அடிப்படை உரிமையை தக்க வைப்பதே முக்கியம்

0 1,411

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை நிகழ்ந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் செய்ய அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­விட்­டது. இதற்­கான பத்­தி­ரத்தை முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமும் நீதி அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ளவும் சமர்ப்­பித்­தி­ருந்­தனர். அப்­போது அமைச்சர் ஹலீம், இது முன்னாள் நீதி அமைச்­ச­ரான மிலிந்த மொர­கொட 2009 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மையில் நிய­மித்த குழுவின் திருத்­தங்­களே எனவும் முஸ்லிம் எம்.பி.க்கள் ஏற்­றுக்­கொண்­டவை எனவும் குறிப்­பிட்டார்.

* முஸ்லிம் ஆண், பெண் திரு­மண வய­தெல்லை 18.

* விவா­க­ரத்தால் பாதிக்­கப்­படும் பெண்­ணுக்கு நஷ்­ட­ஈடு.

* காதி நீதி­மன்­றங்கள் தர­மு­யர்வு.

* காதி­களின் நிரந்­தர முழு­நேர நிய­மனம்.

* ஷரீஆ அறி­வுள்ள ஆண் வழக்­க­றிஞர் நிய­மனம்.

* திரு­ம­ணப்­ப­திவும் நிக்­காஹ்வும் கட்­டாயம்.

* விவா­க­ரத்­தின்­போது தலாக்­கிலும் குலா­விலும் பஸ்­ஹிலும் மனை­விக்கு நஷ்­ட­ஈடு.

* நிபந்­த­னை­க­ளோடு மட்­டுமே பல­தார மணம் அனு­ம­திக்­கப்­படும்.

* காதியின் அனு­ம­தி­யின்றி நிகழும் திரு­மணம் சட்டபூர்­வ­மற்­றது.

* மணப்­ப­திவுப் பத்­தி­ரத்தில் வலி­யோடு மண­ம­களும் ஒப்­ப­மிட வேண்டும்.

* காதியின் அனு­ம­தி­யின்றி நிகழும் பல­தார மணம் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம்.

* கைக்­கூ­லியைப் போல் அசையா சொத்­துக்­க­ளையும் மீளப்­பெ­றுதல்.

* முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து ஆலோ­சனைச் சபை­யிலும் காதிகள் சபை­யிலும் பெண் பிர­தி­நி­தித்­துவம் ஏற்­கப்­படும்.

* பெண்கள் விவாகப் பதி­வா­ளர்­க­ளாக ஏற்­கப்­ப­டுவர்.

* காதி நீதி­மன்­றங்கள் தர­மு­யர்த்­தப்­படும்.

* ஒரு தரப்போ இரு­ த­ரப்­பு­க­ளுமோ மத்ஹப் இல்­லா­த­வ­ராயின் அல்­லது வெவ்­வேறு மத்­ஹப்­க­ளாயின் அது பற்­றிய இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டா­விட்டால் திரு­மண விட­யங்கள் யாவும் ஷரீ­ஆ­வுக்கு ஏற்ப நிகழ்த்­தப்­ப­டுமே தவிர எந்த மத்­ஹபின் அடிப்­ப­டை­யிலும் நிகழ்த்­தப்­ப­டாது.

