அதிர்ச்சியை தோற்றுவித்துள்ள உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைது

0 1,601

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்குப் பின்னர் ஆயிரக்கணக்­கான முஸ்­லிம்கள் கைது செய்­யப்­பட்டு அவர்­களில் கணி­ச­மானோர் விடு­விக்­கப்­பட்­டுள்ள நிலையில், இலங்­கையின் முன்­னணி இஸ்­லா­மிய பிர­சா­ர­கரும் பிர­தான இஸ்­லா­மிய இயக்­கங்­களுள் ஒன்­றான ஜமா­அதே இஸ்­லா­மியின் சிரேஷ்ட தலை­வ­ரு­மான உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைது செய்­யப்­பட்ட சம்­பவம் இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் பலத்த அதிர்ச்­சியை தோற்­று­வித்­துள்­ளது. 

மாவ­னெல்லை,- முருத்­த­வல பகு­தியில் உள்ள அவ­ரது வீட்டில் வைத்து சி.சி.டி. எனப்­படும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வி­னரால் இவர் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்­தி­ருந்தார்.

அடிப்­ப­டை­வாத குழுக்­க­ளுக்கு உத­வி­யமை மற்றும் இனங்­க­ளுக்கிடையே முரண்­பா­டு­களை தோற்­று­விக்க நட­வ­டிக்கை எடுத்­தமை உள்­ளிட்ட சில குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் அவரைக் கைது செய்­த­தாக கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு தெரி­வித்­தி­ருந்­தது.

நீண்ட விசா­ர­ணை­களின் பின்னர் அவர் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அவரை கொழும்­புக்கு அழைத்து வந்து மேல­திக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வினர் தெரி­வித்­தனர்.

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தடை செய்­யப்­பட்ட அமைப்­பொன்றின் உறுப்­பினர் அல்­லாத போதும், அவர் இலங்­கையில் தடை செய்­யப்­பட்ட அமைப்­புக்­க­ளுக்கு உதவி ஒத்­தாசை புரிந்­துள்­ளமை தொடர்பில் கிடைத்­துள்ள தக­வல்­களை மையப்­ப­டுத்­தியே விசா­ர­ணை­களை ஆரம்­பித்­த­தா­கவும் மாவ­னெல்லை புத்தர் சிலை உடைப்பு விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்­டுள்ள இப்­ராஹீம் மெள­லவி எனும் பிர­தான சந்­தேக நபர்­களில் ஒருவர், உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரின் சகோ­தரர் என்ற வகை­யிலும் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

அதி­கா­லையில் வந்து கைது செய்­தனர்

இந்தக் கைது தொடர்பில் துருக்­கியை தள­மாக கொண்டு செயற்­படும் ‘அன­டொலு ஏஜன்சி’ செய்திச் சேவைக்கு உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரின் உற­வினர் ஒருவர் தெரி­விக்­கையில், ”ஐந்து பொலிஸ் அதி­கா­ரிகள் ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை வேளையில் மாவ­னெல்­லையில் உள்ள வீட்­டுக்கு வந்து உஸ்தாத் இருக்­கி­றாரா எனக் கேட்­டார்கள்.

அவரை கைது செய்­வ­தற்­கான நீதி­மன்ற உத்­த­ரவு எதுவும் அச்­ச­மயம் பிறப்­பிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. உஸ்­தா­துக்கு எதி­ராக முறைப்­பாடு ஒன்று செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில் சிறி­ய­தொரு விசா­ர­ணையை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது எனக் கூறியே பொலிசார் அழைத்துச் சென்­றார்கள். எனினும் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலையில் ஊட­கங்கள் மூல­மா­கவே அவர் கைது செய்­யப்­பட்ட செய்­தியை நாம் அறிந்து கொண்டோம்” எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

உற­வி­னர்கள், சட்­டத்­த­ர­ணிகள் சந்­திக்க அனு­ம­தி­யில்லை

கடந்த ஞாயிற்றுக் கிழமை அதி­காலை கைது செய்­யப்­பட்ட உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரை சந்­திப்­ப­தற்கு அவ­ரது உற­வி­னர்­க­ளுக்கோ அல்­லது சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கோ நேற்று வரை அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை என அவ­ரது குடும்­பத்­தினர் தெரி­விக்­கின்­றனர்.

