14127 ஏக்கர் காணி அபகரிப்பு எதிர்த்து சுவரொட்டி பிரசாரம்
மீட்டுத்தரும் அரசியல்வாதிகளையே தேர்தலில் ஆதரிப்பதாகவும் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் 4652 காணிச் சொந்தக்காரர்களது 14127 ஏக்கர் பரப்புள்ள காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி இது குறித்து அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சுவரொட்டி பிரசாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த அமைப்பு வெ ளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அம்பாறை மாவட்டத்தில் காணிகளை இழந்துள்ள குறித்த குடும்பங்களில் உள்ள சுமார் 18608 வாக்காளர்கள் தங்களின் காணி உரிமைகளை மீட்டுத்தரக் கோரி தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வாரமாக 15 ஆகஸ்ட் 2019 முதல் 21 ஆகஸ்ட் 2019 வரை பிரகடனப்படுத்தியுள்ளோம். இதன் ஒரு கட்டமாக பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு இறங்கி ‘நிலப்பறிப்பு இது எமது இருப்பின் மறுப்பு’ எனும் தலைப்பில் சுவரொட்டிகளை பொது இடங்களில் ஒட்டி பொதுமக்களுக்கும் தலைவர்களுக்கும் விழிப்புணர்வூட்டி அழுத்தம்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இச் செயல்வாதமானது பொத்துவில் பிரதேசத்தில் ஆரம்பித்து, சம்மாந்துறை, இறக்காமம், நிந்தவூர், கல்முனை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களால் முன்னெடுக்கப்படுகின்றது.
காணி உரித்து என்பது ஒரு சமூக இருப்பின் அடையாளமாகும். காணிப் பயன்பாட்டுப் பாதுகாப்பு மற்றும் நியாயமான காணிப் பகிர்வின் ஊடாகவே நாட்டில் நம்பகமான நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும், தேசிய பொருளாதார வளர்ச்சியையும் உறுதிப்படுத்திக் கொள்வது சாத்தியமாகும். அத்துடன் எதிர்வரும் தேர்தல்களின் போது இக் காணிப் பிரச்சினைகளை முழு மூச்சாக நின்று தீர்ப்பதற்கு உடன்படும் தலைமைகளின் கரங்களையே பலப்படுத்த இம்மக்கள் உறுதி பூண்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தினைக் குறிவைத்து அபிவிருத்தி எனும் பெயரில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் ஊடாகவும், தொழிற்சாலைகள் நிர்மாணம், வனப் பாதுகாப்பு, வனவிலங்குப் பாதுகாப்பு, தொல்பொருள் பிரதேசங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு எனும் போர்வைகளிலும், திட்டமிட்ட குடியேற்றங்கள் ஊடாகவும் நலிவுற்ற மக்களின் விவசாய, மேய்ச்சல் மற்றும் குடியிருப்பு நிலங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 30 வருட தொடர் யுத்தம் காரணமாக குறிப்பாக சிறுபான்மை விவசாயிகள் அவர்களின் காணிகளை தொடர்ச்சியாக பயன்படுத்தும் சந்தர்ப்பத்தை தற்காலிகமாக இழந்த நிலையை சாதகமாக்கிக் கொண்ட சட்டவிரோத காணி அபகரிப்பாளர்கள், அந்த காணி அபகரிப்புக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுடன் இணைந்து எல்லா வளங்களையும் பயன்படுத்தி நலிவுற்ற காணிச் சொந்தக்காரர்களின் காணிகளைப் பறித்து வந்துள்ளனர்.
ஆழ்ந்து நோக்கும் போது இவ்வாறான காணிப் பறிப்புக்கள் முஸ்லிம், தமிழ் சிறுபான்மையினரை இலக்கு வைத்திருந்த போதிலும், அதிகாரமும் பலமும் உள்ளவர்கள் தங்களது சுய இலாபங்களுக்காக நலிவுற்ற சிங்கள மக்களுடைய காணி உரித்துக்களிலும் கைவைத்திருப்பதும் கவலைக்குரியதாகும்.
காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியானது அரசாங்கத்திற்கு முன்வைக்கும் கோரிக்கை மிகவும் எளிமையானது. அம்பாறை மாவட்டத்திலுள்ள காணிப் பிரச்சினையின் பன்முகத்தை உணர்ந்து இந்நாட்டின் எதிர்கால இன நல்லிணக்கம், குடும்ப அலகுகளின் வாழ்வாதாரம் மற்றும் தேசிய பொருளாதார வளர்ச்சி என்பவைகளை நிச்சயப்படுத்திக் கொள்வதாயின், இக்காணிகளுடன் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் தத்தமது பொறுப்பு மற்றும் பங்களிப்பை நியாயமாகவும் சட்ட பூர்வமாகவும் நிறைவேற்ற வேண்டும். அதனூடாக காணிகளை இழந்தவர்கள் தங்களுடைய காணிகளை மீண்டும் சுதந்திரமாகப் பயன்படுத்த வழிவகுக்க வேண்டும் என்பதேயாகும்.
vidivelli