ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. ஏப்ரல் குண்டுத் தாக்குதல்களையடுத்து மே மாதம் 13 ஆம் திகதி முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்செயல்கள் எமது பள்ளிவாசல்களையும் விட்டுவைக்கவில்லை. வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஒரே தினத்தில் கடந்த மே மாதம் 13 ஆம் திகதியே அதிக எண்ணிக்கையிலான பள்ளிவாசல்கள் தாக்குதல்களுக்குள்ளாகின.
குருநாகல் மாவட்டத்தில் 23 பள்ளிவாசல்களும், புத்தளம் மாவட்டத்தில் 3 பள்ளிவாசல்களும், கம்பஹா மாவட்டத்தில் ஒரு பள்ளிவாசலும் வன்செயல்களுக்கு இலக்காகின. இவ்வாறு சேதப்படுத்தப்பட்ட பள்ளிவாசல்கள் சில தினங்களில் துப்புரவு செய்யப்பட்டு சிறு திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் இயங்க ஆரம்பித்தன. தொழுகைகள் ஆரம்பிக்கப்பட்டன. பள்ளிவாசல்களின் புனர்நிர்மாணப்பணிகளுக்கு முதற்கட்டமாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
வன்செயல் தாக்குதல்களை மறந்து மக்கள் தங்களது பிரதேச பள்ளிவாசல்களில் தொழுகைகளை நடாத்தி வந்த நிலையில் ஹெட்டிபொல–கொட்டாம்பிட்டி லுஃலு பள்ளிவாசல் எதிர்பாராத வகையில் அதிர்ச்சி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அந்தப் பள்ளிவாசலில் தொழுகைகளை நடத்த வேண்டாமெனவும் பள்ளிவாசலை மூடிவிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிவாசல் நிர்வாகத்தினரை ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் மூடப்படுவதற்கான காரணத்தை பள்ளிவாசல் நிர்வாகிகள் கோரியிருந்தபோதும் அதற்கான சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. சிங்களவர்களின் பாதுகாப்புக்காக பள்ளிவாசலின் தொழுகைகளை தடைசெய்ய வேண்டிய நிலை உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது நாட்டில் மத உரிமைகள் அரசியல் யாப்பினால் வழங்கப்பட்டுள்ளன. இது ஒவ்வொருவரினதும் சிவில் உரிமையுமாகும். பள்ளிவாசல் என்பது பொதுவான இடமாகும். அத்தோடு அந்தப்பள்ளிவாசல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட மத நிலையமாகும்.
மஸ்ஜிதுல் லுஃலு பள்ளிவாசல் நிர்வாக சபையின் செயலாளர் முஹம்மட் ஷாபி தொழுகைகளுக்கான தடை குறித்து முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமுக்கு முறைப்பாடு செய்தும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ள வில்லை எனத் தெரிவித்துள்ளார். பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்தும் அமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுத்திராதிருந்தால் அது தவறானதாகும்.
இதேவேளை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இன்று புதன்கிழமை பள்ளிவாசல் நிர்வாகத்தை அழைத்திருப்பதாக பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளர் தெரிவித்தார். இந்நிலையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் பள்ளிவாசலில் தொழுகைகள் நிறுத்தப்பட்ட மைக்கான காரணத்தை எழுத்து மூலம் கேட்டறிந்து மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
குறிப்பிட்ட பள்ளிவாசலில் அயலூர் அனுக்கனையைச் சேர்ந்த மௌலவி எம்.ஐ.எம்.நஸீர் என்பவரே தொழுகைகளை நடத்தி வந்துள்ளார். அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அவரது கைதுக்கும் பள்ளிவாசலில் தொழுகைகளின் தடைக்கும் சம்பந்தம் இருக்க முடியாது. ஏனென்றால் ஒருவரை கைது செய்ததற்காக அப்பள்ளியில் தொழுகைகளை எவராலும் தடை செய்ய முடியாது. அவ்வாறு தொழுகைகள் தடைசெய்யப்படுவதாயின் அதற்கான காரணத்தை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் தெரிவிக்கவேண்டியது பொலிஸாரின் கடமையாகும். அத்தோடு ஒரு இனத்தின் பாதுகாப்புக்கென்று கூறி இன்னோர் இனத்தின் மதநிலையங்களை எவராலும் மூடிவிட முடியாது. இது அரசியலமைப்பை மீறும் செயலாகும்.
வன்செயல்களினால் பாதிப்புற்ற பள்ளிவாசல்களை புனர் நிர்மாணம் செய்வதற்கு நிதியுதவி வழங்கி வரும் அரசு பள்ளிவாசலொன்றின் தொழுகைகளுக்கு தடை விதித்திருக்கின்றமை வியப்புக்குரியதாகும்.
பாதுகாப்பு அதிகாரிகள் தாம் நினைத்தவாறெல்லாம் சட்டத்தை அமுல் நடாத்துவதற்கு ஒரு போதும் அனுமதி வழங்கப்படக்கூடாது. முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் இச்சம்பவத்தை பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும். அரசியல் யாப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள மத உரிமைகளுக்கு தடைவிதிக்க ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.
vidivelli.lk