சரதியலும் மம்மாலி மரிக்காரும் உற்ற தோழர்கள்.. பிரித்தானிய அரசுக்கெதிராகப் போராடிய அவர்கள் இருவரும் செல்வந்தர்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்டு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்து வந்தனர். 1864 மார்ச் மாதம் 21 ஆம் திகதி இவர்கள் இருவரும் மறைந்திருந்த வீடு பிரித்தானிய பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
சரதியலுக்கும் மம்மாலி மரிக்காருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பிரகாரம் 1864 மே மாதம் 07 ஆம் திகதி போகம்பறை மைதானத்தில் இருவரும் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் சரதியலின் சடலம் கிறிஸ்தவ பாதிரி ஒருவரிடமும் மம்மாலி மரிக்காரின் சடலம் முஸ்லிம் மதபோதகர் ஒருவரிடமும் கையளிக்கப்பட்டன.
இக்குறிப்புகள் காத்தான்குடியில் அமைந்துள்ள மரபுரிமைக் காட்சியகத்தில் உள்ள குறிப்பிட்ட கூடாரத்திலிருந்து பெறப்பட்டவையாகும்.
இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் தனித்துவமான அடையாளங்களைச் சித்திரிக்கும் மாதிரிகள் இக்காட்சியகத்தில் காணக் கிடைக்கின்றன.
சரதியலும் மம்மாலி மரிக்காரும் தூக்கிலிட்டுக் கொல்லப்பட முன்னர் அவர்களுக்கான இறுதி சமயச் சடங்குகள் கிறிஸ்தவப் பாதிரியார் மற்றும் முஸ்லிம் மதபோதகரால் நிறைவேற்றப்படும் காட்சிகள் மிகவும் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சரதியலையும் மம்மாலி மரிக்காரையும் கைதுசெய்யச் சென்று துப்பாக்கிச் சூடுபட்டு இறந்த துவான் ஷாபானின் மாதிரி உருவொன்றும் இங்கே வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் ஒருவராக இருந்த துவான் ஷாபான் இலங்கை பொலிஸ் வரலாற்றில் புகழ்ந்து குறிப்பிடப்பட்டுள்ளார். பொலிஸ் பணியில் உயிர்துறந்த முதலாவது வீரராக இவர் வரலாற்றில் பதியப்பட்டுள்ளார். கண்டி பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்துவந்த ஷாபான் இவ்வாறு கடமையிலிருந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த நாள் 1864 மார்ச் மாதம் 21 ஆம் திகதியாகும். இந்த வரலாற்றின் அடிப்படையிலேயே ஒவ்வோராண்டும் மார்ச் மாதம் 21 பொலிஸ் வீரர்கள் தினமாக நினைவுபடுத்தப் படுகின்றது.
பாதுகாப்புக் கடமையின் போதும் தாய்நாட்டின் இறைமையைக் காப்பாற்றும் பொருட்டும் தமது இன்னுயிர்களை ஈந்த பல முஸ்லிம் வீரத் தியாகிகளின் வரலாறுகளை சித்திரிக்கும் அதிகமான காட்சிகள் இங்கே வைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறான ஒரு வரலாற்றுக் காட்சியாக 1594 ஆம் ஆண்டு போர்த்துக்கேயருக்கு எதிராக இலங்கையர் மேற்கொண்ட போராட்டமும் சித்திரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தைப் பற்றி 1687 இல் Fernao de Queroz எனும் புகழ்பெற்ற போர்த்துக்கேய வரலாற்றாசிரியர் எழுதிய The Temporal and Spiritual Conquest of Ceylon எனும் பெயரில் ஒரு நூலையே எழுதியிருப்பதாக இங்குள்ள ஒரு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த நூலில் தன்துரே (Danthure) போராட்டம் பற்றியும் சொல்லப்பட்டுள்ள பகுதியில்: ‘துணிச்சல் நிறைந்த ஒரு சிங்கள வீரரைப் போலவே பிரபலமான சோனகத் தலைவருமான கோபால முதலியாரும் போர்த்துக்கேயரால் கைதுசெய்யப்பட்டார். கோபால முதலியாரை விடுவிப்பதற்காக மக்கள் 5000 பெகோடா (அப்போதைய போர்த்துக்கேய நாணய அலகு)க்களை மக்கள் செலுத்தத் தயாராக இருந்த போதிலும் அதனால் பயனேதும் கிட்டவில்லை. போர்த்துக்கேயர் கோபால முதலியாரைக் கொன்றுவிட்டனர்.