என்­றெல்லாம் அந்தத் திருத்­தத்தில் காணப்­ப­டு­கின்­றன. இதற்கு மேல் இவற்றில் சல்­லடை போட்­டுக்­கொண்­டி­ருக்க வேண்­டி­ய­தில்லை. இவை சரி­யா­ன­வையா? என அடுத்த தலை­முறை அனு­ப­வத்தின் மூலம் தெரிந்­து­கொள்­ளட்டும். இப்­போ­தைக்கு இதை நிறை­வேற்றி முடித்­துக்­கொள்ள வேண்­டி­ய­துதான். ஏனெனில் களத்தில் களப்­பா­து­காப்பு முக்­கி­ய­மா­ன­தாகும். இப்­போது அவற்றைப் பாது­காப்போம். காரணம் சுவர் இருந்­தால்தான் சித்­திரம் தீட்­டலாம். விளக்­கத்­துக்கும் கால­மாற்­றத்­துக்கும் ஏற்ப வருங்­கா­லத்­திலும் சித்­தி­ரங்­களைத் தீட்டிக் கொள்­ள­லாமே. முஸ்லிம் தனியார் சட்டம் அல்லாஹ் வகுத்து நேர­டி­யாக வழங்­கி­யதோ, நபி (ஸல்) முழு­மைப்­ப­டுத்­தி­யதோ அல்ல. குர்ஆன், ஹதீஸ், மத்­ஹ­புகள் மூலம் இஸ்­லா­மிய அறி­ஞர்கள் இஜ்­திஹாத் என்னும் சுய­ஆய்­வுப்­படி வழங்­கி­ய­தாகும். அதனால் இது கால­மாற்­றத்­துக்கும் தெளி­வுக்கும் ஏற்­ற­படி திருத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. முன்பு திருத்­தப்­பட்­டது இப்­போதும் திருத்­தப்­ப­டு­கி­றது. இனியும் திருத்த முடி­யாது என மட்­டி­டவும் முடி­யாது. என்­றாலும் கூட இப்­போ­தைக்கு எந்தத் திருத்­தத்­தையும் முன்­வைத்து விதர்ப்­ப­த்தோடு சன்­மார்க்க விளக்­கங்­களில் முரண்­பட்டு நிற்­போ­மாயின் சமூக ரீதி­யிலும் சன்­மார்க்க ரீதி­யிலும் முஸ்லிம் சமூ­கத்­துக்கு ஒரே நிலைப்­பாட்­டுக்கு வரவே முடி­யாது போய்­விடும்.

பலாக்காய் வெட்ட முடி­யாத கத்தி எதற்கு என்­பார்கள். உட­னடி தேவைக்கு விரை­வான முடிவை பன்­னூறு அறி­ஞர்கள் பல்­லாண்டு முயன்றும் காண முடி­யா­விடில் இத்­த­கைய அறிவு இருந்து என்ன பயன்? அல்­லாஹ்வே தோட்­டத்தின் சொந்­தக்­காரன் அறி­ஞன், காவ­லா­ளி. அந்த வகையில் ஆலிம்­களால் இஸ்­லாத்தை வகுக்க முடி­யாது. இஜ்­திஹாத் முறைப்­படி அவர்கள் இஸ்­லாத்தைப் பாது­காக்க வேண்டும். பேரி­ன­வா­தத்­திடம் பிடி­கொ­டுத்து ஆட்­ட­மி­ழக்­காமல் தளத்தைப் பாது­காக்க இஸ்லாம் நிலைத்­தி­ருக்க சேதா­ர­மற்ற சரி­யான வழியைக் காட்­ட­வேண்டும். யாப்பு மூலம் நமக்கு இருந்த ஒரே அடிப்­படை உரி­மை­யிலும் பொடு­போக்கு. 2009 ஆம் ஆண்டு பொறுப்பு வழங்­கப்­பட்ட முஸ்லிம் விவாக, விவா­க­ரத்­துக்­கான திருத்தம் 10 வரு­ட­கால நீண்ட தாம­தத்­துக்குப் பின் அமைச்­ச­ர­வை­யிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஆரம்­பத்தில் அறி­யாமை கார­ண­மாகக் கவ­ன­யீனம். பின்னர் விருப்பக் குறைவு கார­ண­மாக அக்­க­றை­யின்மை. முடிவில் கண்­டிப்­பாகச் செய்து முடிக்க வேண்­டிய அவ­சர கோலம் கார­ண­மாக முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்ட விட­யத்தில் இலங்கை முஸ்­லிம்­களின் மூன்று தன்­மை­களும் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றன.

