இலங்கையில் அதிகரிக்கும் யானை-மனிதன் முரண்பாடு

0 1,509

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் யானை­க­ளுக்கும் மனி­தர்­க­ளுக்கும் இடை­யி­லான இடைத்­தாக்­கங்கள் சர்­வ­சா­தா­ர­ண­மான ஒன்­றாக மாறி விட்­டது. பல்­வேறு மனித தாக்­கங்­க­ளினால் யானைகள் உயி­ரி­ழப்­பதும் யானை­களால் மனி­தர்கள் பாதிப்­ப­டை­வதும் இன்­றைய ஊட­கங்­களில் நாளாந்தம் கேட்­கின்ற, பார்க்­கின்ற ஒரு செய்­தி­யாக எம்மால் காண முடி­கி­றது. தென்­னா­சி­யா­வி­லேயே இவ்­வாறு யானை­க­ளுக்கும் மனி­தர்­க­ளுக்கும் அதி­க­மாக முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­கின்­றன.

இலங்கை வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­களம் வெளி­யிட்ட அறிக்­கை­யின்­படி 2017 ஆம் ஆண்டில் 286 யானை­களும் 2018 ஆம் ஆண்டில் 311 யானை­களும் பல்­வேறு கார­ணங்­களால் உயி­ரி­ழந்­துள்­ளன. இவற்றுள் 4 % ஆன யானைகள் ரயில் தண்­ட­வா­ளங்­களில் சிக்கி உயி­ரி­ழந்­துள்­ளன. அதி­க­மான யானைகள் மொன­ரா­கலை மாவட்­டத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ளன. அத­னை­ய­டுத்து அம்­பாந்­தோட்டை, குரு­ணாகல் மற்றும் பொலன்­ன­றுவை மாவட்­டங்­களில் முறையே அதி­க­ள­வான யானைகள் உயி­ரி­ழந்­துள்­ளன. அத்­துடன் யானை­க­ளுக்கும் மனி­தர்­க­ளுக்கும் இடை­யி­லான மோதலில் கடந்த வருடம் 95 பொது­மக்கள் பலி­யா­கி­யுள்­ளனர்.

கடந்த வரு­டத்தில் மனி­தர்­களின் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி 48 யானைகள் உயி­ரி­ழந்­துள்­ளன. மின்­சாரம் தாக்­கி­யதில் 37 யானை­களும் ரயில் தண்­ட­வா­ளங்­களில் சிக்­கி­யதில் 16 யானை­களும் உயி­ரி­ழந்­துள்ள அதே­வேளை 55 யனைகள் பல்­வேறு மனித செயற்­பா­டு­களால் உயி­ரி­ழந்­துள்­ளன. 29 யானைகள் ஏனைய விபத்­துக்­களால் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் பல்­வேறு கட்­டங்­களில் உயி­ரி­ழந்த 30 யானைகள் உயி­ரி­ழந்­த­மைக்­கான காரணம் இன்­னமும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. 2013 தொடக்கம் 2018 வரை உயி­ரி­ழந்த மொத்த யானை­களின் எண்­ணிக்கை 1445 ஆகும்.

வெலி­கந்த, ஹப­ரண, மன்­னம்­பிட்­டிய, கெகி­ராவ, புலு­கஸ்­வேவ என 50 ற்கும் மேற்­பட்ட இடங்கள் யானை­க­ளுக்கு பாது­காப்­பற்ற இடங்­க­ளாகப் பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்­ளன. யானை­களைக் காப்­ப­தற்கு அர­சாங்­கத்­தினால் எந்த நட­வ­டிக்­கை­களும் துரி­தப்­ப­டுத்­து­வ­தாகத் தெரி­ய­வில்லை. சிறிய யானைக்­குட்­டிகள் அனா­தை­க­ளாக்கப்பட்­டுள்­ள­தோடு பல காட்டு யானைகள் உடல் உறுப்­புக்­க­ளையும் இழந்­துள்­ளன. யானை­களின் இந்த அவல நிலைக்கு விமோ­சனம் வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மற்றும் முன்­னேற்­பா­டுகள் என்­பன வெறும் வாய்ப்­பேச்சில் முடங்­கி­யி­ருப்­பது வெறும் ஏமாற்­றத்­தையே தரு­கி­றது.
இலங்கை புகை­யி­ரத சேவைகள் நூற்­றாண்­டு­களைக் கடந்து அனுஷ்­டிப்­ப­தென்­னமோ உண்­மைதான். ஆனால் யானை­களைக் காக்­க­வென நவீன தொழில்­நுட்ப வச­திகள் எதுவும் இன்னும் இல்­லாமல் இருப்­பது வேத­னைக்­கு­ரிய ஒன்றே. யானைகள் கடப்­ப­தற்­கான கட­வை­களை அடை­யா­ளப்­ப­டுத்­தவோ, புகை­யி­ரத ஓட்­டு­நர்­க­ளுக்கு அறி­வித்­தல்­களை வழங்­கவோ எந்த உத்­தியும் இலங்­கையில் இல்லை.