மேலும் கோபால முதலியாரைப் பற்றி அந்த நூலில் கீழ்வருமாறு சொல்லப்பட்டுள்ளது:
விமலதர்மசூரிய மன்னனின் படைத்தளபதியாக இருந்தவரே கோபால முதலியார். 1594 ஆம் ஆண்டு போர்த்துக்கேய ஆளுநரான Pedro Lopes de Sousa கண்டியை ஆக்கிரமித்தான். அவனுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட போராட்டமே தன்துரே போராட்டமாகும். அதற்குத் தலைமை தாங்கியவரே கோபால முதலியார். அப்போரில் பறங்கியர் தோல்விகண்டு பின்வாங்கினர். ஆயினும் கோபால முதலியாரைப் பறங்கியர் எப்படியோ பிடித்துக் கொண்டனர். தாய்நாட்டுக்காக இவ்வாறு முதலாவது உயிர்துறந்த தேசப் பற்றாளரே கோபால முதலியார். இவரது முழுப்பெயர் ராஜகருணா வேகமிகோபல்ல தூவகொட முதியன்சேலாகே ஷெய்க் சல்தீன் பின் அத்தாஸ் துஸையில் உடையார் Rajakaruna Veygemi Gopalla Dhoowagoda Mudiyanselage Sheikh Saldeen Bin Aththas Thusaiyil Udayar) என்பதாகும்’
இதுபோன்ற இன்னோர் உயிர்துறந்த தேசப்பற்றாளரின் கதையும் இக்காட்சியகத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது.. அதுதான் தன் தாய்நாட்டுக்காக உயிர்துறந்த ஒரு முஸ்லிம் வீரத் தாயின் கதை.
‘சிங்கள மன்னனின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தன்னுயிர் ஈந்த முஸ்லிம் வீரத் தாய்’ என்ற தலைப்பில் ஒரு கூடாரம் இங்கே உள்ளது.
இரண்டாம் ராஜசிங்க மன்னன் (1636 – 1687) போர்த்துக்கேயரால் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மன்னன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அப்போது முஸ்லிம்கள் வாழ்ந்துவந்த பங்கரகம்மன எனும் ஊரின் ஊடாகத் தப்பியோடிக் கொண்டிருந்தான். மிகவும் களைப்புற்றிருந்த மன்னன் மறைந்துகொள்ள ஓர் இடத்தைத் தேடிச் சுற்றுமுற்றும் பார்த்தபோது தனக்குப் பின்னால் பெரியதொரு பலா மரத்தின் பொந்து ஒன்றைக் கண்டு அதற்குள் மறைந்து கொண்டான். அப்போது அவ்விடத்துக்கு அருகில் அவ்வூரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணி தன் பசுமாட்டிலிருந்து பால் கறந்து கொண்டிருந்தார். மன்னன் இவ்வாறு மரப் பொந்துக்குள் மறைவதையும் அப்பெண்மணி கண்டுகொண்டார்.
மன்னனைப் பின்தொடர்ந்து விரட்டிகொண்டுவந்த போர்த்துக்கேயர் சட்டென மன்னன் மறைந்துவிடவே மன்னன் எங்கே ஓடிமறைந்தான் என்பதை அறிந்துகொள்ள முடியாமல் தடுமாறிய போர்த்துக்கேய வீரர்கள் அங்கே பால் கறந்து கொண்டிருந்த அப்பெண்மணியிடம் மன்னனைப் பற்றி விசாரித்தார்கள். எவ்வளவு அதட்டி, கடுமையாக அடித்து விசாரித்தபோதிலும் அப்பெண்மணி தனக்கு எதுவும் தெரியாதென்றே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். மன்னன் மறைந்திருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்கவே இல்லை. இறுதியில் கடும்கோபமுற்ற போர்த்துக்கேயர் அப்பெண்மணியை வெட்டிக் கொன்றுவிட்டனர்.