இந்த சந்­தர்ப்­பத்தில் இதை அடிப்­ப­டை­யாக வைத்து விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்­துக்குப் பிர­தி­யீ­டாக பேரி­ன­வா­திகள் பொதுச்­சட்­டத்­துக்குள் முஸ்­லிம்­க­ளையும் உள்­வாங்க முயன்­றனர். அந்த வகையில் நிரந்­த­ர­மான அடிப்­படை உரி­மையைத் தக்­க­வைப்­ப­தற்­காக எப்­ப­டியும் ஒரு முடி­வுக்கு வந்­து­வி­டவே வேண்டும் என்னும் ஓர் இக்­கட்­டான நிலை ஏற்­பட்­டதன் கார­ண­மா­கவே இது முடி­வு­கா­ணப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதும் உண்­மை­யாகும். முன்பு காலத்தை அதி­க­மாகக் கடத்­தி­யி­ருந்­த­தாலும் இப்­போது விரை­வாக ஒரு தீர்­வுக்கு வந்தே ஆக வேண்டும் என்னும் இக்­கட்­டான சூழல் ஏற்­பட்­டி­ருந்­த­தாலும் இதைத் தவிர வேறு வழி இல்லை. முடிவில் விதர்ப்ப ஆராய்ச்­சி­க­ளாலும் விட்­டுக்­கொ­டுப்­பின்­மை­யாலும் முடி­யா­மற்­போன விடயம் 4/21 வெடிப்­பு­க­ளுக்குப் பின் நிறை­வே­றி­யி­ருக்­கி­றது.

1951 ஆம் ஆண்டு முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் இயற்­றப்­பட்ட போது இலங்கை முஸ்­லிம்­க­ளிடம் காணப்­பட்ட சமூக சூழ­லுக்கும் தற்­போ­துள்ள சமூக சூழ­லுக்கும் பாரிய வித்­தி­யாசம் இருக்­கி­றது. அதில் எந்தக் குறை­பா­டுகள் இருந்த போதும் அறிவு குறைந்த நிலை­யிலும் கூட பாரம்­ப­ரிய குடும்ப ஒழுங்கின் கார­ண­மாக அப்­போது இதற்­காக எந்தக் கேள்­வியும் எழ­வில்லை. இப்­போது கட்­டுப்­பா­டற்ற குடும்ப ஒழுங்­கீ­னங்­களின் கார­ண­மா­கவே பாரம்­ப­ரிய முறையில் திருத்­தங்கள் தேவைப்­பட்­டி­ருக்­கின்­றன.

இப்­போது கட்­டுப்­பா­டற்ற குடும்ப ஒழுங்­கீ­னங்கள் ஓர­ளவு காதி நீதி­மன்­றங்­க­ளா­லேயே வெளிக்­காட்­டப்­ப­டாமல் இருந்­தி­ருக்­கி­றது. காதி நீதி­மன்­றங்கள் நீக்­கப்­பட்டால் பொது நீதி­மன்­றங்­களில் அத்­த­னையும் அம்­ப­ல­மாகி பகி­ரங்­க­மாகும் நிலை தோன்றும். எனவே காதி நீதி­மன்­றங்­களை ஒழுங்­க­மைக்கும் செயற்­பாடு முஸ்­லிம்­களின் தனி உரி­மையை மட்­டு­மன்றி மானம் மரி­யா­தை­யையும் காக்கும் செயற்­பாடு என்­றேதான் கூறிக் கொள்வேன்.

1978 ஆம் ஆண்டின் திறந்த பொரு­ளா­தாரக் கோட்­பாடு ஒரு வகையில் காதி­க­ளையும் முஸ்லிம் மண­மக்­க­ளையும் கூட பாதித்தே இருக்­கி­றது. வச­தி­யான மாப்­பிள்ளை பெண்ணைத் தேடியே தரகர் அண்­டு­கிறார். அது போன்றே சில காதி­களும் செயற்­பட்­ட­தாக நாம் கேள்­விப்­ப­டு­கிறோம். ஆக, பெண்­ணுக்கு மட்­டு­மன்றி ஆணின் வாழ்­விலும் கூட பணம் விளை­யா­டி­யி­ருக்­கி­றது என்­பது இதன் மூலம் புல­னா­கி­றது.

