ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டம்பிட்டி மஸ்ஜிதுல் லுஃலு அம்மார் பள்ளிவாசல் தொடர்பாக பொலிஸாருக்கு முஸ்லிம்கள் எவரும் தவறான தகவல்களை வழங்கவில்லை. எவரும் அந்தப் பள்ளிவாசலைக் காட்டிக்கொடுக்கவில்லை.
அது தௌஹீத் பள்ளிவாசல் என்பதனாலேயே பொலிஸார் அங்கு தொழுகைக்குத் தடை விதித்திருந்தார்கள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை பண்டுவஸ்நுவர கிளையின் செயலாளர் மௌலவி ஐ.எல்.எம் ருவைஸ் தெரிவித்தார்.
கொட்டாம்பிட்டி மஸ்ஜிதுல் லுஃலு அம்மார் பள்ளிவாசலில் பொலிஸார் தொழுகைக்கு தடை விதித்துள்ளமை தொடர்பில் “விடிவெள்ளி” க்கு விளக்கமளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்; ‘கொட்டாம்பிட்டியில் மஸ்ஜிதுல் ஹுதா, மஸ்ஜிதுல் லுஃலு அம்மார் என இரு பள்ளிவாசல்கள் இருக்கின்றன. மஸ்ஜிதுல் ஹுதாவே பெரிய பள்ளிவாசல். கொட்டாம்பிட்டியில் மொத்தம் 230 குடும்பங்களே வாழ்கின்றன. மூடப்பட்டுள்ள மஸ்ஜிதுல் லுஃலு அம்மாருக்கு சுமார் 30 பேரே ஜமாஅத்தாக இருக்கிறார்கள். இவ்விரு பள்ளிவாசலும் 100 மீட்டர் இடைவெளியிலே இருக்கின்றன.
இந்தப்பள்ளிவாசலை மூடிவிட வேண்டும் என்ற தேவை இங்குள்ள எவருக்கும் இல்லை. தற்போது அப்பள்ளிவாசலில் தொழுகை தடை செய்யப்பட்டிருப்பதால் அப்பள்ளிவாசல் ஜமாஅத்தைச் சேர்ந்த சுமார் பத்து பேர் மஸ்ஜிதுல் ஹுதாவுக்கே வந்து தொழுகிறார்கள்.
இப்பகுதியில் நாம் முரண்பாடுகளின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும். மார்க்க கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றே கருதுகிறோம். மஸ்ஜிதுல் ஹுதாவுக்கு வந்து தொழ வேண்டாம் என்று எவரிடமும் நாம் கூறவில்லை. பள்ளிவாசல் அனைவருக்கும் பொதுவானதாகும் என்றார்.
vidivelli