மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளில் 75 வீதமானோர் முஸ்லிம்கள் என்பது கவலைக்குரியது
ஓய்வு பெற்றுச் செல்லும் சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கே.எம்.எச்.யு.அக்பர்
நீண்ட காலமாக சிறைச்சாலைகள் துறையில் கடமையாற்றிய நிலையில் கடந்த 16.08.2019 முதல் ஓய்வு பெற்றுச் செல்லும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் கே.எம்.எச்.யு.அக்பர் ‘விடிவெள்ளி’ க்கு வழங்கி செவ்வி.
நேர்கண்டவர்: எம்.எஸ்.எம்.நூர்தீன்
Q சிறைச்சாலை அதிகாரி பதவிக்கு நீங்கள் வந்தது எப்படி?
பதில்: நான் சிறைச்சாலையிலே இரண்டாம் தர ஜெயிலராக 1985 ஆம் ஆண்டு பதவி ஏற்றேன்.
நான் இந்தப் பதவி ஏற்பதற்கு முன்பு விளையாட்டுத்துறையில் உதைபந்தாட்டத்தில் மிகவும் முன்னிலையில் இருந்தேன். 1984 ஆம் ஆண்டு அநுராதபுரத்தில் நடந்த “கம்உதாவ ” எனும் ஒரு உதைபந்தாட்ட போட்டியில் அநுராதபுர மாவட்ட உதைபந்தாட்ட அணிக்காக விளையாடினேன். அப்போது நான் அநுராதபுர அணிக்குக்கு கெப்டனாக இருந்து அணியை நடத்தினேன்.
அப்போது அந் நிகழ்வுக்கு தலைமை தாங்கி பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அன்றைய பிரதம மந்திரி ரணசிங்க பிரமதாச என்னைக் கண்டு இந்த விளையாட்டு வீரரை ஏன் நீங்கள் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு எடுக்கவில்லை என்று பயிற்றுவிப்பாளரிடம் கேட்டார். அதன்பின் எனக்கு தேசிய உதைபந்தாட்ட அணியில் இடம் கிடைத்தது. அதன் ஊடாகத்தான் எனக்கு சிறைச்சாலையில் இரண்டாம் தர ஜெயிலராக தொழில்வாய்ப்பு கிடைத்தது.
Q இரண்டாம் தர ஜெயிலராக பதவி ஏற்ற நீங்கள் இறுதியாக சிறைச்சாலை இரண்டாம் தர உதவி அத்தியட்சகராப பதவி உயர்வு பெற்றீர்கள். இந்த பதவியுயர்வுகள் எவ்வாறு கிடைக்கப் பெற்றன?
பதில்: முதலில் நான் பத்து வருடங்களாக வெலிக்கடை சிறைச்சாலையில் கடமையாற்றினேன். அதன் பின்பு நான் அநுராதபுரத்திற்கு மாற்றமாகி ஏழு வருடங்கள் அங்கு கடமையாற்றினேன். அநுராதபுரத்தில் இருந்து மீண்டும் நான் பதுளைக்கு சென்று பிரதான ஜெயிலராக கடமையாற்றி மீண்டும் அநுராதபுரத்திற்கு வந்தேன். பின்னர் கண்டி போகம்பர சிறைச்சாலையில் மூன்று வருடங்கள் கடமையாற்றி அதன்பின் பல்லேகல சிறைச்சாலையில் பிரதம ஜெயிலராக கடமையாற்றினேன். பிற்பாடு உதவி அத்தியட்சகராகப் பதவி உயர்ந்து முதன் முதலாக வவுனியா சிறைச்சாலைக்கு என்னை இடம் மாற்றினார்கள். அங்கு நான் பதினொரு மாதங்களாக கடமையாற்றிய போதுதான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற ஓர் அசம்பாவிதத்தின் காரணமாக என்னை உடனடியாக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு உதவி அத்தியட்சகராக நியமித்தனர்.
Q உங்களுடைய எல்லா பதவி இடமாற்றங்களும் “புனித ரமழான் “மாதத்திலேதான் இடம் பெற்றதாக நீங்கள் ஒரு வைபத்திலே கூறினீர்கள். அதைப் பற்றி சொல்லுங்கள்….?
பதில்: இந்த இடமாற்றங்கள் எல்லாம் அதிசயமான முறையில் இடம் பெற்றது என்று என்னால் கூற முடியும்.
எனது இடமாற்றங்கள் எல்லாமே நோன்பு காலமாகவே இந்தது. நோன்பு நோற்றவனாகவே நான் இடமாற்றம் பெற்றிருந்தேன். அது மிகவும் அருமையான ஒரு நிகழ்வு.
Q இந்த மட்டக்களப்பு சிறைச்சாலையில் எத்தனை வருடங்கள் உதவி அத்தியட்சகராக கடமையாற்றியுள்ளீர்கள்?
பதில்: நான்கு வருடங்களும் ஒரு மாதமும் கடமையாற்றியுள்ளேன்.
Q உங்களது சிறைச்சாலை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சம்பவத்தை கூறமுடியுமா?
பதில்: மறக்க முடியாத சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. அந்த வகையில் கடைசியாக நடந்த மறக்க முடியாத சம்பவம்தான் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம். அந்த சம்பவத்தை ஒரு நாளும் நான் மறக்கமாட்டேன்.
தினமும் தஹஜ்ஜத் தொழுதுவிட்டு நடந்துதான் சுபஹ் தொழுவதற்காக மட்டக்களப்பு ஜும்ஆ பள்ளிக்குச் செல்வேன். அன்றும் சுபஹ் தொழுதுவிட்டு வந்து இருக்கும் போது பெரிய வெடிச் சத்தம் கேட்டது. எனது உத்தியோகத்தர்கள் ஓடி வந்து என்னிடம் விடயத்தைக் கூறினார்கள். நான் எனது உத்தியோகத்தர்களை சியோன் தேவாலயத்துக்கு அனுப்பினேன். அங்கே ரத்த வெள்ளத்தல் கிடந்தவர்களை எல்லாம் எமது உத்தியோகத்தர்கள்தான் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இவை நடந்து முடிந்து ஒரு சில நாட்களின்பின் தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருக்கும் போது நான் எதேச்சையாகக் கண்டேன். அந்த தேவாலயத்தில் குண்டு வைப்பதற்காக வந்தவன் மட்டக்களப்பு ஜாமி யுஸ் ஸலாம் பள்ளிக்கு தொழுவதற்காக செல் லும் காட்சி. அந்த வீடியோவில் அவன் எனதருகில் நின்றுதான் சுபஹ் தொழுதிருக்கிறான் என்பதைக் கண்டு அதிர்ந்து விட்டேன்.
இந்தக் காட்சியைக் கண்ட பின்பு எனக்கு மனதில் பெரிய பயமும் பதற்றமும் ஏற்பட்டது. அந்த இடத்தில் அந்தக் குண்டு வெடித்திருந்தால் இப்போது உங்களுக்கு இந்த பேட்டி எடுக்கும் சந்தர்ப்பமும் கிடைத்திருக்காது. அதன் பின் அந்த அதிர்ச்சியால் சில மாதங்களாக நான் சுபஹ் தொழுகைக்கு பள்ளிக்குப் போவதையே நிறுத்தி விட்டேன்.
Q மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகராக இருந்து விடைபெறும் இந்த சந்தர்ப்பத்திலே மட்டக்களப்பு சிறைச்சாலையை பொறுத்த வரைக்கும் முஸ்லிம்களுடைய எண்ணிக்கை வீதம் என்ன? எவ்வாறான குற்றச்சாட்டில் இவர்கள் கூடுதலாக சிறைச்சாலைக்கு வருகிறார்கள்?
பதில்: நான் ஒரு முஸ்லிம் என்ற வகையில் மிகவும் கவலைக்குரிய விடயம். அதை சொல்வதற்கே மனம் சங்கடமாக இருக்கிது.
முதன் முதலாக நான் 2017 ஆம் ஆண்டு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வரும் போது நூற்றுக்கு இருபத்தைந்து வீதம்தான் முஸ்லிம்கள் இருந்தார்கள். இப்போது நூற்றுக்கு எழுபத்தைந்து வீதம் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். போதைப்பொருட்கள், மோசடிகள் இவைகளுக்காக தான் இவர்கள் அதிகம் வருகின்றனர்.
ஏனைய சமூகத்தவர்களைப் பார்த்தால் அவர்கள் சிறு சண்டைகள், மனைவிக்கு பணம் கட்டாமை இது போன்ற வழக்குகளுக்கே வருகின்றனர். எமது சமூகம் சீரழிந்து போய்விட்டது என்பதைத்தான் இந்த எண்ணிக்கைகள் காண்பிக்கின்றன.
எனது சிந்தனைக்கெட்டிய வகையில், எமது சமூகம் இந்த நிலைக்குத் தள்ளப்படக் காரணம் அவர்கள் கல்விக்குக் கொடுகின்ற முக்கியத்துவம் குறைந்து கொண்டு போவதாகும். பெண் பிள்ளைகளை சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கின்றார்கள். ஆண் பிள்ளை என்றால் தந்தையின் தொழில்களுக்கு அனுப்புகின்றார்கள். இந்த நிலமை மாற வேண்டும்.
பிள்ளைகளுக்கு கல்வியறிவை கொடுக்க வேண்டும். கல்வியறிவினால் தான் இந்த சமூகத்தின் நிலையை மாற்றி குற்றச் செயல்களைக் குறைக்கலாம் என்பது எனது நம்பிக்கை.
Q உங்களுடைய அடைவுகளுக்கு குடும்பத்தின் ஒத்துழைப்பு எவ்வாறு அமைந்தது?
பதில்: எனது இந்த நிலைக்கு காரணம் எனது மனைவி, பிள்ளைகள்தான் என்பதில் ஐயமே இல்லை. என்னை ‘தஹஜ்ஜத்’ தொழுவதில் ஆர்வமூட்டியதும் சுபஹ் தொழுகைக்கு பள்ளிக்கே சென்று தொழ வேண்டும் என்பதிலும் அதிக அக்கறை காட்டியவரும் என் மனைவி தான். ஐந்து வேளை தொழுகையை தொழுவதன் முக்கியத்துவத்தை ஏற்படுத்தித் தந்தவர்கள் என் மனைவி, பிள்ளைகளே. தினமும் தஹஜ்ஜத், சுபஹ் தொழுவதன் மூலம் நல்ல மாற்றத்தை உணர முடியும். என்னில் ஏற்பட்ட நல்ல மாற்றம் உங்களுக்கும் ஏற்படவேண்டும். எல்லோரும் “தஹஜ்ஜத், சுபஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அதில் தான் உயர்வும் இறைவனின் அருளும் இருக்கின்றது.
Q கடைசியாக நீங்கள் கூற விரும்புவது?
பதில்: நான் கூறுவது ஊடகவிய லாளர்கள், பள்ளித் தலைவர்கள், உலமாக்கள் எல்லோருமே தமது குடும்பத்தில் இருந்து நல்ல பிள்ளைகளை உருவாக்குங்கள். கல்வியை பிள்ளைகளுக்குக் கொடுங்கள், பிற சமூகத்துடன் ஒற்றுமையாக வாழ கற்றுக் கொடுங்கள்.
vidivelli