இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் பிரசாரகர் ஸாகிர் நாயிக்கிற்கு மலேசியாவில் நிரந்த வதிவிட அனுமதி வழங்குவது தொடர்பில் அந் நாட்டின் அமைச்சரவை கலந்துரையாடியுள்ள நிலையில் பல்லின மக்கள் வாழும் நாட்டில் இன ரீதியான கூருணர்வை ஏற்படுத்தக்கூடிய கருத்தினை வெளியிட்டார் எனக் குற்றம்சாட்டி அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என நான்கு அமைச்சர்கள் கோரியுள்ளனர்.
சுமார் மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் வாழ்ந்து வரும் ஸாகிர் நாயிக், தென்கிழக்காசிய நாடான மலேசியாவில் வாழும் இந்துக்கள், இந்திய சிறுபான்மை முஸ்லிம்களை விட நூறு மடங்கு அதிகமான உரிமைகளைக் கொண்டுள்ளனர். சில வேளைகளில் அவர்கள் மலேசிய அரசாங்கத்தைவிட இந்திய அரசாங்கத்தின் மீதே நம்பிக்கை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்ததையடுத்து சர்ச்சையில் சிக்கினார்.
இனம் மற்றும் மதம் ஆகியன மலேசியாவில் கூருணர்வுமிக்க பிரச்சினைகளாகும். அங்கு 32 மில்லியன் மக்களைக் கொண்டமைந்து சுமார் 60 வீதமாகக் காணப்படுபவர்கள் முஸ்லிம்களாவர். மீதமுள்ளோரில் பெரும்பான்மையினர் சீனர்களும் இந்தியர்களுமாவர். இந்தியர்களுள் பெரும்பான்மையினர் இந்துக்களாவர்.
”நாங்கள் எமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்திவிட்டோம், அதாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் . அத்துடன் ஸாகிர் நாயிக் தொடர்ந்தும் மலேசியாவில் இருக்க அனுமதிக்கப்படக்கூடாது” என தொலைத் தொடர்பாடல் மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
எமது கரிசனைகள் தொடர்பில் பிரதமர் கருத்திற்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர்பில் மிக விரைவாக தீர்மானமொன்றை எடுப்பதற்காக எமது நிலைப்பாட்டினை அவரது கவனத்திற்கு விடுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாயிக்கின் கருத்துக்கள் பல்லின மக்கள் வாழும் நாட்டில் பிளவை ஏற்படுத்துவதன் மூலம் முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அமைந்துள்ளன என மலேசிய மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.
நிரந்தர வதிவிட அந்தஸ்த்தைப் பெறும் அருகதை நாயிக்கிற்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தனக்கெதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக மறுத்துவரும் ஸாகிர் நாயிக், குலசேகரன் மற்றும் ஏனைய மலேசிய அமைச்சர்களினாலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார்.
இஸ்லாமிய அடிப்படையில் இந்துச் சிறுபான்மையினர் நியாயமான முறையில் நடத்தப்படுகின்றனர் என மலேசிய அரசாங்கத்தை புகழ்ந்து பேசிய விடயம் திரிபுபடுத்தப்பட்டு அரசியல் இலாபமடைவதற்காகவும் இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்துவதற்காகவும் தவறாக வெளியிடப்பட்டுள்ளது என கடந்த புதன்கிழமை ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் ஸாகிர் நாயிக் தெரிவித்துள்ளார்.
மலேசியா ஸாகிர் நாயிக்கின் கருத்தினைப் புறந்தள்ளி அவரை மலேசியாவில் இருக்க அனுமதித்தால் அது இன, மத பிளவுக்கே இட்டுச் செல்லும் என நீர், காணி மற்றும் இயற்கைவள அமைச்சர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
மலேசியாவிலுள்ள முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையே வேற்றுமையினை விதைக்கும் நோக்கில் அரசுக்கெதிரான கருத்துக்களை வெளியிடும் நபர்கள் எமக்குத் தேவையில்லை என எனவும் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸாகிர் நாயிக் கொல்லப்படும் ஆபத்து காணப்படுவதால் அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார் என மலேசியப் பிரதமர் மஹாதிர் மொஹமட்டை மேற்கோள்காட்டி மலேசிய அரசாங்க செய்தி முகவரகமான பெர்னாமா தெரிவித்துள்ளது. வேறு ஏதாவது ஒரு நாடு அவரை ஏற்றுக்கொள்ள விரும்பினால் அதனை நாம் வரவேற்கின்றோம் எனவும் அவர் தெரிவித்ததாக பெர்னாமா மேலும் தெரிவித்துள்ளது.
ஸாகிர் நாயிக்கின் கருத்துக்களைக் கண்டித்துள்ள மலேசிய இராணுவ மற்றும் பொலிஸில் சேவையாற்றியவர்களில் ஒரு குழுவினரின் அமைப்பான தேசிய தேசப்பற்று அமைப்பு, மலேசியாவிலுள்ள பல இந்திய இனத்தவர்கள் மலேசிய நாட்டின் பாதுகாப்புப் படைகளில் சேவையாற்றியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
பல்வேறுபட்ட சமய சமூகத்தவர்கள் மற்றும் குழுக்களிடையே எதிர்ப்புணர்வை தூண்டுவதற்கு அல்லது தூண்ட முயற்சிப்பதற்கு தன்னைப் பின்தொடர்வோரை ஊக்கப்படுத்தி உதவினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நாயிக்கின் இஸ்லாமிய ஆய்வு நிலையத்தை இந்தியா தடை செய்தமை குறிப்பிடத்தக்கது.
(எம்.ஐ.அப்துல் நஸார்)
vidivelli