வன்முறைகள், அச்சுறுத்தல்கள் நிறுத்தப்படாவிடின் முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறுவர்

ஐ.நா. விசேட அறிக்கையாளர் எச்சரிக்கை

0 2,652

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களும் அச்­சு­றுத்­தல்­களும் தொடர்ந்தும் நிகழ்­வதை தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­விடின் அவர்கள் நாட்டை விட்டு வெளி­யேறும் அபாயம் ஏற்­ப­டு­மெனத் தெரி­வித்­துள்ள மத சுதந்­திரம் தொடர்­பான ஐ.நா. விசேட அறிக்­கை­யாளர் அஹ்மத் ஷஹீத், இவ்­வா­றான வன்­மு­றை­களின் சூத்­தி­ர­தா­ரி­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­திலும் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பாது­காப்பு வழங்­கு­வ­திலும் பொலிசார் தோல்­வி­ய­டைந்­துள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

மதச் சுதந்­திரம் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட அறிக்­கை­யாளர் அஹ்மட் ஷஹீத் இலங்­கைக்கு மேற்­கொண்ட உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தின் இறு­தியில் நேற்று மாலை கொழும்­பி­லுள்ள ஐக்­கிய நாடுகள் அலு­வ­ல­கத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

கடந்த 15 ஆம் திகதி உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இலங்­கைக்கு வந்­தி­ருந்­த­துடன், நேற்று திங்­கட்­கி­ழமை வரை தங்­கி­யி­ருந்து இலங்­கையில் மத­சு­தந்­திரம் தொடர்பில் உள்ள நிலை­வ­ரத்தை ஆராய்ந்­தி­ருந்தார்.
தலை­நகர் கொழும்­பிற்கு மேல­தி­க­மாக வடக்கு, வடமேல், கிழக்கு, மத்­திய மாகா­ணங்­களின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளுக்கும் விஜயம் மேற்­கொண்ட ஷஹீட் அங்கு மதம் சார்­பான வன்­மு­றை­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள், மதத்­த­லை­வர்கள், முறைப்­பாட்­டா­ளர்கள், மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் உள்­ளிட்ட பல தரப்­பி­ன­ரையும் சந்­தித்தார். இந் நிலையில் குறித்த சந்­திப்­புகள் மற்றும் கள விஜ­யங்­களின் போது தான் திரட்­டிய தக­வல்­களின் அடிப்­ப­டையில் அவர் மேலும் கருத்து வெளி­யி­டு­கையில்,

கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று ஐ.எஸ். இயக்­கத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் இலங்­கையில் மேற்­கொண்ட பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளாலும், அதனைத் தொடர்ந்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளாலும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். முதலில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்­கு­தல்­க­ளாலும், ஏனைய வன்­மு­றை­க­ளாலும் உயி­ரி­ழந்­த­வர்­களை நினை­வு­கூ­ரு­வ­துடன், அவர்­க­ளது உற­வி­னர்­க­ளுக்கு எமது அனு­தா­பங்­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன். அத்­தோடு தாக்­கு­தல்­களில் காய­ம­டைந்­த­வர்கள் விரைவில் குண­ம­டை­வ­தற்கும் பிரார்த்­திக்­கின்றேன். அத்­தோடு என்­னு­டைய இந்த விஜ­யத்தின் போது மதச் சுதந்­திரம் தொடர்பில் நான் அவ­தா­னித்த, ஆராய்ந்த, உள்­வாங்­கிய விட­யங்கள் மற்றும் பரிந்­து­ரைகள் அடங்­கிய எனது அறிக்கை எதிர்­வரும் 2020 மார்ச் மாதம் நடை­பெறும் கூட்­டத்­தொ­டரில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­படும்.

அந்­த­வ­கையில் அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­பட்ட தேசிய ஒற்­றுமை மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்­கான அலு­வ­ல­கத்­தினால் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. அதே­போன்று பல்­வேறு மதங்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற மதத்­த­லை­வர்­களும் நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு முன்­வந்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. நாடொன்றின் மதச்­சு­தந்­திரம் என்று குறிப்­பி­டு­கையில் அதில் இரு­வி­தங்­களில் அர­சாங்கம் தொடர்­பு­ப­டு­கின்­றது. முத­லா­வது, நாட்டு மக்­களின் மதச்­சு­தந்­திரம் மற்றும் நம்­பிக்­கை­களில் அர­சாங்கம் தலை­யி­டக்­கூ­டாது. இரண்­டா­வது, ஒரு­வரின் மதச்­சு­தந்­திரம் மற்றும் நம்­பிக்­கைகள் என்­ப­ன­வற்றில் வேறெ­வரும் தலை­யி­டாத வகையில் பாது­காப்பை உறு­தி­செய்தல் ஆகும்.

