இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்று ஒன்று இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. 68 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி யினால் கேவலம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைத் தெரிவுசெய்ய முடியாது உள்ளது. கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு மஹிந்த ராஜபக் ஷ மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி “விடிவெள்ளி”க்குத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏ.எச்.எம்.பௌஸி உட்பட 5 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருப்பதாக கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஊடக மாநாடொன்றில் பாராளுமன்ற உறுப்பினர்களான லக் ஷ்மன் யாபா, எஸ். பி.திசாநாயக்க, விஜித் விஜயமுனி சொய்சா, டிலான் பெரேரா மற்றும் ஏ.எச்.எம். பௌஸி ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அதற்கான கடிதங்கள் அனுப்பி வைத்திருப்பதாகவும் நேற்றுத் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌஸி தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதிகளையும் பிரதமர்களையும் உருவாக்கிய கட்சி. இன்று இருந்தஇடம் தெரியாமல் இருக்கிறது. என்னைப் போன்றவர்களை கௌரவப் படுத்த தெரியாதகட்சி. அக்கட்சியின் சிரேஷ்ட உதவித் தலைவராக நான் பதவி வகித்தேன். அப்பதவியைப் பறித்தார்கள். மத்திய கொழும்பு அமைப்பாளராகக் கடமையாற்றினேன். அப்பதவியையும் பறித்தார்கள். அதன் பின்பு அக்கட்சியுடன் எனக்கு என்ன உறவு தேவை.
நான் தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மாதாந்தம் 3000 ரூபா செலுத்தி வருகிறேன். நான் வேறு கட்சியில் உறுப்புரிமை பெற்றுக்கொள்ளவில்லை. எனக்கு முன்பு கட்சியிலிருந்து எத்தனையோ பேர் பிரிந்து சென்று விட்டார்கள். அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்களிடம் காரணம் கேட்கிறார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வீழ்ந்து விட்டது. மீண்டும் எழுந்திருக்க முடியாது. என்னைப் போன்ற சிரேஷ்ட உறுப்பினர்களை அகௌரவப்படுத்தியதன் பிரதிபலனே இது. எம்மை மதியாத கட்சியை நாமும் மதிக்கவில்லை. எம்மிடம் காரணம் கேட்பதற்கு கட்சிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. நான் என்றோ எஸ்.எல்.எப். பியை மறந்து விட்டேன் என்றார்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli