விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 05

இஸ்லாமிய கல்விச் சட்டமூலம் : 4/21 இன் இன்னொரு விளைபொருள்

0 909

பாரம்­ப­ரிய மத்­ரஸா கல்வி முறை தீவி­ர­வா­தத்­திற்கு வகை­செய்­கி­றது என்ற ஒரு பிழை­யான எடு­கோளின் பின்­ன­ணியில் மத்­ரஸா கல்­வியை ஒழுங்­கு­ப­டுத்தும் சட்­ட­மூலம் (Madrasa Education Regulatory Bill) எனும் பெயரில் விவா­திக்­கப்­பட்ட மசோதா தற்­போது இலங்கை இஸ்­லா­மிய கல்விச் சட்டம் (Sri Lanka Islamic Education Act) எனப் பெயர் மாற்றம் பெற்­றுள்­ளது. 13 பக்­கங்­களைக் கொண்ட இச்­சட்ட மூலம் 7 பிர­தான பகு­தி­க­ளையும் 36 உப­பி­ரி­வு­க­ளையும் உள்­ள­டக்­கி­யுள்­ளது.

இஸ்­லா­மிய கல்வி நிறு­வ­னங்­களைப் பதிவு செய்தல், மேற்­பார்வை செய்தல், மீள­மைத்தல், ஒழுங்­கு­ப­டுத்தல் மற்றும் கட்­டுப்­ப­டுத்துவதற்கான சட்­ட­மூலம் என இது அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ள­தோடு இஸ்­லா­மிய கல்விச் சட்டம் என இது அழைக்­கப்­படும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. II, III என்­பன இலங்­கையில் இஸ்­லா­மிய கல்விச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் அதி­கார பூர்­வ­மான இஸ்­லா­மிய கல்விச் சபை (Islamic Education Board) இன் தன்மை, இயல்பு, நிய­மனம், அதி­கா­ரங்கள், அதி­கா­ர­பூர்­வ­மான அதன் செயற்­பா­டுகள் குறித்து விரி­வாகப் பேசு­கின்­றன. பகுதி IV இஸ்­லா­மியக் கல்வி நிதி குறித்துப் பேசு­கின்­றது.
ஐந்தாம் பகுதி நிதி மற்றும் கணக்கு மேற்­பார்வை தொடர்­பிலும் ஆறாம் பகுதி நிறு­வனம் குறித்தும் ஏழாம் பகுதி பொது­வான சில விட­யங்கள் சம்­பந்­த­மா­கவும் பேசு­கின்­றது.

இலங்கை கல்வி அமைச்சும்– முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும் இணைந்து உரு­வாக்­க­வுள்ள இஸ்­லா­மிய கல்­விச்­சபை குறித்து பகுதி II உம் பகுதி III உம் முன்­வைத்­துள்ள சட்டப் பிர­மா­ணங்கள் மிகுந்த கவ­னிப்­புக்­கு­ரி­யது. இஸ்­லா­மிய கல்விச் சபையே இனிமேல் இலங்­கை­யி­லுள்ள அனைத்து இஸ்­லா­மிய கல்வி நிறு­வ­னங்­க­ளையும் கண்­கா­ணித்துக் கட்­டுப்­ப­டுத்தி மேற்­பார்வை செய்­ய­வுள்­ளது. இச்­ச­பையில் 11 அங்­கத்­த­வர்கள் இடம்­பெ­ற­வுள்­ளனர். அவர்­களே இதற்­குமேல் மத்­ர­ஸாக்கள் மற்றும் இன்ன பிற இஸ்­லா­மியக் கல்வி நிறு­வ­னங்கள் குறித்து கல்வி அமைச்­சுக்கு ஆலோ­ச­னை­க­ளையும் பரிந்­து­ரை­க­ளையும் முன்­வைக்கும் அதி­கா­ர­பூர்­வ­மான சபை­யாக இயங்­குவர். இச்­சபை குறித்து இச்­சட்­ட­மூ­லத்தில் பின்­வரும் பிர­மா­ணங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

* இஸ்­லா­மிய கல்வி நிலை­யங்­களை ஸ்தாபித்தல், மீள­மைத்தல், ஒழுங்­கு­ப­டுத்தல், மேற்­பார்வை செய்தல், மறு­சீ­ர­மைப்பு செய்து இஸ்­லா­மியக் கல்­வித்துறையை மேம்­ப­டுத்தல் போன்ற பணி­களை இலங்கை இஸ்­லா­மிய கல்விச் சபையே (SLIEB) முன்­னெ­டுக்கும்.

