விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 07
அடிப்படைவாதம் சொல்லின் அரசியலும் அரசியல் சொல்லாடலும்
“மனிதகுல வரலாறு நெடுகிலும் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த அற்புதங்களிலெல்லாம் மிகப் பெரிய அற்புதம் ஒன்றே ஒன்றுதான். ஒரு மதம் இறுதியில் தோன்றி புவிப்பரப்பின் கால்வாசி மக்களையும் கால்வாசி நிலத்தையும் ஒரு நூற்றாண்டிற்குள் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டமைதான் இற்றைவரை நிகழ்ந்த மாபெரும் அற்புதம் (Biggest Miracle). இஸ்லாம் அந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியது.” – உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஏர்னஸ்ட் பார்கர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையின் அரசியல் வட்டாரங்கள், இராணுவ வட்டாரங்கள், ஊடகங்கள் என சந்து பொந்துகளில் எல்லாம் உச்சரிக்கப்படும் ஒரு சொல் அடிப்படைவாதம் (Fundamentalism) ஆகும். இச்சொல் எதைக் குறிக்கின்றது என்ற பின்னணி அறிவு எத்தனை பேருக்கு உள்ளது என்பது ஒரு பெருத்த கேள்வியாகும். நுகேகொடையில் வஹாப்வாதத்திற்கெதிராக கூட்டமொன்று நடத்தப்பட்டதை அடுத்து, பேச்சாளர்களில் ஒருவராகக் கலந்துகொண்ட பீரங்கிப் பேச்சாளர் வீரவன்ஸவிடம் ஒரு சிங்கள ஊடகம் ‘வஹாபிஸம்’ என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியுமா? எனத் தொடுத்த கேள்விக்கு அவர் “தெரியாது” எனப் பதிலளித்திருந்தார். இரண்டாம் முறையும் ஊடகவியலாளர் தொலைபேசி எண்களை அழுத்தியபோது வீரவன்ஸவின் தொலைபேசி ‘ஓப்’ செய்யப்பட்டிருந்தது.
இலங்கைச் சூழலில் இன்று அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் அர்த்தம், பின்புலம், வரலாற்றுப் பிரக்ஞை ஒன்றுமே இல்லாமல் அடிக்கடி பிரயோகிக்கும் ஒரு பதமே இந்த அடிப்படைவாதம். முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடன் பகிரங்க தொலைக்காட்சி விவாதமொன்றில் கலந்து கொண்ட பௌத்த மதகுரு கங்கொடவில தேரர்தான் சிங்கள வட்டாரத்தில் இச்சொல்லை முதலில் பயன்படுத்தியவர். அவருக்குப் பின்னர் “அல்லாஹு அக்பர்” எனும் நூலை எழுதியவரும் பெருந்தேசியவாதியுமான பட்டாலி சம்பிக்க எனத் துணிந்து கூறலாம். அவரது நூல்களிலும் பத்திரிகைக் கட்டுரைகளிலும் அடிப்படைவாதத்தை இஸ்லாமிய அடைமொழியுடன் இணைத்து “இஸ்லாமிய அடிப்படைவாதம்”, ”முஸ்லிம் அடிப்படைவாதம்” என்றெல்லாம் அவர் பேசியும் எழுதியும் வருகிறார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் குறிப்பாக 2012 ஆம் ஆண்டில் தம்புள்ளை பள்ளிவாசல் குறித்து கிளர்ந்தெழுந்த ஞானசாரர் இச்சொல்லை அடிக்கடி கையாண்டார். இன்றும் ஒவ்வொரு நாளும் ஒரு முறையேனும் அவர் இச்சொல்லை தனது ஊடகவியலாளர் சந்திப்பிலும், பன்சலை உரைகளிலும் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார். தற்கொலைக் குண்டுத்தாக்குதலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர், இடதுசாரிகள் என கட்சி பேதமின்றி அனைத்து சிங்கள அரசியல், சமூகத் தலைவர்களும் அடிப்படைவாதம், அடிப்படைவாதிகள் எனும் சொற்களை அதிகம் பிரயோகித்தனர். இந்த நிமிடம் வரை அடிப்படைவாதம் என்ற சொல் Fundamentalism என ஆங்கில ஊடகங்களிலும் “மூலதர்மவாதய” என சிங்கள ஊடகங்களிலும் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்கலாம். இதைப் பாவிக்கின்றவர்களிடம் அப்படி என்றால் என்னவென்று கேட்டால் விமல் வீரவன்ச போன்று “தெரியாது” எனத் திருப்பிக் கூறுவார்கள் என்பது மட்டும் உண்மை!
