ஒரு நாட்டின் கல்வித்துறையே புத்திஜீவிகளையும் சிறந்த தலைவர்களையும் உருவாக்குகிறது. அதனாலேயே சர்வதேசத்தில் கல்விக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.
எமது நாட்டில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. கல்விக்கென ஓர் அமைச்சும் உயர்கல்விக்கென மேலுமோர் அமைச்சும் செயற்பட்டு வருகிறது.
எமது மாணவர்களின் பாடத்திட்டத்தில் காலத்துக்குக்காலம் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மாணவர்களின் ஆங்கிலமொழி அறிவினை மேம்படுத்துவதற்கு நாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் வாரத்திற்கு ஒருதினம் பாடசாலைத் தொடர்பாடல் நடவடிக்கைகள் ஆங்கில மொழியில் மேற்கொள்ளப்படுவதற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் திட்டம் வகுத்துள்ளார்.
மாணவர்களின் ஆங்கில மொழியறிவினை உயர்த்துவதற்கே கல்வி அமைச்சர் இத் திட்டத்தை செயற்படுத்தியுள்ளார். அமைச்சரின் இம்முயற்சி பாராட்டத்தக்கதாகும்.
உலகமயமாக்கலின் கீழ் அனைத்து நாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டன வாகவே காணப்படுகின்றன. உலகமயமாக்கலின் பின்னணியில் பல சவால்களும் மேலெழுந்துள்ளன. ஆங்கிலமொழியே தொடர்பாடல் நடவடிக்கைகளுக்கு அவசியமாகிறது.
இலங்கையில் இரண்டாம் மொழியாக ஆங்கிலமே போதிக்கப்படுகிறது.
சில அரசாங்கப் பாடசாலைகளில் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளுக்கு ஆங்கில மொழியில் தோற்றுவதற்கு வாய்ப்புகள் வழங்கப் பட்டுள்ளன. அப்பாடசாலைகளில் ஆங்கில மொழியில் பாடங்கள் போதிக்கப்படுகின்றன.
என்றாலும் பொதுவாக நோக்கும்போது எமது மாணவர்களின் ஆங்கில அறிவு மிகவும் கீழ் மட்டத்திலே இருக்கிறது. ஆங்கிலக் கல்வி தாழ் மட்டத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் ஆங்கில மொழியினைக் கற்பிப்பதற்கு திறமையான, தகுதியான ஆசிரியர் பற்றாக்குறையாகும். பயிற்சி மூலம் வெளியேறும் ஆங்கில ஆசிரியர்கள் மாணவர்களைக் கவரும் விதத்தில் ஆங்கிலம் போதிக்கத் தவறி விடுகிறார்கள்.
கல்வித் துறையில் காலத்திற்குக் காலம் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப் படுகின்றன. என்றாலும் அநேக திட்டங்கள் எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியாத நிலைக்குள்ளாகி விடுகின்றன. திட்டங்கள் அறிமுகப்படுத்துவது மாத்திரமல்ல அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் தரப்பினரும் தமது கடமையினைச் சரியாக மேற்கொண்டாலே வெற்றி இலக்கினை அடையமுடியும்.
கல்வி அமைச்சு மாணவர்களின் ஆங்கில அறிவினை மேம்படுத்த வேண்டும் என்பதை இனங்கண்டு புதிய திட்டத்தினை ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்கது. வாரத்துக்கு ஒரு தினம் அரச பாடசாலைகளில் அனைத்து தொடர்பாடல் நடவடிக்கைகளும் ஆங்கில மொழியிலே மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனுடன் தொடர்புடைய ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டே இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. திட்ட ஆலோசகர்களாகக் கடமையாற்றுவதற்கு 148 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் நாடெங்கிலும் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த 10000 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. 2020 ஆம் ஆண்டில் மேலும் 6000 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு பயிற்சிகள் வழங்கப்படும் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களின் ஆங்கில அறிவு மட்டம் மேம்படுத்தப்படவுள்ளது.
தேசிய கல்வி நிறுவகம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை மேலும் பயன்தரும் வகையில் ஆங்கில மொழியினைக் கற்பிப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வகுப்பறையில் ஆங்கிலமொழியினைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இது தொடர்பான சுற்றுநிருபம் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்கு கல்வி அமைச்சர் திட்டமிட்டுள்ளார். இதனடிப்படையிலே வாரம் ஒரு தினம் வகுப்பறைத் தொடர்பாடல்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் மேற்கொள்ளப்படவுள்ளன.
எமது நாட்டின் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கல்வி என்பது வேலைவாய்ப்புக்கு மாத்திரம் மட்டுப் படுத்தப்பட்டதல்ல. என்றாலும் எமது நாட்டின் கல்வி முறை மூலம் இந்நாட்டு தொழில் சந்தைக்குத் தேவையான தொழிற் தகைமையுள்ளவர்கள் உருவாக்கப்பட வேண்டும்.
அத்தோடு ஆங்கிலமொழி அறிவின் மூலம் தொழிற்சந்தையில் வேலைவாய்ப்புகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். அதனடிப்படையில் ஆங்கில மொழியின் அவசியத்தை கல்வி அமைச்சர் உணர்ந்து மேற்கொண்டுள்ள திட்டம் வரவேற்கத்தக்கது.
vidivelli