விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 04

விவாக விவாகரத்துச் சட்டம் : இறுதி நேரத்தில் தடம் புரண்ட அரசியல்வாதிகள்

0 849

ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற இன­வா­தக்­கோஷம் எகிறி வீசும் தரு­ண­மொன்றில் முஸ்லிம் தனியார் சட்­டத்தைப் பாது­காத்து தேவை­யான திருத்­தங்­க­ளுடன் முன்­னோக்கிச் செல்­வது ஒரு பெரிய சவால். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ முஸ்லிம் அமைச்சர் ஒரு­வ­ருடன் உரை­யாடிக் கொண்­டி­ருந்­த­போது, உங்கள் முஸ்லிம் சட்­டத்­தினை திருத்­தங்­க­ளோடு பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்றிக் கொள்­ளுங்கள். எமது ஆட்­சியில் என்ன வகை­யான அழுத்­தங்கள் வரும் என்றோ சட்­டத்­திற்கு என்ன நடக்­கு­மென்றோ எம்மால் உத்­த­ர­வா­த­ம­ளிக்க முடி­யாது என்று கூறி­யுள்ளார். உஷா­ர­டைந்த முஸ்லிம் அமைச்­சரும் அந்தக் கூட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்தார்.

நீதி­ய­மைச்சர் தலதா அது­கோ­ரள ஒரு­வார காலமே இறுதி வரைபைத் தயா­ரிக்க வழங்­கி­யி­ருப்­ப­தா­கவும் உட­ன­டி­யா­கக்­கூடி இது குறித்து கலந்­து­ரை­யா­ட­வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் பௌஸியின் பௌத்­தா­லோக வாசஸ்­த­லத்தில் ஒரு கூட்டம் ஏற்­பா­டாகி இருந்­தது. அதிலும் அதற்குப் பிந்­திய கூட்­டங்­க­ளிலும் கலந்து கொண்­டவன் என்ற வகை­யிலும் கடந்த 10 ஆண்­டுக்கு மேலாக முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்தம் குறித்து களத்தில் செயற்­பட்­டவன் என்ற வகை­யிலும் மிக முக்­கிய தரு­ண­மொன்றில் சில முக்­கிய அவ­தா­னங்­களை இங்கு பதிவு செய்ய விளை­கிறேன்.

முன்னாள் அமைச்சர் பௌஸியின் வாசஸ்­த­லத்தில் 29.07.2019 அன்று 3.30 மணி­ய­ளவில் ஆரம்­பித்த கூட்டம் இரவு 7.00 மணிக்கு நிறை­வுற்­றது. கருத்­தொ­ரு­மைப்­பாட்­டிற்கு வராத நிலு­வை­யி­லி­ருந்த விவ­கா­ரங்­களே அங்கு கலந்­து­ரை­யா­ட­லுக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டன. மூன்று தரப்­பினர் அங்கு வருகை தந்­தி­ருந்­தனர். ஒரு பக்கம் சில முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் (அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், பைஸர் முஸ்­தபா, ரிஷாத்) இன்­னொரு பக்கம் அ.இ.ஜ. உலமா சபை பிர­தி­நி­திகள் சிலர், மூன்­றா­வது பக்­க­மாக உஸ்தாத் மன்ஸுர், ஷெய்க் அப்துர் ராஸிக் (நளீமி), ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத், ஷெய்க் இம்­தியாஸ், ஷெய்க் அபான் ஆகி­யோ­ருடன் நானும் அமர்ந்­தி­ருந்தேன். கருத்­து­ப்­ப­கிர்வு இறு­தியில் ஒரு விவாதம் போன்று மாறி­யது.