இலங்கை புகை­யி­ரத சேவை­களின் பொது முகா­மை­யாளர் டிலன்த பெர்­னாண்டோ இது தொடர்­பாகக் கருத்து தெரி­விக்­கையில், “விபத்­துக்கள் நடக்­கின்ற ரயில் தண்­ட­வா­ளங்கள் வழக்­க­மாக யானைகள் கடக்கும் தாழ்­வா­ரங்கள் அல்ல. எனவே அவ்­வி­டத்தில் யானைகள் தொடர்­பாக அறி­விக்க எந்த அறி­வித்தல் பல­கை­களும் காணப்­ப­டு­வ­தில்லை. மேலும் ஒரு­பக்கம் யானை­க­ளு­டைய வேலி மறு­பக்கம் கிரா­மங்கள் என்ற அமைப்­பிலே பிர­தே­சங்கள் அமைந்­துள்­ளமை கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்­டிய அம்­ச­மாகும்” என குறிப்­பிட்­டி­ருந்தார்.

வன­ஜீ­வ­ரா­சிகள் மற்றும் நிலை­யான அபி­வி­ருத்­திக்­கான அமைச்சர் சரத் பொன்­சேகா, “அதி­கப்­ப­டி­யான எச்­ச­ரிக்கை நுட்­பங்­களைச் செயற்­ப­டுத்த வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. ஆனால் அதற்­கான கலந்­து­ரை­யா­டல்கள் தொடர்ச்­சி­யாக நடத்­தப்­பட வேண்டும். எதையும் உட­ன­டி­யாக நடத்த முடி­யாது. காரணம், எங்­க­ளிடம் எந்த நுட்­பமும் கைவசம் இல்லை. எனினும் நாங்கள் செயற்­பட்டுக் கொண்­டுதான் இருக்­கிறோம்” எனக் கூறி­யி­ருந்தார்.
யானைகள் இலங்கை அர­சினால் முழு­மை­யாகக் கைவி­டப்­பட்டு விட்­ட­னவா? அப்­ப­டி­யென்றால் இன்னும் சில வரு­டங்கள் கடந்தால் இது யானைகள் இல்­லாத நாடு என்­றா­கி­விடும். யானைக­ளு­டைய பாது­காப்­பிற்கு இலங்கை அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும் என்­பது இன்னும் கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.

யானைகள் தண்ணீர் குடிப்­ப­தற்­காக உள்ள நீர்­நி­லைகள், சுனைகள் என்­ப­வற்றை மறித்து மனி­த­தே­வை­க­ளுக்­காக அணைகள், கால்­வாய்கள், நீர், மின்­சார ஆலைகள் என்­பன கட்­டப்­பட்ட வர­லா­று­களும் இருக்­கவே செய்­கின்­றன. யானைகள் மீது சிறிதும் நலன் காட்­டப்­ப­டாத இந்த சுய­நலத் திட்­டங்­களைத் தடுப்­ப­தற்கு அல்­லது மாற்று வழி­களை பிர­யோ­கிப்­ப­தற்கு யாரும் முன்­வ­ரா­தது கவ­லைக்­கி­ட­மான ஒரு செய்­தியே. யானை­களின் அடிப்­படைத் தேவை­யான நீர்த்­தே­வையை நிறைவு செய்ய யானைகள் நீண்­ட­தூரம் பய­ணிக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் இந்த செயற்­பா­டு­களால் உரு­வா­னது. மேலும் கால்­வாய்­களில் யானைகள் வீழ்ந்து உயி­ரி­ழந்த சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