குடும்­பத்­தி­னரும் சட்­டத்­த­ர­ணி­களும் அவரை சந்­திப்­ப­தற்­கான வேண்­டு­கோள்­களை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக விடுத்த போதிலும் அதற்கு சாத­க­மான பதில்கள் கிடைக்­க­வில்லை.

எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழ­மையே குடும்­பத்­தினர் அவரை சந்­திக்க முடியும் என குற்றத் தடுப்புப் பிரி­வினர் தெரி­வித்­துள்­ளனர்.

தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கைது செய்­யப்­பட்ட உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் இது­வரை விடு­தலை செய்­யப்­ப­ட­வில்லை. இந்நிலையில் அவர் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றாரா அல்­லது ஐ.சி.சி.பி.ஆர் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளாரா என்­பது குறித்து இது­வரை பொலிசார் தக­வல்கள் எத­னையும் தெரி­விக்­க­வில்லை.

இத­னி­டையே உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணை­களில், பயங்­க­ர­வாதி சஹ்­ரானின் சகாக்­க­ளாக கரு­தப்­படும், மாவ­னெல்லை புத்தர் சிலை உடைப்பு விவ­கா­ரத்தின் பிர­தான சந்­தேக நபர் ஒரு­வ­ருக்கு சிரி­யா­வுக்கு சென்று பயிற்சி பெற உதவி ஒத்­தாசை வழங்­கி­னாரா எனவும், உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரின் சொத்­துக்கள் தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக சி.சி.டி. தக­வல்கள் தெரி­வித்­தன.

இத­னை­விட விஷே­ட­மாக உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரின் நகர்­வுகள் இலங்­கையில் இஸ்­லா­மிய இராஜ்­ஜியம் ஒன்­றினை உரு­வாக்­கு­வதை மையப்­ப­டுத்தி இருந்­துள்­ள­தாக தக­வல்கள் கிடைக்கப் பெற்­றுள்­ளதால் அது தொடர்­பிலும், அந்த இலக்­கினை அடைய அவர் அரச நிறு­வ­னங்­க­ளுக்குள் தனது கொள்­கையின் கீழ் செயற்­ப­டு­வோரை தற்­போதும் பணி­களில் அமர்த்­தி­யுள்­ளாரா என்­பது தொடர்­பிலும் விஷேட விசா­ரணை ஒன்று இடம்­பெ­று­வ­தா­கவும் சி.சி.டி. தக­வல்கள் மேலும் தெரி­வித்­தன.

எனினும், கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வினர் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­களில், இந்த குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்­தையும் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் முற்­றாக மறுத்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது. இந் நிலை­யி­லேயே மேல­திக விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

குற்­றச்­சாட்­டுக்கள் அடிப்­ப­டை­யற்­றவை :

ஜமா­அத்தே இஸ்­லாமி

இந்தக் கைது விவ­காரம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெ ளியிட்­டுள்ள இலங்கை ஜமா­அதே இஸ்­லாமி அமைப்பு, இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மிக்கோ அதன் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்­ப­ருக்கோ தடை­செய்­யப்­பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்­பு­டனோ அல்­லது வேறு எந்தப் பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளு­டனோ எத்­த­கைய உறவும் இல்லை என தெரி­வித்­துள்­ளது. இது விட­ய­மாக அவ்­வ­மைப்பு வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இது எத்­த­கைய அடிப்­ப­டை­க­ளு­மற்ற ஒரு குற்­றச்­சாட்­டாகும் என்­பதை இலங்கை ஜமா­அத்தே இஸ்­லாமி மிக உறு­தி­யாகத் தெரி­வித்துக்கொள்ள விரும்­பு­கி­றது. இலங்கை ஜமா­அத்தே இஸ்­லாமி 1954 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஒரு பதிவு செய்­யப்­பட்ட, நடு­நி­லை­யான சிந்­த­னையின் அடிப்­ப­டை யில் செயல்­படும் சமூக, சமய இயக்­க­மாகும். அது சட்­ட­பூர்­வ­மான வழி­மு­றை­களில் வெளிப்­படைத்தன்­மை­யோடு இயங்கும் ஒரு அமைப்பு என்­ப­துடன் எல்­லா­வி­த­மான தீவி­ர­வா­தங்­க­ளுக்கும் எதி­ரா­ன­தாகும்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கடந்த 24 வரு­டங்­க­ளாக இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியை நடு­நிலைச் சிந்­த­னை­யோடு வழி­ந­டத்­திய ஒருவர் என்­பதை பொது­வாக இந்த நாட்டு மக்­களும் குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்­தி­னரும் நன்­க­றிவர்.

இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மிக்கோ அதன் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பருக்கோ தடை­செய்­யப்­பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்­பு­டனோ அல்­லது வேறு எந்த பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளு­டனோ எத்­த­கைய உறவும் இல்லை என்­பதை ஜமாஅத் திட்­ட­வட்­ட­மாக கூற விரும்­பு­கி­றது. இந்த விசா­ர­ணை­களை மேற்­கொள்­கின்ற சட்டம் ஒழுங்கை நிலை­நாட்டும் தரப்­பினர் நீதி­யான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் நியாயம் வழங்­கு­வார்கள் என்று இலங்கை ஜமா­அத்தே இஸ்­லாமி உறு­தி­யாக நம்­பு­கி­றது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பிரமுகர்கள் கருத்து

இதே­வேளை, வேறு பல பிர­மு­கர்­களும் இந்தக் கைது கண்­டித்து அறிக்­கை­களை வெளி­யிட்­டுள்­ள­துடன் அவ­ரது நற்­பண்­புகள் குறித்தும் பிரஸ்­தா­பித்­துள்­ளனர்.

தேசிய ஷூரா கவுன்­சிலின் உப தலை­வர்­களுள் ஒரு­வரும் சிரேஷ்ட இஸ்­லா­மிய பிர­சா­ர­க­ரு­மான அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் இது தொடர்பில் விடுத்­துள்ள அறிக்­கையில் , இந்த தகவல் கிடைத்­த­வுடன் மிகுந்த கவ­லையும் ஆச்­ச­ரி­யமும் ஏற்­பட்­டது. 1980 களி­லி­ருந்து எனக்கு அவரைத் தெரியும். அவ­ரிடம் பல நற்­பண்­புகள் காணப்­பட்­டன.

எந்­த­வொரு ஆழ­மான கருத்­தையும் மிக எளி­மை­யான உதா­ர­ணங்­க­ளோடும் ஆழ­மான உவ­மே­யங்­க­ளோடும் விளக்கும் ஆற்­றலை அவ­ருக்கு அல்லாஹ் வழங்­கி­யி­ருக்­கிறான். தான் சரி­யெனக் கருதும் எக்­க­ருத்­தையும் எடுத்­து­ரைக்கும் துணிச்சல் அவ­ருக்­கி­ருந்­தது. தஃவாவில் சம­யோ­சி­தமும் தூர நோக்கும் அவ­சியம் என்­பதை தனது உரைகள் மற்றும் எழுத்­துக்கள் வாயி­லா­கவும் சதாவும் அவர் வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கிறார்.அவரும் மனிதன் என்ற வகையில் தப்புத் தவ­றுகள் இடம் பெற்­றி­ருக்­கலாம். அதற்­காக அவர் மன்­னிப்­புக்கு அப்­பாற்­பட்­டவர் எனக் கூற முடி­யாது.

