பண வசதியும் உடல் பலமும் இருப்பவர்களுக்குத்தான் அல்லாஹ் ஐந்தாம் கடமையை கட்டாயப்படுத்தியிருக்கிறான். சாதாரண வருமானம் பெறுபவர்களுக்கு ஹஜ் யாத்திரை ஒரு கனவாகத்தான் இருக்கும். எனினும், குறித்த கனவு எதிர்பாராத நேரத்தில் நிறைவேறுவதானது ஓர் இன்ப அதிர்ச்சியாகவே இருக்கும். அப்படியானதொரு அனுபவம் கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி எனக்கு ஏற்பட்டது.
ஊடகவியல் கல்லூரியில் படித்த சகமாணவனும் எனது நண்பனுமான ரிப்தி அலி சில மாதங்களுக்கு முன்னர் என்னை தொடர்புகொண்டு, “இம்முறை ஹஜ் செய்வதற்கான வாய்ப்பு கிட்டலாம், இருந்தாலும் அதனை முழுமையாக நம்பியிருக்காதே. அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கும்” என தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக பெரிதும் ஆவல் கொண்டிராதவனாக சாதாரணமாகவே இருந்தேன்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்தின் அதிகாரிகள் தொடர்புகொண்டு அங்கு வரும்படி அழைப்புவிடுத்தனர். இதன்படி நண்பன் ரிப்தியுடன் அங்கு சென்றபோது, உலக முஸ்லிம் லீக்கின் விருந்தினராக இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கும் உலக முஸ்லிம் லீக்கின் வருடாந்த ஹஜ் மாநாட்டில் கலந்துகொள்வதற்குமான அழைப்பிதழ் கிடைத்திருக்கின்றமையை தெரியப்படுத்தினர். மிகவும் சினேகிதமாக பேசிய சவூதி தூதரக அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதை குறிப்பிட்டதுடன் வாழ்த்துக்களும் தெரிவித்து, டிக்கெட்டுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு வேண்டிக்கொண்டனர்.
இதற்கமைய கடந்த 6 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஹ்ராம் உடையுடன் எமது யாத்திரை ஆரம்பமானது. மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், அவரது பாரியார் பெரோஸா முஸம்மில், பாராளுமன்ற உறுப்பினர்களான அலிஸாஹிர் மௌலானா, ஏ.ஆர். இஸாக் ஆகியோருடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உபசெயலாளர் தாஸிம் மௌலவியும் உலக முஸ்லிம் லீக்கின் அழைப்பில் மக்கா நோக்கி பயணமானோம்.
ஜித்தா விமான நிலையத்தில்
ஜித்தா விமான நிலையத்தின் ஹஜ்ஜாஜிகள் பயண தொகுதிக்குள் அலுவல்களை இலகுபடுத்துவதற்கென அதிகமான அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதுதவிர உலக முஸ்லிம் லீக்கின் அதிகாரிகளும் இன்முகத்துடன் தமது விருந்தினரை வரவேற்றனர்.
அத்துடன், இலங்கையர்களை வரவேற்பதற்கும், இலங்கையர்களின் பிரச்சினைகள் குறித்து பார்ப்பதற்கும் சவூதி தூதரக அதிகாரியொருவரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் அங்கு பயணிகளின் பொதிகள் மற்றும் இதர சிக்கல் ஏற்படும்போது அதற்கான உதவிகளை செய்துகொடுத்தார்.
விமான நிலையம் முன்னரை விட மிக வேகமாக இயங்கக் கூடிய வகையில் இலத்திரனியல் முறைமைகள் அறிமுகப் படுத்தப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருந்தது.
அங்கிருந்த சிற்றூழியர்கள் கூட ஹஜ்ஜாஜிகளுக்கு உதவுவதைக் காணக்கிடைத்தது. இலங்கையை சேர்ந்த தமிழ் சகோதரர் ஒருவர் அங்கு சிற்றூழியராக பணியாற்றுவதுடன், இலங்கை யாத்திரிகர்கள் வந்தவுடன் அந்த இடத்திற்கு வந்து பல்வேறு உதவிகளைச் செய்துகொடுத்தார்.
கஃபாவை நோக்கி
விமான நிலையத்திலிருந்து மினா நோக்கிப் பயணமானோம். மினாவில் உலக முஸ்லிம் லீக்கின் விசேட அலுவலகம் அமையப்பெற்றிருக்கிறது. அங்கு அழைத்துச் செல்லப்பட்டு எமது பதிவு நடவடிக்கைகளின் பின்னர் உம்ராவை நிறைவேற்ற ஹரமுக்கு சென்றோம்.
“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்” என தொடங்கும் தல்பிய்யாவுடன் உம்ரா பயணம் தொடர்ந்தது. இறையில்லத்தில் எம் கால் தடங்கள் பதியப்போகும் சந்தோஷம் ஆழ் மனதை பூரிப்படையச்செய்தது. நம் பாவங்களை கழுவும் இறைவனின் புனித பூமியை தொட்டவுடன் நமக்காகவும் நம் உறவுகள் சகபாடிகள் மற்றும் தேசத்துக்கான பிரார்த்தனைகளோடு ஹரம் ஷரீபுக்குள் உள்நுழைந்தோம்.
ஏழு சுற்றுக்கள் தவாப், சபா மர்வாக்கிடையே ஏழு ஸயீக்களை முடித்துக்கொண்டும் ஹரமில் சுபஹ் தொழுகையை நிறைவேற்றியவர்களாக மீண்டும் மினாவுக்கு சென்றோம்.
மினாவில்
ஹஜ்ஜில் அதிக நாட்கள் தரித்து நிற்கும் ஓர் இடம்தான் மினா பள்ளத்தாக்கு. அங்கு ஹாஜிகள் தங்குவதற்கான கூடாரங்கள் அமையப் பெற்றிருக்கின்றன. அத்தோடு, அங்குள்ள பிரமாண்டமான பள்ளிவாசலான மஸ்ஜிதுல் கைப், ஹஜ் பருவகால வணக்கங்களுக்காக திறக்கப்பட்டிருந்தது.
துல்ஹஜ் பிறை 9 இல் மினாவிலிருந்து இஹ்ராம் அணிந்து ஹாஜிகள் அரபாவிற்கு பயணமாகத் தயாராவர். ஆக நாம் அங்கு பிறை 6 இலேயே சென்றுவிட்டோம். மினா சனநடமாட்டமின்றி அமைதியாகவே இருந்தது. பிறை 8 இன் இரவிலேயே மினாவை நோக்கி ஹாஜிகள் வர ஆரம்பித்துவிட்டனர். அதற்கு முன்னதாக பாதுகாப்புத் தரப்பினரும் சுத்தம் செய்யும் பணியில் ஈபடுபவர்களும் மினாவில் முகாமிட்டிருந்தனர்.
அத்துடன், மினாவிலுள்ள அவசர சிகிச்சை வைத்தியசாலை மற்றும் பொலிஸ் அவசர பிரிவுகளும் தீயணைப்பு பிரிவு உள்ளிட்ட சேவைகளை வழங்க தயார் நிலையிலிருந்தன. ஹெலிகொப்டர்களும் பறந்தவண்ணம் இருந்தன.
அரபா மைதானம்
பிறை 9 சுபஹ் தொழுகையுடன் அரபா நோக்கி பயணமானது முஸ்லிம் லீக்கின் வாகனத் தொடர். சூரிய உதயத்துடன் அரபாவை அடைந்தோம். அங்கு மஸ்ஜிதுந் நம்ர் உள்ளது. அங்கு மக்கள் வெள்ளம் திரண்டது. பள்ளிவாசலுக்கருகே ஒரு பகுதி உலக முஸ்லிம் லீக் விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. லுஹர் வரை திக்ருடனும் குர்ஆன் ஓதுவதுடனும் நேரம் கழிந்தது.
லுஹர் தொழுகையை தொடர்ந்து ஹஜ் பேருரை இடம்பெற்றது. ஹஜ்ஜின் மகத்துவம் மற்றும் அதன் தாற்பரியங்கள் பற்றி எடுத்துரைத்த இமாம் உலக சமாதானம் அதில் நமது பங்களிப்பு குறித்தும் வலியுறுத்தினார்.
அரபாவில் மழை
அரபா பேருரை நிறைவடைந்து மக்கள் துஆக்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது அங்கு மழை பெய்ய ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மழை தொடர்ந்தது. இலங்கையில் பெய்யும் அடை மழை போல் இல்லையென்றாலும் சவூதி பாலை நிலத்தில் மழை பெய்வது வியப்பானதொரு நிகழ்வாக அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. ஏனெனில் நாம் அடிக்கடி மழையுடனான பருவ காலத்தை சந்திப்பதாலோ என்னவோ சாதாரணமாக எடுத்துக்கொண்டோம், எனினும் ஏனையோர் வெளியில் சென்று கொட்டும் மழையில் இருகரம் ஏந்தி இறைவனுக்கு நன்றி தெரிவித்து துஆப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
முஸ்தலிபாவில்
சூரியன் அஸ்தமனமாகும் போது அரபாவிலிருந்து வெளியேறத் தொடங்கினர் ஹாஜிகள். அங்கிருந்து முஸ்தலிபா நோக்கி பயணம் தொடர்ந்தது. அங்கு சென்ற பின்னர் மஃரிப் மற்றும் இஷா தொழுகைகளை சேர்த்து தொழுதுகொண்டனர். எமக்கு பிரத்தியேகமாக இட ஒதுக்கீடு இருந்தபோதிலும் பெரும்பாலான ஹாஜிகள் வீதிகளிலும் அங்கும் இங்குமாக தரித்திருந்து அன்றைய இரவைக் கழித்தனர்.
தவாபுல் இபாழா
நள்ளிரவு தாண்டும் போது முஸ்தலிபாவிலிருந்து கற்களை எடுத்துக்கொண்டு மினா நோக்கிச்சென்றோம். அங்கு ஷைத்தானுக்கு கல்லெறிந்துவிட்டு கஃபா நோக்கிச்சென்று அங்கு தவாபுல் இபாழாவை நிறைவேற்றினோம். தொங்கோட்டம் ஆரம்பமானபோது அன்னை ஹாஜரா நாயகியின் கஷ்டத்தை உணர முடிந்தாலும் நாம் குளிரூட்டப்பட்ட சபா மர்வாவுக்கிடையேதான் ஓடுகின்றோம் என்ற குற்ற உணர்வு வராமலில்லை. தொங்கோட்டம் நிறைவடைய தலை முடியை சிரைத்துக்கொண்டு மீண்டும் மினாவுக்கு வந்து இஹ்ராம் உடையைக் களைந்தோம்.
ஹஜ்ஜின் இறுதித் தறுவாயில்
பிறை 11,12,13 ஆகிய தினங்களில் மினாவில் தரித்து மூன்று ஜம்ரத்துகளுக்கு கல்லெறிந்ததுடன் நாடுதிரும்பும் தினமான 17 ஆம் திகதி இறுதி பிரியாவிடை தவாபையும் முடித்துக்கொண்டு நாடு திரும்பினோம். மினாவில் தரித்திருந்தபோது அரை மணி நேரம் கடும் மழை பொழிந்ததில் சாதாரண வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
மினா கூடாரங்களில் தங்கியிருக்கும் இலங்கை ஹாஜிகளை பார்ப்பதற்காக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றிருந்தோம். மிகவும் சிறிய இடங்கள் தான் எல்லோருக்கும் பொதுவாகவே ஒதுக்கப்பட்டிருந்தன. எதிர்காலத்தில் இதனை விரிவாக்க வேண்டிய தேவைகள் இருக்கின்றன.
முஸ்லிம் லீக்கின் விருந்தோம்பல்
இம்முறை ஹஜ்ஜிற்கு 2.5 மில்லியன் மக்கள் வரை ஒன்றுகூடினர். இதில் உலக முஸ்லிம் லீக்கின் விருந்தினர்களாக 76 நாடுகளிலிருந்து 500 பேர் வரை வருகை தந்திருந்தனர். எல்லோருக்கும் மிகவும் கண்ணியமளித்து இலகுவான முறையில் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குரிய ஏற்பாடுகளை உலக முஸ்லிம் லீக் மேற்கொண்டிருந்தது. அத்துடன் அவர்களுக்காக உணவு வசதிகள், தங்குமிடம் மற்றும் போக்குவரத்து தேவைகளை மிக இலகுபடுத்திக்கொடுத்ததுடன், ஏற்பாடுகள் சொகுசான முறையிலும் அமைத்திருந்தது.
முஸ்லிம் லீக் வருடாந்த ஹஜ் மாநாடு
முஸ்லிம் லீக்கின் வருடாந்த ஹஜ், உம்ராஹ் மாநாடு 12 ஆம் திகதி மினாவிலுள்ள அவ்வமைப்பின் விசேட அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதன் செயலாளர் முஹம்மத் பின் அப்துல் கரீம் இஸ்ஸா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், முஸ்லிம் உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கத் தயாராதல், அதற்குத் தீர்வைப்பெற விஞ்ஞான ரீதியிலும் அறிவுசார் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் பாடுபட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இஸ்லாத்தின் தூண்களாக கருணை மற்றும் முற்போக்கான சிந்தனை என்பவற்றை முன்னிலைப்படுத்தி இம்மாநாடு இடம்பெற்றது. இதன் மூலம் நாம் பிற சமூகத்துடன் வாழும்போது இஸ்லாத்தின் உண்மையான செய்தியை எடுத்துக்கூற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சாரணியர்களின் பங்களிப்பு
ஹஜ் காலத்தில் சாரணியர் அமைப்பினரின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது. பல்கலைக்கழகம், பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் இந்த சாரணியர் அமைப்பில் உள்ளீர்க்கப்பட்டு ஹஜ்ஜாஜிகளுக்கு தொண்டு செய்ய பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர். விமான நிலையம் முதல் எல்லா பகுதிகளிலும் இவர்களின் உதவிகளை பெற முடியுமாக இருந்தது. பொதுவாக அரபிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் சாரணியர் அமைப்பிலுள்ளவர்களின் உதவி அளப்பரியதாக அமைந்திருந்தது. முதியவர்களுக்கு உதவுதல், வழி தெரியாமல் தவிப்பவர்களை உரிய இடங்களுக்கு அழைத்துச் செல்லல் மற்றும் நீர் விநியோகித்தல் என எல்லா விடயங்களிலும் இவர்கள் உதவக்கூடியவர்களாக இருந்தனர்.
பாரிய அபிவிருத்திகள்
ஐந்து வருடங்களுக்கு முன்னர் உம்ராவுக்காக சென்றிருந்தபோது இருந்ததைவிட தற்போது மக்கா பாரிய அபிவிருத்திகளை கண்டிருந்தது. குறிப்பாக நெடுஞ்சாலை அபிவிருத்திகள், சுரங்கப்பாதை அமைத்தல் என நகரம் வளர்ச்சி கண்டிருக்கின்றது. அத்துடன் போக்குவரத்துகளும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. ஒருவழிப் பாதைகளை அமைத்து நெருக்கடிகள் தவிர்க்கப்பட்டிருந்தன. ஹாஜிகளுக்கு இலவச பஸ் சேவைகளும் வழங்கப்பட்டிருந்தன.
ஹரம் ஷரீப் மற்றும் கல்லெறியும் பகுதிகள் நான்கு மாடிகளாக அமைக்கப்பட்டு, மின் உயர்த்திகள் என்பனவும் செயற்படுத்தப்பட்டிருந்தன. இது தவிர எல்லா இடங்களிலும் நீர் விசிறும் மின்விசிறிகள் பொருத்தப்பட்டிருந்தன.
மருத்துவம்
மினா, அரபா மற்றும் ஏனைய எல்லா இடங்களிலும் ஹாஜிகளுக்கு வைத்திய சேவைகளை வழங்க வைத்தியர்களும் அம்பியுலன்ஸ்களும் தயார்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மினாவில் அவசர நோயாளிகள் வைத்தியசாலைக்கு ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
ஹஜ் ஏற்பாடுகளை சவூதி அரசாங்கம் மிகவும் பிரமாண்டமாகவே மேற்கொண்டிருந்தது. எனினும் இங்கு சில விடயங்களை சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. குறிப்பாக குப்பை ஒரு பிரச்சினையாக கருதப்பட வேண்டும். அதாவது பொலித்தீன் பாவனை அங்கு அதிகமாகவே காணப்படுகின்றது. அதற்கு மாற்றுவழியை சிந்திக்க வேண்டும். அத்துடன் மினாவிலும் அரபாவிலும் இருக்கும் நெருக்கடிகளுக்கு மேலும் தீர்வு வழங்க முயற்சிக்கலாம்.
எது எப்படியோ இம்முறை ஹஜ் யாத்திரை எவ்வித குளறுபடிகளுமின்றி முடிவடைந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
அவ்வாறே எனது இந்த புனித பயணத்திற்கு உதவிய சகல தரப்பினரையும் வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக…!
vidivelli