இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையுடன் கூடிய கலாசார உடைக்கு பெரும்பான்மை இனவாதிகளால் பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டு வந்தது. பொதுபலசேனா போன்ற அமைப்புகள் முஸ்லிம் பெண்களின் கலாசார உடையைத் தடை செய்ய வேண்டுமென அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தன.
முகத்திரையுடன் கூடிய கறுப்பு நிறத்திலான கலாசார உடையணிந்து பயணிக்கும் முஸ்லிம் பெண்களை “கோனி பில்லாக்கள்” என்று அவர்கள் பெயர் சூட்டி கேலி செய்தார்கள்.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலே கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்பு உரிமை கோரியிருந்தது. சுமார் 250 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களைப் பலியெடுத்த அந்தத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் சமூகம் சவாலுக்குட்படுத்தப்பட்டது. முழு முஸ்லிம் சமூகத்தையும் சந்தேகக் கண் கொண்டு நோக்கும் நிலைமை உருவானது. ஒரு அடிப்படைவாத குழுவினரே தாக்குதல்களை மேற்கொண்டிருந்தாலும் முழு முஸ்லிம் சமூகத்தின் மீதே பழி சுமத்தப்பட்டது.
குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களும் ஒத்துழைப்பு வழங்கியவர்களும் கைது செய்யப்பட்டார்கள். நாட்டில் அவசரகால சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய தௌஹீத் ஜமாத் உட்பட மேலும் இரு அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில் அவசரகால சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்காக பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கு தடை விதித்து விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவங்களையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி இரவு முதல் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியிருந்தார். பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2 ஆவது சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமையவே அவசரகால சட்டம் அமுலாக்கம் தொடர்பான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்திற்கு பாராளுமன்றம் ஏப்ரல் 24 ஆம் திகதி அனுமதி வழங்கியதுடன் அன்று முதல் ஒவ்வொரு மாதமும் 22 ஆம் திகதி அவசரகால சட்டத்தை ஜனாதிபதி நீடித்து வந்தார். இந்நிலையிலே அவசரகால சட்டத்தின் கீழ் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
அவசரகால சட்டம் இம்மாதம் 23 ஆம் திகதி முதல் நீக்கப்பட்டுள்ளபோதும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொலிஸாருக்கு ஒத்துழைப்புகளை வழங்க இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 12 ஆவது சரத்திற்கு அமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியே ஜனாதிபதி இராணுவத்தை ஈடுபடுத்துவற்கான உத்தரவுகளை வழங்கியுள்ளார்.
முகத்திரைக்கான தடை நீங்கியுள்ளதா?
கடந்த நான்கு மாத காலமாக நாட்டில் அமுலில் இருந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் அச்சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையான நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையும் நீங்கியுள்ளதா? இல்லையேல் தொடர்ந்தும் அமுலில் உள்ளதா என்பது தொடர்பில் இன்று தெளிவற்ற நிலை காணப்படுகிறது. இத்தடை நீங்கியுள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் பாதுகாப்பு தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக அறிவிப்புச் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம் சமய விவகார அமைச்சர்
முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரை தொடர்பில் மக்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமிடமும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளரிடமும் கோரிக்கை விடுத்திருந்தது. அவசரகால சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கான தடை அச்சட்டம் நீக்கப்பட்டதன் பின்பு நீங்கியுள்ளதா என்பது தொடர்பில் மக்கள் தெளிவற்ற நிலையில் இருக்கிறார்கள். எனவே இது தொடர்பில் மக்களை அறிவுறுத்துமாறு வேண்டுகிறோம் என உலமா சபை கோரியிருந்தது.
இதனையடுத்து அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் விளக்கங்களைக் கோரி கடிதமொன்றினை அனுப்பி வைத்தார்.
