அடுத்தவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அல்லது அச்சம் பயம் காரணமாக முஸ்லிம்கள் தங்களது வாழ்க்கை முறையை மட்டுமல்ல, இஸ்லாமிய அடையாளங்களையும் கூட மாற்றி யமைப்பதற்குத் தங்களைத் தயார் பண்ணிக் கொள்வோமா என்று பேசுகின்ற நமது நாட்டில் முஸ்லிம்களின் சிறுவயது திருமணங்கள் என்ற விடயத்திலுள்ள யதார்த்தங்கள் என்னவென்று நாம் ஒருமுறை பார்ப்போம்.
அந்நிய சமூகத்திலுள்ள கடும் போக்காளர்கள் இனவாதக் கண்ணோட்டத்தில் அவ்வாறான கருத்துக்களை முன்வைத்து பெரும்பான்மை மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான கதைகளைச் சந்தைப்படுத்தி வருகின்றார்கள்.
முஸ்லிம் சாப்பாட்டுக் கடைகளில் துப்பிப்போட்டுத்தான் பெரும்பான்மை மக்களுக்கு உணவு பரிமாறுகின்றார்கள். முஸ்லிம் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்ற புடவைகளில் பெண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டு பண்ணக்கூடிய திரவங்கள் பூசப்பட்டிருக்கின்றன. அவர்களின் கடைகளில் ஆடை மாற்றுகின்ற இடங்களில் நிர்வாணமான வீடியோக்கள் எடுக்கப்படுகின்றன என்றெல்லாம் தொடர்ந்த இந்தக் கதைகள் இப்போது முஸ்லிம் வைத்தியர்கள் பெரும்பான்மை சமூகத்தின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்துகின்ற வேலைகளைப் பார்த்து வருகின்றார்கள் என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. நீதிமன்றங்களும் விஞ்ஞான ரீதியிலான கருத்துக்களின்படி அப்படியெல்லாம் நடக்கவில்லை – அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாயாலே சொன்னாலும், புலனாய்வுத்துறை, நீதிமன்றங்களும் கூட லஞ்சம் வாங்கிக் கொண்டு முஸ்லிம்களுக்கு சார்பாகப் பேசுகின்றன என்று அந்தக் கடும் போக்கு இனவாதிகள் தமது நிலைப்பாட்டில் உண்மைக்குப் புறம்பாக தொடந்தும் வாதம் பண்ணி வருவதை இன்று உலகமே பார்த்துக் கொண்டிருக்கின்றது. எனவேதான் முஸ்லிம்களுக்கு எதிரான ஆட்டுக் குட்டி – ஓநாய் கதைகள் பற்றி நாம் சொல்லி வருகின்றோம். இதன் பின்னரும் அப்படித்தான் நடக்கும் அதில் மாற்றங்கள் இருக்காது என்று நாம் கருதுகின்றோம்.
பெரும்பான்மைக் கடும்போக்காளர் அப்படிப் பேசுவதில் ஓர் அடிப்படை இருக்கின்றது – அதற்கு ஓர் இலக்கு இருக்கின்றது. இந்த நாட்டில் முஸ்லிம்களை ஒடுக்கி அடிமைகள் போல் வைத்துக் கொள்வதும் முஸ்லிம்களின் பொருளாதார நடவடிக்கைகளை முடக்குவதும் அதில் முக்கியமானது.
மீண்டும் முஸ்லிம்களின் இளவயதுத் திருமணம் என்ற விடயத்திற்கு வருவோம். இதே நோக்கில்தான் முஸ்லிம்களுடைய இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் பேசி வருகின்றார்கள். இது விடயத்தில் உள்ள யதார்த்தம் என்னவென்று இப்போது பார்ப்போம். அதற்காக கண்களை மூடிக் கொண்டு வாய்க்கு வந்த தகவல்களுடன் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதாரபூர்வமான தகவல்கள் என்ன என்று பார்ப்போம்.