தனது உடன்­பி­றந்த சகோ­த­ரரும் அவர் புத்­தி­ரர்­களும் கடும்­போக்­கா­ளர்­க­ளாக இருப்­பதை அடை­யாளம் கண்ட போது அவர்­களை இயக்­கத்தை விட்டும் ஓரம்­கட்ட அவர் நட­வ­டிக்கை எடுத்­தமை குடும்ப உறவை விட இஸ்லாம் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­பதில் அவ­ருக்­கி­ருந்த அக்­க­றைக்கு சான்­றாகும். இந்த இலங்கைத் திரு­நாட்டில் முஸ்­லிம்கள் சமா­தான சக­வாழ்வை மேற்­கொள்ள இந்த தீவி­ர­வாதம் தடை­யாக அமையும் என்று அவர் நம்­பினார்.இதனால் தான் ஈஸ்டர் தினத்தில் அரங்­கேற்­றப்­பட்ட அடா­வ­டித்தை அவர் கடு­மை­யாகக் கண்­டித்தார். எமது அறி­வுக்கு எட்­டியவரையில் அவ­ரது சிந்­த­னை­களும் செயற்­பா­டு­களும் நாட்டின் இறை­மைக்கு குந்­தகம் விளை­விக்கும் வகையில் அமை­ய­வில்லை என்­ப­தற்கும் அப்பால் அவர் சமூக நல்­லி­ணக்­கத்­துக்­கா­கவும் தேச நல­னுக்­கா­கவும் உழைத்­தி­ருக்­கிறார். அத்­த­கைய ஒருவர் கைது செய்­யப்­பட்­டி­ருப்­பது ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கி­றது. அவர் பிழை­யாகப் புரி­யப்­ப­டி­ருக்­கிறார். அல்­லது அவர் பிழை­யாகப் புரி­யப்­பட வேண்டும் என்று கங்­கணம் கட்டிச் செயற்­படும் சிலரால் பிழை­யாக இனம்­காட்­டப்­பட்­டி­ருக்­கிறார். அவர் குற்­ற­வா­ளி­யாக இருப்பின் தண்­டிக்­கப்­பட வேண்டும் என சட்­டமும் மன­சாட்­சி­யுடன் கூறு­கின்­றன.

ஆனால், அவர் நிர­ப­ரா­தி­யாயின் அவர் பற்­றிய அவ­தூறைக் கூறி அவரை குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்­தி­ய­வர்கள் இனம்­கா­ணப்­பட்டு தண்­டிக்­கப்­பட வேண்டும் என தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் தவி­சாளர் சிராஜ் மஷ்ஹூர் இது தொடர்பில் விடுத்­துள்ள அறிக்­கையில், இலங்கை ஜமா­அதே இஸ்­லா­மி யின் முன்னாள் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்­சி­ய­ளிப்­ப­தாக உள்­ளது. இயல்­பி­லேயே மென்­மையும் அமை­தியும் மிகுந்த சுபா­வ­மு­டை­யவர் அவர். எப்­போதும் பயங்­க­ர­வா­தத்­திற்கும் வன்­மு­றைக்கும் எதி­ரான கருத்­து­டை­ய­வ­ரா­கவே இருந்து வந்­தவர். சமூ­கப்­ப­ணியில் நீண்ட அனு­பவம் கொண்­டவர்.

அறி­வா­ளு­மையும் சிந்­தனைத் தெளி வும் மிக்க அவர், பயங்­க­ர­வாத சக்­தி­க­ளுக்கு துணை போயி­ருப்­ப­தாக சுமத்­தப்­படும் குற்­றச்­சாட்­டுகள் எவ்­வித அடிப்­
­டை­யு­மற்­ற­வை­யாகும்.

வன்­மு­றை­யற்ற, ஜன­நா­யக வழி­யி­லான சமூக மாற்­றத்தின் மீது நம்­பிக்கை கொண்­டி­ருந்த அவரை, கைது செய்­தி­ருப்­பதன் பின்­புலம் குறித்து கடு­மை­யான சந்­தே­கங்கள் எழவே செய்­கின்­றன.

