ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சமூகம் அறிவுறுத்தப்பட வேண்டும்
முஸ்லிம் லீக் சம்மேளன முன்னாள் தலைவர் என்.எம்.அமீன் தெரிவிப்பு
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பையும் சமூக அங்கீகாரங்களையும் தீர்மானிக்கும் ஒரு ஆட்சியாக ஜனாதிபதித் தேர்தல் அமையவுள்ளதால் இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தை அறிவுறுத்தி வழிகாட்ட வேண்டிய கடமைப்பாடும் பாரிய பொறுப்பும் இலங்கை முஸ்லிம்களின் சமூகத் தலைமைகளுக்கும் சிவில் அமைப்புக்களுக்கும் உள்ளதென முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன முன்னாள் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் மாவட்ட பிரதிநிதிகளுக்கான ஒருநாள் பயிற்சி செயலமர்வு நேற்றுமுன்தினம் கொழும்பு அல்ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் பி.எம்.பாரூக் தலைமையில் இடம்பெற்ற போது விஷேட உரை நிகழ்த்துகையிலேயே என்.எம். அமீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் இங்கு உரையாற்றுகையில்,
“கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் அதன் மாவட்டக் கிளைகள் ஊடாக பல காத்திரமான பணிகளையும், சேவைகளையும் முன்னெடுத்து வருகின்றமை மிகவும் பாராட்டத்தக்கதாகும். அத்துடன் இவ்வமைப்பு எந்த அரசியல் சிந்தனையையும் நேரடியாக உள்வாங்காமல் தேசிய நலனையும், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தையும் இலக்காகக் கொண்டு தொடராகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.
எமது நாட்டின் முன்னாள் சபாநாயகரும் இச்சம்மேளனத்தின் ஸ்தாபகருமான பாக்கிர் மாக்கார் அன்று முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பாகவும் முஸ்லிம் தலைமைத்துவம் தொடர்பாகவும் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டதால்தான் இவ்வமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் பல கிளைகளுடன் இயங்கி வரும் இச்சம்மேளம் காலத்தின் தேவைகளையும், முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சியையும் கருத்திற்கொண்டு செயற்படுவதற்கு கடமைப்பட்டுள்ளது. இதன் அங்கத்தவர்களுக்கு அரசியல் சிந்தனைகள் தொடர்பில் பல்வேறு தனிப்பட்ட அபிப்பிராயங்களும் எதிர்பார்ப்புக்களும் இருக்கலாம்.
ஆனால் தேசிய நலன் மற்றும் முஸ்லிம் சமூக வளர்ச்சி என்று நோக்குகின்றபோது அனைவரும் ஒன்றுபட்டுப் பயணிக்க கடமைப்பட்டிருக்கின்றோம். இந்த அமானிதத்தை இச்சம்மேளனம் மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறது. இன்றும் செய்து வருகிறது. நாட்டின் அரசியல் சிந்தனைகள் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தை விழிப்பூட்ட வேண்டுமென்பது போல முஸ்லிம் இளைஞர் சமுதாயத்தையும் நெறிப்படுத்த வேண்டிய மிகப் பாரிய பொறுப்பும் இருக்கிறது.
இலங்கை முஸ்லிம் சமூகத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற சஹ்ரான் குழுவினரின் தொடர் குண்டுத் தாக்குதல்கள் அனைத்தும் எமது இளைஞர் சமுதாயத்திற்கான வழிகாட்டல்கள் பற்றியும் தலைமைத்தும் பற்றியும் அனைவரையும் மீண்டுமொரு முறை சிந்திக்கத் தூண்டியிருக்கிறது.
தற்போது நாட்டு மக்கள் மத்தியில் ஜனாதிபதித் தேர்தல் பேசுபொருளாக மாறிவரும் நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகம் எந்த அரசியல் நிலைப்பாட்டை நோக்கி நகர வேண்டும் என்பதும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டிய மிக முக்கிய ஒரு விடயமாகும்.கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது முஸ்லிம் சமூகம் எடுத்த தீர்மானம் இன்றும் பேசப்படுகிறது. முஸ்லிம் வாக்காளர்கள் கூடுதலாக உள்ள தொகுதிகளிலேயே பொது வேட்பாளராக களம் இறங்கிய இன்றைய ஜனாதிபதிக்கு கூடுதலான வாக்குகள் கிடைக்கப் பெற்றன. ஆனாலும் முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்த ஆரோக்கியமான சூழ்நிலைகள் முஸ்லிம்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. எது எப்படியாக இருப்பினும் நாட்டில் சட்டமும் நீதியும் பேணப்பட வேண்டும். இன உறவுகள் என்றும் பாதிக்கப்படக் கூடாது. மீண்டும் முஸ்லிம் சமூகம் உரிமைகள் மறுக்கப்படும் சமூகமாக மாறக்கூடாது. அரசியல் சாதக பாதகங்கள் தொடர்பாக ஆராய்ந்து மிகுந்த தூரநோக்குடனே முஸ்லிம் சமூகம் தனது அரசியல் ஆதரவை வழங்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
மேற்படி நிர்வாகப் பயிற்சி செயலமர்வில் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தலைவர் பி.எம்.பாரூக், செயலாளர் எம்.அஜ்வத்தீன் மற்றும் உபதலைவர் லுக்மான் ஷஹாப்தீன் உட்பட அதன் முக்கியஸ்தர்கள் பலரும் உரையாற்றினர்.
எம்.எல்.எஸ்.முஹம்மத்
vidivelli