இதுதான் சிங்கள மன்னனின் உயிர்காக்கத் தன்னுயிர் ஈந்த முஸ்லிம் வீரத் தாயின் கதை. இந்த வரலாற்று நிகழ்வும் இக்காட்சியகத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இன்னும் ஏராளமான வரலாற்று நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள மரபுரிமைக் காட்சியகத்தினை அமைத்திருப்பதன் நோக்கம் நம் எல்லோருக்கும் பொதுவான ஒரு வரலாறு இருந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுவதாகவுள்ளது.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றையும் அவர்கள் நாட்டுக்குச் செய்துள்ள சேவைகளைத் தெளிவுபடுத்துவதும் இக்காட்சியகத்தின் நோக்கங்களுள் ஒன்றாகுமென இங்குள்ள தகவல் தருநர் எங்களிடம் எடுத்துச் சொன்னார்.
2013 ஆம் ஆண்டு ‘தேசத்துக்கு மகுடம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஜகத் பாலசூரியவின் ஈடுபாட்டோடும் பிராந்தியத்தின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் நிர்மாணித்துத் திறந்துவைக்கப்பட்டுள்ள இந்த மரபுரிமை நூதனசாலை, தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகிறது.
வரலாற்றுத் தகவல்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம்களின் பொருளாதாரப் பங்களிப்புகள் மற்றும் கலாசாரப் பாரம்பரியங்கள் குறித்த ஏராளமான தகவல்களும் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
புடவைக் கைத்தொழிலிலும் துணிகளுக்கு நிறமூட்டி அலங்கரித்து அச்சிடும் தொழில்நுட்பத்திலும் முஸ்லிம்கள் முன்னோடிகளாக இருந்துள்ளனர். கிழக்கே மருதமுனை, காத்தான்குடிப் பகுதிகளிலும் தெற்கே பலபிட்டிய பகுதிகளிலும் புடவைக் கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்குப் பாரிய பங்களிப்பைச் செய்திருப்போர் முஸ்லிம்களே!
இன்றுகூடப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இக்கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்குத் தொடர்ந்தும் முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்து வருகின்றனர்.
முஸ்லிம்களின் பாரம்பரிய தொழில்நுட்ப மரபுரிமைகள் குறித்து இங்குள்ள காட்சிப்படுத்தல்களும் பார்வையாளரைப் பெரிதும் ஈர்க்கச் செய்கின்றன.
அந்த வகையில் கிணறு நிர்மாணிக்கும் அவர்களது பண்டைய தொழில்நுட்பம் மிகவும் விஷேடமானது. இன்று போல் கொங்க்ரீட் தொழில்நுட்பங்கள் இல்லாத அந்தப் பண்டைய காலங்களில், அதுவும் முற்றிலும் மணற்பாங்கான இந்தப் பிரதேசங்களில் கிணறுகளை அமைக்க அவர்கள் கையாண்டுள்ள தொழில்நுட்பம் மிகவும் ஆச்சரியமானதாகும். பாரிய மரக் குற்றிகளின் நடுப்பகுதியைக் குடைந்து அகற்றி, நீண்ட சிலிண்டர் வடிவில் வடிவமைத்துக் கொள்கின்றனர். பின்னர் மரத்தில் செய்யப்பட்ட அந்தச் சிலிண்டர் வடிவத்தை மணல் பூமிக்குள் அடியில் நீர்மட்டம் கிடைக்கும் வரை அழுத்திப் புதைக்கின்றனர். பூமிக்கடியில் நீர்மட்டத்தை அடைந்தவுடன் கிணறு போலப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இத்தகைய பண்டைய கிணறுகள் ‘கோட்டுக் கிணறு’ என அழைக்கப்பட்டது.