வைத்­தியர் ஷாபி, சமூக செயற்­பாட்­டாளர் டில்ஷான் போன்றோர் கைது செய்­யப்­பட்­டதன் தொட­ரி­லேயே இதையும் நோக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. ஆதலால், உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் உட­ன­டி­யாக விடு­தலை செய்­யப்­பட வேண்டும். அவ­ருக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலி­யு­றுத்­துவோம். அதற்­காக நம்மால் முடிந்த அழுத்­தங்­களைப் பிர­யோ­கிப்போம். அப்­பா­விகள் அநி­யா­ய­மான முறையில் தண்­டிக்­கப்­படக் கூடாது என்­பதை மீள மீள வலி­யு­றுத்­துவோம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வட மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் அய்யூப் அஸ்மின் இந்தக் கைது தொடர்பில் விடுத்­துள்ள அறிக்­கையில்,

ஈஸ்டர் குண்­டுத்­தாக்­கு­தல்­களின் உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரி­களை இது­வரை இலங்கை அர­சாங்கம் நெருங்­க­வு­மில்லை அல்­லது அவர்­களை நெருங்­கப்­போ­வ­து­மில்லை. இவ்­வ­ளவு பெருந்­தொ­கை­யான வெடி­ம­ருந்­து­களை பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு விநி­யோ­கித்­த­வர்கள் தொடர்பில் இலங்­கையின் புல­னாய்­வுத்­துறை கவனம் செலுத்­தி­ய­தாக ஒரு தக­வலும் கிடை­யாது. ஆனால் நல்­லி­ணக்கம், சமூக அமைதி குறித்­துப்­பே­சி­ய­வர்­களை இலக்­கு­வைத்து வேட்­டைகள் தொடர்­கின்­றன.

இக்­குண்­டுத்­தாக்­கு­தல்­களைக் கார­ண­மாக வைத்து இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் சிந்­தனைத் தளங்­களை இலக்­கு­வைத்து அவர்­களை வேட்­டை­யாடி அதன்­மூலம் இலங்கை முஸ்லிம் சமூ­கத்தைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்­கான அனைத்து முயற்­சி­க­ளிலும் இலங்கை அரசு மிக மும்­மு­ர­மாக தன்னை ஈடு­ப­டுத்­தி­வ­ரு­கின்­றது என்­ப­தற்­கான ஒரு குறி­யீடே இலங்கை ஜமா அதே இஸ்­லா­மியின் முன்னாள் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் கைதாகும். இதற்கு முன்­னரும் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் அவ­ரி­டத்தில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இப்­போது அவற்­றையும் தாண்டி அவரைக் கைது செய்­தி­ருக்­கின்­றார்கள். இது இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்கை என்ற பெயரில் இடம்­பெறும் ஒரு நிகழ்­வாகக் காட்­டப்­ப­டு­கின்­றது. உண்­மையில் இது அவ்­வா­றா­ன­தல்ல, இலங்கை முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களை இலக்­கு­வைத்து நகர்த்­தப்­படும் மிக மோச­மான அடக்­கு­மு­றையே இது­வாகும். இது மிகப்­பா­ரிய ஒரு மனித உரி­மை­மீறல் மற்றும் அச்­சு­றுத்தல் நட­வ­டிக்­கை­யாகும். 

இதனை எக்­கா­ரணம் கொண்டும் அனு­ம­திக்­கவோ அங்­கீ­க­ரிக்­கவோ முடி­யாது. அவ­ரது கைதுக்­கெ­தி­ரா­கவும், முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் மீதான அடக்­கு­மு­றை­க­ளுக்­கெ­தி­ரா­கவும் மிகப்­பா­ரிய எதிர்­வி­னை­யாற்­ற­வேண்­டி­யது அனைத்து மனித உரிமை ஆர்­வ­லர்கள், அடக்­கு­மு­றை­க­ளுக்­கெ­தி­ரான செயற்­பாட்­டா­ளர்­க­ளி­னதும் உட­னடிக் கட­மை­யா­கவும் பொறுப்­பா­கவும் மாறி­யி­ருக்­கின்­றது. இது­வி­ட­ய­மாக சர்­வ­தேச அள­விலே அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­ப­டவும், நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதும் அவ­சி­ய­மாகும் எனத் தெரி­வித்­துள்ளார்.

