தொடர் கதையாகும் பரீட்சை மண்டப ‘ஹிஜாப்’ விவகாரம்

0 1,112

தற்­போது நடை­பெற்று வரும் க.பொ.த உயர்­தரப் பரீட்சைக்குத் தோற்றிவரும் முஸ்லிம் மாண­விகள் தாம் அணிந்து சென்ற பர்­தாவை கழற்­றி­விட்டு பரீட்சை எழு­தும்­படி சில பரீட்சை நிலை­யங்­களில் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பரீட்சை ஆரம்பித்த நாள் முதல் இது தொடர்பான முறைப்பாடுகள் பரீட்சை ஆணை­யாளர் சனத் பூஜி­த­வுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாரம் கூட கண்டி விவே­கா­னந்தா தமிழ் வித்­தி­யா­லயம் மற்றும் மன்னார் பெரிய கண்டல் முருங்கன் தமிழ் மகா வித்­தி­யா­லயம் என்பனவற்றின் க.பொ.த. உயர்­தர பரீட்சை மண்­ட­பங்­களில் தொடர்ச்சியாக மூன்று தினங்­க­ளாக முஸ்லிம் மாண­விகள் பர்­தாவைக் கழற்­றி­விட்டு பரீட்சை எழு­து­மாறு பரீட்சை மேற்­பார்­வை­யா­ளர்­களால் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் பரீட்சை ஆணை­யாளரிடம் முறைப்­பாடு செய்­துள்ளது.

குறிப்­பாக பரீட்சை எழுதும் மாண­விகள் தமது முகம் மற்றும் காது என்­ப­வற்றை காண்­பிக்க வேண்­டி­யது பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் சுற்­று­நி­ரு­பத்தின் படி கட்­டா­ய­மா­ன­தாகும். எனினும் கடந்த காலங்களில் சில பிர­தே­சங்­களில் முஸ்லிம் மாண­விகள் முகத்தை முழு­மை­யாக மூடிய வண்ணம் பரீட்­சை­க­ளுக்குத் தோற்­றியிருந்தனர். தற்போது அவரச காலச் சட்டத்தின் கீழ் முகத்தை மூடுவது தடை செய்யப்பட்டுள்ளதால் இம்முறை எவரும் பரீட்சைகளின் போது முகத்தை மூடியிருக்கவில்லை. எனினும் சிலர் முகத்தை திறந்­தி­ருப்­பினும் காது பகு­தியை காண்­பிக்க மறுக்­கின்­றனர். இதன் காரணமாக இம் மாணவிகளின் செயற்பாடுகள் பரீட்சை மேற்­பார்­வை­யா­ளர்­களால் கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இது பரீட்சை எழுதிக் கொண்­டி­ருக்கும் மாண­வி­களைப் பாதிக்கச் செய்­வது மாத்­தி­ர­மன்றி சில சம­யங்­களில் அவர்­க­ளது பெறு­பே­றுகள் கூட வெளி­யி­டப்­ப­டாது இடை­நி­றுத்­தப்­ப­டு­கின்­றன. கடந்த வருடம் முகத்தை மூடிக் கொண்டு தேசிய பரீட்­சை­க­ளுக்குத் தோற்­றிய பல மாண­வி­களின் பெறு­பே­றுகள் வெளி­யி­டப்­ப­டாது இடை­நி­றுத்­தப்­பட்­டமையும் இங்கு கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

இருந்தபோதிலும் காதுகள் வெளித் தெரியும் வகையில் மாணவிகள் ஹிஜாப் அணிந்துள்ள நிலையிலும் பரீட்சை மேற்பார்வையாளர்களால் அசௌகரியங்களுக்குள்ளாக்கப்பட்ட சம்பவங்களும் தற்போது பதிவாகியுள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பரீட்சை ஆணை­யாளர் சனத் பூஜித , காது­களை மூடி ஆடை அணிந்து பரீட்சை எழு­து­வது மாத்­தி­ரமே தடை செய்­யப்­பட்­டுள்­ளது. காதுகள் வெளியே தெரியும் வகையில் பர்தா அணிந்து பரீட்சை எழு­து­வ­தற்கு எது­வித தடையும் விதிக்­க­வில்லை. பரீட்சை மேற்­பார்­வை­யா­ளர்கள் இவ்­வாறு பர்­தாவைக் கழற்­றி­விட்டு பரீட்சை எழு­தும்­படி உத்­த­ர­வி­ட­மு­டி­யாது. குறிப்­பிட்ட சம்­ப­வங்கள் தொடர்பில் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும் முஸ்லிம் கவுன்­ஸி­லிடம் உறுதியளித்துள்ளார்.

பரீட்சை ஆணையாளர் இவ்வாறு கூறுகின்ற போதிலும் பரீட்சை மண்டபங்களில் இவ்வாறான சம்பவங்கள் வருடாந்தம் தொடரவே செய்கின்றன. சாதாரண தர பரீட்சை, உயர் தரப் பரீட்சை, பல்கலைக்கழக பரீட்சைகள் மற்றும் போட்டிப் பரீட்சைகளுக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகள் இந்த அசௌகரியங்களுக்கு தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்துக்கு விரைவில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது அவசியமாகும்.

சில மாதங்களுக்கு முன்னர் இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணும் நோக்கில் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலை­மையில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், சிவில் சமூக அமைப்­புகள் என்­பன இணைந்து கலந்­து­ரை­யா­டலை நடத்தி அர­சாங்க பரீட்­சை­க­ளுக்குத் தோற்றும் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­க­ளுக்­கான உடை எவ்­வாறு அமைய வேண்டும் என்­பது தொடர்பில் பொதுத் தீர்­மானம் ஒன்றை எட்டியிருந்தன.

இந்த தீர்மானத்தை பரீட்சைகள் திணைக்களம் ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பது தெரியவில்லை. அதேபோன்று அவ்வாறானதொரு தீர்மானம் எட்டப்பட்டிருப்பின் அது குறித்து நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகள் மூலமாகவும் முஸ்லிம்கள் அறிவூட்டப்பட வேண்டியதும் அவசியமாகும். அத்துடன் அரசியல் தலைமைகள் இதுவிடயத்தில் தலையிட்டு இப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.