* இச்­ச­பையின் முதல் வேலை­ அரபு மத்­ர­ஸாக்­களைப் பதிவு செய்­வ­தாக இருக்கும். இஸ்­லா­மியக் கற்­கை­களை வழங்கும் அனைத்து நிறு­வ­னங்­களும் கட்­டாயம் பதிவு செய்­யப்­ப­ட­வேண்டும். பதிவு செய்­யப்­ப­டாத நிறு­வ­னங்கள் இயங்­கு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்டா.

*இலங்கைப் பிர­ஜைகள் 11 பேரைக் கொண்ட இலங்கை இஸ்­லா­மிய கல்விச் சபையில் பின்­வ­ரு­மாறு அங்­கத்­த­வர்கள் நிய­மிக்­கப்­ப­டுவர்.

1. இஸ்­லா­மியக் கல்­வித்­து­றையில் ஆழ­மான அறிவு கொண்ட முஸ்லிம் சிவில் சமூ­கத்தின் பொது அங்­கீ­காரம் பெற்ற ஒருவர் இச்­ச­பையின் தலை­வ­ராக கல்வி அமைச்­சினால் நிய­மிக்­கப்­ப­டுவார்.

2. நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ராக கல்வி அமைச்சின் செய­லாளர் அல்­லது கல்வி அமைச்சைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் ஒருவர் நிய­மிக்­கப்­ப­டுவார்.

3. உயர்­கல்வி அமைச்சின் செய­லாளர் அல்­லது உயர்­கல்வி அமைச்சைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் ஒருவர் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­ப­டுவார்.

4. தேசிய கல்வி நிறு­வ­கத்தின் பணிப்­பா­ளரும் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­ப­டுவார்.

5. முஸ்லிம் சமய, கலா­சார விவ­கார அமைச்சின் செய­லா­ளரும் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­ப­டுவார்.

6.முஸ்லிம் சமய, கலா­சார விவ­காரத் திணைக்­க­ளப்­ப­ணிப்­பாளர் நிறை­வேற்­றுக்­கு­ழுவில் இடம்­பெ­றுவார்.

7.இஸ்­லா­மியக் கல்வித் துறைக்குப் பொறுப்­பான பணிப்­பாளர் தனி­யாக நிய­மிக்­கப்­ப­டுவார். (நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பினர்)

8.பட்­டப்­ப­டிப்பைப் பூர்த்தி செய்த இரு இஸ்­லா­மியக் கல்­வி­மான்கள் கல்வி அமைச்­சினால் நிய­மனம் பெறுவர்.

9. இஸ்­லா­மியப் பின்­ன­ணி­யுடன் கூடிய அனு­பவம் கொண்ட இரண்டு முஸ்லிம் முக்­கி­யஸ்­தர்­களும் இச்­ச­பையில் இடம்­பெ­றுவர்.

இவ்­வாறு நிய­மிக்­கப்­ப­டு­கின்ற அல்­லது தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற ஒவ்­வொரு உறுப்­பி­ன­ரது பெயரும் வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­படும். நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­னர்­களின் பத­விக்­காலம் மூன்று ஆண்­டு­க­ளாக இருக்கும். மூன்­றாண்டு முடிவில் அவர்­களை மீள நிய­மிப்­பது குறித்த அதி­காரம் கல்வி அமைச்­சுக்­கு­ரி­ய­தாகும். இதே­வேளை ஒழுக்­காற்றுப் பிரச்­சி­னைகள், ஊழல், மோசடி போன்ற கார­ணங்­களை முன்­னி­றுத்தி பத­விக்­கா­லத்­தின்­போது ஓர் உறுப்­பி­னரைப் பதவி நீக்கும் அதி­கா­ரமும் கல்வி அமைச்­சுக்­குள்­ளது. அதிக பட்சம் 7 பேரைக் கொண்ட ஒரு கூட்­டத்தில் முடி­வு­களை எடுக்க முடியும். குறைந்­தது மாதம் ஒரு முறை இச்­சபை கூடும்.

உத்­தேச இஸ்­லா­மிய கல்விச் சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள இலங்கை இஸ்­லா­மிய கல்விச் சபையின் செயற்­பா­டுகள், அதி­கா­ரங்கள், கடப்­பா­டுகள் குறித்து பகுதி III இல் விலா­வா­ரி­யாக விளக்­கப்­பட்­டுள்­ளது. அவற்றைப் பின்­வ­ரு­மாறு சுருக்கிக் கூறலாம்.