தனது தந்தை கைது செய்­யப்­பட்­டது தொடர்பில் அவ­ரது புதல்­வர்­களுள் ஒரு­வ­ரான அப்பான் ஹஜ்ஜுல் அக்பர் தனது முக­நூலில் இட்­டுள்ள பதி­வொன்றில்,
”எனது தந்தை எவ்­வித அடிப்­ப­டை­க­ளு­மற்ற குற்­றச்­சாட்­டுக்­களின் பேரில் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றமை அனை­வரும் அறிந்­ததே. ஒரு பக்­கத்தில் இந்தக் கைதை குடும்­பத்­தினர் அனை­வரும் எவ்­விதக் கலக்­க­மு­மின்றி நிதா­ன­மாக எதிர்­கொண்­டாலும், இன்­னொரு பக்­கத்தில் இந்தக் கைதா­னது ஏன் எமக்கு அதிர்ச்­சி­ய­ளிக்கும் ஒரு நட­வ­டிக்கை என்­ப­தையும் கட்­டாயம் சொல்­லியே ஆக வேண்டும்.

எனது தந்தை நிதானம் தவ­றாத ஒருவர். தன்னை மிக மோச­மாக தூற்­று­ப­வர்­களைக் கூட திருப்பி ஏசா­தவர். தன்னைக் கேவ­லப்­ப­டுத்­து­ப­வர்­களைக் கூட புன்­ன­கை­யோடு எதிர்­கொள்­பவர். வீட்­டி­லி­ருக்கும் போது கூட நாட்டைப் பற்­றிய சமூ­கத்தைப் பற்­றிய சிந்­த­னை­யோடு பேனையும் கையு­மாக உட்­கார்ந்து ஏதா­வது வழி­காட்­டல்­களை எழுதிக் கொண்­டி­ருப்­பவர்.

வன்­மு­றைக்கும் தீவி­ர­வா­தத்­துக்கும் எதி­ராக வருடக் கணக்­காக எழு­தியும் பேசியும் வந்­தவர். ஆயு­தத்தில் தீர்­வில்லை என்­பதை அழுத்தம் திருத்­த­மாக சொல்லி வந்­தவர். நடு­நி­லை­யான போக்கை அனைத்­திலும் கடைப்­பி­டித்­தவர்.
பன்­மைத்­து­வத்தை நாட்­டிலும் சரி சமூ­கத்­திலும் சரி அங்­கீ­க­ரித்­தவர். இத்­த­கைய நடு­நிலைப் போக்­கி­லி­ருந்து திசை­மா­று­கி­றார்கள் என்று கண்ட போது தனது சொந்த சகோ­தரன் என்றும் பாராமல் தான் தலைமை வகித்த அமைப்பை விட்டும் நீக்­கி­யவர். வன்­மு­றை­யா­ளர்­க­ளோடு சம்­பந்­த­மி­ருக்­கி­றதா என்று விசா­ரிக்க வந்­த­வர்­களை மென்­மை­யாக வர­வேற்று உப­ச­ரித்து அவர்­க­ளுக்கு முழு­மை­யாக ஒத்­து­ழைத்­தவர். அவர்கள் பொலிஸ் ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்று விசா­ரித்த போதும், வீடு தேடி வந்து வாக்­கு­மூலம் பெற்ற போதும் புன்­னகை மாறாமல் ஒத்­து­ழைப்பு வழங்­கி­யவர்.

உங்­க­ளுக்கு வெளி­நாட்டுக் காசு வரு­கி­றதா என்று கேட்ட போது, வீட்­டையும் அதி­லி­ருக்கும் தள­பா­டங்­க­ளையும் சுட்­டிக்­காட்டி ‘இவற்­றை­யெல்லாம் பார்த்தால் உங்­க­ளுக்கே இக்­குற்­றச்­சாட்டு நம்பும் படி­யா­கவா இருக்­கி­றது?’ என்று நகைச்­சு­வை­யாக கேட்­டவர். தொட­ராக முஸ்­லிம்­களை இலக்கு வைத்து இடம்­பெற்ற வன்­மு­றை­களால் மன­த­ளவில் பாதிக்­கப்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்லிம் இளை­ஞர்கள் வன்­மு­றையை நாடாமல் ஜன­நா­யக வழியை நாடு­வ­தற்­கான தூண்­டு­கோ­லாக அமைந்­தவர். இந்த நாட்டின் ஐக்­கி­யத்­துக்­கா­கவும் இன நல்­லி­ணக்­கத்­துக்­கா­கவும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்­தவர்.