சட்­டத்­துக்குப் புறம்­பாக அல்­லது சட்­டத்தில் உள்ள ஓட்­டை­களைப் பயன்
­ப­டுத்தி யானை­களின் வாழ்­வி­டங்­களில் சொகுசு விடு­திகள், அதி­வேக பாதைகள் மற்றும் ரயில் தண்­ட­வா­ளங்கள் அமைக்­கப்­ப­டு­வதால் யானைகள் பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­கின்­றன. யானை­களின் இருப்­பி­டங்­களில் அத்­து­மீறிப் புகுந்த மனிதன், மனி­தர்­களின் இருப்­பி­டங்­களில் யானைகள் அட்­ட­காசம் செய்­தது என்று தலைப்புச் செய்தி போடு­வது வேடிக்­கை­யான ஒன்றே தவிர வேறில்லை. அப்­பா­வி­க­ளான யானைகள் மனி­தர்­களால் சமூக விரோ­தி­க­ளாக்­கப்­ப­டு­கின்­றனர்.

யானை­க­ளுக்கும் மனி­தர்­க­ளுக்கும் இடை­யி­லான மோதல்­களை வெற்­றி­க­ர­மான முறையில் நடு­நிலை படுத்­து­வ­தற்­காக ஏற்­ப­டுத்திக் கொள்­ளக்­கூ­டிய பிர­தான உபா­ய­மாக அமை­வது மின்­சார வேலி அமைப்­ப­தாகும். மின்­சார வேலி­யொன்று நிர்­மா­ணிக்­கப்­படும் இடம், மின்­சார வேலியின் தரம் மற்றும் நிர்­வாகம் செய்தல் போன்­றன வன­ஜீ­வ­ரா­சிகள் பாது­காப்பு திணைக்­க­ளத்தின் வழி­காட்­டு­த­லுக்கு அமை­வாக அமைக்­கப்­பட வேண்டும். அதற்கு புறம்­பாக இந்த செயற்­பாடு இடம்­பெ­று­மாயின் வன­ஜீ­வ­ரா­சிகள் பாது­காப்பு திணைக்­க­ளத்­தினால் சட்ட நட­வ­டிக்கை எடுக்க முடியும். அதற்­கான கட்­ட­ளைகள் விலங்­குகள் மற்றும் தாவர பாது­காப்புச் சட்­டத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக இருக்க வேண்டும்.

காட்டு யானைகள் ஏரா­ள­மாகக் காணப்­படும் பாது­காப்பு ஒதுக்­காக கரு­தப்­ப­டாத பிர­தே­சங்­களில் மக்கள் குடி­யி­ருப்­புக்­களை அமைத்­துள்­ளனர். அவ்­வா­றான குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்­காக மிகவும் பொருத்­த­மான பிர­தே­சங்­களில் உகந்த இட­வ­ச­தி­யினை வழங்­கு­வ­தற்­கான சாத்­திய தன்­மையை ஆராய்ந்து அவர்­க­ளுக்கு வாழ்­வா­தாரம் மற்றும் மாற்றுத் திட்­டங்­க­ளையும் வழங்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

யானை­க­ளுக்கும் மனி­தர்­க­ளுக்கும் இடை­யி­லான மோதல்கள் பர­வ­லாக காணப்­படும் இடங்­களில் பிர­தேச மற்றும் மாவட்ட குழுக்­களை அமைத்து குழுக்­களின் உற்­பத்தித் திறனை விருத்தி செய்­வ­தற்­காக தேசிய மட்­டத்­தி­லான குழு­வொன்று அமைக்­கப்­பட வேண்டும். பிர­தேச குழு­வொன்று ஒவ்­வொரு மாதமும் ஒன்று கூட வேண்டும். மாவட்ட குழு மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு முறையும் தேசிய மட்­டத்­தி­லான குழு வரு­டத்தில் ஒரு தட­வையும் ஒன்று கூட வேண்டும். இந்தக் குழு சகல செயற்­பா­டுகள், கருத்­துக்கள் மற்றும் யோச­னை­களைப் பெற்றுக் கொள்ளல், ஒன்­று­கூடல் தொடர்­பான செயற்­பா­டுகள், வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­க­ளத்­தின் வழி­காட்­டுதல் மற்றும் திட்­ட­மி­ட­லுக்கு அமை­வாக நடை­பெற வேண்டும்.