தெரண, சுவர்ணவாஹினி, ஹிரு போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் வானொலிகளிலும் இந்த 04 மாத காலமாகப் பயன்படுத்தப்படும் சொற்களில் ‘அடிப்படைவாதம்’ என்பது மிக அதிகமாகும். சம்பிரதாய முஸ்லிம்கள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சிலர் கூட இந்த ஊடகங்களுக்கு வழங்கும் நேர்காணலின் போதும் அடிப்படைவாதத்தை வஹாபிஸத்துடன் இணைத்து ‘வஹாபிஸ அடிப்படைவாதம்’ என்று கூறிவருவதை அவதானிக்கலாம். இச்சொல்லின் அரசியல் என்னவென்று ஆராய்வதற்கு முன்னர் இதன் உளவியலைப் புரிந்து கொள்வது அவசியமாகிறது.
அடிப்படைவாதம் என்பது இலங்கை சூழலில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மேற்கொண்டோரின் கருத்தியலாக அடையாளப்படுத்தப்படுகின்றது. அத்தகைய வன்முறையாளர்கள் அடிப்படைவாதிகள் என்ற சொல்லால் அழைக்கப்படுகின்றனர். ‘அடிப்படைவாதம்’ என்ற பதம் கேட்போரின் உள்ளத்தில் ஒரு பயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது. அதற்குப் பின்னால் ஒரு பூதம் இருப்பதான ஒரு படிமம் உருவாக்கப்படுகின்றது. மனித குலத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஒன்றாகவும் வெறுத்தொதுக்கப்பட வேண்டிய ஒரு பிசாசாகவும் அது கட்டமைக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம், வன்முறை என்பவற்றுக்கு சமமான பதம் போன்றே ஊடகங்கள் இச்சொல்லைக் கையாண்டு வருகின்றன.
சமகால சர்வதேச ஊடக சொல்லாடல்களில் (Media Discourse) வலம் வரும் சொற்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஓர் அரசியல் உள்நோக்கு ஒட்டி இருக்கிறது. அத்தகைய சொற்களில் ஒன்றுதான் அடிப்படைவாதம் ஆகும். 1920 ஆம் ஆண்டிற்குப் பின்னரே இச்சொல் புழக்கத்திற்கு வந்தது. அந்த ஆண்டிலிருந்து இந்த சொல் பல்வேறு அரசியல், பொருளாதாரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எவ்வாறாயினும் அடிப்படைவாதத்தின் வேர்கள் 19 ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கிப் படர்கிறது. அதற்கு ஒரு நீண்ட வரலாறும் அரசியல், சமய பின்புலமும் உள்ளது. அதை ஓரளவு விளக்கிச் சொல்ல இந்தக் கட்டுரை விழைகிறது.
அடிப்படைவாதமும் இஸ்லாமும்
“வொஷிங்கடனிலுள்ள அமெரிக்க காங்கிரஸின் மாபெரும் நூலகத்திலோ அல்லது ஐரோப்பாவில் காணப்படும் பெரும் நூலகங்களிலோ உள்ள இஸ்லாமிய உலகம் தொடர்பான தகவல் வங்கியில் காணப்படும் வெளியீடுகள் அடங்கிய பகுதிகளின் பொத்தான்களை அழுத்தும்போது அல்லது கணினிகளின் தட்டுக்களைப் பிரயோகிக்கும் இடத்து அவற்றில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றிய ஆக்கங்களும் தகவல்களும் ஏனைய எல்லாவற்றையும் விட அதிகமாக இருக்கும்”. இது John Esposito வின் வாசகமாகும். Islam and Terrorism என்ற நீண்ட கட்டுரையில் அவர் இதனைச் சொல்கிறார்.
கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக, மேலைத்தேய கல்வி வட்டத்திலும் வெகுசன தொடர்பு ஊடகங்களிலும், அமெரிக்க, ஐரோப்பிய செய்தி முகவர் வட்டத்திலும் “இஸ்லாமிய அடிப்படைவாதம்” என்ற சொல்லாடல் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக செப்டெம்பர் 11 இற்குப் பின்னர் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற சொல்லாடல்கள் ‘இஸ்லாமிய’ அடை மொழியுடன் இணைக்கப்பட்டே பயன்படுத்தப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் லெபனான் மற்றும் பொஸ்னியா என்பவற்றின் மீதான ஆயுத ஆக்கிரமிப்பு “இஸ்லாமிய அடிப்படைவாதம்” என்ற போர்வையிலேயே நடந்தேறியது. 1990 களில் அல்ஜீரியாவில் இடம்பெற்ற சுதந்திரத் தேர்தல்கள் மூலம் ஜனநாயகவாதிகள் பெற்ற வெற்றிப் பெறுபேறுகளை மூடி மறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் எகிப்தில் ஜனநாயக மிதவாதக் கட்சிகளின் தலைவர்கள் மீது நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளும் ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற பெயரில்தான்.
ஈராக்கின் அபூகரீப், சர்ச்சைக்குரிய குவாண்டனாமா சிறைகளில் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் ஆயிரக்கணக்கானோர் அடைக்கப்பட்டு அவர்கள் மீது குரூரமான சித்திரவதை கட்டவிழ்க்கப்பட்டமையும் அடிப்படைவாதம் என்ற பெயரில்தான். இன்றைய நாட்களில் மேற்கு ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் சிறுபான்மை முஸ்லிம்கள் மீதும் அவர்களது தலைவர்கள் மீதும் இராணுவ மற்றும் உளவுத்துறை கெடுபிடிகள் கூர்மையடைவதற்கு அடிப்படைவாதத்தையே வலதுசாரி அரசாங்கங்கள் ஒரு சாக்காக முன்னிறுத்தி வருகின்றன. இஸ்லாமிய பீதியின் (islamophobia) மையச் சரடாக அடிப்படைவாதமே கட்டமைக்கப்படுகின்றது.
மேற்கு ஊடகங்களிலும் மேற்கத்திய புலமைத்துவ வட்டாரங்களிலும் இத்தகைய சொல்லாடல் எப்போது புழக்கத்திற்கு வந்தது? இச்சொல்லாடலை கண்டுபிடித்தவர் யார்? அது பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் இணையான ஒன்றாக காண்பிக்கப்படுவதேன்? அடிப்படைவாதம் குறித்து நமக்குள் எழும் அடிப்படையான வினாக்கள் இவை.
மேற்கத்தேய ஊடக வட்டத்தில் 1970 களுக்குப் பின்னரே இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற சொல்லாடல் (Discourse) முதன் முறையாகப் பயன்பாட்டுக்கு வந்தது. குறிப்பாக ஈரானில் நடந்த ‘ஷா’வுக்கு எதிரான கொமெய்னியின் புரட்சியின் பின்னரே இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பதம் முஸ்லிம் உலகு பற்றி எழுதப்பட்ட மேலைய நாட்டவர்களின் கட்டுரைகளிலும் ஆய்வறிக்கைகளிலும் பரவலாக இடம்பெறலானது. இச்சொல்லைப் பயன்படுத்துவோர் அதன் மூலம் எத்தகைய அரசியல் குறிக்கோள்களை அடைவதற்கு முயல்கின்றனர் என்பது அடுத்த பத்தாண்டுகளில் பெருமளவு விவாதத்திற்கும் உட்பட்டு வந்துள்ளது.
வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கையில் கி.பி.7 ஆம் நூற்றாண்டில் அறபுத் தீபகற்பத்தில் எழுச்சியுற்ற இஸ்லாம் அதன் முதல் நூற்றாண்டிற்குள் எட்டிய உயரங்களும் எய்த எழுச்சியும் மேலை உலகை மெல்ல மெல்ல அச்சத்தில் ஆழ்த்தியது.
இடைக்காலத்தில் நிகழ்ந்த சிலுவைப்போர் ஐரோப்பிய மனப்பான்மையில் முஸ்லிம்களுக்கெதிரான நிலையான பகைமையையும் காழ்ப்புணர்வையுமே தூண்டியது. 13 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டின் முதல் அரைக் கூறுகள் வரை அரசியல் இஸ்லாம் அகிலத்தின் அரைப் பகுதியை தனக்குள் ஈர்த்துக் கொண்டது. வட ஆபிரிக்காவில் மொரோக்கோ முதல் தென்மேற்கு ஆசியா முழுவதும் ஒரு விரிந்த நிலப் பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்தனர். அது பிற சமூகங்களின் மீது படையெடுத்தோ வன்முறைகளைப் பிரயோகித்தோ உருவாக்கப்பட்டதல்ல. தன்னெழுச்சிமிக்க முஸ்லிம் உலகத்தின் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களால் அகிலமே அனுகூலமடைந்தது.
எவ்வாறாயினும் இக்காலப்பகுதியில் முஸ்லிம் உலகு அடைந்திருந்த தரச் சிறப்பும் செழுமைமிக்க நாகரிக வளர்ச்சியும் அறிவியல்துறை முதிர்ச்சியும் இஸ்லாமிய சமூகத்தின் மீதான மேற்குலகின் குரோதத்தையும் சமய ரீதியான பகைமையையும் பெருமளவு வளர்த்துவிட்டது. 18 ஆம் நூற்றாண்டில் முஸ்லிம் உலகு உள்ளகப் பிளவுகளால் சரிந்து கொண்டிருப்பதைக் கண்ட ஐரோப்பாவின் மனப்பான்மையில் காலனித்துவ சிந்தனை ஆழ ஊடுருவுவதற்கு இந்த மதப் பகைமை மிகப் பெரிய தூண்டுதலாக இருந்தது.
18 ஆம் நூற்றாண்டு வரை ஒன்றிணைந்திருந்த அறபு – இஸ்லாமிய உலகை உடைத்துத் துண்டாடி காலனித்துவ சக்திகள் தமக்குள் பங்குபோட்டுக் கொண்டன. அறபு இஸ்லாமிய உலகு மீது ஐரோப்பிய காலனித்துவம் படிப்படியாக தனது பிடியை இறுக்கத் தொடங்கியது. பொருளாதார மூல வளங்கள் கனகச்சிதமாகச் சூறையாடப்பட்டன. நூலகங்களில் அறிவுப் பொக்கிஷங்களாக விளங்கிய நூல்கள் கொள்ளையிடப்பட்டன. முஸ்லிம்களின் பண்பாட்டைச் சிதைக்கும் தந்திரங்கள் நடைமுறைக்கு வந்தன. கல்வி நிலையங்களில் ஐரோப்பிய மதச்சார்பின்மையும் நாஸ்திகமும் மத விரோதமும் போதிக்கப்பட்டன. இந்தச் காட்சி சுமார் 150 ஆண்டுகளுக்கு நீடித்தது.
வட ஆபிரிக்காவின் பெரும்பகுதி, அல்ஜீரியா, தூனிஸியா, மொராக்கோ என்பன பிரான்ஸின் காலனிகளாக ஆக்கப்பட்டன. லிபியாவை இத்தாலி தன் வசம் வைத்துக் கொண்டது. எகிப்தில் பிரிட்டிஷ்காரர்கள் நிலைகொண்டனர். சூடானும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் திணறிக் கொண்டிருந்தது. தென்கிழக்காசியாவில் உலகின் மிகப்பெரும் முஸ்லிம் நாடான இந்தோனேசியா மற்றும் மலேசியா ஒல்லாந்தர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. அறபு – முஸ்லிம் உலகின் பொருளாதார வளங்களை ஒன்றரை நூற்றாண்டு காலம் விழுங்கி ஏப்பம் வீட்டுக் கொண்டிருந்த காலனித்துவ சக்திகளுக்கு இன்னொரு தேவை எழுந்தது.