ஏற்­க­னவே முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் வேண்­டப்­படும் சீர்­தி­ருத்­தங்கள் தொடர்பில் முற்­போக்­கான மத்ஹப் எல்­லைக்கு அப்பால் சிந்­திக்­கின்ற பல குழுக்கள் அ.இ.ஜ. உல­மா­வுடன் பல சந்­திப்­பு­க­்களை நடத்தி தமது ஷரீஆ சார்ந்த நிலைப்­பா­டு­களைத் தெளி­வு­ப­டுத்­தி­ய­போதும் அவர்கள் அதனை ஏற்­காத ஓர் இறு­கிய நிலைப்­பாட்­டி­லேயே இருந்­தனர். எவ்­வா­றா­யினும் 29.07.2019 சந்­திப்பு சற்று வித்­தி­யா­ச­மா­ன­தாக இருந்­தது. முஸ்லிம் சமூகப் பொது­வெ­ளியில் முஸ்லிம் தனியார் சட்டம் குறிப்­பாக விவாக, விவா­க­ரத்துச் சட்டம் தொடர்பில் ஒரு மங்­க­லான பார்­வையே உள்­ளது. பாரம்­ப­ரிய தரீக்­கா­வா­திகள், தப்லீக் இயக்க சிந்­தனை சார்­பா­ன­வர்கள் மற்றும் பழ­மை­வா­திகள் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் குறித்தும் அதில் வேண்­டப்­படும் சீர்­தி­ருத்­தங்கள் குறித்தும் கடந்த 10 ஆண்­டு­க­ளாக காட்­டி­வந்த பூச்­சாண்­டியே இதற்குப் பிர­தான கார­ண­மாகும். குறிப்­பாக அ.இ.ஜ உலமா சபை சார்ந்­த­வர்கள் மாற்­றத்­தையும் திருத்­தங்­க­ளையும் குறித்து எழுப்­பிய புர­ளிகள் பொது­வெ­ளியில் ஒரு கறுப்புப் பூதத்­தையே காட்டி வந்­தது. துர­திஷ்­ட­மாக இதே நிலையைத் தக்­க­வைத்­துக்­கொள்­வதில் முல்­லாக்கள் பெரு­வெற்­றி­ய­டைந்து விட்­டனர்.

இன்­னொரு கசப்­பான உண்மை என்­ன­வெனில், முஸ்லிம் சமூக விவ­கா­ரங்­க­ளுக்கு தீர்வு தேடித்­தரும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளுக்கோ தானைத் தள­ப­தி­க­ளுக்கோ தனியார் சட்டம் குறித்து அடியும் தெரி­யாது நுனியும் தெரி­யாது. கண்ணைக் கட்டி காட்டில் விடப்­பட்­ட­வர்கள் போலவே அவர்­க­ளுக்கு இந்த விவ­காரம். இதற்கு நல்ல உதா­ரணம். ரவூப் ஹக்கீம் குரு­வி­கொ­டுவ ஹாதியா வளா­கத்தில் பட்­ட­ம­ளிப்பு விழாவில் முஸ்லிம் பெண்ணின் திரு­மண வயது குறித்து பேசி திருத்­தங்­களை ஆத­ரித்து நின்­ற­போது சம்­மாந்­துறை அப்துல் மஜீத் மண்­ட­பத்தில் கல்­முனை எம்.பி.ஹரீஸ் அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து பணம் பெறும் பெண்­ணி­லை­வா­திகள் ஷரீ­ஆவை மாற்ற முயற்­சிக்­கி­றார்கள் எனப் பொறி கிளப்­பி­ய­போது முன்னால் உட்­கார்ந்­தி­ருந்த எனக்கு சிரிப்­பாக வந்­தது.
முஸ்லிம் காங்­கிரஸ் எம்.பிக்­க­ளுக்கு மட்­டு­மல்ல, ரிஷாதின் கட்­சிக்கோ ரிஷா­துக்கோ முஸ்லிம் தனியார் சட்டம் குறித்தோ வேண்­டப்­படும் திருத்­தங்கள் குறித்தோ எந்த அக்­க­றையும் இல்லை. அவர்­களும் அர­சியல் பிழைப்பு வாதத்­திற்கு இது­போன்ற விவ­கா­ரங்கள் அவ­சி­ய­மா­னவை. இதனால் அவர்கள் சலீம் மர்­ஸூபின் அறிக்­கையைப் படிக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இது ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரி­ய­து­மல்ல. சாதா­ரண பாமர மக்கள் போல அடி நுனி தெரி­யாமல் உளறும் சில அர­சி­யல்­வா­திகள் எப்­படிப் போனாலும் இன்று முஸ்லிம் விவாக விவா­க­ரத்­துச்­சட்­டத்தை அர­சி­ய­லாக்கும் நிலைக்கு நமது தானைத்­த­ள­ப­தி­க­ளும் தனித்­துவத் தலை­வர்­களும் வந்­தி­ருப்­ப­துதான் மிக ஆபத்­தா­னது. தேர்தல் ஒன்று நெருங்கி வரு­வது இதற்­கான உட­னடிக் கார­ண­மாக இருந்­தாலும் தாம் நினைத்­துக்­கொண்­டி­ருப்­பது ஒரு வர­லாற்­றுத்­த­வறு என்­பதை அவர்கள் உணர வாய்ப்­பில்லை.