இலங்­கையில் வட­மத்­திய மாகாணம், யால, ஹப­ரண போன்ற காடு­களில் அதி­க­மாக யானைகள் வாழ்­கின்­றன. இது தவிர பின்­ன­வல யானை சர­ணா­ல­யத்தில் யானைகள் பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் காடு­களில் காட்டு ராஜா யானைதான். ஆசிய யானை வர்க்­கத்தைச் சேர்ந்த இலங்கை யானை­களின் சரா­சரி ஆயுட்­காலம் 60 – 70 வரு­டங்கள் ஆகும். ஆண் யானைகள் 10 – 12 வய­திற்குள் பரு­வ­ம­டைந்­ததன் பின்னர் தனி­யாகப் பிரிந்து சென்று வாழக் கற்­றுக்­கொள்­கின்­றன.

தந்­த­மற்ற ஆண் யானைகள் ‘மக்னா’ என அழைக்­கப்­படும். மழை பெய்­வதை முன் கூட்­டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் யானை­க­ளுக்கு உண்டு. யானைகள் வாழ்­கின்ற காட்டில் ஏனைய உயி­ரி­னங்­களும் பயன்­பெ­று­கின்­றன என்­பதை நம்மில் எத்­தனை பேர் அறிவோம்-? யானைகள் உண­வுக்­காக பெரிய மரங்­களை உடைத்து ஏனைய உயி­ரி­னங்­க­ளுக்கு பாதை சமைக்­கின்­றன. வளைவு, நெழிவு கொண்டு பெரிய மலை­களில் யானைகள் நடப்­பதன் ஊடாக ஏனைய சிறு விலங்­குகள் இல­கு­வாக அப்­பா­தை­களை சமைக்க வழி செய்­யப்­ப­டு­கின்­றது. மேலும் தண்ணீர் குடிப்­ப­தற்­காக வேண்டி நீர் ஊற்­றுக்­களை தோண்­டும்­போது ஏனைய உயி­ரி­னங்­களும் நீரைக் குடித்துப் பயன்­பெ­று­கின்­றன.

இலங்­கையில் 1900 ஆம் ஆண்டு சுமார் 10000 யானைகள் காணப்­பட்­டன. ஆனால் இன்று 4500 – 5000 யானை­களே மீத­முள்­ளன. வரு­டாந்தம் 80 – 110 யானைகள் பிறப்­ப­துடன் 250 – 300 யானைகள் இறப்­ப­தாக அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. யானைகள் தாவர இனப்­பெ­ருக்­கத்­துக்கு வழி­ச­மைக்­கின்­றன. ஏனைய உயி­ரி­னங்­களின் வாழ்க்கைத் தேவை­களை பூர்த்தி செய்ய யானைகள் உத­வு­வதால் யானைகள் இல்லை என்றால் ஏனைய உயி­ரி­னங்­களும் இல்லை என்ற நிலை உரு­வாகி விடும். இத­னால்தான் ‘வனத்தை உரு­வாக்­கு­வது யானைகள்’ என ருட்­யார்டு கிப்லிங் என்ற அறிஞர் குறிப்­பிட்டார்.
யானைகள் ரயி­லுக்கு மோதுண்டு நாளுக்கு நாள் இறப்­பதைக் கண்­டா­வது இலங்கை வன ஜீவ­ரா­சிகள் பாது­காப்புத் திணைக்­களம் மற்றும் சுற்­றாடல் அமைப்­புகள் விழித்­தெ­ழுமா என்­பது எடுத்து நோக்க வேண்­டிய விடயம்.
யானைகள் அழி­வுக்­குள்­ளாகும் நிலைக்கு தள்­ளப்­ப­டு­வ­தற்கு முன்னர் இலங்கை அரசு யானை­களின் மறு­வாழ்­வுக்­கா­கவும் இன விருத்­திக்­கா­கவும் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்­பது விலங்கு ஆர்­வ­லர்­க­ளு­டைய அவா­வாகும். அந்த வகையில் யானை­களை காப்­ப­தற்­கென உரு­வாக்­கப்­பட்­டி­ருக்கும் பெய­ர­ள­வி­லான அமைப்­புகள் பொறுப்­பு­ணர்­வுடன் செயற்­ப­ட­வேண்டும்.