அறபு– முஸ்லிம் மக்களின் பண்பாட்டையும் கலாசாரப் பெறுமானங்களையும் இழிவுபடுத்துவதற்கும் அவற்றை பிறர் வெறுத்தொதுக்குவதற்குமான ஒரு மனோபாவத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய அந்த தேவைக்காக, அவர்கள் கீழைத்தேயவாதம் (Orientalism) எனும் ஒரு பக்கவாத்தியத்தை பண உதவி வழங்கியே துணைக்கு அழைத்தனர்.
ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளான மேலைய ஆய்வறிவாளர்கள் அறபு – இஸ்லாமிய உலகின் மொழி, கலாசாரம் வரலாறு, மதம் குறித்து ஆய்வு என்ற பெயரில் கொட்டிய குப்பை கூழங்களும், குரோதம் நிறைந்த எழுத்துக்களும் கீழையவாதம் எனப்படுகின்றது. 20 ஆம் நூற்றாண்டின் முதற் கூறுகளில் முஸ்லிம் உலகு காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற பின்னரும் கீழைத்தேயவாதத்தின் அறிவியல் அயோக்கியத்தனத்திலிருந்து அது விடுதலை பெறவில்லை.
கீழைத்தேயவாதம் தொடர்ந்து ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக செயற்பட்டு வந்தது. இஸ்லாம் பற்றியும், இஸ்லாமியக் கோட்பாடுகள் பற்றியும் உருச்சிதைந்த விம்பங்களை உருவாக்குவதுதான் அதன் முதல் வேலை. விசுவாசக் கோட்பாட்டின் தூய்மையை மாசுபடுத்துவதும் அரசியல் இஸ்லாம் மற்றும் இஸ்லாத்தின் ஐக்கியக் கோட்பாட்டில் முஸ்லிம் உலகு ஒன்றுபடாமல் பார்த்துக் கொள்வதும்தான் அதன் அடுத்த இலக்கு.
யூத, கிறிஸ்தவ ஆய்வு முகாம்களைச் சேர்ந்த இத்தகைய புலமையாளர்கள் பலர் சியோனிஸ வலைப்பின்னலில் இணைந்தவர்கள். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இயங்கிவரும் மத்திய கிழக்கிற்கான ஆய்வு மையங்களில் (Middle East Study Centres) இத்தகைய ஆய்வுப் பிரபலங்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். பிராந்திய புவி அரசியல் (Regional Geo – Politics) நலன்களைத் தக்க வைக்க முயலும் சக்திகளின் எடுபிடிகளாகவே இவர்கள் செயற்படுகின்றனர். அமெரிக்காவின் பிரபல வணிக நிறுவனங்களுக்கும் கிறிஸ்தவ மதப்பிரசார அமைப்புகளுக்கும் ஸியோனிச சூழ்ச்சிக் குழுக்களுக்கும் இந்த ஆய்வாளர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளன.
1990 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஹார்வாட் பல்கலைக்கழகத்தின் தலைவர் Nadawsafran என்பவரும் அதே பல்கலைக் கழகத்தில் இயங்கிவரும் சர்வதேச உறவுகளுக்கான மையம் (Centre for International Relations) பணிப்பாளரான Samuel P.Huntington என்பவரும் இணைந்து இஸ்லாமிய உலகம் குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டனர்.
அமெரிக்காவின் மத்திய உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. வின் வேண்டுகோளின் பெயரிலேயே இவ்வாய்வு நடைபெற்றது. நிதியாதரவு வழங்கியது சி.ஐ.ஏ. மட்டும்தான். அதன் தொடரில் பேராசிரியர் சப்ரன் ‘இஸ்லாமிய அடிப்படை வாதம்’ குறித்து மாநாடொன்றை ஏற்பாடு செய்தார். இதற்கு சி.ஐ.ஏ. 45000 அமெரிக்க டொலர்களை ஒதுக்கியது. இம்மாநாட்டின் கலந்துரையாடல்கள் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையாக வெளியானது.