அதனால் வரும்­படி குறைந்த சில காதிமார் மாப்­பிள்­ளைக்குக் குறைந்த தொகை தாப­ரிப்பை விதித்து மாப்­பிள்­ளை­யி­ட­மி­ருந்து பலன் பெற்­றதும் உண்டு. அதற்­கெனப் பெண்ணை அடிக்­கடி அலைக்­க­ழித்து ஏற்­றுக்­கொள்ள வைத்­ததும் உண்டு. வச­தி­யுள்ள ஆண் வீட்­டாரும் பெண் வீட்­டாரும் உட­ன­டி­யா­கவே விவா­க­ரத்துப் பெற்­றதும் உண்டு. மறு­ம­ணமோ பல­தார மணமோ வச­தி­யி­ருந்தால் எல்லாம் எளிது. இதில் பெண்­ணு­ரிமை மட்­டு­மன்றி ஆணு­ரி­மையும் கூடப் பாதிக்­கப்­ப­டு­கி­றது. எனினும் ஆண்­களை விடவும் பெண்­களே 80 வீதம் பாதிக்­கப்­ப­டு­கி­றார்கள்.

இவ்­வாறு நிர்க்­க­தி­யாக்­கப்­பட்ட ஓர் ஆண் சொன்னார். பெண் அழுதால் பாவம் என்­கி­றார்கள். ஆண் அழுதால் மாயம் என்­கி­றார்கள் எனப் புலம்­பினார். காரணம் காதியார் பெண் வீட்டார் சார்­பாக நின்று அவனை நிர்க்­க­தி­யாக்­கி­னாராம். அவன் அன்பு மிகுந்து பெண்­ணுக்குக் கொடுத்த சொத்­துக்­களை பெண் வீட்டார் அப­க­ரித்துக் கொண்டு பெண்ணை நிர்ப்­பந்­தித்து விவா­க­ரத்துப் பெறச் செய்­த­னராம்.

நிக்காஹ் என்­பது பொறுப்­பேற்றல் என்றால் ஈஜா­பு­கபூல் என்­பது பொறுப்புக் கூற­லாகும். ஒருவன் இப்­படிக் கூறு­கின்றான். நான் காணாத பெண்ணா மச்சான்? என்ன செய்­வது. உம்­மா­வுக்­கா­கவே அவளை முடித்தேன். வய­தான தாய்க்கு உதவி வேண்­டுமே. பாவம் அம்மா இவள் தேவைக்கும் உத­வுமே என்றான். விவா­க­ரத்து பற்­றிய அச்சம் இவ­னுக்கு இல்­லா­ததே இதற்குக் கார­ண­மாகும்.

உண்­மையில் சமூகம் முழு­மை­யான ஒழுக்க விழு­மி­யத்தைப் பெறாத வரையில் தற்­போது திருத்­தப்­படும் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­ட­மும்­கூட புண்­ணுக்குப் புணுகு தட­வு­வது போன்­ற­தா­கவே அமையும். அது­போக, உட­ன­டி­யாக முழு­மை­யான ஒழுக்க விழு­மி­யத்தைக் கொண்­டு­வர முடி­யுமா என்­ப­தும்­கூட கேள்­விக்­கு­றியே ஆகும். அந்த அள­வுக்கு இலங்கை முஸ்­லிம்­களின் இல்­லற ஒழுக்க வாழ்வு ஏனைய சமூ­கத்­தி­னரால் உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­ப­டு­கி­றது. காரணம் முஸ்லிம் முன்­னோரின் இல்­லற ஒழுங்­கு­முறை அவர்­க­ளுக்கு ஒரு முன்­மா­தி­ரி­யாக இருந்­ததே ஆகும்.