யானை­க­ளு­டைய வழித்­த­டங்கள் மற்றும் வாழ்­வி­டங்கள் துண்­டா­டப்­ப­டு­வ­தினா லேயே யானைகள் மக்கள் குடி­யி­ருப்­பு­க­ளுக்குள் சேட்டை செய்­கின்­றன. ஆகவே யானை­க­ளு­டைய வழித்­த­டங்­களை மீட்­டெ­டுத்து அத­னு­டைய வாழ்­வி­டங்­களை திருப்பிக் கொடுத்து மீள்­கா­டாக்கல் செயற்­றிட்­டத்­தினால் யானை­க­ளுக்கும் மனி­தர்­க­ளுக்கும் இடையில் இனி­மை­யான உறவை ஏற்­ப­டுத்­தலாம். இலங்­கையில் 155 ற்கும் மேற்­பட்ட யானைகள் மனித செயற்­பா­டு­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. எனவே யானைகள் சர்க்கஸ், மெஜிக் விளை­யாட்டு என துன்­பு­றுத்­தப்­படும் செயற்­பா­டுகள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்டும்.

யானைகள் எதிர்­நோக்கும் பிர­தான பிரச்­சி­னை­களில் ஒன்­றுதான் குடிநீர்ப் பிரச்­சினை. யானைகள் தண்ணீர் குடிப்­ப­தற்­கென காடு­களில் இருந்த ஆறுகள் மறிக்­கப்­பட்டு அணைக்­கட்­டுகள், கால்­வாய்கள், கட்­டப்­பட்­டி­ருப்­பது யானைகள் மனித குடி­யி­ருப்­புக்குள் நுழை­வ­தற்கு ஏது­வான கார­ணி­யாகும். எனவே யானை­க­ளு­டைய குடிநீர் பிரச்­சி­னைக்கு ஆறு­களை மீள­எ­ழுப்ப நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

ரயில் தண்­ட­வா­ளங்கள் மற்றும் அதி­வேக பாதைகள் என்­பன யானை­க­ளு­டைய வழித்­த­டங்­களை மறித்து அமைக்­கப்­பட்­டி­ருக்கும் உண்மை இன்று அம்­ப­ல­மாகி உள்­ளது. ரயில் தண்­ட­வா­ளங்­களில் யானைகள் சிக்­குண்டு உயி­ரி­ழக்கும் சம்­பவம் நம் காது­க­ளுக்கு எட்­டாமல் இருக்க ரயில் போக்­கு­வ­ரத்­துக்கு மாற்­று­வழிப் பாதை­களை அமைக்க வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மாகும்.
யானைகள் விபத்­துக்­குள்­ளாகும் வித­மாகக் காணப்­படும் குழிகள், கால்­வாய்கள் என்­பன மூடப்­ப­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில வரு­டங்­க­ளா­கவே யானைக்­குட்­டிகள் மற்றும் யானைத்­தாய்கள் குழிகளில் விழுந்து சிக்குண்ட செய்திகளை நாம் கேட்டிருக்கிறோம். எனவே காடுகளில் உள்ள குழிகள் நீங்க எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தந்தத்திற்காக யானைகள் சில விஷமிகளால் கடத்தப்படுதல் மற்றும் சுடப்படும் நடவடிக்கைகள் நடந்தேறுவது இன்று வழக்கமான ஒன்றாக மாறிவிட்டதை அவதானிக்க முடிகிறது. யானைகளை தந்தத்திற்காக கொலைசெய்யத் துணியும் கயவர்களை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தவேண்டும்.

யானைகளின் பாதுகாப்பு மற்றும் யானைகளுடைய இன விருத்தி என்பவற்றை கவனத்தில் கொண்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் சுற்றாடல் அமைப்புகள் என்பன மேற்சொன்ன விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமேயானால் யானைகளைப் பாதுகாக்கலாம். இல்லையென்றால் இன்னும் நூறு வருடங்களில், இலங்கை யானைகள் இல்லாத நாடு என பிரகடனம் செய்யப்பட வேண்டி வரலாம்.
கடந்த நூறு வருடங்களில் 5000 யானைகள் அழிந்திருப்பது சாதாரண விடயம் அல்ல. அண்மையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த யானைகள் உட்பட சென்ற வருடத்தில் 311 யானைகள் உயிரிழந்திருப்பது, யானைகளின் பாதுகாப்பு விடயத்தில் உடனடித் தீர்வு எடுக்க வேண்டியதன் கட்டாயத்தை நமக்கு உணர்த்துகின்றது. ஆகவே யானைகளின் பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் விழிப்படைய வேண்டிய கட்டாயம் இருப்பது காலத்தின் தேவையாகும்.

எம்.ஏ.எம். அஹ்ஸன்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.