29.07.2019 அன்று பெண்­களை காதி­க­ளாக நிய­மித்தல், திரு­மண வயது, திரு­ம­ணப்­ப­திவு என்­ப­னவே விவா­திக்­கப்­பட்­டன. உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்ஸூர் இது­கு­றித்து பழை­ய­கால சட்ட அறி­ஞர்கள் மற்றும் நவீன கால­கட்ட அறி­ஞர்­களின் நிலைப்­பா­டு­களை விளக்­கினார். 2018 முழு­வதும் நிதி­ய­ரசர் ஸலீம் மர்­ஸூபின் அறிக்கை மற்றும் பாயிஸ் முஸ்­தபா அணி­யினர் முன்­வைத்த மாற்று யோச­னைகள் இரண்­டையும் சிரேஷ்ட நளீ­மிகள் மற்றும் சட்­டத்­த­ர­ணிகள் ஆழ­மாக ஆராய்ந்து தயா­ரித்த ஆவ­ணத்தின் பின்­ன­ணி­யி­லேயே எமது தரப்பு கருத்­துக்­களை முன்­வைத்­தது. அ.இ.ஜ. உல­மாவும் தமது பக்க வாதங்­களை முன்­வைத்­தது. அர­சி­யல்­வா­திகள் அதனை செவி­யேற்றுக் கொண்­டி­ருந்­தனர். அவர்கள் தரப்­பி­லி­ருந்தும் சில கருத்­துக்­களை முன்­வைத்து அ.இ.ஜ. உல­மா­ச­பை­யுடன் கடு­மை­யாக விவா­தித்­தனர்.

குறிப்­பாக அமைச்சர் பைஸர் முஸ்­தபா ஒரு சட்­டத்­த­ர­ணி­யாக நின்று சில தர்க்­கங்­களை முன்­வைத்தார். ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யி­னரை வாதித்து வழிப்­ப­டுத்த முனைந்தார். 36 முஸ்லிம் நாடு­களில் பெண்கள் நீதி­ப­தி­க­ளாக உள்­ளனர் என்றும் உலகின் மிகப்­பெ­ரிய முஸ்லிம் நாடான இந்­தோ­னே­சி­யாவில் 1961 ஆம் ஆண்­டி­லேயே முதல் முஸ்லிம் பெண் நீதி­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்டார் என்றும் அழுத்­த­மாகத் தெரி­வித்த அமைச்சர் ஹக்கீம், பால்­நிலைப் பாகு­பாட்டை (Gender Discrimination) சட்டம் ஏற்­காது என்றும் இத்­த­கைய விவ­கா­ரங்­களை முன்­னெ­டுப்­பதில் பாரா­ளு­மன்றில் தமக்கு சவா­லுள்­ளது எனவும் கூறினார். கலந்­து­ரை­யா­டலின் தொடக்­கத்­தி­லேயே ஷெய்க் அபான் இது குறித்து நாம் ஷரீ­ஆ­விலும் பிக்­ஹிலும் ஆராய்ந்த விட­யங்­களை அங்கு ஆழ­மாக முன்­வைத்­தி­ருந்தார்.