இன்னொரு கூடாரத்திலே பிரித்தானிய காலத்திலேயே முஸ்லிம் செல்வந்தர்களின் வீடுகளில் இருந்த வரவேற்பறை ஒன்றும் அங்கு காணப்பட்ட தளபாடங்களின் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்தகைய தளபாடங்களுள் சாய்மனை ஒன்றும் பலவகையான வேறு தளபாடங்களும் வைக்கப்பட்டுள்ளன. பண்டைய சாய்வு நாற்காலி, அலுமாரி, மான் கொம்புகளாலான ஆடைக் கொழுக்கிகள், புராதன வானொலிப் பெட்டி, 1857 இல் செய்யப்பட்டிருந்த கதவு மற்றும் கதவுச் சட்டகம், 150 ஆண்டுகள் பழமையான சென். தோமஸ் ரகத்திலான சுவர்க்கடிகாரம், ட்றெசிங் மேசை போன்ற ஏராளமான மிகப்பழங்காலப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இத்தகைய பண்டைய வீட்டுப் பொருட்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆடை அணிகலன்களை நுணுக்கமாக அவதானித்துப் பார்க்கும்போது, முஸ்லிம்கள் தலையில் அணியும் தொப்பியைத் தவிர இடையில் அணியும் வார்ப்பட்டி முதலான மற்றெல்லா ஆடை அணிகலன்களும் பண்டைய நாட்டுப்புறச் சிங்கள மேல்தட்டுப் பிரபுக்களின் வீட்டுப் பொருட்கள் மற்றும் ஆடை அணிகலன்களைப் பெரிதும் ஒத்தனவாகவே இருந்திருப்பதைக் கண்டுகொள்ளலாம்.
இவைதவிர, இந்நாட்களில் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ள மத்ரஸா பாடசாலை ஒன்றின் மாதிரியும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ‘முஸ்லிம் பிள்ளைகள் புனித குர்ஆனையும் மார்க்க அறிவையும் அரபு மொழியையும் ஆலிம் (மார்க்க அறிஞர்கள்)களிடம் கற்றுக் கொள்ளும் இடமே மத்ரஸா எனப்படுகிறது.’
இன்னொரு கூடாரத்தில் பொலன்னறுவையில் மன்னனாக இருந்த பராக்கிரமபாகுவின் அரச சபையில் சபை நிகழ்வுகள் நிகழும் காட்சி ஒன்றும் சித்திரிக்கப்பட்டுள்ளது.
‘மகா பராக்கிரமபாகு 1153 முதல் 1186 வரை இலங்கையை ஆட்சிசெய்த மன்னனாவான். பொலன்னறுவையைத் தலைநகராகக் கொண்டு தனது மூன்று இளவரசர்கள் மூலமாக முழு இலங்கையையும் மூன்று ராஜதானிகளாக ஒன்றிணைத்து ஆண்டு வந்தான். இவ்வாறு முழு இலங்கையையும் ஒரே குடையின் கீழ் ஆண்ட வரலாற்றின் கடைசி மன்னன் மகா பராக்கிரமபாகு மன்னனே ஆவான். தனது ஆட்சியை விஸ்தரித்ததோடு மட்டுமல்லாமல் நாட்டை அழகு படுத்துவதிலும் பிரதான நீர்ப்பாசன வசதிக் கட்டமைப்புகளையும் நிறுவி இருந்தான். அத்துடன் நாட்டின் பாதுகாப்புக்காகப் பலமான ராணுவக் கட்டமைப்பையும் நிறுவி அதை பெளத்த நெறிமுறைகளின்படி வழிநடாத்தினான். கலைகளின் வளர்ச்சிக்கும் அவன் பெரிதும் பங்களிப்புச் செய்தான்.
‘ஒரு துளி மழை நீரும் குடிமக்களின் பிரயோசனத்துக்குப் பயன்படாமல் வீணாகக் கடலில் சென்று கலக்க விடமாட்டேன்’ என்று அவன் கூறிய கூற்று வரலாற்றில் பதிவாகியுள்ளது.