1.இஸ்­லா­மிய கல்வித் துறை குறித்து கல்வி அமைச்­சுக்கும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சுக்கும் தேவை­யான ஆலோ­ச­னை­களை வழங்கல்.

2. இஸ்­லா­மிய கல்விப் புலத்தை விருத்தி செய்து மேம்­ப­டுத்­து­வ­தோடு அது தொடர்­பான ஆய்­வு­களை முன்­னெ­டுத்தல்.

3. இஸ்­லா­மிய கல்வி நிறு­வ­னங்­களை மீள­மைத்தல், ஒழுங்­கு­ப­டுத்தல், மேற்­பார்வை செய்தல், கட்­டுப்­ப­டுத்தல், பதிவு செய்தல் போன்ற பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்கு பின்­வரும் அதி­கா­ரங்­க­ளையும் அச்­சபை கொண்­டி­ருக்கும்.

4. கல்வி நிறு­வ­னங்­க­ளுக்­கான பதி­வு­களை வழங்கல், பதிவை நிறுத்தி வைத்தல் பதிவைப் பின்­வாங்கல் (தர உறுதி அட்­ட­வ­ணைக்­கேற்ப)

5. மதங்­களின் பொதுத்­தன்­மைகள் மற்றும் அடிப்­படை எண்­ணக்­க­ருக்­களைப் புரிந்து கொள்ளும் நோக்கில் இஸ்லாம் அல்­லாத மதங்கள், கலா­சா­ரங்கள் தொடர்­பான ஆய்­வு­களை ஊக்­கு­வித்தல்.

6.பாடத்­திட்­டத்­திலும் கற்­பித்தல் கையே­டு­க­ளி­லு­முள்ள பொருத்­த­மற்ற பகு­தி­களை நீக்­குதல், திருத்­துதல்.

7. ஒப்­ப­டைகள், பரீட்­சை­களை நடாத்தும் பொறுப்பை பரீட்சைத் திணைக்­க­ளத்­திற்கு வழங்கல்.

8. தேசிய கல்வி நிறு­வ­கத்தின் ஊடாக இஸ்­லா­மிய கல்வி நிறு­வன ஆசி­ரி­யர்­களைப் பயிற்­று­வித்தல், வெளி­நா­டு­களில் பட்­டம்­பெற்று வரும் இஸ்­லா­மிய பட்­ட­தா­ரி­க­ளுக்­கான சான்­றி­தழ்­களை தேசிய கல்வி நிறு­வ­கத்தின் மூலம் வழங்கல்.

8. தனி­ந­பர்­க­ளாலும் நிறு­வ­னங்­க­ளாலும் கற்­பிக்­கப்­ப­டு­கின்ற இஸ்­லா­மியக் கற்­கைகள், அரபு மொழி தொடர்­பான நிகழ்ச்­சித்­திட்­டத்­திற்கு அங்­கீ­காரம் அளித்தல்.

9. அர­பு­மொழி மற்றும் இஸ்­லா­மியக் கல்­வியை விருத்தி செய்­வ­தோடு தேசிய கல்விக் கொள்­கைக்கு அமை­வான ஏனைய துறை­க­ளையும் இஸ்­லா­மிய கல்வி நிலை­யங்­களில் விருத்தி செய்தல்.

10. ஒரு தர உறு­திப்­பாட்டு அட்­ட­வ­ணையை (Quality Assurance Manual) தயா­ரித்தல், மத்­ர­ஸாக்­களைப் பதிவு செய்யும் நட­வ­டிக்­கைகள், மாணவர் அனு­மதி, தொடர்ச்­சி­யான கண்­கா­ணிப்பு, கற்­பிக்கும் ஆசி­ரி­யர்­களின் தகுதி, கற்கை நெறிகள், அடிப்­படைக் கீழ் கட்­டு­மானம் என்­ப­வற்றைத் தீர்­மா­னிப்­ப­தற்கு இத்­த­கைய தர உறு­திப்­பாட்டு அட்­ட­வ­ணையே பிர­யோ­கிக்­கப்­படும்.

11. பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் வழி­காட்­டல்கள் மற்றும் பரிந்­து­ரை­க­ளுக்­கேற்ப டிப்­ளோமா சான்­றிதழ், உயர் டிப்­ளோமா சான்­றிதழ் கற்கை நெறி­களை வழங்கல்.