ஷரீ­ஆ­வுக்கும், பிக்­ஹுக்கும், காணூ­னுக்கும் இடை­யி­லான வேறு­பா­டு­களை பாரம்­ப­ரிய மத்­ர­ஸாக்­களில் குறிப்­பிட்ட ஒரு மத்­ஹ­பிற்குள் முடங்­கிக்­கொண்டு ஓதிய ஒரு ஆலி­முக்கு புரிந்­து­கொள்­வது கஷ்­ட­மா­கினும் இத்­த­கைய அர­சி­யல்­வா­தி­களால் அவற்றை இல­கு­வாகப் புரிந்­து­கொள்ள முடி­யு­மாக இருந்­ததை தெளி­வாக அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருந்­தது. தனியார் சட்­டத்தில் குறிப்­பாக விவாக விவா­க­ரத்­துச்­சட்­டத்தில் கோரப்­படும் திருத்­தங்­களும் மாற்­றங்­க­ளுக்கும் ஷரீ­ஆவை மாற்­று­வ­தாகப் புரளி கிளப்பும் ஜம்­இய்­யத்துல் உல­மாவை சேர்ந்­த­வர்­கள் ஷாபி மத்­ஹ­பின்­படி ஒரு பெண் காதி­யாக நிய­மிக்­கப்­பட முடி­யாது என்­பதில் மிக உறு­தி­யாக இருந்­தனர்.

மார்க்­கத்தில் ஒருவர் ஒரு விட­யத்தை ஹராம் (தடுக்­கப்­பட்­டது) என்றோ அல்­லது வாஜிப் என்றோ தீர்ப்­ப­ளிப்­ப­தாயின் அதற்கு ஷரீ­ஆ­வி­லி­ருந்து நேர­டி­யா­னதும் தெட்­டத்­தெ­ளி­வா­ன­து­மான சட்­ட­வாக்­கத்தைக் காண்­பிக்க வேண்டும். ஷரீஆ என்­பது அல்­குர்­ஆ­னையும் சுன்­னா­வை­யுமே குறிக்­கின்­றது. இவ்­விரு மூலா­தா­ரங்­க­ளையும் குறித்த சட்ட அறி­ஞர்­களின் புரி­தலே பிக்ஹு எனப்­ப­டு­கின்­றது. பெண் நீதி­ப­தி­யாக வரு­வதைத் தடுக்கும் எந்­த­வொரு சட்­ட­வ­ச­னமும் குர்­ஆ­னிலோ சுன்­னா­விலோ இல்லை என்­ப­தனால் பெண்­களை நீதி­ப­தி­யாக நிய­மிக்­கலாம் என இமாம் இப்னு ஹஸ்ம் கூறு­கிறார். இதே கருத்தை இமாம் மாவர்தி, இமாம் அபூ ஹனீபா, இமாம் ஜரீர் அத்­த­பரி போன்ற பழைய சட்ட அறி­ஞர்கள் முன்­வைத்­துள்­ளனர். நவீ­ன­கால சட்ட அறி­ஞர்­களில் பெரும்­பான்­மை­யா­னோரும் இதே கருத்­தையே கொண்­டுள்­ளனர்.