இலங்கையில் கடைசியாக நடந்த குடித்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த இளவயதுத் திருமணங்கள் பற்றி உத்தியோகபூர்வமான தகவல்கள் இப்படித்தான் பதிவாகி இருக்கின்றன.
2012 ஆம் ஆண்டு 15 வயதுக்குக் கீழ்ப்பட்ட திருமணங்கள்
மொத்தம்: 3204
சிங்களவர்: 2200
தமிழர்: 511
முஸ்லிம்கள்: 471
ஏனையோர்: 22
15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்
மொத்தம்: 87633
சிங்களவர்: 62630
தமிழர்: 12642
முஸ்லிம்கள்: 11916
ஏனையோர்: 445
எனவே யதார்த்தம் இப்படி இருக்கும்போது நம்மவர்கள்கூட இது பற்றி இன்று பரவலாக பேசி நமது பக்கத்தில் பெரிய தவறுகள் நடக்கின்றன. இதில் மாற்றங்கள் தேவை என்று வாதிடுகின்றனர். இதில் மாற்றங்கள் தேவை என்று கடும்போக்குப் பேரினவாதிகள் ஒப்பாரி வைப்பது முஸ்லிம்களின் இனப் பெருக்கம் தொடர்பிலான அச்சத்தினாலேயே. நம்மவர்கள் மாற்றம் கோருவது எதற்காக என்று எமக்குப் புரியவில்லை.
ஏதோ முஸ்லிம் சமூகத்தில் மட்டும்தான் இளவயது திருமணங்கள் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றபோது உண்மை இப்படித்தான் இருக்கின்றது என்று அரசு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களின் இளவயதுத் திருமணங்கள் பற்றிப் பேசுகின்ற ஒரு முக்கிய பெண் செயற்பாட்டாளருடன் நாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு. இந்தப் புள்ளி விபரங்களைச் சொல்லாமல் நாம் பேச்சுக் கொடுத்து, என்ன இந்த இளவயதுத் திருமணங்கள். இது முஸ்லிம் சமூகத்தில் மட்டுமா நடக்கின்றது என்று கேட்டதற்கு ஆம்..! ஆம்..! சிங்கள சமூகத்தில் அப்படி எல்லாம் நடக்காது. சட்டப்படி அவர்களுக்கு அதனை செய்வதற்கு வாய்ப்புக்கள் இல்லை. முஸ்லிம் சமூகத்தில் தான் இது 90 வீதம் நடக்கின்றது என்று அடித்துக் கூறினார் அவர்.
கதை அப்படியா இருக்கின்றது இதுபற்றிய புள்ளி விபரங்கள் ஏதாவது உங்களிடம் இருக்கின்றதா என்று நாம் கேட்டதற்கு இல்லை. ஆனால் எங்களுக்குத் தெரியும் என்பது அவர் பதிலாக இருந்தது.
அப்போது இப்படி ஒரு தகவல் இருக்கின்றது என்று நாம் புள்ளி விபரங்களைச் சொன்னபோது அப்படியா? இதுவரை நாங்கள் அப்படி ஒரு தகவலைப் பார்க்கவில்லை என்றார் அவர். சகோதரர்களே நிலைமை புரிகின்றா?
சிங்கள சமூகத்தில் இப்படி இளவயதுத் திருமணங்கள் பெருமளவில் நடக்கின்றன என்று அவர்கள் சமூகத்தில் யாராவது பேசுகின்றார்களா? கவலைப்படுகின்றார்களா? என்றுதான் நாம் எல்லோரையும் கேட்க வேண்டியிருக்கின்றது.
தொடர்ந்தும் நாம் இது போன்ற ஆட்டுக் குட்டி – ஓநாய் கதைகளை சமூகத்திற்கு சொல்லலாமென எதிர்பார்க்கின்றோம்.
நஜீப் பின் கபூர்
vidivelli