12. பத­வி­களை உரு­வாக்கல், அனைத்து நிரு­வாக விவ­கா­ரங்­க­ளையும் ஒழுங்­கு­ப­டுத்தும் அதி­காரம் இச்­ச­பைக்கு இருக்கும்.

13. பொதுச் சொத்­துக்­களை முகாமை செய்தல், புல­மைப்­ப­ரி­சில்­களை வழங்கல்.

14. உத்­தேச இஸ்­லா­மிய கல்விச் சட்­டத்தின் பிர­காரம் இஸ்­லா­மிய கல்­வித்­துறை தொடர்­பான ஒப்­பந்­தங்கள், உடன்­ப­டிக்­கை­களில் ஈடு­படும் அதி­காரம் இஸ்­லா­மிய கல்விச் சபைக்கு உண்டு.

15. இச்­சபை தனது பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்குத் தேவை­யான கட்­ட­டங்கள், வளா­கங்கள், தள­பா­டங்கள், கரு­விகள், சாத­னங்கள் குறித்து பிரே­ர­ணை­களை முன்­வைக்கும்.

16.இஸ்­லா­மிய கல்­வித்­து­றையை இந்­நாட்டில் மேம்­ப­டுத்­து­வ­தற்கு அவ­சி­ய­மான ஆலோ­ச­னை­களை கல்வி அமைச்­சுக்கு அவ்­வப்­போது வழங்கும்.

17.இஸ்­லா­மிய கல்வி நிலை­யங்­களின் வரு­டாந்த பாதீடு (Budget) மற்றும் செயற்­றிட்ட அறிக்­கையை கல்வி அமைச்சின் செய­லா­ள­ருக்கு முன்­வைத்தல்.

18. தேவை­யேற்­ப­டும்­போது மாகாண கல்வி அமைச்­சுடன் இணைந்து ஆலோ­சனை பெற்றுச் செயற்­படும் அதி­காரம் இஸ்­லா­மிய கல்விச் சபைக்கு உள்­ளது.

19. இச்­சபை ஒழுங்­கு­ப­டுத்தும் குழு (Regulatory Committee), கல்­விக்­குழு (Academic Committee), பாடத்­திட்­டக்­குழு (Syllabus Committee), ஒழுக்­காற்­றுக்­குழு (Discipline Committee) போன்ற குழுக்­களை நிய­மிக்கும்.

உத்­தேச இஸ்­லா­மிய கல்விச் சட்­டத்தின் நான்காம் பகுதி கல்வி நிலை­யங்­க­ளுக்­கான நிதியம் ஒன்று குறித்து பரிந்­துரை செய்­கி­றது. அதன்­படி இஸ்­லா­மிய கல்வி நிதியம் ஒன்று ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்­நிதி அன்­ப­ளிப்­புக்கள், நன்­கொ­டைகள், பரி­சுகள் மக்­களின் உத­வித்­தொ­கைகள் என்­ப­வற்றை உள்­ள­டக்­கி­ய­தாக இருக்கும். அதே­வேளை ஏதேனும் திட்­டங்­க­ளி­னூடே திரட்­டப்­பட்ட நிதியும் இதில் சேர்க்­கப்­படும்.

ஈடு, முத­லீடு என்­ப­வற்றின் மூலம் சம்­பா­திக்­கப்­படும் நிதியும், இதில் உள்­ள­டக்­கலாம். இந்த அனைத்து நிதியும் 2006 ஆம் ஆண்டில் 26 ஆவது இலக்க சட்­டத்தின் படியும் 2017 இன் 12 ஆம் இலக்க சட்­டத்தின் பிர­கா­ரமும் மேற்­பார்வை செய்­யப்­படும். சபையின் தலைவர் உறுப்­பி­னர்­க­ளுக்­கான கொடுப்­ப­னவு மற்றும் உப­கு­ழுக்­க­ளுக்­கான கொடுப்­ப­னவு, சபையின் ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பளம் இதி­லி­ருந்து வழங்­கப்­படும்.

ஒரு அரச வங்­கியின் ஊடா­கவே இத்­த­கைய நிதிக்­கொ­டுக்கல்– வாங்கல் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும்.