பௌத்­தர்கள் சிறு­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களில் கூட பௌத்த விகா­ரை­க­ளையும், புத்தர் சிலை­க­ளையும் அமைப்­ப­தற்கு அர­சாங்கம் அனு­மதி வழங்­கு­கின்­றது. எனினும் பௌத்­தர்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களில் ஏனைய மதத்­த­வர்கள் தமது மதம் சார்ந்த வழி­பா­டு­களை சுதந்­தி­ர­மாக முன்­னெ­டுக்க முடி­வ­தில்லை என்ற விடயம் பல்­வேறு சமூ­கத்தைச் சார்ந்­த­வர்­க­ளாலும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் பௌத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு நாடொன்று குறித்­த­வொரு மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தற்கு சர்­வ­தேச சட்­டங்கள் எதிர்ப்புத் தெரி­விக்­க­வில்லை. ஆனால் அதே­வேளை, அந்­நாட்டின் அர­சாங்கம் நாட்­டி­லுள்ள ஏனைய மதங்களைப் பின்­பற்­று­வோரை எவ்­வித பக்­கச்­சார்­பு­மின்றி நடத்­து­வ­துடன், அவர்­க­ளது உரி­மை­க­ளையும் உறு­தி­செய்ய வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.
அதே­போன்று பெரும்­பான்­மை­யி­னத்­த­வரால் சிறு­பான்­மை­யி­னத்­தவர் மீது வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட போது, குற்­ற­வா­ளிகள் காணொ­லிகள் மூல­மாக அடை­யாளங் காணப்­பட்­டாலும் கூட இன்­னமும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டில் இடம்­பெற்ற அளுத்­கம வன்­மு­றையை இங்கு குறிப்­பிட முடியும்.

மேலும் உயிர்த்த ஞாயி­று­தினத் தாக்­கு­தல்­களின் பின்னர் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை­ய­ணி­வது தடை செய்­யப்­பட்ட நிலையில், இவ்­வி­ட­யத்தில் முஸ்லிம் பெண்­களை இலக்­கு­வைத்து அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. தொடர்ந்து முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துத் திருத்­தச்­சட்ட விவ­கா­ரத்­திலும் பெண்­களின் திரு­மண வய­தெல்லை, காதி நீதி­மன்­றங்­களில் பெண் நீதி­ப­திகள் நிய­மிக்­கப்­ப­டாமை போன்ற விட­யங்கள் அவ­தா­னத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. அது­மாத்­தி­ர­மன்றி சமூக வலைத்­த­ளங்­களின் ஊடாக அடிப்­ப­டை­வாத, தீவி­ர­வாதக் கருத்­துக்கள் மற்றும் மதம் சார்­பான வெறுப்­பு­ணர்வுப் பேச்­சுக்கள் பரப்­பப்­ப­டு­வதைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.
அரச தலை­வர்­களும், மதத் தலை­வர்­களும் மதம் சார்­பான வெறுப்­பு­ணர்வுப் பேச்­சுக்கள் மற்றும் அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நிலைப்­பாட்­டையும் பாதிக்­கப்­பட்ட, பின்­தள்­ளப்­பட்ட சமூ­கத்­து­ட­னான தமது ஒன்­றி­ணை­வையும் வெளிப்­ப­டுத்த வேண்டும். மதத்­தையும், அர­சி­ய­லையும் தனித்­த­னி­யாகப் பிரிக்க முடி­யாது. அர­சியல் செயற்­பா­டுகள் மத நட­வ­டிக்­கை­களில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். எனவே அர­சி­யல்­வா­திகள் ஒற்­று­மையை ஊக்­கு­விக்க வேண்டும்.

அதே­போன்று அடிப்­ப­டை­வாதம் என்ற சவாலை எதிர்­கொள்ள வேண்­டு­மெனில், முதலில் சட்­டத்தின் ஆட்சி வலு­வா­ன­தாக இருக்க வேண்டும். எந்­த­வொரு நபரால் நாடு நிர்­வ­கிக்­கப்­பட்­டாலும் சட்­டத்தின் ஆட்சி மற்றும் வெறுப்­பு­ணர்­விற்கு எதி­ரான நிலைப்­பாடு என்­ப­வற்­றினால் அடிப்­ப­டை­வாத சவா­லுக்கு முகங்­கொ­டுக்க முடியும். முஸ்லிம் சமூ­கத்­தினர் வழங்­கிய தக­வல்கள் மற்றும் உத­வியின் ஊடா­கவே உயிர்த்த ஞாயி­று­தினத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­களைக் கைது செய்து, நிலை­மையைக் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வர முடிந்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். இவ்­வாறு சமூ­கங்­க­ளுக்கு இடையில் பிணைப்­பையும், ஒன்­றி­ணை­வையும் ஏற்­ப­டுத்­து­வதன் ஊடாக தீவி­ர­வா­தத்தை வெற்­றி­கொள்ள முடியும்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்னர் முஸ்லிம் பிர­தே­சங்­களை இலக்­கு­வைத்து வன்­முறைச் சம்­ப­வங்கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட போது பொலிஸார் அவற்றைத் தடுக்­க­வில்லை என்ற கருத்து பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னரால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. அத்­தோடு ஏற்­பட்ட பாதிப்­புக்­க­ளுக்­கான இழப்­பீ­டு­களும் வழங்­கப்­ப­ட­வில்லை. இவை கவ­னத்­திற்­கொள்­ளப்­பட வேண்­டி­ய­வை­யாக இருக்கின்றன.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வதுடன், வெறுப்புணர்வை முற்றாக இல்லாதொழித்து, அத்தகைய வெறுப்புணர்வு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதேபோன்று சர்வதேச சட்டங்களுக்கும், தரநியமங்களுக்கும் அமைவாக வெறுப்புணர்வுப் பேச்சுக்களைக் கண்காணிப்பதற்கான கட்டமைப்பு ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும்.

மேலும் அரச தலைவர்களும், மதத்தலைவர்களும் வெறுப்புணர்வுப் பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகள் என்பவற்றுக்கு எதிராக வெளிப்படையாகத் தமது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். சுதந்திரமானதும், அமைதியாதுமான சூழல் ஒன்றில் வாழ்வதற்கு ஏதுவான சிறார்களை உருவாக்கும் வகையில் கல்விக் கொள்கையில் விரைவான மறுசீரமைப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.