மத்ரஸாக் கல்வியை ஒழுங்குபடுத்த உடன் பணிப்பாளர் சபையை அமைக்குக
சட்டம் வரும் வரை காத்திருக்க வேண்டாம் என்கிறார் நீதியமைச்சர் தலதா அத்துகோரள
நாட்டின் மத்ரஸா கல்வியை கல்வி அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் உட்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் மத்ரஸா கல்வி சட்டவரைபு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டு அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும்வரை காத்திருக்கவேண்டாம் என நீதியமைச்சர் தலதா அத்துகோரள அமைச்சரவையைக் கோரியுள்ளார்.
கல்வி அமைச்சு மத்ரஸா கல்வி தொடர்பாக இடைக்கால பணிப்பளர் சபையொன்றினை நிறுவி இத் திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளார். உடனடியாக இத்திட்டம் அமுலுக்கு வரவேண்டும் எனவும் கோரியுள்ளார்.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களையடுத்து மத்ரஸாக்கள் கண்காணிப்புக்குட்படுத்தப் படவேண்டும், மத்ரஸாக்கள் தடைசெய்யப்பட வேண்டும் என இனவாத தரப்புகளால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமிடம் மத்ரஸா கல்விக்கென தனியான சட்ட மூலமொன்றினை இயற்றுமாறு வேண்டிக்கொண்டார். இதற்கிணங்க அமைச்சர் ஹலீம் நிபுணத்துவக் குழுவொன்றினை அமைத்து மத்ரஸா கல்விக்கென சட்டவரைபொன்றுக்கு ஏற்பாடு செய்தார். இதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
சட்டவரைபு கல்வி அமைச்சின் பரிந்துரைகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. கல்வி அமைச்சு இதற்கென நிபுணத்துவக் குழுவொன்றினை நியமித்து குறிப்பிட்ட சட்ட வரைபு தொடர்பில் ஆராய்ந்து வருகிறது. கல்வி அமைச்சின் நிபுணத்துவ குழுவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர், கல்வி அமைச்சின் பணிப்பாளர் நாயகம், பரீட்சைகள் ஆணையாளர், முஸ்லிம் சமய விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் உட்பட கல்வித்துறை நிபுணர்கள் அங்கம் பெற்றுள்ளனர்.
இந்நிபுணத்துவக் குழு இதுவரை 3 அமர்வுகளை நடத்தி சட்டவரைபு தொடர்பில் ஆராய்ந்துள்ளது. கல்வி அமைச்சின் குறிப்பிட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய சட்டவரைபை சட்டவாக்கத் திணைக்களத்துக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்நடவடிக்கைகளுக்கு காலஅவகாசம் தேவைப்படும் என்பதனாலே நீதியமைச்சர் தலதா அத்துகோரள இச் சட்டம் பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்படும்வரை காத்திராமல் உடனடியாக பணிப்பாளர் சபையொன்றினை நிறுவி செயற்படுமாறு பரிந்துரைத்துள்ளார்.
மத்ரஸா கல்வித் திட்டத்துக்கான சட்ட வரைபினை முஸ்லிம் சமய விவகார அமைச்சும் கல்வியமைச்சும் இணைந்தே தயாரிக்கவேண்டுமென அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீதியமைச்சர் தலதா அத்துகோரள அமைச்சரவைக்கு வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கமைய மத்ரஸா கல்வி, கல்வியமைச்சின் நிர்வாகத்தின் கீழ் அமையவுள்ளது.
vidivelli