அறபு – முஸ்லிம் நாடுகளில் காலாகாலமாக இருந்து வரும் பாரம்பரிய அதிகார பீடங்கள் ஆட்டங்காணத் தொடங்குவது குறித்தும் புதிய ஜனநாயக சக்திகள் களத்திற்கு வருவதையும் அந்த ஆய்வு மாநாட்டு அறிக்கை எச்சரித்திருந்தது. அறபு உலகில் பல தசாப்தங்களாக நீடித்து வரும் குடும்ப ஆட்சி மற்றும் ஜனநாயக விரோத இராணுவச் சர்வதிகாரம் என்பவற்றுக்கெதிராக கிளர்ந்தெழும் ஜனநாயக ஆதரவு சக்திகளையே இன்றுவரை மேலைய ஊடகங்களும் ஆட்சி இயந்திரங்களும் ‘அடிப்படைவாதிகள்’ என பிரசாரம் செய்து வருகின்றன.
அறபுலகில் ஜனநாயகம் மலர்வதை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிக்கும் சக்திகளை அடிப்படைவாதிகள் என ஊடகங்கள் முத்திரை குத்துவதற்கு ஏதுவான காரணிகள் மேலைய குறிப்பாக அமெரிக்க – ஐரோப்பிய அரசுகளிடம் உள்ளன. ஜனநாயக விழிப்பு அல்லது பொதுவான அரசியல் விழிப்பு என்பதை அமெரிக்காவும், பிற மேலைய சக்திகளும் தமக்கு விடுக்கப்படும் ஓர் அச்சுறுத்தலாகவே கருதுகின்றன. மத்திய கிழக்கின் வளமான எண்ணெய் வளங்கள் மீது அச்சக்திகள் கொண்டுள்ள பிடியும் அறபு அரசுகள் மீது அவை கொண்டுள்ள செல்வாக்கும் முடிவுக்கு வந்துவிடும் என்பதுதான் இதற்கான காரணமாகும். அதனால் ஜனநாயக அரசியல் மாற்ற செயன் முறையை (Democratic Transitional Process) இஸ்லாமிய மதச் சாயம் பூசிய ஒரு பூதமாகக் காண்பித்து, சுமாராக அதனை பயங்கரவாதத்திற்கு சமமான ஒன்றாகவே கட்டமைக்க ஊடகங்களும் அரசியல்வாதிகளும் முயல்கின்றனர்.
‘இஸ்லாமிய சக்தியை’ முறியடிக்கவும் மேலைய உலகின் மறு காலனியத்தை (Re – colonization) நிலை நாட்டவும், சமகாலத்தில் கையாளப்படும் மிகப் பலம் வாய்ந்த கருவியே மேற்கத்தேய ஊடகங்களின் பிரசார ஆயுதமாகும்.
முஸ்லிம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பிரவாகிக்கும் அரசியல் விழிப்பு குறித்தும், அதன் புவியியல்சார் அரசியல் முக்கியத்துவம் குறித்தும் வாடகைக்கு அமர்த்தும் ஆய்வு நிபுணர்களின் துணையுடன் மேற்கொள்ளும் ஆய்வுகளை உருமாற்றி ஓர் அச்சுறுத்தலாகக் கட்டமைப்பதில் ஊடகங்கள் முன்னிலை வகிக்கின்றன. அந்தப் பின்னணியில் அடிக்கடி ஊடகங்களால் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லே அடிப்படைவாதம் ஆகும். இந்த சொல்லாடலின் அரசியல் பின்புலம் இதுதான்.
ஆனால், இந்த சொல் அடிப்படையில் இஸ்லாமிய உலகில் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. மாறாக கிறிஸ்தவ மத அடிப்படைகளோடு பின்னிப்பிணைந்தது. அதனை அடுத்துவரும் பத்தியில் நோக்குவோம்.
vidivelli