தற்­போது பொது நீதியை அமுல்­ப­டுத்தும் ஏனைய சமூ­கங்­க­ளிடம் காணப்­படும் திரு­மணப் பிரச்­சி­னை­களை விடவும் காதி நீதி­மன்­றங்­களை வைத்­தி­ருக்கும் முஸ்­லிம்­க­ளிடம் திரு­மணப் பிரச்­சி­னைகள் அதி­க­மாக இருப்பின் காதி நீதி­மன்­றங்கள் கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வதில் வியப்பு இல்­லையே? அந்த வகையில் உத்­தே­சிக்­கப்­பட்­டி­ருக்கும் புதிய திருத்­தங்கள் மூல­மா­க­வா­வது முஸ்­லிம்­களின் இல்­லற ஒழுக்க விழு­மி­யத்தை முன்­மா­தி­ரி­யாக முன்­வைக்க முடி­யு­மாயின் இது ஒரு அரும் பெரும் வாய்ப்­பா­கவே அமையும் என நினைக்­கிறேன். இதிலும் தவ­றினால் காதி நீதி­மன்­றங்­களின் இருப்­புக்கு ஆப்பு வைக்கும் செயற்­பாட்டை சக­ல­ருக்கும் ஒரே நீதி எனக் கோஷ­மி­டுவார் அதை முன்­வைக்கும் நிலையே ஏற்­படும்.

தற்­போது நூற்­றுக்­க­ணக்­கான மத்­ர­ஸாக்­களும் ஆயி­ரக்­க­ணக்­கான ஆலிம்­களும் ஆயி­ரக்­க­ணக்­கான பள்­ளி­வா­சல்­களும் இலட்­சக்­க­ணக்­கான தொழு­கை­யா­ளி­களும் பல்­வேறு தஃவத் அமைப்­புக்­களும் தரீக்­காக்­களும் இருந்­தும்­கூட இவை அத்­த­னையும் அன்று வாழ்ந்த முஸ்லிம் மூதா­தை­யரின் இல்­லற ஒழுக்க விழு­மி­யங்கள் இல்லை என்­பதை காதிக் கோடு­களில் அன்­றாடம் வழக்­குகள் பெருகி வரு­வதன் மூலம் கண்­டு­கொள்ள முடி­கி­றது.

மறு­ம­ணத்­துக்கும் பல­தார மணத்­துக்கும் விவா­க­ரத்­துக்­குமே காதி நீதி­மன்றம் என்னும் நிலைப்­பாட்டை மாற்றி சம­ரசம் செய்து வைக்­கப்­படும் இடம், நிவா­ரணம் வழங்கும் இடம், வாழ்­விக்கும் இடம் என்னும் நிலைப்­பாட்டை ஏற்­ப­டுத்­த­வேண்டும். பெண்­களைத் தரம் தாழ்த்தும் இட­மா­க­வன்றி சம­நி­லைப்­ப­டுத்தும் இட­மாக்­கப்­பட வேண்டும்.

இவை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டா­லன்றி காதி நீதி­மன்றம் உரு­வாக்­கப்­பட்­டதன் நோக்கம் பூர்த்­தி­யா­காது. ஆக, புதிய மாற்­றங்­களின் நோக்கம் அந்த இலக்­கு­களை அடை­வ­தா­கவே இருக்க வேண்டும். இந்த ஏற்­பா­டுகள் அந்த இலக்கை அடைய வழி­காட்­டுமா? இல்­லையா? மேலும் மாற்­றங்கள் வேண்­டுமா என்­பதை இனி­வரும் காலம்தான் தீர்­மா­னிக்க வேண்டும்.

தற்­போது பெண் காதி வேண்டும் என்னும் கோரிக்கை மட்டும் தவிர்க்­கப்­பட்டு ஏனை­யவை அனைத்தும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. தவிர்க்க முடி­யாத சூழலில் 18 வய­துக்கும் குறை­வான பெண்ணும் மண­மு­டிக்­கலாம் என்னும் இயற்கை அணு­கு­மு­றையும் கூட தவிர்க்­கப்­பட்­டுள்­ளது. தலாக்­கிலும் குலா­விலும் பஸ்­கிலும் விதிக்­கப்­பட வேண்­டிய நஷ்­ட­ஈ­டுகள் பற்­றியும் விளக்­கங்கள் இல்லை. பல­தார மணத்­துக்­கான நிபந்­த­னைகள் எவை? காதியின் அனு­ம­தி­யின்றி நிகழும் பல­தார மணத்­துக்கு என்ன தண்­டனை? கைக்­கூலி இஸ்­லாத்தில் இல்லை. பெண்ணின் அசையா சொத்­துக்­களை மாப்­பிள்ளை கோரிப் பெறு­வதும் கூட இஸ்­லாத்தில் இல்லை. அவற்றை வழங்­கி­னால்­தானே மீளப் பெற­மு­டியும். இவற்றை ஷரீஆ சட்டம் அனு­ம­திக்­கி­றதா?

