நாட்டில் கடந்த காலத்தில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் மூன்று தசாப்தகால போர் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நாளை புதன்கிழமையிலிருந்து ஆரம்பமாகவிருப்பதாக இழப்பீட்டுக்கான அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விசேட சட்டத்தின் ஊடாக ஸ்தாபிக்கப்பட்ட இழப்பீட்டுக்கான அலுவலகம், கடந்த காலத்தில் நாட்டில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும். அத்தோடு கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடும் இந்த இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் யுத்தம் மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல், அவர்களுக்கு அதனடிப்படையில் இழப்பீட்டை ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் கொள்கை உருவாக்கப் பணிகள் இடம்பெற்று வருவதுடன், செப்டெம்பர் மாதத் தொடக்கத்தில் அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போரினாலும், கலவரங்களினாலும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் நாளைய தினத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி நாளை மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவுள்ள இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் அதிகாரிகள், தொடர்ந்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட பிரதேசங்களுக்கும் விஜயம் செய்வார்கள். அதேபோன்று தென்மாகாணத்திலும் இத்தகைய சந்திப்புக்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
vidivelli