மத்ரஸாக்களை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர கலந்துரையாடல்
சபையில் கல்வி அமைச்சர் அகில தெரிவிப்பு
இலங்கையில் செயற்படும் மத்ரஸாக்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.யான ஆனந்த அளுத்கமகே, இலங்கையில் தனியார், சர்வதேச பாடசாலைகள் இன, மத அடிப்படையில் செயற்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் கல்வியமைச்சு எடுத்துள்ள அல்லது எடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்னவென எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தனியார், சர்வதேச பாடசாலைகள் தொடர்பான அதிகாரம் கல்வி அமைச்சிடம் இல்லை. எனினும், அவை தொடர்பில் புதிய கல்விச் சட்டம் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, இலங்கையில் செயற்படும் மத்ரஸாக்களை கல்வியமைச்சின் கீழ் எடுப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதனால் எதிர்காலத்தில் சர்வதேச பாடசாலைகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.