பெண் பிர­தி­நி­தித்­துவம் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து ஆலோ­சனை சபை­யிலும் காதிகள் சபை­யிலும் ஏற்­கப்­பட்டு விவாகப் பதி­வா­ளர்­க­ளா­கவும் நிய­மிக்­கப்­ப­டுவர். எனினும் தலை­மைக்­கா­தி­யாக முடி­யாது. இதற்குக் காரணம் பெண் தலைமை ஷரீ­ஆ­வுக்கு முரண் என்றே கூறப்­ப­டு­கி­றது. இவ்­வி­ட­யத்தில் எதிரும் புதி­ரு­மாக இரு கருத்­துகள் இருப்­பினும் கூட தற்­போ­தைய அவ­சர, அசா­தா­ரண சூழலில் சிறு­சிறு சேதா­ரங்கள் இருப்­பினும் முற்று முழு­தாக ஏற்று களத்­துக்­காக தளத்தைப் பாது­காத்துக் கொள்­வதே ஏற்­பு­டை­ய­தாகும்.

ரிஸ்வி முப்தி, பெண் காதி வேண்டாம் என்­பதில் மட்டும் உறு­தி­யாக நின்­று­கொண்டு ஏனை­ய­வற்றில் விட்­டுக்­கொ­டுத்­து­விட்டார். அவ­ரது அந்த நோக்கம் மட்டும் நிறை­வே­றி­யி­ருக்­கி­றது. அதில் பேரியல் அஷ்ரப், ரவூப் ஹக்கீம் ஆகி­யோரின் கருத்துகளும் கூட எடு­ப­ட­வில்லை. இது பற்றி ரவூப் ஹக்கீம் பாத்­திமா மகளிர் பாட­சா­லையில் உரை­யாற்­று­கையில் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டி­ருந்தார்.

எம்.பி க்களான நாம் அண்­மையில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்டம் பற்றி கூடிய கவ­னத்தை செலுத்­த­வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டுள்­ளது. அதற்­கான திருத்­தங்கள் மூலம் கிடைக்கும் தீர்­வுகள் வெளியே இருந்­தல்ல, எமது சமூ­கத்­தி­லி­ருந்தே கிடைக்க வேண்டும் என்­பதில் நாம் உறு­தி­யாக இருக்­கிறோம். இதில் பெண் தலைமை பற்­றிய சர்ச்­சை­க­ளும் எழவே செய்­கி­ன்றன. அதன்­படி ஆலிம்­க­ளோடு கலந்­து­ரை­யாடி இணக்கம் காண வேண்­டியும் இருக்­கி­றது.
பெண் தலைமை பற்றி குர்ஆன் கூறு­வ­தென்ன? நபி­க­ளாரின் வாழ்வு முறை காட்­டு­வ­தென்ன? மத்­ஹ­பு­களின் விளக்­கங்கள் என்­ன­னென்ன? என்னும் விட­யங்­களில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டாத நிலை­யில்தான் இப்­போது முஸ்லிம் விவாக விவா­க­ரத்து விடயம் முஸ்லிம் எம்.பி க்களிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆண்கள் பெண்­களின் நிர்­வா­கிகள் என்னும் குர்ஆன் வச­னத்தைக் காட்­டியே பெண் தலைமை கேள்­விக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

எனினும் இமாம் அபூ­ஹ­னீபா, இமாம் தபரி போன்றோர் இதை மீளாய்வு செய்­ய­வேண்டும் என்னும் நிலைப்­பாட்டில் இருந்­த­தாகக் கூறப்­ப­டு­கி­றது. அந்­த­வ­கையில் இது குடும்பத் தலை­மையை மட்­டுமே குறிக்கும் வசனம். இதைப் பொது­வாக்கி எல்லா விட­யங்­க­ளிலும் பெண் தலை­மைக்குத் தகு­தி­யற்றோர் என்னும் வாதம் பிழை­யா­னது என்­கின்­றனர்.

