46 வருடகாலமாக உறுதியான கொள்கைகளுடன் தூய்மையான அரசியலில் ஈடுபட்டிருக்கும் நான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியிலோ அல்லது தாமரை மொட்டுக் குழுவிலோ இணைந்து கொள்ளப்போவதில்லை எனவும் அவற்றுடன் தொடர்புகளைப் பேணவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து சிலரை பிரித்தெடுத்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைக்க முயற்சிக்கிறார் என அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலே அவர் அறிக்கையொன்றினை வெளியிட்டு தனது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தியுள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெறுமதி மிக்க தூய்மையான கொள்கைகளுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள முயற்சித்தாலும் என்னால் அவ்வாறு முடியாது.
17 வருடகாலமாக வீழ்ச்சி நிலைக்குச் சென்றிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மீண்டும் உயிர்கொடுத்து கட்டியெழுப்பி ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொடுத்து 25 வருடங்கள் ஆட்சி செய்வதற்கு கட்சியைப் பலப்படுத்திய நான் ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைவிட்டுச் செல்லப் போவதில்லை என்பதை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
நான் ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது தாமரை மொட்டு குழுவுடனோ இணைந்துகொள்ளப்போவதில்லை என்பதை தெளிவாகத் தெரிவிக்கின்றேன்.46 வருடகாலமாக கொள்கைகளுடன் கூடிய தூய்மையான அரசியலில் ஈடுபட்டு வரும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெறுமதி மிக்க கொள்கைகளுக்கு எதிரான தாமரை மொட்டு அல்லது வேறு குழுவினருடன் இணைந்து கொள்ளப்போவதில்லை. வேறு எவருக்கும் இணைந்து கொள்ளமுடியும் என்றாலும் அது என்னால் முடியாது.
அரசியலில் சுயநலன் கருதி அடிக்கடி பல்வேறு கட்சிகளை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் என்னை இக்கட்சியிலிருந்தும் விரட்டியடிப்பதற்கு அல்லது நீக்கிவிடுவதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருவது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
2005 ஆம் ஆண்டின் பின்பு இந்நாடு அன்றைய ஆட்சியாளர்களால் அழிவுக்குள்ளாக்கப்பட்டிருந்தது. இந்த நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு பலவாறான எதிர்பார்ப்புகளுடன் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானமொன்றினை எடுத்து அதிகாரத்தை கையளித்தார்கள்.
இதனை உணரமுடியாத நாட்டின் தலைவர் மக்களின் கனவுகளை அழிவுக்குட்படுத்திவிட்டார்.
இன்று நாட்டின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏனைய பிரதான கட்சியும் பல பிரிவுகளாக பிளவுபட்டுள்ளன. இவ்வாறான நிலையினால் நாடு என்றுமில்லாத அசாதாரண நிலையை எதிர்நோக்கியுள்ளது.
நாட்டை இந்நிலையிலிருந்து மீட்பதற்கு கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நாட்டினை ஆதரிக்கும் அன்பு செலுத்தும் ஊழல்களை எதிர்க்கும் அனைத்து அமைப்புகளும் குழுக்களும் ஒன்றுபட வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நலனுக்கு செயற்படுவதற்கு கட்சிக்குள் எனது நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப் பட்டிருந்தாலும் கட்சியைப் பாதுகாப்பதற்கு நான் என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். நாட்டுக்காக தெளிவான வேலைத்திட்டங்களுடன் கூடிய பலமான தலைமைத்துவத்துடன் முன்னிற்கும் தூய்மையான அணிக்கு நான் எனது ஆதரவினை வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.
-Vidivelli