இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றிய ஹஜ்ஜாஜிகளிடமிருந்து இதுவரை 2 ஹஜ் முறைப்பாடுகளே கிடைக்கப்பெற்றுள்ளன. ஹஜ் கடமையை நிறைவு செய்துள்ள ஹஜ்ஜாஜிகள் தங்கள் பயணத்தில் ஹஜ் முகவர்களினால் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தால் உறுதியளிக்கப்பட்ட சேவைகள் வழங்கப்பட்டிருக்காவிட்டால் அவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்பு தங்கள் முறைப்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க முடியும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்தார்.
முறைப்பாடுகளை பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைக்கும்படியும் வேண்டியுள்ளார். முறைப்பாடுகள் ஹஜ் முறைப்பாட்டு விசாரணைக் குழுவினால் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும், ஓய்வுபெற்ற நீதிபதியொருவரின் தலைமையில் ஹஜ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஹஜ் முறைப்பாடுகள் விசாரணையின் பின்பு உறுதிசெய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட முகவர் நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, இவ்வருட ஹஜ் கடமையை நிறைவுசெய்து இறுதியாக ஹஜ் யாத்திரிகர்கள் குழு எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கை வந்தடையவுள்ளது. இக்குழுவில் சுமார் 200 பேர் அடங்கியுள்ளதாகவும் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்தார்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli