ஹஜ் முகவர் ஒருவரின் தவறினால் இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாமல் போன 8 ஹஜ் விண்ணப்பதாரிகள் குறிப்பிட்ட ஹஜ் முகவர் நிலையத்துக்கு எதிராக முறைப்பாடுகளைச் செய்துள்ளதாக அமைச்சர் ஹலீமின் பிரத்தியேக செயலாளரும் அரச ஹஜ் குழுவின் உறுப்பினருமான எம்.எச்.எம்.பாஹிம் தெரிவித்தார்.
இவ்வருட ஹஜ் யாத்திரிகர்களின் முறைப்பாடுகளை விசாரிக்க மூவரடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. அக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பதவி வகிக்கவுள்ளார் எனவும் அவர் கூறினார்.
8 ஹஜ் விண்ணப்பதாரிகளிடம் ஹஜ் பயணத்துக்கான கட்டணங்களை அறவிட்டுக் கொண்ட ஹஜ் முகவர் ஒருவர் அப்பணத்தை ஹஜ் அனுமதி பெற்ற முகவர் நிலையத்துக்கு செலுத்தாமையினாலே இறுதி நேரத்தில் 8 பேரின் ஹஜ் பயணம் தடைக்குட்பட்டது. அவர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாமற் போனமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஹஜ் விசாரணைக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய ஊழல்களில் ஈடுபட்ட ஹஜ் முகவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.
இவ்வருட ஹஜ் கடமையின்போது ஹஜ் முகவர்களினால் ஏதும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பின் ஹஜ்ஜாஜிகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம் எனவும் அவர் கூறினார்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli