உலகெங்கிலுமுள்ள தாவுதி போரா சமூகத்தின் ஆன்மிக மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் 10 தினங்கள் கொழும்பில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 1 ஆம் திகதி பம்பலபிட்டி மெரைன் டிரைவில் அமைந்துள்ள தாவூதி போரா பெரிய பள்ளிவாசலில் இம்மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இம்மாநாட்டுக்கு போரா சமூகத்தின் ஆன்மிகத் தலைவர் கலாநிதி செய்தினா முபத்தல் செய்னுத்தீன் தலைமை வகிக்கவுள்ளார்.
இந்த ஆன்மிக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலகெங்கிலுமிருந்து போரா சமூகத்தைச் சேர்ந்த சுமார் 21 ஆயிரம் பேர் இலங்கை வரவுள்ளனர். தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள இந்த ஆன்மிக மாநாட்டில் கலந்துகொள்ள வருபவர்கள் தங்கியிருப்பதற்காக கல்கிசை, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் சுமார் 100 பிரபல ஹோட்டல்களில் சுமார் 3000 அறைகள் பதிவு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பிரதேசங்களில் சொகுசு மாடி வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன என சுற்றுலா அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுவதன் காரணமாக சுற்றுலாத்துறை 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் பொலித்தீன் பாவனைக்கு தடை விதித்துள்ளதாகவும், உணவு வீண்விரயம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போரா பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. இம்மாநாட்டில் இலங்கை, அவுஸ்திரேலியா, பஹ்ரைன், பங்களாதேஷ், கனடா, சீனா, எகிப்து, பிரான்ஸ், ஜேர்மன், ஹொங்கொங், இந்தியா, இந்தோனேஷியா, ஈராக், அயர்லாந்து, ஜப்பான், கென்யா, குவைத், மலேசியா, மியன்மார், நெதர்லாந்து, நோர்வே, ஓமான், பாகிஸ்தான், போர்த்துக்கல், கட்டார், சவூதி அரேபியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, சுவீடன், தன்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், உகண்டா, ஐக்கிய இராச்சியம், யேமன் மற்றும் சம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தாவூதி போரா சமூகத்தினர் சமுகமளிக்கவுள்ளனர்.
இந்த ஆன்மிக மாநாட்டிற்கு அரசாங்கம் விஷேட பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு போரா சமூகத்தின் இவ்வாறான ஆன்மிக மாநாடொன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
vidivelli