அவசரகால சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டிருந்த நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையும் நீக்கப்பட்டுவிட்டதா? இல்லையா? என மக்களைத் தெளிவுபடுத்துமாறு அமைச்சர் ஹலீம் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். முகத்திரை அணிவது தொடர்பில் முஸ்லிம் பெண்கள் தெளிவற்ற நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் அமைச்சர் ஹலீம் ஊடகங்களுக்கு இவ்வாறான கருத்தினையும் கூறியிருந்தார்.
கடந்த 23 ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது. அத்தோடு நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விஷேட வர்த்தமானி அறிவித்தலையும் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். அவசரகால சட்டம் நீக்கப்பட்டதுடன் அச்சட்டத்தின் கீழ் அமுலிலிருந்த முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரை ஆடைக்கான தடையும் நீங்கியுள்ளது. எனினும் நமது சூழலிலுள்ள பெரும்பான்மை சகோதரர்களின் மனோபாவமும், அச்சமும் இன்னும் மாறியதாகத் தெரியவில்லை. இந்நிலையில் முஸ்லிம் பெண்கள் முகத்திரையணிந்து வெளியில் செல்லும் போது அசௌகரியங்களுக்கு ஆளாக இடமுண்டு. எனவே முகத்திரையணிந்து பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்து கொள்ளுமாறும் காலநேர சூழ்நிலைகளைக் கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் வேண்டிக் கொள்கிறோம்.
பாதுகாப்பு, தரப்பினரின் சோதனை நடவடிக்கைகளின் போது பூரண ஒத்துழைப்பினை வழமைபோல் வழங்குமாறும் வேண்டுகிறோம். உலமாக்களின் வழிகாட்டல்களின்படி பாதுகாப்புத் தரப்பினருக்கு ஒத்துழைப்பு நல்கி எமது உரிமைகளை எதிர்காலத்தில் உறுதி செய்ய முன்வருமாறும் வேண்டுகிறேன். பொலிஸ்மா அதிபர் முகத்திரை தொடர்பான தெளிவுகளை வழங்கினால் மேலதிக நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அமைச்சரின் அறிவுரைகளை சமூகம் கவனத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் முகத்திரைக்கான தடை நீக்கப்பட்டாலும் இனவாதிகள் நாட்டின் பல பகுதிகளிலும் முகத்திரையணிந்து பொது இடங்களில் செல்லும் எமது பெண்களை நிந்தனை செய்யலாம். அசௌகரியங்களுக்கு உட்படுத்தலாம்.
கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனத்தின் தலைவர்
கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் நிகாப் மற்றும் புர்கா விவகாரம் தொடர்பில் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
அவசரகால சட்டத்தின் கீழேயே வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிகாப் மற்றும் புர்காவுக்கு தடை விதிக்கப்பட்டது. அவசரகால சட்டம் நீக்கப்பட்டதும் அத்தடை நீங்கியுள்ளது. பொலிஸ் தரப்பை தொடர்பு கொண்டு வினவியபோது முகத்திரைக்கு தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. என்றாலும் உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிப்பு செய்யப்படவில்லை. இலங்கையில் சிறிய தொகையினரே புர்கா அணிகின்றனர். நிகாப் அணியும் பெண்களின் எண்ணிக்கையும் குறைவானதே.
இன்றைய சூழ்நிலையில் முகத்திரை தடை நீங்கியுள்ள நிலையில் எமது பெண்கள் கால அவகாசம் எடுத்து முகத்திரை அணிவதை ஆரம்பிப்பது நன்மை பயக்கும். ஏனென்றால் ஏனைய சமூகத்தினர், தடை நீக்கினாலும் எதிர்ப்புகளைத் தெரிவித்து எமது பெண்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தலாம் என்றார்.
முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு
முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பும் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முஸ்லிம் பெண்களின் கலாசார ஆடையான முகத்திரை விவகாரம் தொடர்பில் கடிதமொன்றினைக் கையளித்துள்ளது. அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கான தடையும் நீங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைப்பு இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பினை வெளியிடுமாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் ஐ.என்.எம்.மிப்லால் பொலிஸ் ஊடக பேச்சாளரை தொடர்பு கொண்டு வினவியபோது அவசரகால சட்டம் நீக்கப்பட்டதும் மூன்று பயங்கரவாத அமைப்புகளின் தடை மாத்திரமே நீடிப்பதாக தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.
அவசரகால சட்டம் நீக்கப்பட்டதும் நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் மீண்டும் நிகாப் அணிய ஆரம்பித்துள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினரால் அதற்கு எந்தத்தடையும் இதுவரை விதிக்கப்படவில்லை எனவும் முகத்திரை அணிந்த குற்றத்திற்காக எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கூறினார். இதேவேளை தனியார் நிறுவனங்களில் முகத்திரைக்குத் தடை தொடர்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் பொலிஸ் மாஅதிபர் முகத்திரை தொடர்பில் தெளிவுகளை வழங்க வேண்டும் எனவும் கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில்
அவசரகால சட்டம் நீக்கப்பட்டுவிட்டாலும் அச்சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்களின் ஆடையான நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையும் நீக்கப்பட்டு விட்டதா? என்பது தெளிவற்ற நிலையில் உள்ளதால் முஸ்லிம் பெண்கள் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புக் கிடைக்கும் வரை விழிப்புடன் செயற்படுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் முஸ்லிம் சமூகத்தை வேண்டியுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் இது தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர், அவசரகால சட்டம் நீக்கப்பட்டதன் பின்பு சிலர் நிகாப் மற்றும் புர்கா தடையும் நீங்கிவிட்டதாக பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்களது பிரசாரங்களின்படி செயற்படுவதைத் தவிர்த்து அரசாங்கம் வெளியிடும் உத்தியோகபூர்வ அறிக்கைகளுக்கு அமைவாகவே முஸ்லிம் பெண்கள் செயற்பட வேண்டும்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கும் வரை முகத்திரை அணியும் முஸ்லிம் பெண்கள் அவசரகால சட்டம் அமுலில் இருந்தபோது பொறுமையாகவும் நிதானமாகவும் எவ்வாறு கவனமாக நடந்து கொண்டார்களோ அவ்வாறு தொடர்ந்தும் செயற்படுவது தற்போதுள்ள சூழ்நிலையில் பாதுகாப்பானது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் கருதுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இது விடயத்தில் நாட்டின் சூழலைக் கருத்திற்கொண்டு மிகவும் சாணக்கியமாக முஸ்லிம் சமூகத்தை வழிநடத்துமாறு முஸ்லிம் சமயத் தலைமைகளிடம் முஸ்லிம் கவுன்ஸில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களையடுத்து ஏனைய சமூகங்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட சந்தேகம் இன்னும் முற்றும் முழுதாகத் தீரவில்லை. புர்கா மற்றும் நிகாப் அணியும் முஸ்லிம் பெண்களை அவர்கள் தொடர்ந்தும் தீவிரவாதிகளாகவே நோக்குகின்றமையை காண முடிகிறது. முகத்திரைக்கான தடை நீங்கினாலும் அந்தக் கலாசார உடையை ஏனைய சமூகங்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்படும். எனவே, முஸ்லிம் கவுன்ஸிலின் கருத்துப்படி அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்புக் கிடைக்கும் வரை எமது முகத்திரை அணியும் பெண்கள் சூழ்நிலைக்கேற்ப செயற்படுவது அவசியமாகும்.
முகத்திரைக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படுமா?
முஸ்லிம் பெண்கள் மீண்டும் நிகாப், புர்கா அணிய முடியுமா என்று தெளிவற்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவசரகால சட்டம் நீக்கப்பட்டுவிட்டது. அச்சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட முகத்திரைக்கான தடையும் நிச்சயம் நீங்கியிருக்க வேண்டும். ஆனால் பாதுகாப்பு தரப்போ பாதுகாப்பு அமைச்சோ தடை நீக்கத்தை உத்தியோகபூர்வமாக அறிவிப்புச் செய்யவில்லை. இதனாலே எமது பெண்கள் தெளிவற்று இருக்கிறார்கள். அரசாங்கம் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடாமை சந்தேகங்களை ஏற்பத்தியுள்ளது.