இத­னால்தான் ஷாபி மத்­ஹபைப் பின்­பற்றும் இஸ்­லா­மிய உலகின் மிகப்­பெ­ரிய நாடான இந்­தோ­னே­சி­யாவில் 1961 லேயே பெண்ணை நீதி­ப­தி­யாக நிய­மித்­தனர். 36 முஸ்லிம் பெரும்­பான்மை நாடு­களில் பெண்கள் சிவில் மற்றும் ஷரீஆ நீதி­மன்­றங்­களில் நீதி­ப­தி­க­ளாகப் பதவி வகிக்­கின்­றனர். அங்­கெல்லாம் இஸ்­லா­மிய அறி­வுத்­துறை சார்ந்­தோரும் உல­மாக்­களும் உள்­ளனர். அவர்கள் அதனை ஆட்­சே­பிக்­க­வில்லை. இலங்­கையில் இன்னும் சில மாதங்­களில் சிவில் நீதி­மன்றில் முஸ்லிம் பெண்­ணொ­ருவர் நீதி­ப­தி­யாக நிய­மனம் பெறப்­போ­கின்றார். ஏற்­க­னவே மைமூனா என்­பவர் நீதி­ப­தி­யாகப் பதவி வகித்து ஓய்வு பெற்­றுள்ளார். ஷரீஆ பெண் நீதி­ப­தியை அங்­கீ­க­ரிக்கும் நிலையில் ஒரு மத்­ஹபின் கருத்தை முன்­னி­றுத்தி சிலர் அதற்குக் குறுக்கே நிற்­பதை அர­சி­யல்­வா­திகள் தெட்­டத்­தெ­ளி­வாக அன்­றைய கலந்­து­ரை­யா­ட­லின்­போது புரிந்து கொண்­டார்கள். அது அந்தக் கூட்­டத்தில் நன்கு தெளி­வா­னது. கூட்டம் முடிந்து சென்­ற­போது தனது வாக­னத்தில் ஏறி அமர்­வ­தற்கு முன்னர் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்­தபா ‘Women Judges are must’ என்று சத்­த­மாக சொல்­லிக்­கொண்டே ஏனைய அர­சி­யல்­வா­தி­களை நெருங்கிச் சென்றார். தனது தந்­தையின் நிலைப்­பாடு வேறாக இருப்­பினும் தனது நிலைப்­பாடு இதுதான் என்றார். அங்கு நின்­று­கொண்­டி­ருந்த ரிஷாத் பதி­யு­தீ­னிடம் கிண்­ட­லாக முன்னர் இவர் அ.இ.ஜ. உல­மா­ச­பையின் பக்கம் நின்­றவர். இப்­போது இந்­தப்­பக்கம் தான் என்றும் கூறிக்­கொண்டார். பின்னர் நான் பைஸரை அணுகி ‘Islam is much more wider than shafi mazhab’ என்றேன். அவர் சிரித்­துக்­கொண்டே அவ­ரது வாக­னத்தில் ஏறினார்.

அலி ஸாஹிர் மௌலானா, நஸீர், பைசல் காஸிம் ஆகி­யோரும் அங்கு உட்­கார்­வதும் வெளியே சென்று வரு­வ­து­மா­கவும் இருந்­தனர். அமைச்சர் ரிஷாத் பட்டும் படா­த­து­மா­கவே தனது அபிப்­பி­ரா­யங்­களைத் தெரி­வித்­துக்­கொண்­டி­ருந்தார். அவர் மறை­மு­க­மாக விவாக விவா­க­ரத்­துச்­சட்ட திருத்­தத்­திற்கு ஆத­ர­வில்­லா­தவர் போன்றே தோன்­றினார். எவ்­வா­றா­யினும் அன்­றைய கலந்­து­ரை­யாடல் மூலம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு தனியார் சட்டம் குறித்து நிலவும் சர்ச்­சைக்­கு­ரிய அல்­லது கருத்து வேறு­பாட்­டிற்­கு­ரிய பகு­திகள் குறித்து ஒரு தெளிவு நிச்­சயம் கிடைக்கப் பெற்­றி­ருக்கும் என்ற நம்­பிக்­கை­யோடு நாம் திரும்­பினோம்.

அடுத்த நாள் 30 ஆம் திக­தியும் அவ­ச­ர­மாக கூடு­வ­தற்­கான ஓர் அழைப்பு வந்­தது.

வாய்ப்­புக்­கே­டாக எங்­களில் எவ­ருக்கும் அதில் கலந்து கொள்ளத் தோதி­ருக்­க­வில்லை. ஆனால் அ.இ.ஜ.உ. அங்­கத்­த­வர்கள் பலர் தனியே அர­சி­யல்­வா­தி­களை சந்­தித்து தமது மாற்­ற­மு­டி­யாத நிலைப்­பா­டு­க­ளுக்­கான நியா­யங்­களை முன்­னி­றுத்தி அவற்றை ஒரு 04 பக்க வரை­பா­கவும் அமைத்­துக்­கொண்­டனர் என்­பது எமக்கு ஆகஸ்ட் இரண்டாம் திகதி இரவு பௌஸி ஹாஜி­யாரின் வீட்டில் நடந்த கூட்­டத்­தி­லேயே தெரி­ய­வந்­தது. அன்­றி­ரவு 9.30 மணிக்கு தொடங்­கிய கூட்டம் நள்ளிரவு12.00 மணிக்கு முடிந்­தது. அ.இ.ஜ.உலமா சபையைச் சேர்ந்த யாரும் சமுகம் தர­வில்லை. எமக்கு மட்­டுமே அழைப்பு எனக் கூறப்­பட்­டது. இந்தக் கூட்டம் சற்று வித்­தி­யாச­மா­கவே இருந்­தது.

