ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டாம்பிட்டியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் லுஃலு பள்ளிவாசலில் தொழுகை நடாத்துவதற்குப் பொலிஸாரினால் தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த ஒரு மாதகாலமாக பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது. ஊர்மக்கள் ஐவேளைத் தொழுகையை தங்கள் வீடுகளிலும், ஜும்ஆத் தொழுகையை அருகாமையிலுள்ள வெளியூர் பள்ளிவாசல்களிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2000 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகைகள் நடாத்தப்பட்டு வந்தன. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை யடுத்து கடந்த மே மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்ற வன்செயல்களின்போது இப்பள்ளிவாசல் இனவாதிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டது.
அதன்பின்பு இப்பள்ளிவாசல் ஊராரின் முயற்சியினால் துப்புரவு செய்யப்பட்டு நிறப்பூச்சு பூசப்பட்டு தொழுகைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில் குளியாப்பிட்டி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அபேரத்னவின் உத்தரவுக்கமைய கடந்த மாதம் 18 ஆம் திகதி முதல் மூடப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் கொட்டாம்பிட்டி மஸ்ஜிதுல் லுஃலு பள்ளிவாசல் நிர்வாக சபையின் செயலாளர் முஹம்மத் ஷாபியை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டது.
அவர் கருத்து தெரிவிக்கையில், ‘ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தார்கள். அதன் பின்பு கடந்த மாதம் 18 ஆம் திகதி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் திடீரென பள்ளிவாசலை மூடுமாறு உத்தரவிட்டார். எமக்கு வேறு வழி தெரியாது மூடிவிட்டோம்.
பள்ளிவாசல் மூடப்பட்டது தொடர்பில் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமுக்கு அறிவித்தோம். இதுவரை எமக்கு எந்தப்பதிலும் கிடைக்கவில்லை. நாங்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு இது தொடர்பில் அறிவித்தோம். நாளை (இன்று) நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
இந்தப் பள்ளிவாசலில் தொழுகைகளை நடத்தி வந்தவர் பக்கத்து ஊரான அனுக்கனையைச் சேர்ந்த மௌலவி எம்.ஐ.எம்.நசீர் என்பவராவார். அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது மடிக்கணினியை பாதுகாப்புப் பிரிவினர் பரிசோதித்ததில் உள்ளடங்கியிருந்த தகவல்களின் பேரிலே கைது செய்யப்பட்டார்.
எவரோ பள்ளிவாசலைப் பற்றி தவறான செய்திகளை வழங்கியுள்ளதாலேயே பொலிஸார் பள்ளிவாசலில் தொழுகைகளுக்குத் தடைவிதித்திருக்கின்றனர் என்று நாம் சந்தேகிக்கிறோம். பள்ளிவாசல் தாக்கப்பட்டதன் பின்பு சிறிய திருத்தங்களைச் செய்து இரண்டு மாதங்கள் தொழுகைளை நடாத்தி வந்த நிலையிலே தொழுகை களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்பள்ளிவாசலை உள்ளடக்கி சுமார் 250 ஜமா அத்தார்கள் இருக்கிறார்கள். தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
கடந்த மாதம் 18 ஆம் திகதி பள்ளிவாசல் புனரமைப்பு வேலைகளுக்காக அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் 5 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. அன்றைய தினமே உதவிப் பொலிஸ் அத்தியட்சகரால் தொழுகைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது என்றார்.
– ஏ.ஆர்.ஏ.பரீல்
– vidivelli.lk