இலங்கையில் இராணுவத்தினர் வசம் இருந்த காணிகளில் 71,178 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. படையினரிடமிருந்த 84,675 ஏக்கர் காணிகளிலேயே மேற்படி தொகை காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் விடுவிக்கப்பட்ட காணிகளுள் 81 சதவீதமானவை அரசுக்குச் சொந்தமானவை என்றும், 90 சதவீதமான தனியாருக்குரியவை எனவும் தெரிவிக்கப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியே இந்தத் தகவல்களை வெளியிட்டிருந்தது.
2009 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 84,675 ஏக்கர் காணிகள் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்தன. இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், படையினரிடமிருந்த காணிகள் துரிதமாக விடுவிக்கப்பட்டதாகவும், அந்த வகையில், 2019 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில், பாதுகாப்பு படைகள் வசம் இருந்து வந்த 84,675 ஏக்கரில் 71,178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை 6,951 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதுடன் மேலும் 475 ஏக்கர் விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தது. அந்த வகையில் தற்போது படைகள் வசம் 13,497 ஏக்கர் காணிகளே உள்ளதாகவும், அவற்றுள் 11,039 ஏக்கர் அரச காணிகள் எனவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது.
அந்தவகையில் படையினர் வசமிருக்கும் இக் காணிகளை விடுவிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும். குறிப்பாக காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலணி விசேட கவனம் செலுத்துகின்றமை பாராட்டுக்குரியதாகும்.
அரசாங்கம் இவ்வாறு காணிகளை விடுவிப்பதற்கான காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய அழுத்தங்களேயாகும். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் அரசாங்கத்தின் போக்குகள் ஒருபுறமிருக்க, காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் த.தே. கூட்டமைப்பு குறிப்பிடத்தக்களவு வெற்றி பெற்றுள்ளது என்ற யதார்த்தத்தை எவரும் மறுக்க முடியாது.
எனினும் துரதிஷ்டவசமாக இராணுவத்தினாலும் அரசாங்கத்தின் ஏனைய திணைக்களங்களினாலும் அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் மக்களும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான காணி அனுமதிப் பத்திரம் இருக்கின்ற சுமார் 4652 காணிச் சொந்தக்காரர்களது 14127 ஏக்கர் பரப்புள்ள காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் தமது காணிகளை மீட்டுத் தர முன்வரும் வேட்பாளருக்கே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்போம் என காணிகளை இழந்த மக்கள் தெரிவித்துள்ளதுடன் அதற்கான போராட்டங்களையும் தற்போது ஆரம்பித்துள்ளனர்.
இதேபோன்றுதான் திருகோணமலையில் கருமலையூற்று பள்ளிவாசல் காணி உட்பட ஏராளமான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இன்றும் புல்மோட்டை உட்பட பல இடங்களில் காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. வடக்கில் முசலியில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீட்பதற்காக அம் மக்கள் பல வருடங்களாக போராடி வருகிறார்கள்.
இவை தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் கையறு நிலையிலேயே உள்ளன. தேர்தல் காலங்களில் மாத்திரம் காணிகளை மீட்டுத் தருவதாக வாக்குறுதிகளை அளித்துவிட்டு பின்னர் மறந்துவிடுகின்ற நிலையே நீடிக்கிறது.
அந்தவகையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான மேற்படி ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை சகல கட்சிகளிதும் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னின்று மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களிடமிருந்து இக் காணிகளை விடுவிப்பதற்கான வாக்குறுதிகளை எழுத்து மூலம் பெற்றுக் கொள்ள வேண்டியதுடன் தேர்தலின் பின்னர் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்துவதும் அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
vidivelli