சமூகத்தை மதத்தலைவர்கள் நேர்வழிப்படுத்த வேண்டும்
ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துவிட்டபோதும் அத்தாக்குதல்கள் பற்றி நாளாந்தம் நினைவுபடுத்தப்படுகிறது. அவை பற்றி பேசப்பட்டு வருகின்றன. அது இலகுவில் மறந்துவிடக்கூடிய நிகழ்வும் அல்ல.
மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் என பல மட்டத்திலும் இத்தாக்குதல்கள் ஆராயப்பட்டு வருகின்றன. தாக்குதல்களை மேற்கொண்ட தடை செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய இயக்கங்களுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
அடிப்படைவாதிகள் அனைவரும் கைது செய்யப்படவில்லை. குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று அரசியல்வாதிகள் கூறி வருகிறார்கள். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் 250 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களைப் பலியெடுத்து 500 க்கும் மேற்பட்டவர்களை காயங்களுக்குள்ளாக்கின. குண்டுத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த அதிர்ச்சியிலிருந்தும் இன்னும் மீளவில்லை.
இவ்வாறான நிலையில் மதத் தலைவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தை ஆறுதல்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது வரவேற்கத் தக்கதாகும். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் பங்களிப்பு இவ்விடயத்தில் மெச்சத் தக்கதாகும்.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று உயிர்ப்பலிகள், காயங்கள் என்று அவரது சமூகம் ஆவேசத்துடன் இருந்த சூழ்நிலையில் ஆறுதல்படுத்தினார். சமூகத்தை கட்டுப்படுத்தினார்.
இத்தாக்குதல்களை அடுத்து முஸ்லிம் சமூகம் சந்தேகக் கண்கொண்டு நோக்கப்பட்டது. முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர். இந்நிலையில் தற்போது தளர்வு நிலை ஏற்பட்டுள்ளது. மதத் தலைவர்கள் வெளியிடும் கருத்துகள் இதனை உறுதி செய்கின்றன.
‘முஸ்லிம் சமூகத்தில் மிகவும் சிறு தொகையினரே அடிப்படைவாதிகளாக செயற்படுகிறார்கள். அவர்கள் சமயத்தை அவர்களுக்கேற்றவாறு அமைத்துக் கொண்டதனாலே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றன. உண்மையான முஸ்லிம் பக்தர்கள் அடிப்படைவாதிகளாகச் செயற்படுவதில்லை. அவர்கள் அடிப்படைவாதிகளின் வன்செயல்களுடன் தொடர்புபடுபவர்கள் அல்லர்’ என கண்டி மல்வத்துபீட மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு மூன்று நாள் விஜயமொன்றினை மேற்கொண்டு வருகை தந்திருந்த கெண்டபரி பேராயர் ஜஸ்டின் வெல்பி மகாநாயக்க தேரரைச் சந்தித்த போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘பெரும்பான்மையான முஸ்லிம்கள் அடிப்படைவாதிகளல்லர். தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள சிறிய எண்ணிக்கையிலான முஸ்லிம்களை நல்வழிப்படுத்துவதற்கு முஸ்லிம் சமயத் தலைவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
எமது நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் மதத் தலைவர்கள் பல்வேறு கொள்கைகளை முன்வைத்து பிளவுபட்டு நின்றதனாலே நாம் இன்று பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். எமது உரிமைகளுக்கு சவால்கள் எழுந்துள்ளன. இன்றைய சூழ்நிலையில் எமது மதத் தலைவர்கள் இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்கு திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டும்.
கடந்த ஜூன் மாதம் நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அஸ்கிரிய மகாநாயக்க தேரர் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டிருந்தமை சர்ச்சையை உருவாக்கியிருந்தது. அவர் டாக்டர் ஷாபி தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார். ‘இவ்வாறான டாக்டரை கல் எறிந்து கொல்ல வேண்டும் என சில் எடுக்கும் பெண்கள் என்னிடம் கூறினார்கள். அவரை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்றார்கள். நான் அப்படிக் கூற மாட்டேன். ஆனால் செய்யப்பட வேண்டியது அதுதான்’என்று அவர் தெரிவித்திருந்தார்.
ஒரு மதத் தலைவரா இவ்வாறு கூறினார் என்பதை நினைத்தும் பார்க்க முடியாது. அவரும் கூட இன்று சாதி சமய பேதங்களின்றி ஒன்றாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மதத் தலைவர்களாலே சமூகங்களை நேர்வழிப்படுத்த முடியும். அந்தப் பணியில் முரண்பாடுகளை மறந்து மதத் தலைவர்கள் செயற்பட முன்வர வேண்டும். மக்களை நேர்வழிப்படுத்த வேண்டும் என்பது எமது வேண்டுகோளாகும். அவ்வாறான நிலைமை உறுதிப்படுத்தப்பட்டாலே நாம் பாதுகாப்பாக வாழும் சூழல் உறுதிப்படுத்தப்படும்.
vidivelli