குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபி மீதான விசாரணைகள் சுயாதீனமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.
வைத்தியர் ஷாபியினால் மேற்கொள்ளப்பட்ட மகப்பேற்று சத்திரசிகிச்சையின் போது குழந்தையின் காலில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன்காரணமாக குழந்தை உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்த பின்னர் இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் கூறியதாவது;
கருத்தடை விவகாரம் தொடர்பில் ஷாபிக்கு எதிராக 900 க்கும் அதிகமான சிங்கள தாய்மார் முறைப்பாடு செய்துள்ளனர். இருப்பினும் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஷாபி குற்றம் புரிந்தவர் என்று தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளதுடன், அவரை குற்றமற்றவராக சித்திரிக்கின்றனர். இந்நிலையில் மாலினி என்ற தாயொருவர் சில வருடங்களுக்கு முன்னர் தனது குழந்தைக்கு நேர்ந்த அநியாயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறையிட்டுள்ளார். ஆயினும் அவ்விடயம் தொடர்பில் எந்த விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை.
குழந்தை பிறந்தவுடன் நன்றாக பால் அருந்தியுள்ளது. பின்னர் குழந்தைக்கு இதயநோய் உள்ளதாக கூறப்பட்ட போதிலும் சாதாரண வார்ட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது. பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளது. அந்தக் குழந்தையின் கால்களில் வெட்டுக்காயம் காணப்படுகின்றது. இது தொடர்பில் எவரும் கவனத்தில் கொள்ளவில்லை. ஆயினும் இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளோம். பொலிசாரிடத்தில் சென்றால் அவர்கள் இந்த முறைப்பாட்டை பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் தான் நாம் பொலிஸ் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளோம். வைத்தியர் ஷாபியின் மீது மனித கொலை தொடர்பான குற்றச்சாட்டையே நாம் முன்வைத்துள்ளோம். ஆகவே, இந்தக் குழந்தையின் காலிலுள்ள வெட்டுக்காயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இரண்டு விடயங்கள் மரணத்திற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் எழுந்துள்ள சந்தேகத்தின் நிமித்தமே இம்முறைப்பாட்டை அளித்துள்ளளோம். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மீண்டும் குழந்தைப்பேறும் அற்றுப்போயுள்ளது. ஆகவே , அவருடைய குழந்தையின் மரணம் இயற்கை மரணமாக இருக்க முடியாது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே தான் முறைப்பாடு அளித்துள்ளோம். இது தொடர்பில் தகுந்த விசாரணைகளை பொலிஸ் ஆணைக்குழு மேற்கொள்ளும் என நம்புகின்றோம்.
கேள்வி: குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகள் தொடர்பான நிலைப்பாடு என்ன?
பதில்: குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவினருக்கென தனிப்பட்ட ரீதியில் மதிப்பு உண்டு. ஆகவே, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில் இது 900 தாய்மாரின் பிரச்சினையல்ல. மாறாக, சிங்கள சமூகத்தின் பிரச்சினை. ஆகவே இவ்விடயம் தொடர்பில் தகுந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பில் சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் சுயாதீனமான முறையில் மேற்கொள்ள வேண்டும் இந்த விடயம் தொடர்பில் மக்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
vidivelli