நிகாப் மற்றும் புர்காவுக்கு சட்ட ரீதியாக நிரந்தர தடை விதிக்கப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளமையே இந்த சந்தேகம் ஏற்படுவதற்குக் காரணமாகும். கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள நிகாப் மற்றும் புர்காவை நிரந்தரமாகத் தடை செய்வதற்கு அமைச்சரவை பத்திரமொன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அமைச்சரவையில் அமைச்சர்கள் இத்தடைக்கு ஆதரவும் வழங்கினார்கள் என்றாலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் குறித்து ஆராயப்பட வேண்டுமென்றும் அதற்கு கால அவகாசம் வழங்குமாறு வேண்டிக் கொண்டதற்கிணங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதைப் பிற்போட்டது.
இதேவேளை, முகத்திரை தடைக்கு துணைபோக வேண்டாமென உலமாக்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சுமார் 6000 பேர் தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசலில் மாநாடு ஒன்றினை நடத்தி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர். இம்மாநாட்டில் அமைச்சர்களாக ரவூப் ஹக்கீமும், ரிசாத் பதியுதீனும் முகத்திரை நிரந்தர தடைக்கு துணைபோக மாட்டோம் என்று உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அச்சுறுத்தல் சந்தர்ப்பங்களில் மாத்திரம் தடை?
நிகாப் மற்றும் புர்கா ஆடைகளுக்கு முற்றாகத் தடை விதிக்காது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் மாத்திரம் அதனைத் தடை செய்யும் வகையில் சட்டமியற்றுவது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள ஆலோசனை கோரியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் தலதா அத்துகோரளவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முகத்திரை நிரந்தர தடைக்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க பிற்போடப்பட்டுள்ள நிலையிலே அமைச்சர் தலதா அத்துகோரள சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளார்.
முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கு நிரந்தர தடையை ஏற்படுத்தும் வகையில் சட்டம் இயற்றாமல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் மாத்திரம் அதனைத் தடை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முஸ்லிம் அமைச்சர்கள் பிரதமரிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் அமைச்சர்கள் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெஸியின் தலைமையில் ஒன்றுகூடி கலந்துரையாடி எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் பின்பே பிரதமரிடம் இந்த ஆலோசனையை முன்வைத்துள்ளார்கள். இதனை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமைச்சரவையில்மீண்டும் கலந்துரையாடப்படும்
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க ஒத்திவைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்திற்கான தீர்மானம் விரைவில் அமைச்சரவையில் மேற்கொள்ளப்படும். கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதியே முகத்திரைக்கான நிரந்தரத் தடை விதிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நீதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இதுவரை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் இது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டதன் பின்பு மீண்டும் அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் அமைச்சரவை கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
சட்டரீதியாக முகத்திரைக்கு தடை விதிக்கப்படாவிட்டாலும், முஸ்லிம் சமூகம் பாதுகாப்பு நிலைமைகளின்போது பாதுகாப்பு தரப்பிருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொது இடங்களிலும் சூழ்நிலைக்கேற்ப செயற்படுவதே இன்றைய நிலையில் நன்மை பயப்பதாக அமையும்.
நிகாப், புர்கா தொடர்பில் அரசு இறுதி தீர்மானம் எட்டும்வரை அவசரகால சட்டம் நீக்கப்பட்டதன் பின்பு முகத்திரை தொடர்பாக நிலவும் சந்தேகங்களுக்கு பாதுகாப்புத் தரப்பு தாமதமின்றி தெளிவுகளை வழங்க வேண்டும்.
vidivelli