பராக்கிரமபாகு மன்னனின் அமைச்சரவையில் 16 அமைச்சர்கள் இருந்தனர். அவர்களுள் நால்வர் முஸ்லிம் அமைச்சர்கள் என்பது விஷேடமாகக் குறிப்பிடத்தக்கதாகும்.’
இவ்வாறான சகல மாதிரிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதனூடாக இவர்கள் சொல்ல வரும் பிரதானமான ஒரு செய்தி உள்ளது. ‘எங்களுக்கென்று தனித்துவமான அடையாளங்கள் இருந்துள்ளன. அதேவேளை, இலங்கையர் என்ற வகையில் நம் எல்லோருக்குமே சொந்தமான பொதுவான மரபுரிமை அடையாளங்களும் கடந்த காலங்களில் இருந்துள்ளன. இவற்றினூடாக நாமெல்லோரும் எதிர்காலத்தை நோக்கி ஐக்கியமாகப் பயணிப்போம்’ என்பதே அந்தச் செய்தியாகும்.
வரிசையாக நடப்பட்டுள்ள பேரீச்சை மரங்களால் அழகூட்டப் பட்டிருக்கும் காத்தான்குடியின் விசாலமான வீதியிலாகட்டும், சனம் நிரம்பி வழியும் வாராந்தச் சந்தையிலாகட்டும், எழிலார்ந்த கடற்கரையிலாகட்டும்… இவையெங்குமே இந்தப் பொதுச் செய்தியே வெளிப்பட்டு நிற்கின்றது!
அதேவேளை, இதற்கு மாறான எத்தனிப்புகளும் இல்லாமலில்லை. ஏனைய சமூகங்களில் போலவே இங்கும் இத்தகைய பொதுவான சிந்தனையை, கனவைக் கலைக்கும்படியான முயற்சிகளும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்..
காத்தான்குடிப் பள்ளிவாசலிலிருந்து கடற்கரையை நோக்கிச் செல்லும் ஒரு கிளை வீதியில் அமைந்துள்ள – தற்போது பாழடைந்து வெறிச்சோடிக் கிடக்கும் – ஸஹ்ரானின் பள்ளிவாசல் அத்தகைய துரதிர்ஷ்டவசமான முயற்சியொன்றின் அடையாளமாகும். ஆயினும் இன்றெவருமே அதனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அன்றும் பார்க்கவில்லை.
அதனால்தான், அவன் தனது வாழ்க்கையை விட்டும் பிரிவதற்கு முன்பாக இந்த நகரைவிட்டும் பிரிந்து செல்ல நேர்ந்தது!
ஆயினும் இந்த நகரத்தின் பல்லாயிரக்கணக்கான மக்களின் பொதுக் கனவைக் கலைத்துப்போடப் பிறந்த ஒரே மனிதன் ஸஹ்ரான் மட்டுமேயாக இருக்க முடியாது!
இற்றைக்குப் பதினாறு ஆண்டுகளுக்கு முன் அதாவது, 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் பகுதி அல்லது ஆகஸ்ட் இறுதிப் பகுதியின் ஒரு நாள் ஊடகவியலாளர் ஒருவர் அப்போதைய முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்வர் இஸ்மாயில் அவர்களிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்:
‘கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் இளைஞர்கள் வன்முறைகளின்பால் சென்றுகொண்டிருப்பதாக செய்யப்படும் பிரசாரம் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’
இந்தச் செவ்வி 2003 செப்டம்பர் 07 ஆம் திகதி வெளியான ‘தினகர’ (தினகரன் அல்ல, இது அப்போது வெளிவந்த ஒரு சிங்களப் பத்திரிகை) பத்திரிகையில் வெளியாகி இருந்தது. நான் அப்போது அந்தப் பத்திரிகையின் விஷேட பகுதியின் ஆசிரியராக இருந்தேன். அதற்கு அண்மித்த ஒரு தினத்தில் நான் காத்தான்குடிக்கு சுற்றுப்பயணம் வந்திருந்தேன் என்று நினைவிருக்கிறது. அப்போதும் அங்கு இக் கேள்வியை எழுப்பியது நினைவுக்கு வருகிறது. அக்காலப்பகுதியில் இக்கேள்வியை எழுப்புவதற்கான ஒரு காரணமிருந்தது. அதுதான் அப்போது முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதாவது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்த காலப்பகுதி அது. வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமா பிரிந்திருக்க வேண்டுமா எனும் விவாதம் மீண்டும் சூடுபிடித்திருந்த காலப்பகுதி அது. முஸ்லிம்களின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினை மேலெழுந்திருந்த காலப்பகுதி அது.