மறைந்தோ தனித்தோ வாழாமல் அனை­வ­ரோடும் கலந்து வாழ்ந்­தவர். தனது பய­ணங்­க­ளுக்­காக பொதுப் போக்­கு­வ­ரத்­தையே மிக அதி­க­மாக பயன்­ப­டுத்­தி­யவர்.

இத்­த­கைய ஒருவர் ஏன் அதி­ர­டி­யாக குற்­ற­வாளி போல் கைது செய்­யப்­பட்டு குடும்­பத்­த­வர்­களோ தனது சட்­டத்­த­ர­ணி­களோ கூட சந்­திக்க முடி­யா­த­வாறு மறை­வாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார்? என்­பதே எனக்கு முன்­னா­லுள்ள அதிர்ச்­சி­யான கேள்­வி­யாகும்” எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

ஜமா­அதுஸ் ஸலாமா அமைப்பின் தலைவர் உஸ்தாத் ஆஸாத் அப்துல் முயீத் இது குறித்து விடுத்­துள்ள அறிக்­கையில், உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் கைது செய்­யப்­பட்டு சில நாட்­க­ளா­கின்­றன. அவரை அவ­தா­னித்­த­வர்கள், அவர்­க­ளது எழுத்­துக்கள், உரை­களை செவி­ம­டுத்­த­வர்கள் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் யார் என்­பதை இல­கு­வாகப் புரிந்து கொள்வர்.

நாட்டுப் பற்றுடன் தனது செயல்களை அமைத்துக் கொண்ட உஸ்தாத் அவர் கள், குறிப்பாக முஸ்லிம் சமூகத்ததை அதற்கேற்றவாறு வழிகாட்டியவர். நடுநிலையான இஸ்லாமியப் போதனை களை மக்களுக்கு எத்திவைப்பதில் சுமார் மூன்று தசாப்தங்களாக அயராது உழைத்த சிறந்த ஒரு வழிகாட்டியாகும்.

இலங்கை மண் ஈன்றெடுத்த மிகச் சிறந்த ஆளுமைகளில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரும் ஒருவர் என்றால் அது மிகையாகாது. ஆழ்ந்த அனுபவம், கருத்துக்களிலும், அதனை முன்வைப்பதிலும் காணப்படும் முதிர்ச்சி உஸ்தாதில் மிக முக்கிய பண்பு களாகும்.

ஆனால் குறிப்பாக முஸ்லிம் சமூகமும், பொதுவாக இலங்கை மக்களும் இவரது வழிகாட் டல்களை பெற்றுக் கொள்வதில் எவ்வளவு அக்கறை காட்டினார்கள் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இலங்கை புலனாய்வுப் பிரிவினர் நேர்மையாகவும், நீதியாகவும் நடந்துகொள்கிறார்கள் என்பதற்கு அண்மைய நிகழ்வுகள் சான்றாகும். இந்த நம்பிக்கை இன்னும் இருக்கின்றது. எனவே, உஸ்தாத் அவர் களுக்கு மிக விரைவில் நீதி கிடைக்கும் என்று நாம் நம்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைமைகள் கலந்துரையாடல்

இதேவேளை, உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைது தொடர்பில் முஸ்
லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி ஆராய்ந்துள்ளனர். உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் ஜனாதி பதி, பிரதமர் மற்றும் பாதுகாப்புத் தரப்பின் உயர் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறுவது என்று இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிவில் அமைப்புகளும் அக்கறை

இந்தக் கைது குறித்து முஸ்லிம் சிவில் அமைப்புகளும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன. இதன்போது உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் நிரபராதி என் பதை தெளிவு படுத்துவதற்கான வேலைத் திட்டங் களை முன்னெடுப்பது என்றும் அவரது விடுதலையை வலியுறுத்தி கூட்டறிக்கை ஒன்றை வெளியிடவும் தீர் மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.எப்.எம்.பஸீர்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.