எமக்கு பெரி­தாக கருத்துச் சொல்­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­க­வில்லை. அங்கு வந்­தி­ருந்த சில பெண்­களும் அர­சி­யல்­வா­தி­க­ளுமே அதிக நேரம் ஆங்­கி­லத்தில் அள­வ­ளா­வி­னார்கள். பின்னர் 30 ஆம் திகதி அ.இ.ஜ. உல­மா­வுடன் கலந்­து­ரை­யா­டி­யதை அடுத்து தயா­ரிக்­கப்­பட்ட 04 பக்க திருத்­தங்­களை நாங்கள் ஏற்­றுக்­கொள்­கி­றோமா என்­பதை சரி பார்ப்­பது போல கருத்துக் கேட்­கப்­பட்­டது. ஏதோ ஒரு­வ­கையில் பொது உடன்­பாடு ஒன்­றுக்கு வர வேண்­டி­யுள்­ளது என்று அமைச்சர் ஹக்கீம் தெரி­வித்தார். 29 ஆம் திகதி எங்கள் சந்­திப்­புக்கும் இரண்டாம் திகதி ஆகஸ்ட் மாத சந்­திப்­புக்கும் இடையில் பெருத்த மாற்றம் தெரிந்­தது.

அதா­வது, அர­சி­யல்­வா­திகள் அ.இ.ஜ. உல­மாவைப் பகைத்­துக்­கொண்டு ஸலீம் மர்­ஸூபின் திருத்­தங்­களை முன்­னெ­டுத்தால் அது எதிர்­வரும் தேர்­தலில் தமது வாக்­கு­களைப் பாதிக்கும் என்­பதைத் தெளி­வாகப் புரிந்து கொண்டே தீர்­மா­னங்­களை எடுத்­தி­ருந்­தமை பளிச்­செனத் தெரிந்­தது. ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கூட்ட முடிவில் இக்­க­ருத்தை வெளிப்­ப­டை­யா­கவே ஏனைய அர­சி­யல்­வா­தி­க­ளிடம் முன்­வைத்­ததை என்னால் கேட்க முடிந்­தது. இந்தக் கூட்­டங்­களில் நடந்­த­தை­யெல்லாம் இங்கே நான் முழு­மை­யாகப் பதிவு செய்­ய­வில்லை. இருந்­த­போதும் ஒரு­சில விட­யங்­களை சுட்டிக் காட்­டி­ய­மைக்குக் காரணம் உண்டு.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் சீர்­தி­ருத்­தங்­களும் மாற்­றங்­களும் வேண்டும் என்ற குரல் கடந்த கால் நூற்­றாண்­டுக்கு மேலாக ஒலிக்­கின்­றது. இதற்­கான முதல் நியாயம், இருக்கும் 1951 இன் சட்­டத்­தி­லுள்ள கோளா­று­களும் குறை­பா­டு­களும் அதனால் விளையும் தீமை­க­ளுமே என்­பது பல கள ஆய்­வுகள் மூலம் நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. நீதியை முழு­மை­யாகச் செலுத்த முடி­யாத நிலை உள்­ளது. பெண்கள் மட்­டு­மன்றி ஆண்­களும் அதனால் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். சட்­டங்கள் என்­பது காலம், சூழல், இடம் மற்றும் பிரச்­சி­னை­களின் வடி­வங்­களால் மாற்­ற­ம­டையக் கூடி­யது. 300 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இந்­தோ­னே­சி­யாவின் பத்­தே­வி­யாவில் இருந்து கொண்­டு­வ­ரப்­பட்ட முஸ்லிம் தனியார் சட்டம் நூறு வீதம் ஷரீ­ஆவின் அடிப்­ப­டை­யி­லா­ன­தல்ல. ஷரீ­ஆவைத் தழு­வி­யது. பிக்­ஹினை அடி­யொற்­றி­யது. பிக்ஹு என்­பது தேவை­யா­ன­போது சமூக நலன்­களை அடி­யொற்றி மாற்­றங்­களை உள்­வாங்­கக்­கூ­டி­யது. இந்­நி­லையில் ஒரு குறிப்­பிட்ட மத்­ஹபின் கருத்­து­க­ளுக்கு புறம்­பா­னது என்ற ஒரே கார­ணத்­துக்­கா­கவும் சமூ­கத்தில் தாம் கொண்­டுள்ள பிடியைத் தளர விடக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவும் சில பாரம்­ப­ரிய ஆலிம்கள் சீர்­தி­ருத்­தத்­திற்கு குறுக்கே நிற்­பதை எமது அர­சி­யல்­வா­திகள் ஆமோ­தித்து ஏற்­றுக்­கொள்­வ­தா­னது மிகப் பாரிய வர­லாற்றுத் தவ­றாகும்.

