13 மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது
ஹாலிஎல பகுதி பாடசாலையில் சம்பவம்; பொலிஸ் விசாரணைகள் தீவிரம்
ஹாலிஎல – கலஉட பகுதியில் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உள்ளடங்கலாக 13 மாணவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி, அப்பாடசாலையின் விளையாட்டு மற்றும் கணித பாடங்களை கற்பித்த ஆசிரியர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வியலும கல்வி வலயத்துக்குட்பட்ட கலஉட அல்-நூராணியா பாடசாலையின் விளையாட்டு விவகாரத்துக்கு பொறுப்பான ஆசிரியராக இருந்த ராமசந்ரன் ரமேஷ் எனும் 44 வயதான ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியரை உடனடியாகப் பணி நீக்கம் செய்துள்ளதாக ஊவா மாகாண கல்வி செயலாளர் சந்யா அம்பன்வெல தெரிவித்தார்.
இந்த துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய பொலிஸ் விசாரணைகளும், ஊவா மாகாண கல்வியமைச்சு ஊடாகவும் முன்னெடுக்கப்பட்ட இரு வேறு விசாரணைகளின் பின்னர் இந்தக் கைதும், பணி நீக்கமும் இடம்பெற்றுள்ளன.
முதலில் குறித்த ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 5 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. இந்நிலையில் அந்த முறைப்பாடுகள் தொடர்பில் பதுளை பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தவத்தவின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹாலிஎல பொலிஸ் நிலைய மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரிவினரால் விஷேட விசாரணைகள் நடாத்தப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் உறுதியான பின்னர் சந்தேக நபரான ஆசிரியரைக் கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.
துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் 15, 16 வயதுகளை உடையவர்கள் எனக் கூறும் பொலிஸார், அவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 13 மாணவர்களின் முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மேலதிக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்று பசறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எம்.எப்.எம்.பஸீர்
vidivelli