சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் ஹெளதி போராளிகளுக்கும் இடையே எதிர்வரும் டிசம்பர் மாதம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக ஐக்கிய நாடுகள் சபையின் யெமனுக்கான பிரதிநிதி ரியாதை வந்தடைந்தார்.
சவூதி அரேபியா உள்ளிட்ட அரேபிய கூட்டுப் படைகளின் பின்னணியைக் கொண்ட யெமனின் இராணுவ நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டுள்ள இறக்குமதி மற்றும் உதவிகளுக்கான உயிர்நாடியாகக் காணப்படுகின்ற ஹெளதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஹுதைதா துறைமுகத்தை சூழவுள்ள பகுதிகளில் மோதல்கள் தணிந்துள்ள நிலையில் மார்ட்டின் கிரிபித்ஸின் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
கூட்டுப் படையினரை பின்னணியாகக் கொண்ட விசுவாசமான இராணுவத்தினர் நவம்பர் மாத ஆரம்பத்தில் ஹுதைதாவினுள் நுழைய எத்தனித்தபோது மோதல்கள் தீவிரமடைந்தன. எனினும் கடந்த புதன்கிழமை மார்ட்டின் கிரிபித்ஸ் யெமனுக்கு வருகை தந்ததும் மோதல்கள் தணிந்தன.
ஈரானிய பின்னணியில் இயங்கும் ஹெளதி போராளிகள் முட்டுக்கட்டை போடுவதற்கு முயன்றுவரும் நிலையில் சுவீடனில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் தொடர்வதாக கடந்த புதன் கிழமை கூட்டுப்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஹுதைதாவுக்கு தெற்கே சுமார் 100 கிலோமீற்றர் (60 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஹயா மாகாண முகாமினுள் நுழைவதற்கு ஹெளதியினர் எடுத்த முயற்சி அரச படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அரசாங்க ஊடகம் தகவல் வெளியிட்டிருந்தது.
ஹுதைதாவின் கிழக்கு நுழைவாயிலில் வெடிக்கும் உபகரணமொன்றை வெடிக்க வைத்ததாகவும் அதனால் அரச சார்பு இராணுவ வாகனம் சேதமடைந்து அதனுள்ளிருந்த இராணுவத்தினர் உயிரிழந்ததோடு காயங்களுக்கும் உள்ளாகினர் என கடந்த திங்கட்கிழமை ஹெளதி பிரிவினர் அறிவித்தனர்.
எனினும், கிழக்கு மற்றும் மேற்கு செங்கடல் நகரத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு ள்ளதாக திங்கட்கிழமையன்று அரசசார்பு இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
-Vidivelli