இஸ்­லா­மியக் கல்வி நிதி­யொன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான ஏற்­பாட்டை உத்­தேச சட்­ட­மூலம் உள்­ள­டக்­கி­யி­ருப்­பது மத்­ர­ஸாக்­களின் நிதி சார்ந்த வெளிப்­படைத் தன்­மையைப் (Transperancy) பாது­காப்­ப­தற்கு உதவும் என்று கூறப்­ப­டு­கின்­றது. அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்குக் கிடைக்கும் மானி­யங்கள், நன்­கொ­டைகள், அன்­ப­ளிப்­புகள், உத­வித்­தொ­கைகள் என்­ப­வற்றைக் கண்­கா­ணித்து மேற்­பார்வை செய்யும் அதி­கா­ரங்கள் இனிமேல் இஸ்­லா­மிய கல்விச் சபைக்கே இருக்­கப்­போ­கின்­றது.

இஸ்­லா­மிய கல்விச் சட்­ட­மூ­லத்தைப் படித்துப் பார்க்­கும்­போது அதில் மென்­மேலும் திருத்­தங்கள் முன்­வைக்­கப்­ப­டலாம் என்­பதை ஊகிக்க முடி­கின்­றது. தொடக்­கத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட சட்­ட­மூ­லத்தின் பெயர் புதி­தாக மாற்றம் பெற்­றுள்­ள­தோடு சில உறுப்­பு­ரைகள் நீக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. சில மங்­க­லான மொழியில் உள்­ளன. சில நட­வ­டிக்­கை­க­ளுக்­கான பூர­ண­மான பொறி­முறை பரிந்­து­ரைக்­கப்­ப­ட­வில்லை. சற்று அவ­சர அவ­ச­ர­மாக வரை­யப்­பட்­டது போலவே தோன்­று­கி­றது.

இத்­த­கைய ஒரு சட்­ட­மூலம் பாரா­ளு­மன்றில் நிறை­வேற்­றப்­பட்டு அமு­லுக்கு வரும்­போது கல்வி அமைச்சின் பொறுப்­பு­களும் கடப்­பா­டு­களும் மேலும் விரி­வ­டையப் போகின்­றது. அதே­வேளை நாட்­டி­லுள்ள அனைத்து கல்வி நிறு­வ­னங்கள், நிரு­வாகம், நிதிக்­கட்­ட­மைப்பு, பாடத்­திட்டம் என எல்­லா­வற்­றையும் தலையில் கட்டிக் கொள்­வ­தற்கு மேல­திக ஒதுக்­கீடும் அவ­சி­ய­மா­க­வுள்­ளது.
பாடத்­திட்­டங்­களை ஒரு­மு­கப்­ப­டுத்தல் என்­பது மிகக்­க­டி­ன­மான ஒரு பணி. சர்­வ­தேச பாட­சா­லை­களை ஒழுங்­கு­ப­டுத்­து­வது குறித்து முன்னாள் கல்வி அமைச்சின் செய­லாளர் கலா­நிதி தாரா டி.மெல் அவர்­களின் காலத்­தி­லி­ருந்தே பல பரிந்­து­ரைகள் ஆலோ­ச­னைகள், எண்­ணக்­க­ருக்கள், கல்வி அமைச்­சுக்கு முன்­வைக்­கப்­பட்ட போதும் அவை எதுவும் நடை­மு­றைக்கு வர­வில்லை. அது போன்றே தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையை எமது பாட­சாலைக் கல்­வி­மு­றையில் இருந்து நீக்­க­வேண்டும் என்ற கோஷம் கடந்த பத்­தாண்­டு­க­ளாக எழுப்­பப்­பட்டு வரு­கின்­றது. எதுவும் நடந்­த­பா­டில்லை. “பிரி­வென” எனப்­படும் பௌத்த கல்வி நிறு­வ­னங்­களும் ஏலவே கல்வி அமைச்சின் கீழ் இயங்­கு­கின்­றன. எனினும் அதனை முழு­மை­யாகப் பரா­ம­ரிப்­பது பௌத்த கலா­சார அமைச்சு என்­பதால் கல்வி அமைச்சின் பாரம் குறைந்­துள்­ளது.