அந்த செவ்விக்கு அன்று நாமிட்டிருந்த தலைப்பு “பாதுகாப்புத் தர முடியாத ஓர் அரசாங்கத்தில் நாம் தொடர்ந்தும் இருக்க முடியாது !” என்பதாகும். மேலுள்ள கேள்விக்கு முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அன்று கொடுத்திருந்த பதில்:
“தற்போது முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அரசாங்கம் கிழக்கு முஸ்லிம்களுக்குப் பாதுகாப்புத் தராவிட்டால் எங்களது பாதுகாப்புக்காக நாம் போராடவேண்டி வரும். அப்படியொரு நிலை ஏற்படுமானால் ஜிஹாத், அல்கைதா என்று பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. (அப்போது ISIS இருக்கவில்லை) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேரடியாகப் போராட்டத்தில் இறங்கும். வேறெந்த மாற்றுவழிகளும் இல்லாவிட்டால் செய்யவேண்டியிருப்பது அதுதான்.”
முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தப் பதிலில் வெளிப்படுவது, அன்றைய முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருந்த ஒடுக்குமுறைகளின் தன்மைதான்.
இன்று யுத்தம் முடிவுக்கு வந்துள்ளன சூழலில் ஒடுக்குமுறையின் வடிவங்கள் சற்றுத் தணிந்து போயிருந்தாலும் அந்த ஒடுக்குமுறைகளின் அடிப்படை மூலங்கள் எவ்வளவு தூரம் தூர்ந்துபோயுள்ளன எனத் தெளிவாகச் சொல்லக்கூடியவர் எவருமிலர். அதுதவிர, இப்போது ஏராளமான புதுப்புதுப் பிரச்சினைகளும் வளர்ந்துகொண்டே செல்கின்றன. காணிப் பிரச்சினையிலிருந்து மத்ரஸாக்கள் ஊடாக காத்தான்குடி நகர மத்தியிலுள்ள பேரீச்சை மரங்கள் வரையிலும் பிரச்சினைகள் வியாபித்துப் பெரும் சிக்கலாகி விட்டுள்ளன. ஆயினும் இவை குறித்த பரந்துபட்ட உரையாடல்கள் இந்நாட்டின் ஊடகங்களிலோ புத்திஜீவிகள் மத்தியிலோ அரசியல் வட்டாரங்களிலோ போதிய முக்கியத்துவம் பெற்றிருப்பதாகத் தெரியவேயில்லை.
இந்தியாவிலிருந்து கிடைக்கப்பெற்ற அபாய எச்சரிக்கைத் தகவல்களின் அடிப்படையில் ஏன் சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை? அதற்கான பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யார்? என்றெல்லாம் ஆய்வுசெய்வதில்தான் இன்றுகூடப் பெரும்பாலானவர்களின் கவனமெல்லாம் குவிந்திருக்கின்றன. அதற்கப்பால் சென்று இப்பிரச்சினைகளின் உண்மையான ஆழ அகலங்களைத் தேடிப் பார்க்கும் ஆய்வுகளோ தேடல்களோ அதற்கான முயற்சிகளோ நடப்பதாக இல்லை. பொதுமக்களிடையேயும் இதுகுறித்த உரையாடல்கள் இல்லை. இவர்களில் அநேகரின் சிந்தனையெல்லாம் அடுத்த ஜனாதிபதி அபேட்சகரைப் பற்றியே அல்லாமல் அடுத்து நிகழவிருக்கும் ஆபத்தைப் பற்றியதல்ல !
நன்றி: அருண – 25.08.2019