ஒரு மாத காலத்துக்கும் மேலாக கொட்டாம்பிட்டி லுஃலு அல்அமார் பள்ளிவாசலில் தொழுகைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு கடந்த 28 ஆம் திகதி முதல் ஹெட்டிபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் நீக்கப்பட்டுள்ளது.
ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்துக்கு கடந்த 28 ஆம் திகதி லுஃலு பள்ளிவாசல் நிர்வாகிகள் அழைக்கப்பட்டு குறிப்பிட்ட தடையுத்தரவு நீக்கப்பட்டு விட்டதாகவும் வழமைபோல் தொடர்ந்து பள்ளிவாசலில் தொழுகைகளை நடாத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தடையுத்தரவு நீக்கப்பட்டதையடுத்து ஐவேளை தொழுகை இடம்பெறுவதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையும் நடைபெற்றதாகவும் லுஃலு அம்மார் பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளர் மொஹமட் ஷாபி ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
குறிப்பிட்ட பள்ளிவாசல் தௌஹீத் ஜமாஅத்துக்கு உரியதென முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்தே அப்பள்ளிவாசலில் சமயக் கடமைகளுக்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை நீக்குமாறு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் பிரதி பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli