ஹெட்டிபொல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கொட்டாம்பிட்டி லுஃலு பள்ளிவாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொழுகைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அப்பள்ளிவாசலின் நிர்வாக சபைச் செயலாளர் முஹம்மத் ஷாபி ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பள்ளிவாசலில் தொழுகைகளுக்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருப்பது தொடர்பில் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் பிரத்தியேக செயலாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. அவர் தொழுகைகளை நடாத்தும்படி வேண்டிக் கொண்டார். பொலிஸாரினால் ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அது தொடர்பில் அவர்களுடன் பேசுவதாகவும் கூறினார். இதனையடுத்து நாம் தொழுகைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளோம்.
நாளை (இன்று) பிற்பகல் 4.30 மணிக்கு பள்ளிவாசல் நிர்வாக சபையில் நால்வர் ஹெட்டிபொல பொலிஸுக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். ஹெட்டிபொல பொலிஸ் நிலைய பதில்பொறுப்பதிகாரி இந்த அழைப்பினை விடுத்துள்ளார். நாளை (இன்று) பள்ளிவாசலில் தொழுகை நடாத்துவதற்கு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்படுமென எதிர்பார்க்கின்றோம் என்றார்.
லுஃலு பள்ளிவாசல் தௌஹீத் பள்ளிவாசல் என்று முறைப்பாடு செய்யப்பட்டதனையடுத்து கடந்த ஜூலை 18 ஆம் திகதி முதல் அப்பள்ளிவாசலில் குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் தொழுகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
vidivelli