இலங்கையில் இனங்களுக்கு என்று தனியான சட்டங்கள் இருக்கக்கூடாது. அனைத்து மக்களும் பொதுவான ஒரு சட்டத்தின் கீழேயே ஆளப்பட வேண்டும் என்ற கோஷம் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வந்தது. பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புகள் இவ்விவகாரத்தில் முன்னிலையில் இருந்து செயற்பட்டன.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோஷம் ஏப்ரல் குண்டுத் தாக்குதலையடுத்து வலுப்பெற்றுள்ளது. இந்நிலையிலேயே தற்போது அமுலிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு தசாப்த காலத்துக்கு முன்பு இச்சட்டத்தில் திருத்தங்களை சிபாரிசு செய்வதற்கு நியமிக்கப்பட்டிருந்த தற்போதைய ஓய்வு நிலை நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் அறிக்கையில் 14 திருத்தங்களுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகாரம் வழங்கியதன் பின்பே அமைச்சரவைக்கு அத்திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பல்லின மக்கள் வாழும் நாடாகும். இங்கு முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றாலும் இங்கு எமக்கென்று தனியான சட்டங்கள், மத சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு உலமாக்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் உள்ளமையை எம்மால் மறைக்க முடியாது. முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆக அதிகரிப்பு, திருமணப்பதிவு கட்டாயமாக்கப்படல், பலதார மணத்தில் சில விதிமுறைகள், விவாகரத்தின் போது நஷ்டஈடு வழங்கப்படல், திருமணப்பதிவு புத்தகத்தில் மணப் பெண் கையொப்பமிடல், இஸ்லாமிய சட்டம் பயின்ற சட்டத்தரணிகள் காதி நீதிபதிகளாக நியமனம் உட்பட 14 திருத்தங்களும் வரவேற்கத்தக்கவை.
இச்சந்தர்ப்பத்தில் இஸ்லாமிய சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தி வரும் சவூதி அரேபியாவின் சில முன்னேற்றகரமான மாற்றங்களை உற்று நோக்க வேண்டும். அண்மையில் அந்நாடு பெண்களுக்கு விதித்திருந்த சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. மாற்றங்களைச் செய்துள்ளது. சவூதி அரேபிய பெண்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அத்தோடு விளையாட்டு போட்டிகளை பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சவூதி அரேபிய பெண்கள் தங்களது விவாகம், விவாகரத்து மற்றும் பிள்ளைகளின் பிறப்பு பதிவுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டைக்கு அவர்களால் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியும். பிள்ளைகளை பாடசாலையில் அனுமதிக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. எவரும் எதிர்பார்க்காத மாற்றங்கள் அங்கு நிகழ்ந்துள்ளன. இம்மாற்றங்கள் சிலரால் விமர்சிக்கப்பட்டாலும் இவை பெண்களின் உரிமைகளாகும்.
பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் நாம் எமது தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதை எவராலும் சவாலுக்குட்படுத்த முடியாது. எதிர்ப்புகளின் மத்தியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியார் சட்டத்தில் திருத்தங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை சமூகத்தை ஒரு முன்னேற்பாடாகவே கருதமுடிகிறது.
நாட்டின் பொதுச் சட்டத்துக்கேற்ப முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலம் 12 வயது முஸ்லிம் பெண்கள் காதி நீதிபதியின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளும் விதிமுறை இருந்தாலும் அவ்வாறான திருமணங்கள் ஓரிரண்டே நிகழ்ந்துள்ளமையை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம் பெண்கள் கல்வித் துறையில் காட்டும் ஆர்வமே இதற்குக் காரணமாகும். எனவே திருமண வயதெல்லை அதிகரிக்கப்பட்டமையை எதிர்ப்பதில் நியாயமில்லை எனலாம்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற குரல் எமது சமூகத்திலிருந்தே எழுந்தது என்பதை திருத்தங்களை எதிர்க்கும் தரப்பினர் மறந்துவிடக்கூடாது.
vidivelli