இவ்­வா­றான ஒரு சூழலில் உத்­தேச இஸ்­லா­மிய கல்விச் சட்­ட­மூலம் எந்­த­ள­வுக்கு நடை­மு­றைக்கு வரும் என்­பது ஒரு சிக்­க­லான கேள்­வியே. தற்­போது நாட்டில் நிலவும் அசா­தா­ரண சூழ்­நி­லையை முகாமை செய்­வதன் ஒரு பகு­தி­யா­கவும் சிங்­கள சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு சில அர­சி­யல்­வா­தி­களின் கோரிக்­கைக்கு செவி­சாய்த்தும் அர­சாங்கம் இச்­சட்­ட­மூ­லத்தைத் தயா­ரித்­துள்­ளது. ஆனால் அமு­லாக்கல் என்­பதில் பல்­வேறு சவால்கள் உள்­ளன. 11 பேர் கொண்ட ஒரு சபை­யினால் மட்டும் இதனை வழி­ந­டத்திச் செல்­ல­லாமா என்­பது ஒரு முக்­கிய கேள்­வி­யாகும்.

மத்­ர­ஸாக்­களை அரச கண்­கா­ணிப்பின் கீழ் கொண்டு வரு­வ­தற்கும் மொத்­த­மாக அவற்றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும் இடையில் பெரிய வேறு­பாடு உள்­ளது. கல்வி அமைச்சின் கீழ் கொண்­டு­வ­ரு­வதால் பல நன்­மைகள் நேரும் என்ற வாதம் ஒரு புறம் முன்­வைக்­கப்­படும் அதே­வேளை அரச தலை­யீ­டுகள் எதிர்­கால இஸ்­லா­மியக் கல்­வித்­து­றையின் சுயா­தீ­னத்­தையும் சுமு­க­மான இயக்­கத்­தையும் பாதிக்­கலாம் என்ற கருத்தும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.

குறிப்­பாக உத்­தேச இஸ்­லா­மிய கல்விச் சபைக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்கள், இஸ்­லா­மிய கல்வி நிறு­வ­னங்­களின் வேக­மான வளர்ச்­சிக்கு இடை­யூ­றாக அமை­யலாம். ஏனெனில் தீர்­மானம் எடுக்கும் செயன்­முறை தாம­த­ம­டை­யலாம் என்று அபிப்­பி­ரா­யங்கள் தெரிவிக்கப்படுகின்றன. மிக முக்கியமான முடிவுகளை கல்வி அமைச்சின் ஊடாகவே பெறவேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் இந்த வாதம் நியாயமானதாகவே தோன்றுகிறது.

இதேபோன்று கலைத்திட்டத்தை வரைவதில் என்ன வகையான சிந்தனைப்பள்ளிகள் (School of Thoughts) செல்வாக்குச் செலுத்தப்போகின்றன என்பதும் கேள்விக் குறியாகும். பாரம்பரிய பழைமைவாத சிந்தனையின் தாக்கம் கலைத்திட்ட வரைபில் ஏற்படுமானால் அது ஒட்டுமொத்த மத்ரஸாக் கல்வியின் நோக்கத்தையே பாழ்படுத்தி விடும்.

ஏலவே சமூகத்தில் இயங்கும் மத்ரஸாக்கள் ஒரே வகையின் கீழ் கொண்டுவர முடியாத பல்வேறு முகாம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் முரண்களாகவே உள்ளன.

இந்நிலையில் நிருவாகம், நிதிமேற்பார்வை, சீருடை, விடுமுறை மதிப்பீட்டு முறைகளில் ஒருமைத் தன்மையை (Uniformity) கொண்டு வருவது சிரம சாத்தியமாயினும், கலைத்திட்டத்தில் மத்ரஸாக்களை ஒருங்கிணைப்பது மிகக் கடினமான பணியாகும்.

நூற்றாண்டுகாலப் பழைமை வாய்ந்த மத்ரஸாக்கள் உள்ளிட்ட அமைப்பு, இயக்க கருத்தியல்களால் கட்டுண்டு போயுள்ள மத்ரஸாக்களே பெரும்பாலும் சமீபத்திய வரவுகளாகும்.

இவற்றை ஒழுங்கமைப்பது என்பது இஸ்லாமிய கல்விச் சட்ட மூலத்தின் வசனங்களை அமைப்பது போல இலகுவானதல்ல. ஒரு தேர்தல் நெருங்கி வருகின்றது. அரசாங்கம் மாறும் வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளின் கோட்பாடுகள் மாறப்போகின்றது. இந்நிலையில் இஸ்லாமிய கல்விச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டியுள்ளது. இது நடக்கப்போகும் ஒன்றா இல்லையா என்பதை இனிவரும் காலமே தீர்மானிக்கப்போகின்றது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.