி வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!

 vidivelli

Leave A Reply

Your email address will not be published.