குறிப்­பிட்ட ஓர் இயக்க சிந்­த­னையே முழு இலங்கை முஸ்­லிம்­க­ளையும் ஆள வேண்­டு­மென்ற அகங்­கா­ரத்­துடன் செயற்­படும். அ.இ.ஜ. உலமா சபை கடந்த வாரம் தெஹி­வளைப் பள்­ளியில் கூட்டிய உரிமை மாநாட்­டிலும் இதே அர­சி­யல்­வா­திகள் கலந்து கொண்­டி­ருந்­தனர். அதில் சிலர் தொப்­பி­ய­ணிந்து கொண்டு காட்­சி­ய­ளித்­தமை கொஞ்சம் odd ஆக இருந்­தது. நிகாப் அணியும் உரிமை. மத உரிமை விவ­காரம் என்றும் அது மார்க்­கத்­துக்குள் உள்ள விவ­காரம் என்றும் நிகா­புக்­கான உரிமை மாநாடு நடத்­தப்­பட்­டது.

நிகாப் தொடர்ந்தும் அமுலில் இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடென அமைச்சர் றவூப் ஹக்கீம் அங்கு கருத்து வெளியிட்டு உரிமை போராட்டத்தின் குரலாக ஒலித்துள்ளார். இன்று முஸ்லிம் சமூகம் தனது இருப்புக்கான போராட்டத்தில் எத்தனையோ விதமான நெருக்கடிகளையும் அடிப்படை உரிமை மீறல்களையும் எதிர்கொண்டுள்ள நிலையில் நிகாப் அணிவதற்குப் போராடுவதுதான் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினையா என்பதை அரசியல்வாதிகள் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.
தேர்தலைக் குறிவைத்து அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் திராணியில்லாத இத்தகைய தலைவர்கள் பம்மாத்துக் காட்டி சமூகத்தை ஏய்த்துப் பிழைக்கின்றனர். முஸ்லிம் தனியார் சட்ட விவகாரத்திலும் இதுதான் நடந்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தில் மாற்றுக்கருத்துக்கு கொஞ்சமும் இடமில்லை. ஒருவகை கருத்தியல் வன்முறையும், இயக்க வெறியும், மத்ஹப் வெறியுமே கோலோச்சுகின்றது. இதையே முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திருத்த முயற்சிகளிலும் தெளிவாகக் காண்கிறோம்.

முஸ்லிம் சமூகத்தின் சிந்தனை தேக்கத்தினதும் செயல் முடக்கத்தினதும் இந்த அறிகுறிகள் நிகழக்கூடாது என்பதே எமது அவாவாகும். மாற்றுக்கருத்தை மதிக்கும் மனோபாவத்தை எமது சமூகத்தில் வளர்க்க வேண்டியுள்ளது. அதேபோன்று மார்க்கத்தின் பரப்பெல்லை மிகவும் விரிவானது என்பதையும் பொதுவெளியில் விவாதிக்க வேண்டியுள்ளது. எது எவ்வாறாயினும் இன்றையகால கருத்து வன்முறைகள் மிகவும் ஆபத்தானது என்பதை முஸ்லிம் சிவில் சமூகம் புரிந்து கொள்வது அவசியமாகும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.