ஆக, அதன் முந்­திய பிந்­திய வச­னங்கள் யாவும் குடும்ப விட­யங்­க­ளையே குறிப்­பி­டு­கின்­றன. அதன்­படி குடும்பச் செலவு ஆணுக்­கு­ரி­யது என்­பதே பொரு­ளா­கி­றது என்­கி­றார்கள். அதற்கு மாறாகத் தலை­மைக்­கான தகுதி பெண்­ணுக்கு இல்லை எனக் கூறப்­போ­வோ­மாயின் ஆண்கள் கட­மை­பு­ரியும் இடங்­களில் குறிப்­பாக பாட­சா­லை­களில் முஸ்லிம் பெண்கள் தலைமை வகிக்க முடி­யா­மற்­போகும். இதன் மூலம் பெண் நீதி­ப­தி­யா­கவும் செயற்­பட முடி­யாது என்னும் கருத்­தியல் உண்­டாகும்.

பெண் தலை­மைக்­கான சீர்­தி­ருத்­தங்கள் 1961 ஆம் ஆண்­டி­லேயே இந்­தோ­னே­ஷி­யாவில் உள்­வாங்­கப்­பட்­டன. சில ஆண்­டு­க­ளுக்கு முன் மலே­ஷி­யா­விலும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. எனினும் பழ­மை­வா­தத்­தி­லேயே பிடிவாதமாக இருக்கும் பலர் எமது சமூகத்தில் இருக்கின்றனர். சமூகத்தில் எடுத்த எடுப்பில் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவர முயன்றால் கிளர்ச்சி உருவாகலாம். இவர்களை இணங்கச் செய்வதே எமது முதல் தேவையாகும். எனவே ஓரளவு விட்டுக்கொடுப்போடு இதைக் கையாளவேண்டும் என ரவூப் ஹக்கீம் கூறி முடித்தார்.

உண்மையில் பெண் மனதை பெண்தான் அறிவாள். ஆண்கள் முழுமையாக அதைப் புரிந்துகொள்வது அரிது. சில காதிகள் அந்தரங்க விடங்களையும் அம்பலத்தில் கேட்டுவிடுவார்கள்.

பெண்ணை தாழ்வுற நினைத்து அலட்சியப்படுத்தும் காதிகளும் இருக்கிறார்கள். எனவே நீதி இருபாலாருக்கும் பொது. அதில் ஆண் – பெண் வித்தியாசமில்லை. அதன் படி தனக்கு இன்ன நீதிபதியால் நீதி கிடைக்கும் என்னும் நம்பிக்கையை குறித்த நீதிபதி உத்தரவாதப்படுத்த வேண்டும்.
நீதி அனைவருக்கும் பொது என்பதால் அதை வழங்குபவருக்கு ஏற்றது தகுதியே தவிர பால் பாகுபாடு தேவை இல்லை. ஓர் ஆனை விடவும் அந்த தகுதி ஒரு பெண்ணுக்கு இருப்பின் என்ன செய்வது? தற்போது ஏராளமான முஸ்லிம் பெண்கள் ஆண் காதிகளால் தாம் பாதிக்கபட்டுள்ளதாகவே முறையிடுகிறார்கள்.

இந்நிலையில் இவர்களுக்கு நீதியை வழங்கியே ஆகவேண்டும் என்றால் என்ன செய்வது? அவர்கள் விரும்பாத நம்பிக்கையற்ற காதியிடம் நீதியைப் பெற்றுக்கொள்ளுமாறு வலிந்து பாரப்படுத்துவதா? சரி இப்போதைக்கு நமது நீண்ட இழுத்தடிப்புக்குப் பின் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தத்தை ஏற்று அந்த உரிமையைத் தக்கவைத்து பேரினப் பிடியிலிருந்து நாம் கழறுவோமாக.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.